உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 15, 2012

தானே புயலால் கடலூர் மாவட்ட பொருளாதாரம் வீழ்ச்சி


கடலூர் அருகே தாழங்குடா மீனவர் கிராமத்தில் புயலில் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிடும் மத்தியக் குழுவினர்.

கடலூர்:
           தானே புயல் பாதிப்பால் கடலூர் மாவட்ட பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. புயலால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

               விவசாயம், பள்ளிகள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், மக்களின் குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றை மட்டும் கணக்கிட்டு, அதையும் குறைத்துக் காண்பிக்கும் கணக்கு இது. ஆனால் இந்த மதிப்பீட்டுக்குள் வராத இழப்புகள் ஏராளமாக உள்ளன. கடலூர் சிட்கோ தொழிற்பேட்டை தொழிற்கூடங்கள் உள்பட மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழில்கூடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். மின் வெட்டால் ஏற்கெனவே நலிந்துவந்த இந்த சிறு தொழில் கூடங்கள், புயல் பாதிப்பால் கடந்த 13 நாள்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன. 

          இவற்றில் பலவற்றுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப் படவில்லை என்கிறார், மாவட்ட சிறுதொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம். சிறுதொழில்கள் பணிகளைத் தொடங்க 20 நாள்களுக்கு மேல் ஆகும். அவற்றில் பணிபுரிவோருக்கு இப்போது வேலை இல்லை என்றார். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் 25 உள்ளன. இவற்றில் 7 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். தானே புயலில் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சுமார் ரூ.100 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டு உள்ளது. இவற்றுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப் படவில்லை. 

             இரு தொழிற்சாலைகள் மட்டும் ஜெனரேட்டர் மூலம் குறைந்த அளவில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று கூறுகிறார், சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்திரகுமார். இந்த தொழிற்சாலைகள் மாதத்திற்கு பல கோடி ரூபாய் மின் கட்டணமாகவும், பல்வேறு வரிகளாகவும் அரசுக்குச் செலுத்துகின்றன. மின்சாரம் வழங்கப்படாததால் தொழிற்சாலைகளுக்கு மட்டுமன்றி, அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு என்றார் அவர். இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். கடலூர் மாவட்ட கிராமங்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலும் வீழ்ந்து விட்டது. 

             கிராமப்புற மக்களிடம் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் கடலூர், பண்ருட்டி நகரங்களுக்கு பொருள்கள் வாங்க வரும் கிராமத்து மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வர்த்தகம் நடக்கவில்லை. வட்டிக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கைதான் அதிகம் என்கிறார் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம். கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருக்கிறது என்பதே அரசின் கணக்கு. ஆனால் இதைவிட அதிகம் வீடுகள் சேதமடைந்து விட்டன. விழுந்து விட்ட கூரை வீட்டை சீரமைக்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். ரூ.10 ஆயிரம் என்று கணக்கில் கொண்டாலும், 3.5 லட்சம் வீடுகளைச் சீரமைக்க ரூ.350 கோடி வேண்டும். 

              அரசு வழங்கும் நிவாரணத் தொகை சுமார் ரூ. 60 கோடி தான். இதை பல வீடுகளில் ஆண்கள், டாஸ்மாக் கடைகளிலேயே செலவிட்டு விடுவார்கள். பின்னர் வீடுகளை எப்படி சீரமைக்க முடியும்? பலா, முந்திரித் தொழிலில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள், முந்திரிக் கொட்டைகளை உடைத்தல், பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோர் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களும் இப்போது வேலையின்றித் தவிக்கிறார்கள். நகரப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், பகல் நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது. இதனால் சிறிதளவு நடைபெறும் வியாபாரமும் படுத்து விட்டதாக வணிகர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.

                மொத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பல சேதங்களை மட்டுமன்றி, மின்சாரம் இல்லாமை, விவசாயம் இல்லாமை, நீண்ட காலத்துக்கு வேலைவாய்ப்பு இல்லாமை என, பல இல்லாமைகளை விட்டுச் சென்றுள்ளதால், மாவட்ட பொருளாதாரமே வீழ்ந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Read more »

தானே புயலால் சிதம்பரம் நகரில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் விலை உயர்வு

சிதம்பரம் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ள பன்னீர் கரும்புகள்.
சிதம்பரம்:

           தானே புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் சிதம்பரம் நகரில் பொங்கல் பண்டிகைக்கான பன்னீர் கரும்பு ஒன்று ரூ.40-க்கும், மஞ்சள் கொத்து ஒன்று ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

         பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு புயலில் பெருமளவு முறிந்து சேதமுற்றதால் குறைந்தளவே வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகரில் குறைந்தளவே கரும்பு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

        இதே போன்று கடலூர் மாவட்டத்தில் புயலில் மஞ்சள் பயிர் சேதமுற்றதால் நாகை மாவட்டம் செம்பனார்கோவில், அல்லிவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் கொத்துகளை வியாபாரிகள் வாங்கி வந்து சிதம்பரம் நகரில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மஞ்சள் கொத்து ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு ரூ.10-க்கும், மஞ்சள் கொத்து ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior