கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத்தை அண்மைக்காலமாக பஸ்கள் புறக்கணித்து வருகின்றன. நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்களும் செல்வது இல்லை. இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முயற்சியால், 2009 அக்டோபர் 1-ம் தேதி முதல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வந்தன. ஆனால் 3 மாதங்கள்தான் இந்த நிலை நீடித்தது. மீண்டும் எந்த பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்வது இல்லை. கடலூர்-நெல்லிக்குப்பம் வழித்தடத்தில் 6 நகரப் பஸ்கள் உள்ளன. இவைகள் நெல்லிக்குப்பத்தின் மேற்கு எல்லையான வைடிப்பாக்கத்தில் இருந்து முன்பு புறப்பட்டு வந்தன. பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின், வைடிப்பாக்கம் வரை நகரப் பஸ்கள் செல்வதில்லை. போலீஸ் நிலையம் வரை மட்டும் சென்று திரும்பி விடுகின்றன. பஸ் நிலையத்துக்கு உள்ளேயும் செல்வதில்லை. நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில் நின்றே பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. நெல்லிக்குப்பம் வழியாகச் செல்லும் நீண்ட தூரப் பஸ்களும், பஸ் நிலையத்துக்குள் சென்று வருவது சிரமமாக உள்ளது, காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, பஸ் நிலையத்துக்குள் செல்ல மறுத்து வருகின்றன. போலீஸ் காவலர்கள் அங்கு இருந்தால் மட்டுமே பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் செல்கின்றன. பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்தால், குறைந்தபட்சம் இங்கிருந்து புறப்படும் பஸ்களில் ஏறுவதற்காவது பயணிகள் உள்ளே வருவார்கள் என்கிறார்கள் பொதுமக்கள். பஸ் நிலையத்துக்குள் 9 கடைகள், ஒரு ஹோட்டல், சைக்கிள் ஸ்டாண்டு, புறக் காவல் நிலையம், பஸ்களுக்கான நேரக் காப்பகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வராததால், கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வியாபாரம் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராதது குறித்து, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து உள்ளார். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்துபோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.