உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, நவம்பர் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமின்றி தவிக்கும் தனியார் பேருந்துப் பணியாளர்கள்

கடலூர்:

          எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்கள் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

              தனியார் நிறுவனங்களில் மூலப்பொருள்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, உற்பத்தியான பொருள்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் போகும் நிலை உள்ளிட்ட பிரச்னைகள் எழும்போதெல்லாம் முதலில் கை வைப்பது, ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் வேலைப்பளுவை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள்தான் என்பது இயல்பான விஷயம்.அந்த வகையில் தற்போது தனியார் பஸ் தொழிலாளர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

            தனியார் பஸ் கட்டணம் 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.50. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 44.85.அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்வு இல்லை என்பது, மக்களை திருப்திப்படுத்தவும், அவர்கள் அரசு மீது எரிச்சல் அடையாமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். அரசு பஸ்களில் கட்டணத்தை உயர்த்தாவிடினும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மறைமுகமாக வழங்கப்படும் மானியம், மக்களின் வரிப்பணம்தான்.ஆனால் நஷ்டத்தை ஈடுகட்டும் நடவடிக்கைகளுக்கு, தனியார் பஸ் முதலாளிகள் மானியமாக, தனது ஊழியர்களின் ஊதியத்தைத்தான் உறிஞ்சுகிறார்கள் என்கின்றனர் தனியார் பஸ் தொழிலாளர்கள்.

          கடலூர் மாவட்டத்தில் 450 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களில் ரூ. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.டீசல் விலை, டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்த்தப்படாதபோது, தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வெட்டு விழுந்தது ஊக்கத்தொகையில்தான். நாளொன்றுக்கு ரூ. 500-க்கு மேல் வசூல் ஆகும் ஒவ்வொரு ரூ. 100-க்கும் ரூ. 1 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆனால்தான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாற்றிவிட்டனர். 

               இதனால் மிகக் குறைந்த ஊக்கத்தொகைதான் கிடைக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.மாதம் 13 நாள்கள் வேலைக்கு, நாளொன்று பஸ் ஓட்டுநர்களுக்கு ரூ. 485-ம் நடத்துநர்களுக்கு ரூ. 475-ம் ஊதியமாக வழங்க வேண்டும் என்கிறது, தமிழக அரசின் குறைந்தபட்ச கூலிச்சட்டம்.ஆனால் தனியார் பஸ் முதலாளிகள் தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வழங்குவது ரூ. 350 முதல் ரூ. 375 வரைதான். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் ஆனதும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.பல தனியார் பஸ் முதலாளிகள் மிகக் குறைந்த தொகையையே போனசாக  வழங்குகிறார்கள், சிலர் போனஸ் வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் சங்க செயலர் பி.பண்டரிநாதன் கூறுகையில், 

            "எரிபொருள் விலையேற்றம், டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்களின் ஊதியம் பெரிதும் பறிக்கப்பட்டு வருகிறது.இதற்கு தீர்வுக் காண, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அல்லது டீசல், டயர் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.ஊதியம் வெகுவாகக் குறைந்து விட்டதன் காரணமாக, தொழிலாளர்கள் பலர் வேறுவழியின்றியே இத்தொழிலில் நீடிக்கிறார்கள். புதிதாக தனியார் பஸ் தொழிலாளர்களாகப் பணிபுரிய பலர் முன்வருவது இல்லை.

               தனியார் பஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுப் பிரச்னையில் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நலத்துறையும் தோற்றுப் போய்க் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் தனியார் பஸ் தொழிலாளர்களின் நிலை பெரும்பாலும் இதேதான்' என்றார்.
















Read more »

கடலூரில் பெட்ரோ ரசாயன தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு

         
           தமிழகத்தில் கடலூரில் பெட்ரோ ரசாயன தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும். இத்தகவலை மத்திய பெட்ரோ ரசாயனத்துறைச் செயலர் ஜோஸ் சிரியாக் தெரிவித்துள்ளார் 

            பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ-ரசாயன முதலீட்டு மண்டலம் (பிசிபிஐஆர்) அமைக்க கடலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்றார். இப்பிராந்தியத்தில் இத்தகைய மண்டலம் அமைப்பதில் சில இடர்பாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக சாலை இணைப்பு வசதிக்காக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். சாலை வசதிக்காக ஓரிரு சாலை திட்டங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து விஷயங்களும் பூர்த்தியாகிவிட்டன என்றார்.

              சாலை திட்டங்களை மேற்கொள்ள கொள்கையளவில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான அனுமதியும் பெறப்பட உள்ளது.பிசிபிஐஆர் திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இதற்குத் தேவையான நிலத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். பிசிபிஐஆர் திட்டத்தை மேற்கொள்ளும் ஐந்தாவது மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழகம் பெறுகிறது. இத்திட்டம் குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

            இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது 250 சதுர கி.மீ. அளவுக்கு முதலீட்டை ஈர்க்க முடியும். உள்நாடு மற்றும் ஏற்றுமதி அடிப்படையில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் அது சார்ந்த சேவைகள், கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.



Read more »

விருத்தாசலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம்

          விருத்தாசலத்தில்  உள்ள பகுதி அலுவலகங்களுக்கு நடப்பாண்டில் சொந்தக் கட்டடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: 

              பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்களைக் கட்டவும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.  அதன்படி, அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் விருத்தாசலம், காங்கேயம் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு சொந்தக் கட்டடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதேபோன்று அரியலூர் மற்றும் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், விருத்தாசலம், குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கும் ஓட்டுநர் தேர்வுத் தளங்களை இந்த ஆண்டு அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.  

            அரியலூர் மாவட்டம் கீழப் பழவூர் கிராமத்தில் அரியலூர் மாவட்டத்துக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்படும். இந்த அலுவலக கட்டடத்துக்காகவும், ஓட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கவும் ரூ.1.82 கோடி அனுமதிக்கப்படும். 12 ஆயிரத்து 237 சதுர அடி பரப்பில் இந்த புதிய கட்டடம் அமைக்கப்படும்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியவடவாடி கிராமத்தில் அங்குள்ள பகுதி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். அங்கு ஓட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கப்படும். இந்தக் கட்டடம் மற்றும் தேர்வுத் தளத்துக்கு ரூ.1.44 கோடி அனுமதிக்கப்படும்.  காங்கேயம் பகுதி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் 5,387 சதுர அடி பரப்பில் கட்டப்படும். இதற்காக ரூ.77.91 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.   







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior