உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

என்எல்சி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு


                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                      என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

                   என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுசவுடன், என்எல்சி நிர்வாகம் அக்டோபர் 10 ம் தேதி சென்னையில் ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணிக்குச் செல்லத் தொடங்கினர். இந்நிலையில் நெய்வேலியில் 13.10.2010 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலரும், அதிமுக எம்எல்ஏவுமான சின்னச்சாமி கூறியதாவது,
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக இம்மாதம் 20ம் தேதி அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவினர் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read more »

சரியான முகவரியினை தெரிவிக்காத 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

                     சரியான முகவரியினை தெரிவிக்காத காரணத்தால் நாடு முழுவதும் 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது.
                 நாடு முழுவதும் செல்போன் சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிததவண்ணம் உள்ளன. போட்டியின் காரணமாக 5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இப்படி சிம்கார்டு விற்பனை செய்வதால் சரியான முகவரியின்றி போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகளை வாங்குவதாகவும் இத்தகைய சிம்கார்டுகள் பயங்கரவாத செயலுக்கு காரணமாக அமையும் என புகார் எழுந்தது.

                    இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் முன்னணி செல்போன் சேவைநிறுவனங்களின் தலைவர்கள் மத்திய அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விரைவில் வாடிக்கையாளர்களின் முகவரிகளை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடைக்கு தொழில்நுட்பங்கள்

கடலூர்:
 
                  கம்பு அறுவடைக்கு முன்னும், பின்னும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வெளியிட்டுள்ளது.  
 
வேளாண் துணை இயக்குநர் நா.தனவேல், வேளாண் அலுவலர் ந.சுரேஷ் ஆகியோர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
                    கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடை பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வீரிய ஒட்டு கம்பு ரகங்களை அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர்.  விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் வகையில், கம்பு அறுவடையின்போது, கீழ்க்காணும் அறுவடைக்கு முன்செய் மற்றும் அறுவடைக்கு பின்செய் தானிய நேர்த்தி தொழில்நுடபங்களைத் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
                   கதிர்கள் முதிர்ந்து இலைகள் பழுப்பு நிறமாக மாறியதும், கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால், பூஞ்சாணம் தாக்கிய கதிர்களை, தனியே பிரித்துக் காய வைக்க வேண்டும்.  காய வைத்த கதிர்களில் இருந்து கதிர் அடிக்கும் கருவிகள் அல்லது கல் உருளைகளை பயன்படுத்தி தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் மணிகளை காற்றில் தூற்றி, இலைகள் சருகுகளை நீக்க வேண்டும். 
 
                        விதைகள், கல், மண், இதர தானியங்களையும் உடைந்த தானியங்களையும் தனியாக பிரித்து நீக்கி விடவும்.  கம்பினை நன்கு காய வைத்து நிழலில் உலர்த்தி, சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி மூடி சேமிக்கவும். உள்பக்கம் பாலித்தீன் தாள் பொருத்திய சாக்குகளில் தானியங்களை சேமித்தால், மழைக்காலங்களில் ஈரப்பதத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.  காய வைத்த கம்பினை சேமிக்கும்போது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து ஆறவிட்டு, சேமிப்பது முக்கியம். இல்லாவிட்டால் வண்டுகள் தாக்கி, கம்பின் தரம் பாதிக்கப்படும்.  

Read more »

கடலூரில் காங்., கட்சியினர் மறியல் : போக்குவரத்து பாதிப்பு: 35 பேர் கைது




கடலூர் : 

                     கடலூரில் காங்., கட்சியினர் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

                             கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர். இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் கட்சி அலுவலகத்திலிருந்து மொபைல் போனில் பேசியபடி திருப்பாதிரிப்புலியூர் நோக்கிச் சென்றார். உட்லண்ட்ஸ் சிக்னலில் இருந்த போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பைக்கில் சென்ற ஞானசேகரனை நிறுத்தி எச்சரிக்கை செய்து லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் கேட்டார். அவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் வழக்கு பதிவு செய்ய பெயரை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஞானசேகரன், "வண்டியை எப்படி எடுப்பது என எனக்குத் தெரியும்' எனக் கூறி விட்டு பைக்கை அதே இடத்தில் விட்டுச் சென்றார்.

                இதனைத் தொடர்ந்து கடலூர் நகர காங்., தலைவர் ரகுபதி, சட்டசபை தொகுதி தலைவர் ராமராஜன், காங்., நிர்வாகிகள் சரவணன், செல்வக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் டி.எஸ்.பி.,யை சந்திக்கச் சென்றனர். டி.எஸ்.பி., வர தாமதம் ஆனதால் மாலை 6.15 மணிக்கு, கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து வழக்கு பதிந்தனர். காங்., கட்சியினரின் மறியலால் நகரின் பிரதான சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


Read more »

11ம் நூற்றாண்டு சிவலிங்கம் அவிநாசியில் கண்டுபிடிப்பு


             அவிநாசி அருகே பள்ளிச்சுவர் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியிலிருந்து கிபி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கத்தை அருங்காட்சியகத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.  
 
                   அவிநாசி ஒன்றியம், காணூர் ஊராட்சி, பெரியகாணூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக கடந்த 10 நாள்களாக பள்ளியைச் சுற்றிலும் குழி தோண்டப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளியின் முன்புறம் கடந்த அக். 9ம் தேதி குழிதோண்டிய போது லிங்கம் போன்ற கல் தெரிந்துள்ளது. அப்பகுதி மக்கள் தொடர்ந்து தோண்டி அக்கல்லை எடுத்தபோது, கூம்பு வடிவத்தில் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த லிங்கத்தைப் பார்வையிட்டனர். அந்த லிங்கம் கிபி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிவித்தனர்.

Read more »

தமிழகத்திலிருந்து 4,241 பேர் ஹஜ் புனித யாத்திரை

                         தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு 4,241 பேர் செல்வதாக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு ஹஜ் புனித யாத்திரைக்கு முதல் குழுவினர் சென்றனர். இவர்களை விமான நிலையத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.  
அப்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது:  
                         முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு சார்பில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை வழியனுப்பி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலிருந்து இதுவரை ஹஜ் புனித பயணத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஆண்டுக்கு 2,700 பேர் தான் சென்றுள்ளனர். ஆனால், முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியால் இந்த ஆண்டு 4,241 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.  முதல் குழுவில் மொத்தம் 460 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.  வழியனுப்பும் நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் மைதீன்கான், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பழ மரங்களில் ஒட்டுண்ணி தாக்குதலா?


 
                  பழ மரங்களில் ஒட்டுண்ணி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மைய வேளாண் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.  
 
                   தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பழப்பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.  இந்தப் பழப் பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்பு ஏற்படுவது போல, தண்டு ஒட்டுண்ணித் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றன.  இந்த ஒட்டுண்ணிகள் மா மரத்தை அதிக அளவில் தாக்குவதால் இவை "மா ஒட்டுண்ணி' என அழைக்கப்படுகின்றன.  இவை மா பயிரைத் தவிர கொய்யா, சப்போட்டா, முந்திரி, மாதுளை, எலுமிச்சை போன்ற பழ மரங்கள், தரிசு நிலங்களில் காணப்படும் மரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களையும் தாக்கக்கூடியவை. 
 
                     "லோரான்தஸ்' எனப்படும் இந்த ஒட்டுண்ணிகளுக்கு வேர் இல்லாததால் அவற்றுக்குத் தேவையான நீர் மற்றும் உணவுப் பொருள்களுக்கு மரங்களின் தண்டு பாகத்தில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை "தண்டு ஒட்டுண்ணிகள்' எனவும் கூறுகின்றனர்.  பாதிப்புகள்: ஒட்டுண்ணிகள் தாக்கப்பட்ட கிளைகள் வளர்ச்சிக் குன்றியும், நலிந்தும், இலைகள் சிறுத்தும், நிறம் மாறியும் காணப்படும். தாக்கப்பட்ட கிளைகளில் காய்களின் உற்பத்தி குறைந்து விடும். உற்பத்தியாகும் காய்களும் தரமற்று, சிறிய அளவில் காணப்படும். 
 
                     இவை விரைவில் உதிர்ந்து விடும்.  சில வேளைகளில் தாக்கப்பட்ட கிளைகளில் ஒரே இடத்திலிருந்து அதிக சிம்புகள் தோன்றி, அவற்றின் இலைகள் மிகவும் சிறுத்து குத்தாகக் காணப்படும். இளஞ்செடிகளில் ஒட்டுண்ணி தாக்குதல் காணப்பட்டால் விரைவில் அச்செடிகள் அழிந்துவிடும்.  கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்கப்பட்ட கிளைகளை தாக்கிய இடத்திலிருந்து ஒரு அடி தூரம் பின்னாலிருந்து வெட்டி அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒட்டுண்ணியின் உறிஞ்சும் உறுப்புகள் பரவிக்கிடக்கும் பகுதிகள் முழுமையாக அழித்து விடும். 
 
                    அல்லது ஒரு லிட்டர் தண்ணீருடன் 300-400 மி.லி. திரவ நிலையில் இருக்கும் டீசல் எண்ணெய், 5 மி.லி. திரவ நிலையில் இருக்கும் சோப்பு கலவையை ஒட்டுண்ணியின் மீது தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.  
 
மேலும் விவரங்களுக்கு: 
 
சுந்தரராஜ், 
திட்ட ஒருங்கிணைப்பாளர், 
டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், 
எலுமிச்சங்கிரி, 
கிருஷ்ணகிரி.  
தொலைபேசி  எண்கள்: 04343-296039, 9443888644, 9842294615.

Read more »

பண்ருட்டியில் அக்மார்க் விழிப்புணர்வு முகாம்

பண்ருட்டி:

                  வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை சார்பில் அக்மார்க் விழிப்புணர்வு முகாம் கம்மாபுரம் ஒன்றியம் சிறுவரப்பூர் கிராமத்தில் அண்மையில் (அக்டோபர் 7) நடந்தது. சிறுவரப்பூர் ஊராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை அலுவலர்கள் ஏ. பிரேமலதா, அமுதா ஆகியோர் அக்மார்க் பொருட்களின் தரம் பிரிப்பு பணிகள், அக்மார்க் தரச் சான்று வழங்கும் முறை, உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தின் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். உதவி வேளாண்மை அலுவலர் அருட்பிரகாசம் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், அறிவழகன் நன்றி கூறினார்.

Read more »

பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

பண்ருட்டி:
 
                    பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மனித உரிமை மேடை என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், மனிதநேய மக்கள் நலத் தொண்டர் விருது வழங்கும் விழா பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 
 
மனித உரிமை மேடை கழகத் தலைவர் இ. கேசவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
 
                            டோல் கேட் முறையை அமல்படுத்தி கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை போக்க பண்ருட்டியில் புறவழிச் சாலையை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க கெடிலம் நதியில் தடுப்பணை கட்ட வேண்டும். பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் போது 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. 40 பேர் ரத்ததானம் செய்தனர்.   
 
                         குறும்பட இயக்குநர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், பண்ருட்டி வட்டாட்சியர் பி. பன்னீர்செல்வம், நெய்வேலி தாய் தொண்டு மைய நிறுவனர் ராசி. ஜெகதீஸ்வரன் ஆகிய  மூன்று பேருக்கு மனிதநேய மக்கள் நலத்தொண்டர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது "திற' என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. மாநில அமைப்புச் செயலர் ஆர். வைத்தியலிங்கம் வரவேற்றார், அமைப்பு செயலர் ஏ. சாதுல்லாகான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக பொதுச்செயலர் அ. பக்ருதீன் செய்திருந்தார்.

Read more »

கடலூரில் நாட்டுப் புறப்பாடல் குறுந்தகடு வெளியீடு

கடலூர்:

                 கவிஞர் நல்லரசனின் "தை மாசம்' என்ற நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

                 தமிழகக் கிராமப் புறங்களில் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில், மறைந்தும் மறையாமல் இருக்கும் 11 நாட்டுப்புறப் பாடல்களை, "தை மாசம்'  என்ற தலைப்பில் கவிஞர் நல்லரசன் தொகுத்துள்ளார். இதற்கான குறுந்தகடு வெளியீட்டு விழா கடலூரில், குறுந்தகட்டை நெல்லிக்குப்பம் எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் வெளியிட, முதல் பிரதியை இசையமைப்பாளர் புதுவை சித்தன் செயமூர்த்தி பெற்றுக் கொண்டார். 

                        நிகழ்ச்சியில் பா.ம.க. நகரச் செயலர் ஆனந்த், நா. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கவிஞர் ஜெயபாஸ்கரன், ஸ்ரீகாந்த், கடலூர் நகர குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். நிஜாமுதீன், அரசு வழக்கறிஞர் கோ. வனராசு, முன்னாள் அரசு வழக்கறிஞர் வேதநாயகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் விடுதலை நம்பி உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சிகளை கவிஞர் பால்கி தொகுத்து வழங்கினார்.

Read more »

சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக் கிழங்கில் மர்ம நோய் தாக்குதல்: விவசாயிகள் அச்சம்

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக்கிழங்கு பயிரில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

                சிறுபாக்கம், அரசங்குடி, மாங்குளம், அடரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி மிகவும் குறைந்த அளவிலான நிலத் தில் கத்தரி, வெண்டை, வெங்காயம், பாகை, தக்காளி, கருணைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விளைவித்து வந்தனர். இதில் 10 மாத அறுவடை பயிரான கருணைக் கிழங்கு சோனா, விரளி, சட்டிக்கரணை, புளிக் கரணை ஆகிய கிழங்கு பயிர்களை விளைவித்து அறுவடைக்கு பின் திருச்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் நகர் புறங்களில் விற்று வருகின்றனர்.

                   முதிர்ந்த நிலையிலுள்ள கிழங்குகளில் திடீரென அழுகல் நோய் தாக்கி செடிகள் இறந்துள்ளது. திடீரென இந்நோய் தாக்குதலால் அச்சமடைந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உரம், உழவு, பூச்சி மருந்து என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள், அறுவடைக்குத் தயாரான நிலையில் மர்ம நோய் தாக்குதலால் கருணைக் கிழங்கு பயிரினை பறி கொடுக்கும் நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.

Read more »

கடற்கரையோரம் 100 ஏக்கரில் பண்ணைக் காடுகள்

சிதம்பரம் : 

                 சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் கடற்கரையோர பகுதியில் நூறு ஏக்கரில் பண்ணைக் காடுகள் அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் திட்டமிட் டுள்ளது.

                சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு புதுச்சேரி, மரக்காணம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 8 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் இந்த ஆண்டு மேற்கொள்ள கூடிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

                      இயக்க தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை தலைவர் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில், கடற்கரையோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், வேளாண் வளர்ச்சி, மண் அரிப்பை தடுக்கவும் 100 ஏக்கரில் பண்ணைக் காடுகள் அமைப்பது. பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் கடற்கரையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பள்ளியை சுற்றிலும் தோட் டம் அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தல். தொழில் நுட்ப அறிவியல் நுணுக்கங்களை அனைத்து மக்களுக்கும், தொழில் துறை சார்ந்தோர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குதல். சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்கள் வகுத்து செயல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் ஆண்டில் இப்பணியை பெரிய அளவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா : ஆலோசனைக் கூட்டம்

காட்டுமன்னார்கோவில் : 

                 காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு புறம் போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டியுள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணிகளை துவக்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

                   காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., க்கள் மற் றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

                    கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல இடங்களில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். இதில் நீர் வழி புறம் போக்கு, நத்தம் புறம் போக்கு, பொது பாதையில், நீர் வழி புறம் போக்கு உள்ளவர்களுக்கு மனைப் பட்டா வழங்க இயலாத நிலை உள் ளது. அவர்களுக்கு வேறு இடத்தில் தனியாரிடம் இடம் பெற்று கொடுப் பது. இல்லையேல் அரசு நிலம் இருந்தால் வழங்குவதற்காக கணக் கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

                    மேலும் பாதை, தரிசு நிலங்கள், களம், மந்தைவெளி போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு ஆட்சேபணை இருப்பவர்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுப்பது. அல்லது அதே இடத்தில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் புறம் போக்கு, மசூதி, சர்ச், பூங்கா, பட்டி போன்ற புறம்போக்கு இடங்களில் இருப்பவர் களுக்கு ஆட்சேபணை இருந்தால் வேறு இடத் தில் பட்டா வழங்குவது. அல்லது அரசு நிலம் இருந்தால் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொத்த கணக்கெடுக்கும் பணியையும் உடனடியாக துவங்கி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., நடராஜன் உத்தரவிட்டார்.

Read more »

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவர் ஆறுமுகம் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவ,மாணவிகள் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். சிறப்பான காட்சிப் பொருளாக மூன்று கண்டுபிடிப்புகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior