உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
          தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,. எம்.பிளான்., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் இந்த டான்செட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே சேர்ககை வழங்கப்படுகிறது. 
 
          தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பத்துடன் நுழைவுத் தேர்வுக் கட்டணமாக ரூ.500ஐ (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் ரூ.250) செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செலுத்தும் மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.500 அல்லது 250ஐ ஒரே டிடியாக எடுத்தும் அனுப்பலாம். மாணவர்கள் டிடி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையின் மையங்களில் நேரடியாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
         அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பலாம். இந்த மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 
 
          எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,
 
      எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் மாதம் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
 
       எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 
 
 
 
 
 இணையதளம் 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்


பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:

         கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.

           ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. 

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது. 

            மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

            அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன. 

            நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

            பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

            இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயல் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு



 
 
          "தானே' புயல் பாதிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 6 நாள்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
          இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9.63 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது
 
          பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2 முதல் 20 வரை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை முழுமையாகத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் செய்முறைத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 8 முதல் 25 வரை நடத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
        புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதோடு, பள்ளிகளில் வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதிப்பு காரணமாக பள்ளிகள் ஜனவரி 19-ம் தேதிதான் திறக்கப்பட்டன.குடியிருப்புகள், பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
           ஆனாலும், மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் ஜனவரி 29-க்குள் சீரடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். இருந்தாலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மின் இணைப்பு அவசியம் என்பதால், அந்த மாவட்ட அதிகாரிகள் தேர்வைத் தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. முன்னெச்சரிக்கை அடிப்படையில் விடப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்முறைத் தேர்வுகளை 6 நாள்கள் தள்ளிவைத்துள்ளது.
 
          செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மாசுகளால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகம்

கடலூர்:
          
 
          தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. 
 
           கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் 20-க்கும் மேல் உள்ளன.  மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல ரசாயனப் பொருள்கள், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.  இத்தொழிற்சாலைகள் வெளியேற்றும் திட, திரவ, வாயுக் கழிவுகளால் கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. 
 
          தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும், காற்றில் கலக்கும், சுகாதாரக் கேட்டை விளைவிக்கும், மோசமான ரசாயனங்களால், கடலூரில் சுற்றுச்சூழல் மோசமாகி வருவதாக, சிப்காட் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தி, பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது.  மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான "நீரி' என்ற அமைப்பு 2007-ல் முறையான ஆய்வு நடத்தி, சிப்காட் பகுதியில் காற்றில் கலந்துள்ள மோசமான ரசாயனங்களால், புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் 2 ஆயிரம் மடங்கு அதிகரித்து இருப்பதாக, அறிக்கை வெளியிட்டது. 
 
             எனவே இது குறித்து அப்பகுதி மக்களிடையே முறையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தது.  ஆனால் தொழிற்சாலைகளோ, மத்திய, மாநில அரசுகளோ இப்பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை.  புற்றுநோய் அதிகரிக்கும் அபாயமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று, பெயரளவில் மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தன.  அனைவரின் முகத்திரைகளையும் கிழித்தெறிந்து, உண்மையை உலக்குக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்து இருந்தது, சனிக்கிழமை இந்திய மருத்துவச் சங்கம் அளித்த அதிர்ச்சித் தகவல்.  
 
            இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பிரகாசம், "தானே' புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சனிக்கிழமை கடலூர் வந்தார். 
 
 இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவச் சங்க கடலூர் செயலர் சந்திரலாதன் கூறியது: 
 
            "தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் புற்றுநோய் நோய் அதிகரிகத்து வருகிறது.  பிற மாவட்டங்களை விட கடலூரில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாக உள்ளது. இதற்கு சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியிடும் வாயுக் கழிவுகளே முக்கிய காரணம்.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான், புற்றுநோய் பாதிப்பு பெரும்பாலும் காணப்படும். ஆனால் கடலூரில் 25 வயதினரிடையே அதிகம் புற்றுநோய் காணப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக, புற்றுநோயாளிகள், நாளொன்றுக்கு ஒருவர் வீதம், வருகிறார்கள். 
 
              புற்றுநோயால் 4 கட்டமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 4-வது கட்டத்தில், குணமாக்க முடியாத நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.  காரணம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு உள்ளது.  ரசாயனத் தொழிற்சாலைகளால், புற்றுநோயை உருவாக்கும் மாசுகள் அதிகம் இருப்பதை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்து இருக்கிறோம்.  இது குறித்து விரிவான ஆய்வை, இந்திய மருத்துவச் சங்கம் மேற்கொண்டு இருக்கிறது' என்றார் டாக்டர் சந்திரலாதன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்: 

        கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம், பள்ளி, நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி உத்திராபதி தேசிய கொடியை ஏற்றினார். நீதிபதிகள் முருகன், சண்முகநாதன், செல்வநாதன், நர்சீர்பானு, மாஜிஸ்திரேட் சுகந்தி பங்கேற்றனர்.

          கடலூர் நகராட்சியில் சேர்மன் சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் குமார், கமிஷனர் விஜயக்குமார் பங்கேற்றனர். 

           கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மணிமேகலை, 

          மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா, 

        காங்., அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், செல்லஞ்சேரி, 

             காரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கவேலு ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          தேவனாம்பட்டினம் நகராட்சி பள்ளியில் தலைவர் கடல் நாகராஜன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். 

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேர்மன் சுதாகர்,  வரக்கால்பட்டு சாந்த சூரி காளி பராதி அங்காளம்மன் கோவிலில் நிறுவனர் பன்னீர்செல்வம், 

          எழுமேடு பள்ளியில் ஊராட்சித் தலைவர் குமுதவல்லி, 

         டேனிஷ்மிஷன் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் அன்பு ஐ இன்பராஜ் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

பண்ருட்டி நகராட்சி 

         அலுவலகத்தில் சேர்மன் பன்னீர்செல்வம் தலைமையில் கமிஷனர் அருணாசலம் தேசிய கொடி ஏற்றினார். 

          ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., துரை தலைமையில், சேர்மன் மாலதி தேசிய கொடியேற்றினார்.
 
           அன்னை வேளாங்கண்ணி  பாலிடெக்னிக்கில் சிறுவத்தூர் பள்ளி ஆசிரியர் ரத்தின ஆறுமுகம், 

         பாலவிகார் பள்ளியில் முதல்வர் லோகநாதன், 

      புனித அன்னாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் கணபதி, 

      அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சுந்தரி,

      அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் புலமுதல்வர் செந்தில்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

        நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜானகிராமன், 

         சி.என்.பாளையம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மயிலை குருஜி ஆங்கிலப் பள்ளியில் நிர்வாகி முருகவேல் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர். 

சிதம்பரம்: 

           நகராட்சியில் சேர்மன் நிர்மலா, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதி, நகர போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சதீஷ், 

          அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

        ஆறுமுக நாவலர் பள்ளியில் ஹாஜி முகம்மது யாசின், பச்சையப்பன் பள்ளியில் முதுகலை ஆசிரியை கலாவதி, வீனஸ் பள்ளி, 

         காமராஜர் பள்ளியில் சேர்மன் நிர்மலா, காமராஜ் சிறப்புப் பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைத் தலைவர் கதிரேசன், 

           முஸ்தபா பள்ளியில் ஊராட்சி தலைவர் ஷபிபுன்னிசா அய்யூப், 

          தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் ரவிச்சந்திரன், 

          கீழச்சாவடியில் சேர்மன் அசோகன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லூர் ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது எகையா தேசிய கொடி ஏற்றினார்.
 

           விருத்தாசலம்: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தேசிய கொடியேற்றினார். தாசில்தார் பிரபாகரன் பங்கேற்றார். 

          நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் அரங்கநாதன் தேசிய கொடியேற்றினார். கமிஷனர் மணிவண்ணன் உடனிருந்தார்.

          எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முத்துக்குமார் எம்.எல்.ஏ., கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல்வர் கலாவதி கொடியேற்றினர். 

           மாணவர் விடுதியில் உடற்கல்வி ஆசிரியர் கவாஸ்கர், இன்பேன்ட் பள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன்,

           அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன், பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்தார்தன், 

          புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் தலைமை ஆசிரியர் அதிசயராஜன், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சீராளன் தேசிய கொடியேற்றினர்.

            பெரியகண்டியங்குப்பத்தில் கவுன்சிலர் ராஜ்குமார், 

           புதுக்கூரைப்பேட்டையில் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்க தலைவர் ஜோதி, 

           சிறுவம்பார் காலனி ஊராட்சி பள்ளியில் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன், 

           திரு.வி.க., நகர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் டேவிட்லாசர், 

           பூதாமூர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனாம்பிகை, 

           தென்கோட்டைவீதி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் தாரா தேசிய கொடி ஏற்றினர்.










Read more »

கடலூரில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:
 
           கடலூரில் 63-வது குடியரசு தினத்தையொட்டி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசியகொடியை ஏற்றி வைத்து 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
           கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 63வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு முதல்வர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். தியாகிகளை கவுரவித்த, கலெக்டர் ராஜேந்திர ரத்னு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்துறை சார்பில் 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையும், தானே புயலில் பயிர் பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
 
         படகு சேதமடைந்த 10 மீனவர்களுக்கு நிவாரணம் உள்பட மொத்தம் 183 பேருக்கு 41 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் நடனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கூட்டு உடற்பயிற்சி, வேணுகோபாலபுரம் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், வேலவிநாயகர்குப்பம் பள்ளி மாணவிகள், தேச பக்தி பாடல்களுக்கு நடகமாடினர்
 
             . கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு சான்றிதழ்களை வழங்கினார். எஸ்.பி., பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சேர்மன் சுப்ரமணியன், சப் கலெக்டர் கிரண் குராலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior