உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

கடலூர்-விருத்தாசலம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்


 
கடலூர் :  
 
                   கடலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.கடலூர்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் முதுநகர் பச்சாங்குப்பம் அருகே ரயில்வே மேம்பாலம்  12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.இதில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திட்டங்கள் பிரிவு மூலம், கட்ட வேண்டிய பணிகள் 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
 
                 இதனால் இப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து வாகனங்களும், கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று, காரைக்காடு அல்லது ஆலப்பாக்கம் அருகே திரும்பி, ஏரிக்கரை சந்திப்பு சாலை, குள்ளஞ்சாவடி வழியாக விருத்தாசலம் சாலையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.காரைக்காடு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் சாலை, ஏரிக்கரைச் சாலை வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் சாலை ஆகியன மிகவும் குறுகியதாக இருப்பதால் பஸ்கள் மிகவும் சிரமப்பட்டு, குறைந்த வேகத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. 
 
              மேலும் பஸ்கள் சுற்றிக் கொண்டு செல்வதால் கூடுதலாக 8 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய நிலையும், கிராமப்புறச் சாலைகள் வழியாகச் செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதாலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஏற்கெனவே போக்குவரத்து நிறைந்த கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. பஸ்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரித்து இருப்பதாக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
                    மேலும் மாற்றுப் பாதையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், சேடப்பாளையம், அன்னவல்லி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 40 கிராம மக்கள் போதிய பஸ்வசதி இன்றி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டதால் மேலும் பணிகள் தாமதம் அடைய  வாய்ப்பு உள்ளது.பாலம் கட்டும் பணி தொடங்கியபோது இருந்த வேகம், தற்போது வெகுவாகக் குறைந்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக வேலை எதுவும் நடைபெறவில்லை. 
 
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                         "மேம்பாலம் கட்டும் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டியதாயிற்று. மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும்.எனினும் பணிகள் முழுவதும் முடிவடைய 18 மாதங்கள் ஆகும்' என்றார்.

Read more »

பண்ருட்டி பகுதியில் மரணக்குழிகளாக மாறிய நெடுஞ்சாலைகள்?


பண்ருட்டி பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்துள்ள கடலூர் சாலை.
 
பண்ருட்டி:
 
                  பண்ருட்டி பகுதியில் கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடத்தில் ஏற்பட்டுள்ள மரணக்குழிகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையால் மேற்கண்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. 
 
                    இதில் வாகனங்கள் சென்று வந்ததால் பல்வேறு இடத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் வீரப்பெருமாள்நல்லூர் முதல் அங்குசெட்டிப்பாளையம் வரை பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இச்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி துறையூரை சேர்ந்த இருவர் லாரி மோதி அதே இடத்தில் இறந்தனர். இந்த விபத்துக்கு மோசமான சாலையே காரணம் என்று கூறப்படுகிறது.
 
                 இதே சாலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகில், சாலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பெரிய கற்களை போட்டுள்ளனர். நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பள்ளத்தை மூட நெடுஞ்சாலை துறையோ, நகர நிர்வாகமோ இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த பள்ளத்தின் அருகிலேயே நகர்மன்றத் தலைவருக்கு சொந்தமான கடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                   இதேபோல் பட்டாம்பாக்கம் அருகே சாலை சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் கெடிலம் நதி புதிய பாலம் வரையிலும், காடாம்புலியூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ஏராளமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும் சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் இறங்கி செல்வதால், எல்.என்.புரம், கும்பகோணம் சாலை, காடாம்புலியூர் ஆகிய பகுதியில் சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
 
                       மேற்கண்ட இவ்விரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளங்களால் இச் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைவது தொடர்கிறது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிலர் உயிரிழந்தும், பலர் பாதிப்படைந்தும் உள்ளனர். தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தி உயிர்ப்பலி வாங்கும் இத்தகைய பள்ளங்களை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்வராதது ஏன் எனத் தெரியவில்லை. இச் சாலை வழியாக கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பயணித்த போதும் சாலையின் நிலையை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

Read more »

என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி

                    மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
                   சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், 20 சதவீத போனஸ் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து என்.எல்.சி.நிர்வாகத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
                  இந்நிலையில் 3-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தம் நீடித்தது.இதையடுத்து தொ.மு.ச. (திமுக), ஏ.டி.பி. (அதிமுக), ஐ.என்.டி.யூ.சி (காங்கிரஸ்)., பி.டி.எஸ். (பாட்டாளி மக்கள் கட்சி), எல்.எல்.எஃப். (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) மற்றும் சிஐடியூ, ஏஐடியுசி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன், சென்னையில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.முதல்கட்டமாக ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த சேகர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
                      இதில் உடன்பாடு ஏற்படாததால், அச்சங்கத்தினர் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துவிட்டு வெளியேறினர்.  இச்சங்கத்தின் சார்பில் நெய்வேலியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.இரண்டாவது கட்டமாக தொ.மு.ச. ஏ.டி.பி. உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பினருடன், பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத 500 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டமைப்பினர் சார்பில் கோரப்பட்டது. 
                    ஆனால், ஒரே நேரத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்டவே இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: 

                தொழிலாளர்களின் பிரச்னைகள் பேச்சுவார்த்தையின்போது சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். ஆனால், தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவே என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாகத் தோன்றுகிறது. நிர்வாகத்தின் சார்பில் ஊதிய உயர்வு வழங்குவதாக பலமுறை உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. எனவே, ஊதிய உயர்வு அறிவிக்கும் வரையில், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று 7 தொழிற்சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டது என்று பிரதிநிதிகள் குள்ளபிள்ளை, நாராயணசாமி, ஸ்டாலின், தேவராஜ் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், நெய்வேலியில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
                        
                  என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் துணை பொது மேலாளர் பெரியசாமி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் சிவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி



                  முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமை கோட்டுக்குக் கீழ் அல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடுவது தொடரும் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க, மருத்துவக் குழு அமைத்து, வீடு, வீடாகச் சென்று ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். 
 
                     இந்த நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ராஜாகலிஃபுல்லா ஆஜராகி பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிறுவனம் மற்றும் 9 தனியார் ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 
                  மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு  1.55 கோடி மதிப்பிலான சிறப்பு மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்த கூடுதலாக  2.49 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், ஊசிகள் போன்றவை தேவையான அளவுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நோயை எதிர்கொள்ளும் முறை பற்றி தனியார் மருத்துவர்களுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.   கன்னியாகுமரி, சென்னை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. 
 
                    இந்த இடங்களில் வீடு வீடாகச் சென்று நோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நோய் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் நிலை, அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பது, சிகிச்சை அளிப்பது  என நோய் தாக்கியவர்களைப் பிரித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை தொடர்பான அதிகாரிகள் மூலம் இந்த நோயின் நிலை நாள்தோறும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,596 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களில் 635 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
 
                  இந்த நோய் தாக்கி 9 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு  15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 
 
                         இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோய் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பற்றிய விவரங்களை அரசு அளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Read more »

சிதம்பரம் சிறுவனுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது

சிதம்பரம்.:

                   சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணுவுக்கு அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வழங்கி கௌரவித்துள்ளார்.

                      இந் நிகழ்ச்சியில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், சென்னை சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டி.எஸ்.சீனுவாசமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறுவன் குருவிஷ்ணு கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 5-க்கும் மேற்பட்ட பொதுநிகழ்ச்சிகள் மற்றும் காரைக்கால் எஃப்.எம். ரேடியோவில் சிறுமலர்கள் நிகழ்ச்சி மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார்.

                               மேலும் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நாட்டின் தூய்மை, நம் வாழ்வின் மேன்மை ஆகிய தலைப்பில் புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையின் மூலம் 2,500 மரக்கன்றுகளை பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார்.

Read more »

விருத்தாசலத்தில் உடைந்த தரைப்பாலத்தால் அடிக்கடி விபத்து

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தை அடுத்த கோ.ஆதனூர் மற்றும் சொட்டவனம் கிராமத்தில் தரைப்பாலம், உடைந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

                     விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்டது கோ.ஆதனூர் மற்றும் சொட்டவனம் கிராமம். கோ.ஆதனூர் மற்றும் அதற்கு உள்பட்ட சொட்டவனம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு கிராமங்களையும் இணைக்கக்கூடிய வகையில் ஆங்கிலேயர் காலத்தில் 2 கண்மாய் கொண்ட பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் அதன் அருகிலேயே சிறிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

                    கார்குடல் அணைக்கட்டிலிருந்து வெள்ளப்பெருக்கு காலத்தில் கோ.ஆதனூர் தரைப்பாலத்தை கடந்து பெரிய ஏரியை அடையும்.÷இந்த ஏரியின் நீரை கொண்டு 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த விளைப்பொருள்களை விருத்தாசலம் உள்ளிட்ட நகரங்களுக்கு எடுத்து வருவதற்கும், சொட்டவனம், மேலப்பாலையூர், கீழப்பாலையூர், கோபாலபுரம், வல்லியம் உள்ளிட்ட கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் கோ.ஆதனூர் தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோ.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைகேட்டபோது, கூறியது: 

                      "கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள இந்த பாலம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இது அதிக விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. சில நாள்களுக்கு முன்புகூட பஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கும். பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு உடனடியாகத் தலையிட்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கேட்டுக் கொண்டார்.÷எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி கோ.ஆதனூர் தரைப்பாலத்தை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Read more »

பன்றிக் காய்ச்சல்: விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

நெய்வேலி:

                     நெய்வேலி நகரில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை என்எல்சி நகர நிர்வாகம் பொது மக்களுக்கு விநியோகித்து வருகிறது. 

                   நெய்வேலியில் பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்எல்சி நகர நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில், பன்றிக்காய்ச்சல் குறித்த அச்சத்தை போக்குதல், மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அறிகுறிகள், பன்றிக் காய்ச்சலை தவிர்க்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது. மேலும் நகரில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பொருட்டு நகர நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் என்எல்சி நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior