கடலூர், டிச. 9:
சொத்துத் தகராறில் போலீஸôர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை பா.ம.க.வினர் புதன்கிழமை 2 மணி நேரம் முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம் அருகே மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் நாராயணசாமி மற்றும் கலியமூர்த்தி. இரு குடும்பத்தினரும் கடந்த 6-ம் தேதி நிலத்தகராறில் மோதிக்கொண்டனர். இதில் கலியமூர்த்தி தரப்பில் இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாராயணசாமி தரப்பில் 4 பேர் லேசான காயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக நடுவீரப்பட்டு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் பலத்தக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலியமூர்த்தி தரப்பினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 4 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். நாரயணசாமி தரப்பினர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, யாரையும் கைது செய்ய வில்லையாம்.
எனவே கலியமூர்த்தி தரப்பில் அவரது ஆதரவாளர்களும் பா.ம.க. வினரும் சேர்ந்து சுமார் 200 பேர் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். ஒன்றிய பா.ம.க. செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்த இந்த முற்றுகை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கலியமூர்த்தி தரப்பினரைத் தாக்கிய நபர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேணடும், பிரச்னைக்குரிய நிலம் தொடர்பாக 145 விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் விரைந்து வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.