உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

இணையதளத்தில் மின் கட்டண முன்பணம் செலுத்தும் வசதி; மின் வாரியம் அறிவிப்பு

           மின் கட்டண வசூல் மையங்களில் உள்ளது போல், இணையதள சேவையிலும், முன்பணம் செலுத்தலாம் என, மின் வாரியம் அறிவித்துள்ளது. 

சென்னை, கோவையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

               தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள, இணையதள மின் கட்டண சேவை எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உள்ளதால், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடன் அட்டை, பண அட்டை மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். "30 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 30 நாட்கள் மின் கட்டண வசூல்' என்ற புதிய முறை சென்னை மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். 

              மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தோருக்கு, மின் கட்டணம், அவற்றை செலுத்த கடைசி நாள் குறித்த விவரங்கள் முறையாக, மின் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றன. மற்றவர்களுக்கு இந்த விவரங்கள் அறிவிக்க இயலாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண, கட்டண வசூல் மையங்களில் உள்ளது போன்று, "முன்பணம் செலுத்தும் வசதி' தற்போது இணையதள சேவையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

                  நிலுவைத் தொகை ஏதும் இல்லாதோர், இணையதளம் வாயிலாக முன்பணம் செலுத்தலாம். கணக்கீடு செய்யப்பட்ட மின் கட்டணங்கள், தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நேர் செய்யப்படும். இந்த வசதி தற்போது, சென்னை (வடக்கு, தெற்கு), கோவை மண்டலங்களில் உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Read more »

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் கருணாநிதி



 
               டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
 
                   டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 4000 ரூபாயில் இருந்து 4500 ரூபாயாகவும், விற்பனையாளர்களுக்கு 2800 ரூபாயில் இருந்து 3200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர்களுக்கு 2100 ரூபாயில் இருந்து 2400 ரூபாயாகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் டெபாஸிட் தொகைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வட்டி 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊக்கத்தொகையும் 1.5 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read more »

கடலூர் மக்களின் உணர்வுகளை மதிக்காத தெற்கு ரயில்வே


கடலூர்:
 
           கடலூர் வழியாக சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
 
              கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்பாதை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை,  கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தவை என்றும், புண்ணிய ஸ்தலங்கள் என்றும் போற்றப்படும் கோயில்களை இணைக்கும் பாலமாக இந்த ரயில் பாதை அமைந்து இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர்.
 
               ஆனால் இந்த ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் திட்டத்தை, தனது திட்டங்களின் கடைசிப் பணியாகக் கருதிச் செயல்படுத்தியது தெற்கு ரயில்வே. இறுதியாக விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைத் திட்டம் |400 கோடிக்குமேல் செலவிட்டு, 3 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து முடிக்கப்பட்டது. இறுதியாக நீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்து 4 மாதங்களுக்கு முன், போனால் போகட்டுமே என்று ரயில்களை இயக்கியது தெற்கு ரயில்வே. 
 
                  பழமை வாய்ந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டும் அது, மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாதிரிப்புலியூர் (எ) திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் நிலை உள்ளது. 400 கோடி செலவிட்டும் மக்களுக்கு இந்த ரயில் பாதையால் என்ன பயன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.  இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முறையற்ற கால அட்டவணையும், நிறுத்தங்களும், மக்களுக்கு சிறிதும் பயனற்ற வகையில் அமைந்து இருப்பது, இந்த மாவட்ட மக்களுக்கு ரயில்வே மதிப்பளிக்க மறுப்பதாகவே அமையும் என்கிறார்கள் பொதுமக்கள்.
 
             சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்தின் தலைநகரின் ரயில் நிலையமான திருப்பாப்புலியூரிலும், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களிலும் நிற்காமல் செல்லும் வகையில், கால அட்டவணை தயாரித்த மர்மம் என்ன என்று தெரியவில்லை. அடுத்து புவனேஸ்வரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தை விட்டால், கடலூர் மாவட்டத்தை ஒருதாவு தாவி, மாயவரத்தில்தான் நிற்கிறது. சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வாரம் ஒருநாள் இயக்கப்படும் வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரல் ரயில் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்த முடியாத, முதுநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்கிறது.
 
              புனித ஸ்தலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தெற்கு ரயில்வே என்ற, சிலரது  கூற்றுப்படி பார்த்தல்கூட, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பக்தர்களும், பாடலீஸ்வரர் கோயிலுக்கு 5 லட்சம் பக்தர்களும் வந்து போகிறார்கள். அவர்களுக்கு எளிதான பயணம் ரயில்தான். அப்படியானால் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதுதானே சரி? 
 
              பெரும்பான்மை மக்களின் வசதிக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அனுமதிப்பதுதான் ரயில்நிறுத்தம். மாவட்டத் தலைநகர், பழமை நகரம், பெரும்பான்மை மக்களின் தேவை என்ற அம்சங்கள் பலவிருந்தும், திருப்பாப்புலியூரில் ரயில்கள் நிற்பதில்லை. ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த ஆண்டுக்கு |1 கோடி செலவாகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், யாருக்காக இந்த ரயில்பாதை உருவாக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் மக்கள்.
 
                    அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற, கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையை, அனைத்து பொதுநல அமைப்புகளும் தங்கள் போராட்டங்களின் வாயிலாக பலமுறை வெளிப்படுத்தி விட்டன. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் மார்க்கமாகச் செல்வதால், ஒரு மணி நேரம் தாமதம் ஆகிறது என்று 9 எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் மக்களவையில் குரல் எழுப்பினர். ஆனால் வழக்கம்போல் கடலூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கத்திடம் கோரிக்கையை தெரிவிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கடலூர் மக்களின் உணர்வுகள் எப்போது மதிக்கப்படும்?

Read more »

கனவாகிப்போன கல்விச் சுற்றுலா!


சிதம்பரம்:

          கல்வித்துறை அதிகாரிகளின் முன் அனுமதியோடு கல்விச்சுற்றுலாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால், கல்விச் சுற்றுலா என்பது மாணவர்கள் மத்தியில் வெறும் கனவாகவே உள்ளது.

             தமிழ், அறிவியல் மற்றும் வரலாறு பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், பொதுதகவல் தெரிந்து கொள்ளவும் பள்ளி மாணவ, மாணவியர்களை ஆண்டுதோறும்  கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். வரலாற்றுப் பாடங்களில் இடம் பெற்றுள்ள தஞ்சை பெரிய கோயில் மற்றும் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.

           கல்விச் சுற்றுலா செல்ல பஸ்களுக்கு முன்பணம் கொடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பிறகுதான் மாணவர்கள் ஒவ்வொருவராக கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்வது வழக்கம். தீவிபத்து, நீரில் மூழ்கி இறத்தல் போன்ற பல அசம்பாவிதங்கள் காரணமாக அரசு, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா செல்லும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல், உடன் செல்லும் ஆசிரியர்கள் குறித்த முழுவிவரத்துடன் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து அனுமதி கிடைத்த பின்னரே கல்விச்சுற்றுலா செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. 

              இந்த உத்தரவினால் பல பள்ளிகளில் கல்விச்சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யாமல் விட்டுடுகின்றனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பள்ளிகள் சார்பில் கல்வித்துறைக்கு கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அனுமதி மறுக்கப்பட்டாலோ பஸ்களுக்கு கொடுத்த முன் பணம் திரும்பப் பெற இயலாமல் போய்விடுகிறது. இதனால் பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்வதில்லை. 

               கல்விச்சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த பெயர்ப் பட்டியல் மட்டும் அனுப்பிவிட்டு சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றும், முன்அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற கெடுபிடிகளை தளர்த்தினால் மட்டுமே மாணவர்களின் கல்விச்சுற்றுலா கனவு நனவாகும். எனவே கல்விச்சுற்றுலா அனுமதி பெற கல்வித்துறை அதிகாரிகள் கெடுபிடிகளை தளர்த்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம்

நெய்வேலி:

              என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.

              என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக என்எல்சி இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 1996-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து நீதிபதி மிஸ்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

               இதையடுத்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. இது தொடர்பாக இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பரமசிவம் தலைமையில் கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி உதவியுடன் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரையும் சந்தித்து, வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினர்.இதனிடையே எம்.பி. கே.எஸ்.அழகிரி வழக்கை தொடர்ந்து சந்திக்குமாறும், அதற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கை எதிர்கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலு வாதாடினார். இவ்வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் முடிவில் நீதிபதி வி.ஜெயின் மற்றும் தத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு விவரம் குறித்து வழக்கறிஞர் சிங்காரவேல் கூறியது:

                   இவ்வழக்கு கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. என்எல்சியில் 1972 முதல் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு பதிலாக, 1990-ம் ஆண்டு என்எல்சி துவக்கிய இன்கோ-சர்வ் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்தவர்களையே நிர்வாகம் படிப்படியாக நிரந்தரம் செய்தது. இதை எதிர்த்துதான் இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் வழக்குத் தொடுத்தனர்.
  
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ஜெயின் மற்றும் தத் ஆகியோர் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில், 

                "ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை 3 மாதத்துக்குள்ளாக வெளியிட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் தொடங்கப்பட வேண்டும். 3 மாதத்திற்கு பின் தீர்ப்பின் மீது நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருப்பதாக வழக்கறிஞர் சிங்கராவேல் கூறினார். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read more »

பண்ருட்டி தபால் நிலையம் முன் வியாபார சங்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி:
              பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவை கைவிட வேண்டுவது, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தவுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுவது, 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் தபால் நிலையத்தை முன்னறிவிப்பின்றி மூடியதை கண்டிப்பதுடன், மீண்டும் செயல்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டுவது, பண்ருட்டி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டுவது, தொலைபேசி நிலையத்தில் இயங்கி வரும் தந்தி அலுவலகத்தை மூடுவது என்ற முடிவை கைவிட்டு செயல்பட உத்தரவிட வேண்டுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                     காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட வணிகர்கள் முக்கிய வீதி வழியாகச் சென்று கும்பகோணம் சாலையில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களுக்கு காலை 11 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளத் தலைவர் கே.என்.சி.பாண்டுரங்கசெட்டியார் தலைமை தாங்கினார். செயல் செயலர் சி.ராஜேந்திரன், மளிகை வியாபாரிகள் சங்க செயலர் ஏ.ஜெயமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

"பன்றிக் காய்ச்சல் அச்சம் தேவையில்லை" : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விருத்தாசலம்:
 
            பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் குறித்த அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
 
விருத்தாசலம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
 
              விருத்தாசலம் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக |11 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அமைச்சர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மட்டும்தான் செய்கிறார் என்பது தவறு. அரசின் திட்டங்கள் அனைத்து தொகுதி மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மாவட்ட முழுவதும் எனது தொகுதியைப் போல் நினைத்து செயல்படுகிறேன். 
 
               இந்த மருத்துவமனையில் |1.20 கோடி செலவில் மேலும் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். இதேபோல் 29 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் |95 கோடி மதிப்பில் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தேர்தல் அறிக்கைகளில் சொன்னதை எல்லாம் திமுக அரசு கொடுத்திருக்கிறது. 
 
                சில ஆண்டுகளுக்கு முன் கேஸ் இணைப்பு பெறுவது சிரமம். ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எளிமையாக இலவச கேஸ் அடுப்பு கிடைக்கிறது. மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன. கடந்த ஆண்டைவிட தற்போது பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் 28 பேருக்குத்தான் பன்றி காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.

Read more »

ஆசிரியர்களைக் கண்டித்து வகுப்பறைகளை புறக்கணித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

             ஆசிரியர்களைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர், செவ்வாய்க்கிழமை வகுப்புகளை விட்டு வெளியேறினர். 

                இதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்தவர் ராஜ்குமார். வெங்கடாம்பேட்டை வடக்குத் தெரு காலனியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 9-ம் தேதி தனது ஊரில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், தகுதி வாய்ந்த கௌரவ  விரிவுரையாளர்களை 2-ம் சுழற்சி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுவோர், மற்றும் மாணவர்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

                        இதற்காக ஒரு பகுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். அவர்களைக் கல்லூரி முதல்வர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டன.

Read more »

PHCs inaugurated at Cuddalore District

CUDDALORE: 

            Health Minister M.R.K. Panneerselvam inaugurated two primary health centres at Thiruchopuram and Theerthanagiri near here on Monday.

                 He said that each PHC, provided with 30 beds, was built at a cost of Rs. 62 lakh. Five doctors would be appointed to each of these PHCs in a couple of months to enable them to function round the clock, Mr. Panneerselvam said. In the past four years, a total of 6,389 doctors were recruited in the State and 783 more doctors would be recruited through personal interviews to be conducted on August 23, 24 and 25.

                Hinting at the prospects of launching health screening camp at the doorstep soon, Mr. Panneerselvam said that one health volunteer, each equipped with a glucometer and a blood-pressure checking apparatus, would be appointed to test 50 persons and identify the beneficiaries for treatment under the Kalaignar Health Scheme. He said that Chief Minister M. Karunanidhi had recently launched the scheme under which free mortuary van services would be made available to those who die in government hospitals.

               A total of 33,000 concrete houses would be built in Cuddalore district in the first phase of the Kalaignar House Giving Scheme, the Minister said. A high-level bridge was being built at a cost of Rs. 8 crore at Nochikadu in Cuddalore district, and 13 classrooms would be built at a government school at Poondiankuppam at a cost of Rs. 73 lakh, Mr. Pannerselvam said. Conceding the demand of the villagers, he said a fair price shop would be opened in the areas having 150 ration cards.

              Collector P. Seetharaman said that of 2.1 lakh huts in the district, 1.27 lakh houses were eligible to be converted into concrete houses under the Kalaignar Housing Scheme. Each house would be constructed at a cost of Rs. 75,000 on 200 sq.ft of land, with a toilet on seven sq.ft. The application for enrolment under the scheme could be obtained from the panchayat office, he added. Director (Public health) R.T.Porkkaipandian, and District Revenue Officer S.Natarajan were present.

Read more »

கடலூர் நகரில் 2 இடங்களில் தகன மேடை தயார்: சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி திட்டம்

கடலூர் : 

             கடலூர் நகரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நவீன எரிவாயு தகன மேடை  கட்டுமானப் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. 

                கடலூர் நகரத்தில் பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் பிரேதங்களை எரித்து வருகின்றனர். இதனால் புகை மற்றும் துர்நாற்றம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனைத்தடுக்க மாநகராட்சிகளில் மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக செலவுத் தொகை பிடிக்கும் என்பதால் குறைந்த செலவில் எரிவாயு தகன மேடையை மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். வட இந்தியாவில் பல நகராட்சிகளில் எரிவாயு தகன மேடை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப்போல் கடலூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

                  அதிக மக்கள் தொகை இருப்பதால் கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றங்கரையிலும், மஞ்சக்குப்பம்  பெண்ணையாற்றங்கரையிலும் எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி  நிறைவடைந் துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக் காத வண்ணம் உள்ளூரில் மலிவாக கிடைக்கக் கூடிய கருவேல முள் செடியின் குச்சிகளைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாய்லரில் போட்டு சூடேற்றும் போது உண்டாகும் "பயோ காஸ்' குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தகன மேடையில் அமைக்கப் பட்டுள்ள 6 பர்னஸ் மூலம் அதிக வேகத்தில் எரியும் படி அமைக்கப்பட்டுள்ளது. 

                   இந்த "பயோ காஸ்' அதிக எரிதிறன் கொண்ட வாயு என்பதால் எளிதில் பிரேதத்தை புகை, துர்நாற்றமின்றி ஒரு மணிநேரத்தில் எரித்து சாம்பலாக்கி விடும். இதனை பராமரிப்பதற்காக ஆகும் செலவை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக நகராட்சி நிதி திரட்டி வருகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: 

                கடலூர் நகராட்சியில் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை பகுதிகளில் இரு நவீன தகன மேடைகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கெ õண்டுவரப்படவுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு அறக்கட்டளை பராமரிக்க உள்ளனர். இருப்பினும் பராமரிப்பு செலவுக்காக நிதி அதிக அளவில்  தேவைப்படும். எனவே நகராட்சி நிர்வாக இயக்குனரின் அறிவுரைப்படி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டி வங்கிக் கணக்கு தனியாக துவக்கப்பட்டுள்ளது.

                   இந்த நிதிக் கணக்கு நகராட்சியால் நிரந்தர வைப்பு நிதிக் கணக்காக ஆணையர், கடலூர் நகராட்சி  நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்புக் கான பொது மக்களின் பங்குத் தொகை என்ற தலைப்பில் பரோடா வங்கி (எண் 12220100013082), கடலூர் கிளையில் பராமரிக் கப்படுகிறது.  இவ்வைப்புத் தொகை நிரந்தரமாக இருக்க, அதன் மீதான வட்டித் தொகையின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக செலவிடப்படும். நல்ல உள்ளம் கொண்ட பொது மக்களின் பங்குத் தொகையினை மேற்படி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more »

திட்டக்குடியில் பாம்பு வடிவ கீரைத்தண்டு: கோவில் அமைக்க முடிவு?

திட்டக்குடி : 

              திட்டக்குடியில் பாம்பு வடிவத்தில் கீரைத்தண்டு வளர்ந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபட பக்தர்கள் தீர்மானித்துள்ளனர். 

             கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் வளர்ந்த புளிச்ச கீரைத் தண்டை பார்த்த ஒரு பெண் நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதாக கூறி ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, பாம்பு உருவத்தில் கீரைத்தண்டு வளர்ந்திருந்தது தெரியவந்தது. 

            தகவலறிந்த அப்பகுதி பெண்கள் கீரைத்தண்டிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள் தூவி வழிபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெண்கள் ஐந்து தலை பாம்பினைக் கொண்ட அம்மன் வடிவ சிலையை கீரைத்தண்டிற்கு கீழ்புறம் வைத்து, சுற்றிலும் மஞ்சள் துணியால் சுற்றி விளக்கேற்றி வழிபடத் துவங்கினர். பெண் ஒருவர் திடீரென சாமியாடி, அம்மன் குடியிருக்கும் இடம் எனவும் இங்கே கோவில் கட்டி வழிபட வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே அங்கு வேப்ப மரக்கன்று நட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். 

                       தொடர்ந்து கீரைத்தண்டு வளர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் பச்சை தென்னை கீற்றினால் கூரையிட்டு திடீர் கோவிலாக மாற்றினர்.  அப்பகுதியில் கோவில் கட்டி தினசரி வழிபாடு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் திரண்டனர்.

 பஞ்ச் : உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் 20ம் தேதி இன்ஜி., வகுப்புகள் துவக்கம்

சிதம்பரம் : 

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2010-11ம் கல்வி ஆண்டிற்கான இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் வரும் 20ந் தேதி துவங்குகிறது. 

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  பி.இ., - எம்.இ., அனைத்து பிரிவுகள், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (இன்ஜினியரிங் ஐந்து ஆண்டு பட்டப்படிப்பு),  பி.எஸ்சி.,(விவசாயம்), பி.எஸ்சி., (தோட்டக்கலை) வகுப்புகளில் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் தொழில்திறன் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு

கடலூர் : 

                மகளிர் திட்டம் மூலம் தொழிற் திறன் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: 

                கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டிற்கு 400  இளைஞர், இளம் பெண்களுக்கு தொழில்திறன் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 36 வயதுக் குட்பட்ட இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செவிலியருக்கான உடனாள், கேட்டரிங், வெல்டர், எலக்ட்ரீஷியன், ஸ்டீல் பிட்டர் ஆகிய பயிற்சிகள் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

                   பயிற்சிகள் கடலூர், சிதம்பரம், வடலூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக வழங்கப்படும். தகுதி வாய்ந்தவர்கள்  பெயர், முகவரியுடன் குறிப்பிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வண்ண மீன் வளர்ப்பு பயிலரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்

பரங்கிப்பேட்டை:

              பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி முகாமை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார். 

               மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய மீன் அபிவிருத்தி வாரியம் நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வணிகம் குறித்த பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்று பயிற்சி திட்டத்தின் விளக்கத்தையும், பயனையும் எடுத்துக் கூறினார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் முகாமை துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். 

                    முகாமின் நோக்கம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் விளக்கினார். ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய இயக் குனர் தேவராஜ், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாமன்ற உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் பேசினர். இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த 25 பயனாளிகள் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Read more »

கீழணையில் தண்ணீர் திறந்தும் நிரம்பாத வீராணம் ஏரி

சிதம்பரம் : 

             சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பாசனத்திற்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து ஒரு வாரமாகியும் வீராணம் ஏரி நிரம் பாமல் வற்றிய நிலையிலேயே உள்ளது. 

               கூடுதல் தண்ணீர் திறக்காத நிலை நீடித்தால் வடவாறு மற்றும் வீராணம் பாசனப் பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குவது வீராணம். கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும். சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதையொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் இருந்து வருகிறது. 

                 ஆனால் தற்போது பாசனத் திற்கு  தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் வீராணத்திற்கு தண்ணீர் விடாமல் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் அளவு மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 40 அடிக்கு குறைந்தது. ஏரி முழுவதும் பாசி, செடிகொடிகள் வளர்ந்து வறண்ட நிலையில் காணப்பட்டது. இருந் தும் சென் னைக்கு குடிநீர் எடுத்துச் செல் வது பாதிக்காத வகையில் தொடர்ந்து தண்ணீர் அனுப்பப் பட்டு வருகிறது.

               இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை மாவட்ட காவிரி கடைமடை பகுதி பாசனத்திற்கு கீழணையில் இருந்து 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட் டது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தண்ணீர் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே வீராணம் நீர் மட்டம் உயரும். ஆனால் இம் முறை குறைவான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணத்தின் நீர்மட்டம் உயராமல் 41 அடி மட்டுமே தொடர்ந்து காணப்படுகிறது. 

                   குறைந்தது 2,000 கன அடியாவது தண்ணீர் வந்தால் மட்டுமே 15 அல்லது 20 நாட்களில் வீராணம் ஏரியில் தண்ணீர் பாசனத்திற்கு கொடுக்கும் அளவிற்கு நிரம்பும். தற்போது கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையில் ஏரியில் எந்த மாற்றமும் இல்லாமல் வறண்ட நிலையே நீடிக்கிறது. இதே நிலையில் தண்ணீர் வந்தால் ஏரி நிரம்ப மாதக்கணக்கில் ஆகும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே வீராணத்திற்குக் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வடவாறு மற்றும் வீராணம் பாசன பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் கூறினர்.        

Read more »

கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள் கிராம மக்கள் திடீர் முற்றுகை

கடலூர்:

             ஊராட்சி தலைவரை வழக்கில் சேர்க்கக் கூடாது என கலெக்டர்  மற்றும் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர். 

               கடலூர் அடுத்த திருமானிக்குழி ஊராட்சிக்குட்பட்ட  டி.புதுப்பாளையம் மற்றும் மாவடிப்பாளையம் கிராமத்தினரிடையே கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மோதலில் ஒரு கும்பல் மாவடிப்பாளையம் கிராமத்தில் புகுந்து வக்கீல் பகீரதன் வீட்டைத் தாக்கி, அங்கிருந்த மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் வக்கீல் பகீரதன் பாட்டி ஜெயலட்சுமி இறந்தார். 

                இந்த சம்பவத்திற்கு காரணமான  ஊராட்சி தலைவர் காசிநாதன் உள்ளிட்ட பலர் மீது புகார் செய்தும், ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதியாததால்  திருப்பாதிரிப்புலியூர் போலீசாரை கண்டித்து நேற்று வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென  ஊராட்சி தலைவர் காசிநாதனின் ஆதரவாளர்கள் 300க்கு மேற்பட்டோர், கடலூர் கலெக்டர் அலுவலகம், அதனைத் தொடர்ந்து எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு முன்விரோதம் காரணமாக காசிநாதன் மீது வக்கீல் பகீரதன் புகார் செய்துள்ளார். எனவே, காசிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என  கோஷமிட்டனர். பின்னர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., யிடம் மனு கொடுத்தனர்.

Read more »

குறுவட்ட விளையாட்டுப் போட்டி சி.என்.பாளையம் மாணவி வெற்றி

நடுவீரப்பட்டு : 

                குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் கல்வி மாவட்ட மகளிர் உடற்திறன் கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடந்தது. 14 வயதுதிற்குட்பட்ட  மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தேவி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior