தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல்கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பை 96 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
மாலை வரை நடந்த கவுன்சலிங்கில் 172 மாணவர்கள் பி.எஸ்சி. மற்றும் பி.டெக். படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு கவுன்சலிங் தொடங்கியது.
முதல் நாளில் 199 முதல் 190 கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் அழைக்கப்பட்டனர். மொத்தம் 302 பேர் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.
இதில் 198.75 மதிப்பெண் பெற்ற அரவிந்த்ராம் என்ற மாணவர் பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பை தேர்வு செய்தார். இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேச பூபதி நிருபர்களிடம் கூறியது: வேளாண் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை கிடைப்பதால், வேளாண் சார்ந்த படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வங்கி மற்றும் உர நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் இரு பட்டப் படிப்புகளை ஒருசேரப் பெறும் பொருட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
10 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்:
கவுன்சலிங்கில் தேர்வான மாணவர்கள், 10 நாள்களுக்குள் தங்கள் மூலச் சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் 2-வது கட்ட கவுன்சலிங் அறிவிக்கப்படும். திருச்சியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் தோட்டக்கலை கல்லூரியில் மாணவியர் சேர்க்கை நடத்துவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது என்றார் முருகேச பூபதி.
2-வது நாள் கவுன்சலிங்:
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (இன்று) 189.75 முதல் 186 வரையில் கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.