வடலூர்:
வடலூர் கருங்குழி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஒத்தை தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அங்காளம்மன் கோவில் அருகே ஆழ்குழாய் கிணறும், குடிநீர் தேக்க தொட்டியும் உள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெடிவைப்பதால் இந்த குழாய் கிணறு சேதம் அடைந்துள்ளது. எனவே கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிக்க நல்ல குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாசு படிந்த குடிநீரை மக்கள் குடிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய குடிநீர் குழாய் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஆணையருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.