உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு

  

           கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

                 சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்p 159 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரிகளில் பாட வாரியாக கலைப் படிப்புகளில் 70 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவும், அறிவியல் படிப்புகளில் 50 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும் சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிலையில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிக வரவேற்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அளிக்குமாறு, பல்கலைக்கழகத்தைக் கல்லூரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 சென்னைப் பல்கலை துணைவேந்தர் க. திருவாசகம்:

             கலை, அறிவியல் படிப்புகளுக்குக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதத்தினர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பியிருப்பதே இதற்குக் காரணம். இதுமட்டும் அல்லாமல் மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடலாம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணம் கிடையாது. ஆனால் தொழில் படிப்புகளைப் படிக்க அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பவையும் கூடுதல் காரணங்கள். பொறியியல் படிப்புகளை முடித்தவர்களைக் காட்டிலும், கலை - அறிவியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது, 

                 இவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் செலவு குறைவு என்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது கலை - அறிவியல் பட்டம் பெற்றவர்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளன. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், மாணவர்களிடையே கலை, அறிவியல் படிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன. விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதைத் தொடர்ந்து, படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தித் தருமாறு கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

                      இதுவரை 19 கல்லூரிகள் இடங்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகளுக்கு அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 10 சதவீதம் உயர்த்தப்படும் என்றார்.


எம்.ஒ.பி. வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத்:

                  கலை, அறிவியல் படிப்புகளுக்கு இம்முறை வரவேற்பு அதிகரித்துள்ளது என்றபோதும், வணிகவியல், பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்புகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. வணிகவியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதால் அப்படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களையே தேர்வு செய்கின்றனர் என்பதால் அப்படிப்புக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

             எங்களுடைய கல்லூரியில் பி.காம். படிப்புகளுக்கு 4 பிரிவுகளின் கீழ் 400 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர கடந்த ஆண்டு 6,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்முறை இந்த எண்ணிக்கை 8,600-ஆக உயர்ந்துள்ளது. கல்லூரியில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் இம்முறை 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 9 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர் என்றார்.



எத்திராஜ் கல்லூரி முதல்வர் ஜோதி குமாரவேல்: 

              வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.கலை, அறிவியல் பிரிவுகளில் ஒவ்வொரு படிப்புக்கும் கடந்த ஆண்டு 500 முதல் 600 பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை இம்முறை 600 முதல் 700-ஆக உயர்ந்துள்ளது. 500 இடங்கள் உள்ள வணிகவியல் படிப்புகளுக்கு 3,850 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் வரை உயர்த்தித் தருமாறு பல்கலைக்கழகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.

           மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகளும் ஒரு மாதத்துக்கும் மேல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தித் தர பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை மாணவர் சேர்க்கை நடைபெறும்போதே செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.




Read more »

செம்மைக் கரும்பு சாகுபடி முறை: குறைந்த செலவு, நிறைந்த மகசூல்


கடலூர்: 

               கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது. குறைந்த விதை, குறைந்த நீர், தேவைக்கு ஏற்ப உரம், ஊடுபயிர் ஆகியவற்றால் அதிக மகசூல் பெறுவதற்கு, செம்மைக் கரும்பு சாகுடி என்ற புதிய தொழில்நுட்பம் உதவுகிறது. 

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் அளிக்கும் பரிந்துரைகள்: 

              2 முதல் 3 பருவுள்ள விதைக் கரணைகளை, நேரடியாக நிலத்தில் நடுவதற்குப் பதில், செம்மைக் கரும்பு சாகுபடி முறையில் விதைக் கரணையில் ஒரு பருவை மட்டும் வெட்டி எடுத்து, குழித்தட்டு மூலம் கரும்பு நாற்றங்கால் அமைக்க வேண்டும். விதைக் கரணையில் இருந்து பருக்களை வெட்டுக் கருவி மூலம் வெட்டி எடுத்து, மக்கிய தென்னை நார் கழிவு நிரப்பிய பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் நீர் ஊற்றி, முளைக்க வைக்க வேண்டும். 25 முதல் 35 நாள் வயதுள்ள நாற்றுக்களை நடவேண்டும். 

                    இதனால் பழைய முறையில் 2 மாதத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஒரே மாதத்தில் பெறமுடியும். வயலில் வரிசைக்கு 5 அடி அகலம் விட்டு, நாற்றுக்களுக்கு இடையே 2 அடி இடைவெளி விட்டு நடவேண்டும். பழைய முறையில் ஏக்கருக்கு 48 ஆயிரம் விதைக் கரணைகளை நட்டு, இறுதியில் 25 ஆயிரம் எண்ணிக்கை கரும்புகளைப் பெறுவதற்குப் பதில், ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுக்கள் மட்டும் நட்டு, 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கரும்பு எண்ணிக்கை பெறமுடியும் என்று விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவிக்கிறது. 

                 இளம் நாற்றுகளில் அதிக கிளைகள் விட்டு சீரான வளர்ச்சி காணப்படுகிறது. காற்றோட்டம் சூரிய, ஒளி உள்புகுதல் அதிகரிக்கிறது. தேவையான அளவு ஈரப்பதம் அளிக்க சீரான நீர் நிர்வாகம் தேவை. வயலில் அதிக நீர் தேக்கம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். புதிய நாற்று நடவு முறையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நீர் தேவையை குறைக்க முடியும். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 80 சதவீதம் வரை நீரை சிக்கனப்படுத்தலாம். அதிக அளவில் ரசாயன, பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், உயிரி முறையில் பூச்சி நிர்வாகம் சிபாரிசு செய்யப்படுகிறது. 

              இதனால் நிலத்தில் நீண்டகால பயனைப் பெறமுடியும். கரும்பில் காராமணி, உளுந்து, பயறு, கத்தரி, கொண்டைக் கடலை போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டு அதிக லாபம் பெறமுடியும். இதனால் களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். நிலத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த முடிகிறது. செம்மைக் கரும்பு சாகுபடி மூலம் நீர் தேவை 30 சதவீதம் வரை குறைகிறது, மகசூல் ஏக்கருக்கு 50 முதல் 70 டன் வரை கிடைக்கும். ஊடுபயிர் மூலம் கூடுதல் வருவாய் அதிகரிக்கிறது. கரும்பு எண்ணிக்கை உயர்வதுடன் எடையும், நீளமும் அதிகரிக்கிறது. 

               சாகுபடி செலவு குறைகிறது. கரணையில் இருந்து நாற்றுக்காக பருக்களை வெட்டி எடுத்தபின், கரும்பை ஆலை அரவைக்கு அளித்து விடலாம். விதைக் கரணைச் செலவில் 75 சதவீதம் குறைகிறது என்றும் பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.





Read more »

கடலூர் கல்வி மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக இளம் வயதில் உடல் உறுப்புக் கோளாறுகளை சரிசெய்யும் முன்னோடி திட்டம்

கடலூர்:

                  இளம் வயதில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை, ஃபிசியோதெரபி மூலம் சரிசெய்யும் வகையில் முன்னோடி திட்டம், இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  

                ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் புதன்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இத் திட்டத்தில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.  சிறுவயது மாணவர்களுக்கு விளையாடும்போதும், ஏனையச் செயல்பாடுகளின் போதும், தசைப் பிடிப்பு, தசை சுருக்கம், மூட்டு பாதிப்பு, ஏதேனும் காயங்கள் ஏற்பட்ட பின், தசைப் பிடிப்பால் ஏற்படும் பாதிப்புகள், முதுகு கூன் விழுதல், கைகால்கள் வலுவிழத்தல், உடல் பருமன், தட்டைக்கால் போன்ற பல உடற்கோளாறுகள் ஏற்படுகின்றன.  இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் நிரந்த உடற் கோளாறுகளாக மாறிவிடுன்றன. 

               இளம் வயதிலேயே இவற்றைக் கண்டுபிடித்து ஃபிசியோதெரப்பி மற்றும் முறையான பயிற்சி செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.  இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளான மாணவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலத்தில் கல்வி மாவட்டத்தல் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உடல் உறுப்புகளில் கோளாறு உள்ள மாணவர்களைக் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடந்தது. கடலூரில் நடந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார். 

              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்டக் கல்விó அலுவலர் பாரதமணி, பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் 15 ஃபிசியோதெரபி மருத்துவர்கள், மாணவர்களிடையே உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பான பல்வேறு மருத்துவச் சோதனைகளை மேற்கொண்டனர்.   455 மாணவர்களைப் பரிசோதித்ததில், 300 மாணவர்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. விருத்தாசலத்தில் நடந்த முகாமில் 561 மாணவர்கள் பரிசோதிக்கப் பட்டதில் 126 மானவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  


                இதுகுறித்த அறிக்கை கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையைப் பரிசீலித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பாக, முறையான பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







Read more »

கடலூர் மாட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு ஏலம்

கடலூர்:

             கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் செயல்படும் பார்களுக்கு, செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது.  கடலூர் மாட்டத்தில் 231 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. 

              இவற்றுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன.  விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில் வைத்து, டெண்டர்கள் பிரிக்கப்பட்டன.  டாஸ்மாக் கிளை மேலாளர் காசி முன்னிலையில் டெண்டர்கள் பிரிக்கப்பட்டன.

             பார்களை நடத்த அதிகத் தொகை கோரியிருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 231 டாஸ்மாக மதுக்கடைகளிலும் பார் நடத்த டெண்டர் கோரப்பட்டு இருந்த போதிலும், 190 விண்ணப்பங்கள் மட்டுமே வந்து இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  231 கடைகளில் 40 முதல் 50 கடைகளில் மட்டுமே பார் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தக் கடைகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை அளித்து இருந்தனர்.







Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

                முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இம்முகாமில், ஹெச்.சி.எல்., நாகார்ஜுனா ஆயில் கார்பரேஷன், ஐ.எஃப்.எஸ்.எல். லிமிடெட், டெக்னோபீஸ் கார்பரேஷன், இ.டி.ஏ. லிமிடெட், சீனாவைச் சேர்ந்த ஃபோகவுன் இன்டர்நேஷனல், சிங்கப்பூரைச் சேர்ந்த ரோட்டரி என்ஜினீயரிங், மலேசியாவைச் சேர்ந்த விகோசி நிறுவனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று திறமையான மாணவ, மாணவியர்களை தங்களது நிறுவனத்தில் பணிபுரிவதற்காக தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கியது. 

                தேர்வு செய்யப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக மாத சம்பளமாக ரூ. 30 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 74 ஆயிரம் வரை வழங்கப்படும்.  பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் பேரில் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பல்கலைக்கழகம் தொடர் சாதனையை பெற்றுள்ளது. 

               பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.  இந்தியா முழுவதிலிருமிருந்து பல்வேறு துறையின் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் அனைவருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது, மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது என பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை தலைவர் முனைவர் கே.ரகுகாந்தன் தெரிவித்தார்.







Read more »

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தமிழகத்தில் 18 மாதங்களில் நிறைவடையும்

             http://www.gigathoughts.com/wp-content/uploads/2009/06/mnic_prototype.jpg
                                  தேசிய அடையாள அட்டை மாதிரி 


              தமிழகத்தில், அடுத்த 18 மாதங்களில், அனைவருக்கும் அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள், முழுவீச்சில் நடக்கின்றன. இதை முன்னிட்டு, மூன்று மாவட்டங்களில், தேர்வு செய்த கிராமங்களில், அடையாள எண் வழங்கும் பணி முடிந்து, 12.50 லட்சம் பேருக்கு, விரைவில் அடையாள எண் அளிக்கப்படுகிறது.

          தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில், அடையாள எண் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

            மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தயார் செய்யப்பட்ட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டைக் கொண்டு, அடையாள எண் தயாரிப்புக்கான பணிகள் நடக்கின்றன. கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் தாலுகாக்களில் உள்ள, சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராம மக்களிடம், அடையாள எண் வழங்குவதற்கான தகவல்கள், சேகரிக்கப்படுகின்றன.

            அடையாள எண் வழங்கும் பணியில், 70 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அடையாள எண் வழங்கும் குழு, கிராமங்களில் முகாம்களை அமைத்துள்ளன. இம்முகாம்கள், ஓட்டுச் சாவடி போல் இயங்குகின்றன. இங்கு, பொதுமக்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இது தவிர, இரு கைகளின், கட்டை விரல் தவிர்த்து நான்கு விரல்களின் பிரதி எடுக்கப்படுகிறது. கட்டை விரல் பிரதி தனியாக எடுக்கப்படுகிறது. புகைப்படம் மற்றும் விரல்களின் பிரதிகளுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தனிநபர் விவரங்களை, டேட்டா என்ட்ரியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதற்கு, 12 இலக்க எண் வழங்குகின்றனர். இந்த எண்ணே அடையாள எண் ஆகும்.

          குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் தாலுகாக்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடந்தது போல, 229 கடலோர கிராமங்களில், அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, 12.50 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், கோபால கிருஷ்ணன் கூறியது 

            "தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், மாதிரிப் பணியாக அடையாள எண் வழங்கும் பணி முடிந்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 18 மாதங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள எண் வழங்கும் பணி முடிவடையும்' என்றார். அடையாள எண் வழங்கும் பணிக்கு, கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தாலுகாவுக்கு தாசில்தார் மற்றும் மாவட்டத்துக்கு கலெக்டர் பதிவு அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். மாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அடையாள எண் வழங்கும் பணிக்கு, விரைவில் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.


இனியெல்லாம் எண்...! 

       அடையாள எண் வழங்கப்பட்ட பின், தனி நபரின் பெயரை விட, அடையாள எண்ணே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நபருக்குரிய அடையாள எண்ணை, கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், 

அவரின் புகைப்படம், 
பெயர், 
தந்தை பெயர், 
முகவரி, 
கல்வித் தகுதி, 
வேலை, 
திருமணம் ஆனவரானால், அவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

         புகைப்படம், அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டையே, ஒரு நபரின் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை எங்கிருந்தாலும், ஒரு நபரின் விவரங்களை, அடையாள எண் மூலம் அறிய முடியும்.





 விபரங்களுக்கு 


http://uidai.gov.in/







Read more »

கடலூர் லாரன்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்

கடலூர் : 

            கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

              மாவட்ட தலைநகரான கடலூரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் என எஸ்.பி., பகலவன் கூறினார்.அ தனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர்-சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

              அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள் குழுவினர் கேமிரா பொருத்தப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது டி.எஸ்.பி., வனிதா, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior