தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6,872 பட்டதாரி ஆசிரியர்களும் 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிவிப்பு:
ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித்தொகை அளிப்பது, இலவச சைக்கிள் வழங்குவது, லேப்-டாப் கொடுப்பது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
6 ஆயிரத்து 872 பணியிடங்கள்:
மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டுமென்றால், தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:40 என்ற விகிதாசாரப்படி நடப்புக் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 ஆயிரத்து 752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும் கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.181.36 கோடி செலவாகும்.மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதப்படி கூடுதலாக ஆயிரத்து 590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.45.25 கோடி செலவாகும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 ஆயிரத்து 137 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்கள் 1988 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1988 ஜூன் 1-ம் தேதிக்குப் பின் பணி புரிந்த பணிக்காலத்துடன் சேர்க்கப்படும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு ரூ.24.25 கோடி செலவாகும்.
கல்லூரி பேராசிரியர்கள்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக நடப்பு கல்வியாண்டுக்கு ஆயிரத்து 661 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவாகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.