உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

பி.இ.: அரசு கல்லூரி யாருக்கு கிடைக்கும்? பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடங்கள்?



             கீழே கொடுக்கப்பட்டுள்ள வகுப்பு வாரியான இடங்களை வைத்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 
 
              தமிழகத்தில் கோவை, சேலம், சிவகங்கை (காரைக்குடி), வேலூர் (பாகாயம்), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி (பர்கூர்), ஆகிய இடங்களில் 6 அரசு பொறியியல் கல்லூரிகளும், கோவையில் 2, மதுரையில் 1 என 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.  தரமான கல்வி, கல்விக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 கல்லூரிகள் மற்றும் மேற்கண்ட கல்லூரிகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 
                 இதனால், அரசு பொறியியல் கல்லூரிகளைப் போன்றே அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளும் கருதப்படுகின்றன.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் 2010-11-ம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய போது,
 
                "2010-11-ம் ஆண்டு பி.இ. ஒற்றைச் சாளர கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,825 பி.இ. இடங்கள், அரசு உதவிபெறும் 3 பொறியியல் கல்லூரிகளில் 1,544 பி.இ. இடங்கள் உள்ளன' என்று கூறினார். 
 
              மொத்தமுள்ள 100 சதவீத பி.இ. இடங்களில் 69 சதவீத இடங்கள் பி.சி.,எம்.பி.சி., என இட ஒதுக்கீடுகளுக்கும், 31 சதவீத இடங்கள் ஓ.சி. பிரிவுக்கும் ஒதுக்கப்படுகின்றன.  ஓ.சி. என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.),தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) என அனைத்துப் பிரிவினரும் இதில் அடங்குவர்.  இவற்றை வைத்து, ஓ.சி., பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி. (அருந்ததியர்), பழங்குடியினர் என வகுப்பு வாரியாக இடங்கள் கணக்கிடப்படுகின்றன.  அதன்படி, எல்லாப் பிரிவினரும் போட்டியிடும் ஓ.சி.-க்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் 876 இடங்களும், அரசு உதவிபெறும் கல்லூரியில் 479 இடங்களும் உள்ளன.
 
கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்...: 
 
                     அதிகமான கட்ஆஃப் மதிப்பெண் எடுக்க முடியாமல், 197.5-க்கு குறைவாக பெற்றவர்களுக்கு அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக்., குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றில் 2020 பி.இ. இடங்கள் உள்ளன. பி.இ. கட்ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 198 வரை உள்ள மாணவர்கள் இவற்றில் சேருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Read more »

அண்ணா பல்கலை.யில் பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடம்?



                    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.சி., எம்.பி.சி. என வகுப்பு வாரியாக உள்ள  இடங்களை வைத்து, அதில் சேருவதற்கு இடம் கிடைக்குமா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
                   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 156 இணைப்பு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு இணைப்பு தகுதி வழங்குதல், தேர்வு நடத்துதல் உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தால் முன்பு போல் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை; அதில் ஆராய்ச்சிகளின் தரம் குறைந்து வருகிறது; அதனால், அந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்கெனவே இருந்ததுபோல் ஒருமை வகை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வா.செ.குழந்தைசாமி, மு. ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அதன்படி, இணைப்பு கல்லூரிகளைக் கையாள்வதற்காக அண்ணா தொழில்நுட்பப்  பல்கலைக்கழகம் (சென்னை) என்ற பல்கலைக்கழகத்தை உருவாக்கி தமிழக அரசு கடந்த சனிக்கிழமை (ஜூன் 19) உத்தரவிட்டுள்ளது. 
 
             அதனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே இருந்தது போல் கிண்டி பொறியியல் கல்லூரி (சி.இ.), அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி (ஏ.சி.டெக்), குரோம்பேட்டை எம்.ஐ.டி., கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணா ஒருமை வகை பல்கலைக்கழகமாக மீண்டும் செயல்படவுள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம் மேலும் உயரும் என்றும், அதில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு கடும் போட்டியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கு கட்ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் இருந்து 197.5 வரை பெற்ற  மாணவர்களிடையே கடும் போட்டியிருக்கும். கிண்டி பொறியியல் கல்லூரியில் 1045 இடங்கள், ஏ.சி.டெக்  கல்லூரியில் 340 இடங்கள், குரோம்பேட்டை எம்.ஐ.டி.-யில் 635 இடங்கள் என 2020 பி.இ. இடங்கள் உள்ளன.
 
 

Read more »

தமிழ் வழி பி.இ. படிப்பில் சேர தனி கலந்தாய்வா? மன்னர் ஜவஹர் மறுப்பு




            அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் தொடங்கப்படும் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் சேருவதற்கு தனி கலந்தாய்வு எதுவும் கிடையாது; 

          பொதுவாக நடத்தப்படும் பி.இ. கலந்தாய்விலேயே அந்த இடங்கள் நிரப்பப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.  சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம், திண்டிவனம், ஆரணி ஆகிய இடங்களில் 3 உறுப்புக் கல்லூரிகளும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 கல்லூரிகள், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நாகர்கோயில், தூத்துக்குடியில் 2 கல்லூரிகள் என மொத்தம் 11 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. 

                    இது தவிர, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் உள்ளன.  இவற்றில் 2010-11-ம் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்; ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 இடங்கள் இருக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி அறிவித்திருந்தார்.  இந்தப் படிப்புகளில் சேருவதற்கு தனி கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் உள்ளது.  

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:  

               "தமிழ் வழி படிப்புகளில் சேருவதற்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படாது. பொதுவாக நடத்தப்படும் பி.இ. கலந்தாய்வில் தமிழ் வழி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும். அதாவது, கலந்தாய்வுக்கு வரும் மாணவரிடம் கல்லூரிகளில் வழக்கமாக உள்ள பி.இ. இடங்கள் பற்றி சொல்லப்படுவது போல், தமிழ் வழி பி.இ. படிப்பு உள்ள கல்லூரிகள் பற்றியும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். ÷அந்த மாணவருக்கு எந்தக் கல்லூரியில் இடம் வேண்டுமோ அதை அவர் தேர்வு செய்து கொள்ளலாம்' என்றார்.  பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ல் தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Read more »

வேளாண் துறையின் ஆங்கில மோகம்


விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க, கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தொடங்கப்பட்ட அக்ரி கிளினிக்
கடலூர்:

              எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற குரல் நீண்ட காலமாக தமிழகத்தில் ஒலித்து வருகிறது. ஆனால் அது தொடர்ந்து வெற்றொலியாக, சாத்தியம் அற்றதாகவே இருந்து வருகிறது.

                 தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று, அரசாணைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. முறையாகத் தமிழில் கோப்புகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சிச் சொல் அகராதிகளைக்கூட வெளியிட்டு உதவுகிறது தமிழக அரசு.இந்த நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கோவையில் நடைபெற இருக்கிறது. இதற்காக வணிக நிறுனங்கள்கூட தங்கள் நிறுவனப் பெயர்களை தமிழில் எழுத வேண்டும் என்று, தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால் தமிழக வேளாண் துறையோ இன்னமும் தமிழ் வாசனையை வேண்டா வெறுப்புடன் நுகர்ந்து கொண்டு இருப்பதாகவே, அதன் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன. 

                     மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் சேவை மையம் வீதம் தொடங்கப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், அரசுகள் அளிக்கும் நிதியுதவி ரூ.6 லட்சம். அதில் மானியம் ரூ.3 லட்சம். வேளாண் பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த சேவை மையத்தைத் தொடங்க நிதி வழங்கப்படுகிறது. வேளாண் உயர் அலுவலர்கள்தான் இதைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள்.கல்வி அறிவு போதுமான அளவுக்கு இல்லாத விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை, வேளாண்மைக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கும், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்குவதற்கும், இந்த சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன.   

              ஆனால் வேளாண் சேவை மையம் என்றோ வேறு சொற்களிலோ தமிழில் இருக்க வேண்டிய அதன் பெயரோ, "அக்ரி கிளினிக்' . அந்த அக்ரி கிளினிக்கில் இயங்கும் சிறிய மண் பரிசோதனை நிலையத்துக்கு வேளாண் துறை சூட்டியிருக்கும் பெயர், மினி மண் பரிசோதனை நிலையம். ஏன் வேளாண் அலுவலர்களுக்கு "அக்ரி கிளினிக்' என்ற சொற்களுக்கும், "மினி' என்ற சொல்லுக்கும், தமிழ் தெரியாதா அல்லது அதைச் சொல்ல தமிழ் மொழியில் சொற்களே இல்லையா? தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த வேளையிலாவது, வேளாண் துறைக்கு தமிழ் மீது குறைந்தபட்ச கரிசனை இருக்கக் கூடாதா என்று நமது படிப்பறிவில்லா பாமர வேளாண் குடிமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Read more »

திருவதிகை கோயில் வலம்புரி சங்கு


திருச்சிராப்பள்ளி உடையாரால் தானமாக வழங்கப்பட்ட வலம்புரிச் சங்கு (கோப்புப்படம்).
பண்ருட்டி:

              நமது நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் காலமுறைப்படி நெய்வேதியம் நடைபெற அரசர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பலர் பொன் பொருள்களையும், நிலங்களையும் தானமாக அளித்துள்ள செய்தி இன்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

             இந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவதிகையில் உள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு திருச்சியை சேர்ந்த ஒருவர் வலம்புரிச் சங்கை கொடையாக அளித்துள்ளார். அந்த சங்கில் திருச்சிராப்பள்ளி உடையார் என பொறிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது:

              சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு சமீபத்திய இலக்கியங்கள் வரை சங்குகள் போற்றப்பட்டு வருகின்றன. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற முதுமொழியைப்போல, சங்கு இருந்தாலும், இறந்தாலும் வாழுகின்ற உயிராக இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. சங்கை பாடாத புலவர்களும், கவிஞர்களும் இருக்கவே முடியாது. அழகு மங்கையரின் கழுத்தை வலம்புரிச் சங்குக்கு உவமையாகக் கூறுவார்கள். காதல்-மோதல் முதற்கொண்டு சாதல்-கரும காரியங்கள் முடியவும் வரை மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்திருக்கின்ற உயர்ந்தப் பொருள் சங்கு. கீதை சொன்ன கண்ணபிரான் முதல் நாட்டை ஆண்ட மன்னர்கள் வரை போருக்கு சென்ற போது முழங்கியது சங்கநாதம்தான். வெற்றிக்கும், தோல்விக்கும் சங்கே முழங்கும். திருமால் கை தாங்கிய ஆயுதங்களில் சங்குதான் முதன்மையானது. சங்குகளால்தான் கோயில்களில் சிவபெருமானுக்கு 108, 1008 சங்காபிஷேகம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

                  தங்கம், வெள்ளி போன்ற ஆபரண உலோகப் பொருள்கள் கண்டுபிடிக்கப்படாத அன்றைய காலத்தில், நமது முன்னோர்கள் யானைத் தந்தங்களையும், சங்குகளையும் விதவிதமாக அறுத்து அணி மணிகளாக்கிச் சூட்டிக் கொண்டனர் என்பது வரலாற்று உண்மை. காரணம் இந்த இரண்டுமே சுட்டாலும் வெண்மை தருகின்ற பொருள்கள் என்பதால். திருவதிகைத் திருத்தலத்து வீரட்டானேஸ்வரருக்காக பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோயில் தோன்றிய காலம் தொட்டு பல்வேறு அரசர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் கொடை கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்கள் இன்றும் கல்வெட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.  தங்கம், வெள்ளி ஆபரணங்கள், அவற்றால் உருவாக்கப்பட்ட அபிஷேகப் பாத்திரங்கள், நவரத்தினங்கள் இழைத்த அணிமணிகள், நன்செய், புன்செய் நிலங்கள், நந்தவனங்கள், தோப்புகள் போன்றவற்றையெல்லாம் கொடையாகப் பெற்ற திருவதிகை சிவபெருமானுக்கு யாரோ ஒருவர் ஓர் வலம்புரிச் சங்கை கொடையாக அளித்திருக்கிறார். 

               அவர் பெயர் திருச்சிராப்பள்ளி உடையார் என்று அந்த சங்கிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு உடையார் என்பது சாதியல்ல, திருச்சிராப்பள்ளியை ஊராக உடையவர் என்கிற பொருளாகும். சங்கின் மேலுள்ள எழுத்தமைவு கி.பி.14-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசு அதிகாரியோ அல்லது பெருஞ்செல்வந்தரோ இச்சங்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே சங்கை மட்டும் அளித்திருக்க முடியாது. இறைவனின் பஞ்சலோகத் திருமேனிகளை செய்துக் கொடுத்து, அவற்றுக்கு அபிஷேகம் செய்வதற்காக இந்த சங்கையும் உடன் கொடுத்திருக்க வேண்டும். இது சிதம்பரம் ரகசியம் இல்லை என்றாலும் வரலாற்று ரகசியம் தான் என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

Read more »

பண்ருட்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடக்கம்

பண்ருட்டி:

               பண்ருட்டி ரயில் நிலையத்தில் கணினி மூலம் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பண்ருட்டி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள்,​​ தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட இணை பொது மேலாளர் கே.கே.ஸ்ரீவத்ஸôவை வியாழக்கிழமை சந்தித்து பண்ருட்டி ரயில் நிலையத்தில் மூன்று வழிப்பாதை,​​ விரைவு ரயில்கள் நிறுத்தம்,​​ முன்பதிவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

                    இந்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு முன்பதிவு டிக்கெட் உடனடியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி.சண்முகம்,​​ செயலர் ஆர்.சீனுவாசன்,​​ பொருளாளர் எல்.பி.சம்பத்லால்,​​ துணைத் தலைவர் ஜெ.ஹரிஹரன்,​​ இணைச் செயலர் வி.வீரப்பன்,​​ நிர்வாகிகள் ஜெ.விஸ்வநாதன்,​​ என்.அசோக்ராஜ்,​​ ஸ்டேஷன் மாஸ்டர்கள் தரணிதரன்,​​ சுரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: கடலூர் மாவட்ட தி.மு.க.வினருக்கு ​அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

கடலூர்:

                 கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட தி.மு.க.​ செயலரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.​ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.​ கடலூர் திமுகவினர் கோவையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்து உள்ளார்.

எம்.ஆர்.கே. ​ பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                   தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,​​ 23 முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.உலகே வியக்கும் வண்ணம் உவகையுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.​ தமிழ் மொழிக்கு உலகம் முழுவதும் பெருமை சேர்த்திட செம்மொழிக் காவலர் முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ் அறிஞர்கள் கோவையில் ஒன்று கூடுகிறார்கள். மாநாட்டில் கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் 23-ம் தேதி காலை 9 மணிக்கு அனைவரும் வந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.​ கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் தங்குவதற்கு கோவையில் திருச்சி சாலை சூலூரில் உள்ள ஜி.எஸ்.என்.​ திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

                       எனவே கடலூர் மாவட்டத் தி.மு.க.வினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு 23-ம் தேதி காலை 8 மணிக்கு,​​ அனைவரும் ஒன்று கூட வேண்டும்.​ கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் திருச்சி,​​ கரூர்,​​ காங்கேயம்,​​ வெள்ளக்கோயில் பல்லடம் வழியாக சூலூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக நீலாம்பூர் பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு,​​ மாநாடு நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும்.திமுகவினர் அனைவரும் பொதுமக்களும் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியல்

விருத்தாசலம்:

               விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் சித்தலூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது.​ இதை வழக்கறிஞர் கிருஷ்ண கதிரவன்,​​ குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.

                           இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சித்தலூர் காலனியைச் சேர்ந்தவர்கள் இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி 17 குடிசைகளை அமைத்தனர். தகவல் அறிந்த கிருஷ்ண கதிரவன் மற்றும் அவரது ஆள்கள் ஞாயிற்றுக்கிழமை காலை குடிசைகளை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.​ இந்நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்,​​ காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

              பின்னர்,​​ போலீசார் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன்,​​ சங்கரநாராயணன் மற்றும் கோவிந்தராசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் கைது செய்யப்பட்டதை அறிந்த வழக்கறிஞர்கள் சந்திரசேகரன்,​​ விஜயகுமார்,​​ ரங்கநாதன்,​​ இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்,​​ மோதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.அந்த தரப்பினர் தாக்கியதில் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.​ எனவே அவர்கள் தரப்பிலும் வழக்கு பதிவு செய்து,​​ கைது செய்ய வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

                பின்னர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்,​​ வட்டாட்சியர் ஜெயராமன்,​​ காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மற்றொரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார்  கூறியதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

Read more »

சிதம்பரத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

                உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய மத்திய,​​ மாநில அரசுகளைக் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவில் திங்கள்கிழமை​ கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெ​று​கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கடலூர் மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ 

                 ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மீனவரணி செயலர் கே.கே.கலைமணி தலைமை வகிக்கிறார்.​ மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலர் மு.செந்தில்அதிபன்,​​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.மணிவாசகம் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்.​ செல்வி ராமஜெயம் எம்எல்ஏ வரவேற்கிறார்.​ நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறுகிறார்.​ வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஜி.சந்திரசேகரன்,​​ மாணவரணிப் பிரிவு மாவட்டச் செயலர் எம்.உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்

கடலூர்:

                கடலூர் மத்திய சிறையில் கைதிகள் சனிக்கிழமை திடீரென மோதிக் கொண்டனர்.​ இதில் ஆயுள் தண்டனைக் கைதி காயம் அடைந்தார். கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் நாகராஜன் ​(26).​ பல திருட்டுக் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நாகராஜன் போலீஸôரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அதே சிறையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த உமாசங்கர் ​(36) ஆயுள் சிறைத் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.​ ​ 
               ​ 
                 சனிக்கிழமை நாகராஜன்,​​ உமாசங்கர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.இதில் உமா சங்கர் பலத்தக் காயம் அடைந்தார்.​ அவருக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து சிறைச்சாலை காவலர் வேணுகோபால்,​​ கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.​ நாகராஜன் மீது போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கட்டடத்தின் பின் பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பாடநூல்கள்

பண்ருட்டி:
 
