உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

கண்கள் தானம்

சிதம்பரம்,நவ. 9:

சிதம்பரம் தேரடிக்கடைத் தெருவைச் சேர்ந்த எம்.ஆறுமுகம் (82) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெள்ளிக்கிழமை காலமானார்.
இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப் மூலம் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் கே.விஜய்குமார்தாலேடா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read more »

விவசாய தொழிலாளர்களுக்கு வேலையில்லா படி வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்,நவ.9:

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு வேலையில்லா படி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையியால் கிராமப் புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர். மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்படி வேலையில்லா நாட்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பதிவு செய்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு பாதி சம்பளம் ரூ.40 வழங்க வேண்டும். மழையால் அவதியுறும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலையில்லா சம்பளத்தை வங்கிக் கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more »

வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்

கடலூர்,நவ.9:

கடலூர் மாவட்டத்திóல் வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு:
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரத்தில் வெள்ள நிவாரணத் தொகை, மற்றும் உதவிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவாய் இன்றி தவிக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
மேலும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளைச் சீரமைக்க ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Read more »

மின்கட்டணம் செலுத்துவோர் கவனத்துக்கு...

சிதம்பரம்,நவ.9:

அண்ணாமலைநகர் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மாரியப்பாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே அங்கு மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோர்கள் சிதம்பரம் செயற் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கணினி மையங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவித்துள்ளார்.

Read more »

பாதுகாப்பு ஏற்பாடு: மின்வாரியம் அறிவிப்பு

சிதம்பரம்,நவ.9:

சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பாதுகாப்பு குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு விவரம்: மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகே செல்லாமல் மற்றும் தொடாமல் உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மின்கம்பிகளிலோ, இழுவை கம்பிகளிலோ ஆடு, மாடுகளை கட்டுவது, கொடி கம்பிகளை கட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும், மின் மாற்றிகளிலோ, மின் கம்பங்களிலோ பொதுமக்கள் அத்துமீறி ஏறக்கூடாது, இடி, மழை மற்றும் மின்னல் காலங்களில் விலை மதிப்புள்ள உயர் ரக மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம், மழை காலங்களில் ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை தொட வேண்டாம்.
மின்வாரியம் சம்மந்தமாக எந்த ஒரு அவசர தகவல்களையும் 24 மணி நேரமும் கீழ்க்கண்ட பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்: சிதம்பரம் 222220, 220352, பு.முட்லூர் 247220, சேத்தியாத்தோப்பு 244223, காட்டுமன்னார்கோவில் 262259, திருமுட்டம் 245239, முகந்தெரியான்குப்பம் 291423, பாளையங்கோட்டை 246201.

Read more »

மழை பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு

கடலூர்,நவ.9:

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கடலூர் அருகே தாழங்குடா, உப்பளவாடி கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தில் பெண்ணை ஆற்று நீர் 4 அடி உயரத்துக்கு ஓடியது. மாலையில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இந்த இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தாளங்குடா பகுதியில் உப்பனாற்று நீர் கரைபுறண்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துள்ள இடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
திருவந்திபுரம் அருகே கெடிலம் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு, உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார், கூடுதல் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கடலூர் நகரில் சாலைகள் சீர்குலைந்து கிடப்பது குறித்து நகராட்சித் தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுடன் விவாதித்தார். பாதாளச் சாக்கடைக் கடைக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள், மழை காரணமாக உள் வாங்கிய சாலைகள், சேறும் சகதியுமாகக் கிடக்கும் சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

Read more »

கனமழையால் காய்கறி விலை உயர்வு

சிதம்பரம், நவ. 9:

