கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளது.
இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.அப்துல் மஜீது, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை மேற்பார்வையிடும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் மீது நம்பிக்கை வைக்காமல், எஸ்.எம்.எஸ். மீது நம்பிக்கை வைத்து ஆட்சியர் அறிமுகம் செய்துள்ள எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் திட்டம் கைவிடப்பட வேண்டும்.
எஸ்.எம்.எஸ். கொடுக்க வேண்டும் என்ற உத்தரவால், கற்பிக்கும் நேரம் குறையும். கற்பிக்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு படபடப்பு, தடுமாற்றம், பயம், கற்பிக்க முடியாமல் போகும் நிலையும் ஏற்படும். தர்மபுரி மாவட்டத்தில் இத்திட்டம் அமல்படுத்தியதில், கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அந்த மாவட்டத்தில் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியர் மாற்றப்பட்ட பின்பு திட்டம் கைவிடப்பட்டது. பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர், கல்வித்துறை அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட விடுப்புகளால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விடுமுறையில் செல்வதால், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தினமும் ஏற்படுகிறது.
ஆசிரியர்கள் வராவிட்டால் ஓராசிரியர் பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் வருகையை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கும் திட்டம் தொடர்ந்தால் திட்டத்தைக் கைவிடக்கோரி 13-ம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.