                  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடநூல்கள் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் பாதுகாப்பின்றி கேட்பாரற்று கிடந்ததால்,​​ அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடநூல்களை வழங்கி வருகிறது.​ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலகம்,​​ மாவட்டக் கல்வி அலுவகம் அளிக்கும் தேவை குறியீட்டின் படி பாடநூல்கள் அனுப்பி வைக்கும். பின்னர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தேவைக்கேற்ப உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் அதை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
 
                இந்நிலையில் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கட்டடத்தின் பின் பகுதியில் பாதுகாப்பற்று கேட்பாரின்றி 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கொண்ட பாடநூல்கள் கிடப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாடப் புத்தகங்கள் அனைத்தும் நடப்பாண்டில் நடைமுறையில் உள்ளவை என கூறப்படுகிறது.
 
இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகனை,​​ தொலைபேசி மூலம் கேட்டதற்கு,​​ 
 
                "குடோனை சுத்தம் செய்யும் போது ஒதுக்கியது' என கூறினார்.​ மேற்கொண்டு கேட்டதற்கு "கூடுதல் உதவி கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என அலைபேசியை கொடுத்துவிட்டார்.
 
இது குறித்து சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு "
 
              எனக்கு ஏதும் தெரியாது' என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
 
பின்னர் இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியது:
 
                  கடந்த இரு ஆண்டுகளாக ​(2009-2010,​ 2010-2011) மாவட்ட அலுவலகத்தில் இருந்தே நேரிடையாக சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வெளியில் கிடந்த புத்தகம் 2008-2009-ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.​ உதவித் தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர்கள் பாடநூல் பதிவேட்டை முறையாக பராமரிக்காததால் தேவைக்கு அதிகமான புத்தகங்கள் தேங்கிய இருப்பாக இருக்கும். இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் புத்தகம் வைக்கும் குடோன் இருக்கும் போது வெளியில் போட வேண்டிய அவசியம் இல்லை.​ இந்த புத்தகங்கள் நடப்பாண்டுக்கும் பயன்படுபவை.​ அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால் மதிப்பு மிக்க பாடப் புத்தகங்கள் வீணாவதாக வேதனையுடன் ஜீவானந்தம் கூறினார்.

Read more »

ஆனித் திருமஞ்சன தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நகர வீதியுலா வந்தனர்.

                  இரவு 8 மணிக்கு தேரில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டப வாயிலில் எழுந்தருள செய்யப்பட்டு சந்தனம், தேன், பால், இளநீர், விபூதி, பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சுவாமிகளுக்கு திருவாபரண அலங்கார காட்சி, லட்சார்ச்னை, பகல் ஒரு மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு முடிந்து சரியாக 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் ஆடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.உடுக்கை, தாளம், தம்பட்டை என வாத்தியங்கள் முழங்க சுவாமிகளின் திருநடன காட்சியை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக் தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் ஆகியோர் தரிசன பங் கேற்றனர். டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தரிசனத்தில் பக்தர்கள் மயக்கம்: 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை அமைதியுடனும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக் கும் வகையிலும் நடத்துவது குறித்து கோவில் செயல் அலுவலர், தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஒ., ராமராஜ் தலைமையில் கடந்த 19ம் தேதி நடத்தப்பட்டது. கூட்டத்தில், வெயில் தாக்கம் குறையாததால் தரிசனத்தை பக்தர்கள் பாதிக் காத வகையில் மதியம் 2 மணிக்குள் முடித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. தீட்சதர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் நேற்று தரிசனம் மாலை மூன்று மணிக்கு காலதாமதமாக நடந்தது. அதனால் வெயிலில் பல பெண்கள் மயங்கி விழுந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு குறைவு: 

              வழக்கமாக நான்கு டி.எஸ்.பி., மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிப் படை, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, நண்பர் கள் குழு என பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்று விட்டதால் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருந்தனர். ஊர்க்காவல் படையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

Read more »

மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்கக்கோரி பட்டதாரி பெண்கள் எம்.பி.,யிடம் மனு

கடலூர் : 

             மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்டுத்தரக்கோரி பட்டதாரி பெண் கள் எம்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கடலூர் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த பட்டதாரி பெண்கள் கலைச் செல்வி (20), புஷ்பலதா (18). இருவரும் மலேசியாவில் சிறையில் உள்ள தனது தாயை மீட்கக் கோரி எஸ்.பி.,அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். மனுவின் மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் கூறியதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தனர்.

             மேலும் இதுகுறித்து எம்.பி.,யிடம் முறையிட சென்றனர். அங்கு எம்.பி.,யும் இல்லாததால் காங்.,செய்தி தொடர்பாளர் குமாரிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                  எங்கள் தாயார் லட்சுமி. கணவனால் கைவிடப்பட்டவர். எங்களை படிக்க வைப்பதற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜன. 15ம் தேதி வசந்தராயன்பாளையம் அம்சா என்பவர் மூலம் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றார். கடந்த ஆறு மாதமாக பணம் அனுப்பவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது "எனக்கு சம்பளம் தரவில்லை. 20 மாத விசாவிற்கு பதில் மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் அனுப்பப்பட்டுள்ளேன்' என்றார்.

                        இது குறித்து அம்சாவிடம் கேட்டதற்கு, "எனக்கு தெரியாது, ஏஜன்டிடம் கேளுங்கள்' என்றார். அவரிடம் கேட்டபோது, "வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் என் வேலை வேறு எதுவும் தெரியாது' என கூறி விட்டார்.இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த பானு என்பவர் எங்களிடம் போனில் தொடர்பு கொண்டு "உங்கள் தாய் லட்சுமி மலேசியாவில் சிறையில் உள்ளார். நானும் அவருடன் சிறையில் இருந்தேன். பிறகு மதுரை வந்தேன். உங்கள் அம்மாவிடம் பாஸ்போர்ட் இல்லை. நான் சொல்லும் நபரிடம் பணம் கட்டினால் உங்கள் தாயை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்' என்றார்.

                எங்கள் தாயார் ஒரு நாள் போனில் தொடர்பு கொண்டு "நான் பாஸ் போர்ட் இல்லாததால் சிறையில் இருக்கிறேன். நீங்கள் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை என் பேக்ஸ் எண்ணிற்கு அனுப்பினால் இந்தியாவிற்கு வந்து விடுவேன்' என கூறினார். அதன்படி ஏப். 26ம் தேதி அனைத்தையும் நகல் எடுத்து அனுப்பினோம்.

                       மேலும் மதுரை பானு தொடர்பு கொண்டு "மலேசியாவில் பணிபுரியும் அசோக்வர்மனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் உங்கள் தாயை இந்தியாவிற்கு அழைத்து வரலாம்' என்றார். நாங்களும் அவர் கூறியபடி அசோக்வர்மன் வங்கிக் கணக்கிற்கு மே மாதம் 17ம் தேதி 10 ஆயிரம் ரூபாயும், 22ம் தேதி 5,000 ரூபாயும் அனுப்பி வைத்து அசோக் வர்மனிடம் பேசினோம். இரண்டு வாரங்களுக்குள் உங்கள் தாயாரை அனுப்பி வைக்கிறேன் என்றார். ஆனால் ஒரு மாதமாகியும் வரவில்லை. மேலும் அவர் மொபைல் எண் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எங்கள் தாயாருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. இதுகுறித்து தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அனுமதி ரத்து: ஆர்.டி.ஓ., எச்ச

கடலூர் : 

          சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் சிறை பிடிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

இது குறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் செய்திக் குறிப்பு:
       
                      சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அவ்வாறு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி ரத்து செய்யப்படும்.அதேப்போன்று பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இயக்கப்படவேண்டும். தவறினால் அனுமதி ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., சிறப்புத் தேர்வு நாளை முதல் நுழைவுச்சீட்டு


கடலூர் : 

             எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது..

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                எஸ்.எஸ்.எல்.சி., மெட் ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வுகள் வரும் 29ம் தேதி முதல் ஜூலை மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. அதை யொட்டி தேர்விற்கு விண் ணப்பித்துள்ள அனைத்து தனித் தேர்வர்களுக்கும் நுழைவுச் சீட்டு நாளை 21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

                பள்ளி மூலமாக விண் ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்த பள்ளி மூலமாக வழங்கப்படும். கடந்த மார்ச் 2010 அதற்கு முந்தைய மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் தோல்வியடைந்து, தனித்தேர்வராக எழுத நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனுமதிச் சீட்டினை புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி செல்லபெருமாள் பேட், திண்டிவனம் மேரஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப் புரம் புனித ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வீட்டு முகவரிக்கு அஞ்சலில் அனுப்பப்பட மாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி ஓமகுளத்தில் ஒற்றைக்கால் தவம்


சிதம்பரம் : 

                    சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி பக்தர் ஒருவர் குளத்தில் ஒற்றைக் காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் கணேசன் (33). நந்தனாரின் தீவிர பக்தர். ஆண்டு தோறும் நடராஜர் கோவில் தரிசனத் திற்கு வரும் போது நந்தனார் மடத் திற்குச் செல்வது வழக்கம். நேற்று ஆனித் திருமஞ்சன தரிசனத்திற்கு வந்த அவர் நந் தனார் மடத்திற்குச் சென்றார். மடம் சீரமைக்கப்படாமல் இருப்பது மற்றும் நந்தனார் நீராடிய ஓமகுளம் தூர்ந்து துர்நாற்றம் அடித்தது கண்டு வேதனையடைந்தார்.

                 உடன் நந்தனார் மடத்தை சீரமைத்து குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடுப்பில் வேப்பிலை மட்டும் கட்டிக் கொண்டு ஓமக்குளத்தில் திட்டுப் போன்ற நடுப்பகுதிக்குச் சென்று ஒற்றைக்காலில் தவக் கோலத்தில் நின்றார். சிதம்பரம் நகர போலீசார் கணேசனை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துப் புரவு பணியாளர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அதே இடத்தில் 42 வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சேர்மன் கெய்க்வாட் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களிடம் வீடுகளை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதில், மாற்று இடவசதி செய்தால் உடனடியாக காலி செய்வதாக குடியிருப்போர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என சேர்மன் உறுதியளித்தார். உடன் துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் , ஆய்வாளர் அரிநாராயணதாஸ் ஆகியோர் இருந்தனர்.




Read more »

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன்பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வேண்டுகோள்


பண்ருட்டி : 

             அண்ணாகிராம வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன் பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் பிரேமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

               அண்ணாகிராமம் தோட்ட கலைத் துறை வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 50 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் துல்லிய பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட் டத்தில் பயன்பெற விவசாயிகள் குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் நிலம் அவர்கள் சொந்த பெயரில் இருக்க வேண்டும்.

                   நீர் மோட்டார் சொந்தமாக வைத்திருத்தல் அவசியம். தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, காய்கறிகள், மலர்சாகுபடி ஆகியவை சாகுபடி செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் சொட்டு நீரில் பாசன கருவி அமைத்திட 65 சதவீத மானியம் அதிக பட்சமாக 48 ஆயிரத்து 640 ரூபாய் மானியம் அரசு மூலம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடி ஏற்றதும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீரில் கரையும் உரங்கள், முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

                 இத்திட்டத்தில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ளலாம். குறைந்த கூலி ஆட்கள், பயிரின் தேவைக் கேற்ப நீர் மற்றும் உரம் வேர் பகுதியில் அளிக்கப்படுவதால் தரமான விளை பொருள், அதிக விலை, அதிக லாபம் என நன்மைகள் உள்ளது. தண்ணீரை சிக்கனமாக செலவிட வேண்டிய தருணத்தில் இருப்பதால் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக அண்ணாகிராம வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர்கள் அல்லது உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Read more »

இறகு பந்து போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

கடலூர் :

                    மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கடலூர் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் சிதம்பரம் அண் ணாமலை நகரில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. இதில் கடலூர் பள்ளி மாணவி பிரியதர்ஷினி 13 வயது, 16 மற்றும் 19 வயது பிரிவில் இரட்டையர் போட்டியில் முதலிடமும், பெண்களுக்குண்டான தனிப்பிரிவு இரட்டையர் போட்டியில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தார்.  அவருக்கு பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பிரியதர்ஷினியை, மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், பயிற்சியாளர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

Rs. 6.34-lakh compensation for ryots

CUDDALORE: 

           Collector P. Seetharaman gave away a sum of Rs. 6.34 lakh as compensation towards crop losses suffered by farmers at a grievance day meeting held here on Friday.

        He said that the standing samba crop of 324 farmers was damaged in rain in 2009, for which they were now compensated through the crop insurance scheme. Mr. Seetharaman directed the officials of the Agricultural Engineering Department to make available adequate number of weed removing devices to the farmers who had adopted the System of Rice Intensification. He said that encroachments on the Kumalangulam would soon be removed and feeder channels renovated. Shutters would be fitted at the Kunamangalam tank and encroachments in the area removed.

               A proposal had been sent to the government to put up cement blocks to prevent incursion of saline water into the Khansahib Canal at North Chavadi in Chidambaram block.
Mr. Seetharaman said that to remove the shortcomings in the functioning of the Perur Primary Agricultural Cooperative Society, the Joint Registrar had been asked to conduct a review with the special officer concerned.

Read more »

Prison inmate injured in clash at Cuddalore


CUDDALORE: 

               A convict undergoing life imprisonment in the Cuddalore Central Prison was injured in a clash between another inmate on Saturday. He was taken to the Government Hospital for treatment. Police sources said that Nagarajan alias Raja (26) of Kurinjipadi, detained in connection with theft cases, and Uma Shankar (36) of Usilampatti, serving life sentence in a murder case, used to quarrel often in the cell. On Saturday evening, they picked a wordy duel which ended in fisticuffs injuring Uma Shankar severely.

Read more »

எஸ்.பி., கார் விபத்து: பஸ் டிரைவர் கைது

சிறுபாக்கம் : 

             கடலூர் எஸ்.பி., கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியின் போது விருத்தாசலம், மங்கலம்பேட்டை வழியாக உளுந்தூர் பேட்டை சென்றவர் பின்னர் வேப்பூர் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுகுடி அருகே சேப்பாக்கம் மேம்பாலத்தில் கட்டுமான பணி காரணமாக திருப்பி விடப்பட்ட ஒரு வழி பாதையில் சென்ற போது திருச்சியில் இருந்து சென்னைக்கு அதிவேகமாக சென்ற அரசு பஸ் (டி.என். 32- என் 2527) எஸ்.பி.,யின் கார் மீது மோதுவது போல் சென்றது.

                இதனால் பதட்டம் அடைந்த எஸ்.பி., யின் கார் டிரைவர் சமயோசிதமாக காரை வளைத்து சாலையோர தடுப்புக் கட்டை மேல் ஏற்றினார். இதில் எஸ்.பி., காயமின்றி தப் பினார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து திருத்தணியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஞானபிரகாசத்தை (46) கைது செய்தனர்.

Read more »

குளிர்பான பாட்டிலில் மிதந்த நச்சுப் பொருள்

கடலூர் : 

            கடலூரில் குளிர்பான பாட்டிலில் நச்சுப் பொருள் மிதந்தது.கடலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வேணுகோபாலபுரம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு ஏஜன்சி மூலம் கோகோ கோலா 200 மி.லி., குளிர்பான பாட்டில்கள் வந்தன.

                   நேற்று காலை மகேந் திரன் பாட்டில்களை பிரிட் ஜல் வைப்பதற்காக எடுத்த போது அதில் ஒரு பாட்டிலில் நச்சு பொருள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து மகேந்திரன் கூறுகையில் 

                     "ஏஜன்ட்டிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குளிர்பான நிறுவனத்திடம் கேளுங்கள்' என கூறினார். நிறுவனத்திடம் தொடர்பு கொண்ட போது "இது குறித்து விசாரிக்க நேரில் வருகிறோம் என தெரிவித்தனர்' என்றார்.

Read more »

போலி பத்திரம் தயாரித்து மோசடி : இருவருக்கு வலை

கடலூர் : 

                 கடலூரில் போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சூரப்பன்நாயக்கன் சாவடியைச் சேர்ந்தவர் மந்திரிகுமார் (52). இவர் 2007ம் ஆண்டு பஸ் நிலையம் அருகில் கடை கட்டியபோது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு ஒரு கடை வேண்டும் என கூறி 10 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்தார். இதற்கான ஒப்பந்த பத்திரத்தை முருகன் எழுதி வாங்கிக் கொண்டார். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டதால் ஒப்பந் தத்தை ரத்து செய்ய ஆடிட்டர் பரமேஸ்வரனிடம் சென்றனர்.

                  இருவரும் பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒப்புக் கொண்டனர். பின்னர் ஆடிட்டர் உதவியுடன் மந்திரிகுமார் 13 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு ஒப்பந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அந்த பத்திரம் போலியானது என மந்திரிகுமாருக்கு தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான முருகன், பரமேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

கணவர் கழுத்தை நெரித்து கொலை: நாடகமாடிய மனைவி கைது

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூவரை பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த வடக்கு சாவடியைச் சேர்ந்தவர் முருகவேல் (30). இவரது மனைவி அம்புஜவள்ளி (24). இவர்களுக்கு அருண் குமார் (6), அபினேஷ் (4), அசின் (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். முருகவேல் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.கடந்த 12ம் தேதி முருகவேல் குடித்து விட்டு தகராறு செய்ததால் அம்புஜவள்ளி அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 16ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்ற முருகவேல் குடிபோதையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

                      இதற்கிடையே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகவேலின் தந்தை மச்சகேந்திரன் கிள்ளை போலீசில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில் பிரேத பரிசோதனையில் முருகவேல் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில், முருகவேலை அவரது மனைவி அம்புஜவள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி அம்புஜவள்ளி (25), அவரது தந்தை காசிநாதன் (48), மாமன் மணிவண்ணன் (39) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

                    கணவனை கொலை செய்தது குறித்து அம்புஜவள்ளி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் 9ம் வகுப்பு படிக்கும் போதே முருகவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்தார். எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை.கடந்த 16ம் தேதி என் தாய் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். அவர் மயக்கமடைந்ததால் பயந்து போய் குடித்து விட்டு கீழே விழுந்ததாக எல்லோரிடமும் கூறினேன். உடன் சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்' என தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior