
வாகனங்களுக்கு தேசிய பெர்மிட் பெற ஜூலை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்,'' என, போக்குவரத்துத் துறை கமிஷனர் ராஜாராம் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை கமிஷனர் எம்.ராஜாராம் நேற்று மதுரையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஆய்வு செய்தார்.
போக்குவரத்துத் துறை கமிஷனர் எம்.ராஜாராம் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் விபத்தை குறைப்பதில், அவசர கால நிவாரண மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறோம். மதுரையில் இறப்பு விபத்துகளை பொறுத்தவரை 2008ல் 137பேர் இறந்துள்ளனர். 2009ல் 122 ஆக குறைந்துள்ளது. இதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து நிவாரண மையங்கள் காரணமாக உள்ளதென தெரிகிறது. இதனால் விபத்தில் சிக்குவோருக்கு உரிய முதலுதவி கிடைக்கிறது. மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பல முன்மாதிரியான செயல்பாடுகள் உள்ளன. விபத்துகள், பாதிப்புகளை படம் பிடித்து கண்காட்சியாக வைத்துள்ளனர். ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெற வருவோருக்கு விபத்து குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கின்றனர். இதை மாநிலம் முழுவதும் உள்ள 73 ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ பெர்மிட் வழங்கும் நடைமுறையில் தற்போது மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை. மதுரையில் கடந்த மே இறுதி வரை 2,046 பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மனுசெய்த 32 ஆயிரம் பேருக்கு, பெர்மிட்டுக்கு முந்தைய "புரொசீடிங்' வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்டோ வாங்கிய பின் பெர்மிட் வழங்கப்படும். பள்ளி வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் வேகத்தடை கருவி பொருத்த வேண்டும். புதிய வாகனங்கள் எனில் பெர்மிட் வாங்கும்போதே அவற்றை பொருத்தியாக வேண்டும். சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக, வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லாரி உட்பட வாகனங்களுக்கு, "நேஷனல் பெர்மிட்' வழங்கும் புதிய நடைமுறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் புதிய நடைமுறையாக ஜூலை முதல் ஆன்-லைனில் விண்ணப்பித்து உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எல்.பி.ஜி., சிலிண்டர் பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே புதிதாக அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை அதுகுறித்து பரிசீலிக்கப்படும். அமைச்சுப் பணியாளர் நியமனம் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜாராம் கூறினார்.