சிதம்பரத்தில் தொடர்ந்து 4 நாள்களாக பெய்து வரும் கன மழையினால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கன மழையினால் சிதம்பரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் புகுந்தது. திங்கள்கிழமை காலை சற்று மழை நின்றதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் முதல் மீண்டும் மழை தொடங்கியதால் மீண்டும் அப்பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
சிதம்பரம் பகுதியில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்: (மி.மீ.): சிதம்பரம் 44, புவனகிரி 41, சேத்தியாத்தோப்பு 102, பரங்கிப்பேட்டை 57, அண்ணாமலைநகர் 55.
காய்கறி விலை: தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிதம்பரத்தில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. விலை விவரம் வருமாறு (பழைய விலை அடைப்புக்குறியில்). பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-ம் (ரூ.18), சிறய வெங்காயம் கிலோ ரூ.26-ம் (ரூ.20), தக்காளி கிலோ ரூ.28-ம் (ரூ.18), கேரட் கிலோ ரூ.30 (ரூ.20), பீன்ஸ் கிலோ ரூ.30-ம் (ரூ.20), முட்டகோஸ் கிலோ ரூ.18-ம் (ரூ.12), உருளைக்கிழங்கு கிலோ ரூ.28-ம் (ரூ.24), பச்சை மிளகாய் கிலோ ரூ.30-ம் (ரூ.20), பீட்ரூட் கிலோ ரூ.24-ம் (ரூ.12) விற்கப்படுகிறது.

Read more »

தொடர் மழையால் அசாதாரண நிலை இல்லை: ஆட்சியர்


கடலூர், நவ. 9:


கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அசாதாரண நிலை ஏற்படவில்லை. மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
வடகிழக்குப் பருவமழை முன்னேற்றம் அடைந்து உள்ளது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 7287 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. 8-ம் தேதி காலை வரை ஒரு நாளில் மட்டும் 993.3 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மழைகாலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முன்னேற்பாடுகள் குறித்து, ஏற்கெனவே அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 57 கிராமங்கள் (வட்ட வாரியாக கடலூர் 21, சிதம்பரம் 12, காட்டுமன்னார்கோயில் 14, விருத்தாசலம் 5, பண்ருட்டி 3) பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களாகக் கண்டறியப்பட்டு உள்ளது. பாதிப்புகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்க அலுவலர்கள் கொண்ட ரோந்துப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை ஏரிகள் 198, ஊராட்சி குளங்கள் 296, இரவு பகலாகக் கண்காணிக்கப்படுகிறது.
பாதிப்புகள் ஏற்படும்போது மக்கள் தங்குவதற்கு 20 மையங்கள் (கடலூர் வட்டத்தில் 8, சிதம்பரம் வட்டத்திóல 13) தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அப்பகுதியõல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
திட்டக்குடி வட்டம் வெலிங்டன் ஏரிக்கரை 1 கி.மீ. நீளத்துக்கு சேதம் அடைந்ததால் ரூ. 20 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே நடப்பு ஆண்டில் தண்ணீர் சேமிக்கவில்லை. ஒரே நேரத்தில் பலத்த மழை பய்தால் 19 கிராமங்கள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்தனர். ஏரியில் 15 அடி வரை இப்போதே தண்ணீர் சேமிக்க முடியும். 15 அடிக்கு மேல் தண்ணீரைச் சேமிக்கும் நிலை வராது. அதையும் மீறி தண்ணீர் வந்தால் எந்த இடத்தில் வெட்டி வெளியேற்றலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44 அடியாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏரிக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டாலும் மழை காரணமாக ஏரிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. முழுவதும் வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடை வழியாக 250 கன அடியும், வெள்ளாற்றில் 2 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டு உள்ளது.
வீராணம் ஏரிக்கரையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு 2 நாளில் சரி செய்யப்பட்டது.
237 கிராம நியாயவிலைக் கடைகளில் 818 டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
சுகாதார நிலையங்களில் 50 சதவீதம் கடுதலாக மருந்துகள் கையிருப்பு வைத்து இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கிராமச் சாலைகளைத் தாற்காலிகமாக பழுது பார்க்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
சம்பா நெல் நடவுப் பணிகள் 50 ஆயிரம் ஹெக்டேரில் நடந்து வருகிறது. 90 சதவீதம் நாற்று நடவு முடிந்து விட்டது. மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மழைவிட்டதும் வடிந்து விடும். பயிர்களுக்குப் பாதிப்பு இல்லை. கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தவும், குழாய்களைப் பழுதுபார்க்கவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. என்.எல்.சி. சுரங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, பொதுமக்கள் ஒத்தழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு 5.5 கி.மீ. தூரம் வாய்க்கால் வெட்டப்பட்டு விட்டது என்றார் ஆட்சியர்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் வெங்கடேசன், நீர்வளஆதார மைய செயற்பொறியாளர் ரஞ்சன், கூட்டுறவு இணைப் பதிவாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 22 ஏரிகள் நிரம்பின

கடலூர்,நவ.9:

கடலூர் மாவட்டத்தில் 22 ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் 15 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வடகிழக்குப் பருவமழையால் கடலூர் மாவட்ட ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரிகளில் திங்கள்கிழமை நீர்மட்டம் விவரம்:
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடி (மொத்த உயரம் 47.5 அடி). ஏரிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 3006 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னைக் குடிநீருக்கு 76 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கொள்ளிடம் கீழணை நீர் மட்டம் 8 அடி (மொத்த உயரம் 9 அடி) அணைக்கு கல்லணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கிறது.
வாலாஜா ஏரி நீர்மட்டம் 7.5 அடி (மொத்த உயரம் 5.5 அடி). ஏரிக்கு அபரிமிதமாக தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது 2,713 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரி நீர்மட்டம் 6.5 அடி (மொத்த உயரம் 6 அடி). ஏரியில் இருந்து 14,344 கன அடி நீர் பரவனாற்றில் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கிறது. கோமுகி அணை நீர் மட்டம் 39 அடி (மொத்த உயரம் 46 அடி) அணைக்கு 1319 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீர் மட்டம் 2.5 அடி (மொத்த உயரம் 2.5 அடி). அணையில் இருந்து 5,703 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது.
திங்கள்கிழமை மட்டும் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு, வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: கொத்தவாச்சேரி 104, சேத்தியாத்தோப்பு 102, வானமாதேவி 62, மேமாத்தூர் 62, கடலூர் 61, பரங்கிப்பேட்டை 57, அண்ணாமலை நகர் 55, பரங்கிபேட்டை 53, வேப்பூர் 48, சிதம்பரம் 44, தொழுதூர் 44, லால்பேட்டை 42, புவனகிரி 41, குப்பநத்தம் 41, விருத்தாசலம் 36, காட்டுமயிலூர் 35, ஸ்ரிமுஷ்ணம் 35, காட்டுமன்னார்கோயில் 27, கீழ்ச்செறுவாய் 25, பெலாநதுரை 23, லக்கூர் 9.

Read more »

வெள்ளத்தைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படுமா?

சிதம்பரம்,நவ. 9:

கடலூர் மாவட்டத்தில் மழைக்காலத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு தாலுகாக்களில் 1 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைகிறது. தமிழக அரசும் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததே காரணம். பல வடிகால்கள் புறநகர்களாக மாறிவிட்டன. மேலும் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1.44 டிஎம்சியாக இருந்தது. தற்போது தூர்ந்து போய் 0.96 டிஎம்சிதான் ஏரியில் நீர் தேக்கி வைக்க முடியும். சென்னைக்கு குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பெல்லாம் பருவமழை தொடங்கும் முன்பு ஏரியில் உள்ள நீரை முற்றிலும் பாசனத்திற்கு திறந்து விடுவது வழக்கம். தற்போது சென்னைக்கு குடிநீர் அனுப்ப வேண்டும் என்பதால் ஆண்டு முழுவதும் ஏரியில் 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.5) நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் பருவமழை தொடங்கும் போது கூடுதலாக வரும் உபரி நீர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு கூடுதலாக வரும் நீர் ஆகியவை சிதம்பரம் நகரின் தெற்கு, வடக்கு பகுதி வழியாக கடலில் கலக்கும் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் சிதம்பரம் நகரைச் சூழ்ந்து குட்டித்தீவு போல் ஆக்கிவிடுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கே அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் சாலையின் குறுக்கே சிறுபாலங்கள் கட்டி வடிகால்கள் அமைக்கப்படவில்லை.
ஆதலால் மழைநீர் வடியாமல் ஏரிபோல் காட்சியளிக்கிறது. மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையினரால் சரிவர தூர்வாரி மராமத்துப் பணிகள் செய்யப்படாததாலும் வெள்ள நீர் வடிய 4 தினங்களுக்கு மேலாகிறது.
வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் சிதம்பரம் நகரம் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகளா ஆட்சியர் கண்டித்தார். இருப்பினும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
எனவே ஆண்டு தோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்கள் வெள்ளத்தில் சிக்குவது, பயிர்கள் சேதமாவதும், அதற்கு அரசு இழப்பீடு வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. எனவே தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

பண்ருட்டி,நவ. 9:

கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை பண்ருட்டி நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பராமரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினார்.
இடைவிடாத பருவ மழையால் பண்ருட்டி நகரில் பல்வேறு இடத்தில் தண்ணீóர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.
மழை நீர் தேங்கி நின்ற அம்பேத்கர் நகர், சாமியார் தர்கா, மேலப்பாளையம, திருவதிகை உள்ளிட்ட பல பகுதிகளை நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார். அதிமுக கவுன்சிலர்கள் எம்.எம்.கமலக்கண்ணன், எஸ்.பி.ரமேஷ், கார்த்திக் உடனிருந்தனர்.

Read more »

மந்தாரக்குப்பம் குடிசைப் பகுதிகளில் மழைநீர்

நெய்வேலி நவ. 9:

மந்தாரக்குப்பத்தில் தாழ்வான குடிசைப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தை அடுத்த மேல்பாப்பனப்பட்டு மற்றும் மேல்பாதி ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அந்தந்த ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் மீனாட்சி மழைநீர் புகுந்த கிராமங்களைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்துவருகின்றனர்.

Read more »

வடவாறு பாசனப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

கடலூர்,நவ.8:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வடவாறு பாசனப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் மூழ்கியது.
வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வழங்கும் வடவாறு மூடப்பட்டாலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் கருவாட்டு ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வடவாறில் வந்து கலக்கிறது. இதனால் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகளான 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் திருமூலஸ்தானம், எடையார், ராதாமூர், மா.உடையூர், பிள்ளையார் தாங்கல், சர்வராஜன்பேட்டை, திருநாரையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நட்டு 10 முதல் 20 நாள்கள் ஆன நெல்பயிர் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கீழணை விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
இந்த கிராமங்களில் இருந்து வெளியேறும் 10 ஆயிரம் கன அடி நீர், மணவாய்க்காலில் கலந்து, பழைய கொள்ளிடம் வழியாகக் கடலில் கலக்கிறது.

Read more »

சம்பா நடவுப் பணிகள் பாதிப்பு

கடலூர்,நவ.7:

கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து சனிக்கிழமை மாலை வரை இடைவிடாமல் அடைமழை பெய்துகொண்டு இருந்தது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய கனமழை சில நிமிடங்கள்கூட விடாமல் தொடர்ந்து அடைமழையாக பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பல பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மீனவர்கள் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்ல வில்லை.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 107 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. சனிக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பதிவாகி இருக்கும் மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:
கடலூர் 107, வானமாதேவி 91.4, புவனகிரி 90, சிதம்பரம் 79, அண்ணாமலை நகர் 71.2, கொத்தவாச்சேரி 60, பரங்கிப்பேட்டை 49, பண்ருட்டி 45, குப்பநத்தம் 39, லால்பேட்டை, மேமாத்தூர் தலா 35, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம் தலா 33, ஸ்ரீமுஷ்ணம் 25, சேத்தியாத்தோப்பு 24, வேப்பூர் 16, பெலாந்திரை 15, லக்கூர் 14, காட்டுமயிலூர் 13, கீழ்ச்செறுவாய், தொழுதூர் தலா 6.
கொள்ளிடம் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. எனினும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு 817 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் 76 கனஅடி சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது. 587 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரியின் நீர் மட்டம் 43.5 அடியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.
மற்ற நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 8 அடி. (மொத்த உயரம் 9 அடி) அணைக்கு வரும் 1,372 கன அடி நீர் முழுவதும் கடலில் திறந்து விடப்படுகிறது. வாலாஜா ஏரி நீர்மட்டம் 4.2 அடி (மொத்த உயரம் 5.5 அடி.) பெருமாள் ஏரி நீர்மட்டம் 5 அடி (மொத்த உயரம் 6.5 அடி). கோமுகி அணை நீர் மட்டம் 33 அடி. (மொத்த உயரம் 46 அடி). மழை குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் (1.5 லட்சம் ஏக்கர்) 40 சதவீதம் நிலங்களில் நாற்று விட்டு 20 முதல் 30 நாள்கள் வரை ஆகி இருக்கிறது.
மற்ற பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் மற்றும் நாற்று நடவுப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும்தான் நாற்றங்கால் பணிகளை பல விவசாயிகள் தொடங்கினர். மேலும் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை, வடகிழக்குப் பருவமழை காலத்தில் 43.5 அடிக்கு மேல் உயர்த்துவது இல்லை. ஏரியின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்க வேண்டும் என்றார்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், டெல்டா பாசனப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்களில் நாற்றங்கால் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கடைமடைப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் நடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாற்றங்கால்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன. நடவுக்காக எடுத்து வைக்கப்ட்டு இருந்த நாற்றுக் கட்டுகள் வெள்ளத்தில் அடித்துக் செல்லப்படுகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்றார் ரவீந்திரன்.

Read more »

சக்தி ஐடிஐயில் வளாக நேர்முகம்

பண்ருட்டி,நவ. 7:

வினாயகா ஐடிஐ-ல் 2008-2009-ம் ஆண்டு பிட்டர் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காந்தி சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே உள்ள சக்தி ஐடிஐ வளாகத்தில் அண்மையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
30 மாணவர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் திருவாண்டார் கோயில் சுவிஸ்லான் நிறுவனம் 25 பயிற்சியாளர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கியது, எஞ்சிய 5 பயிற்சியாளர்களுக்கு 18 வயது பூர்த்தியானதும் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
நேர்முகத் தேர்வின் போது சக்தி ஐடிஐ தாளாளர் ஆர்.சந்திரசேகர், கல்வி குழும தலைவர் அ.ப.சிவராமன், இயக்குனர் வி.பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
முதல்வர் கே.தேவநாதன் நேர்முகத் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Read more »

ரூ. 20 கோடியில் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு

கடலூர், நவ. 7:

திட்டக்குடி வட்டத்தில உள்ள வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை பார்வையிட்டார்.
25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது வெலிங்டன் ஏரி. இதன் கரை 300 மீட்டர் தூரத்துக்குத் தொடர்ந்து பூமிக்குள் புதைந்துக் கொண்டு இருப்பதால், ரூ. 20 கோடியில் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.
இதனால் இந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படவில்லை. வெள்ளாற்றில் இருந்து ஏரிக்கு வரும் மதகு அடைக்கப்பட்டு உள்ளது.
ஏரிக்கு வரும் மழைநீர் முழுவதும் வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது.
ஏரிக்கு மழை நீர் திடீரென அதிக அளவில் வந்தால் ஏரியை அடுத்துள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன் ஏரியை சனிக்கிழமை பார்வையிட்டு அவர் கூறியது:
ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடந்து வருவதால் 18 மாதங்கள் விவசாயிகளுக்கு ஏரி நீர் கிடைக்காது. எனவே இப் பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு மின் இணைப்பு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஏரிக்கரை மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்கு ரூ. 40 லட்சம் தேவைப்படும்.
கரை பலப்படுத்தும் பணி நடந்து கொண்டு இருந்தாலும் ஏரியில் 15 அடி வரை (மொத்த உயரம் 39.4 அடி) தண்ணீர் தேக்க முடியும் என்று பொறியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். முருகன்குடி, திட்டக்குடி பாலங்கள் தலா ரூ. 8 கோடியில் கட்டப்படும் என்றார் ஆட்சியர். ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Read more »

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய பொதுமக்கள்


கடலூர், நவ.6:


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிறுத்தங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால் திறந்தது முதல் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்ஸýம் செல்லாமல் இருந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, அக்டோபர் 1-ம் தேதி முதல் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் சென்று வருகின்றன. எனினும் பஸ் நிலையத்துக்குள் செல்லும் சாலை போதிய அகலம் இல்லாததால், பஸ்கள் பிரதானச் சாலையில் இருந்து உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில், அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தம், கடைத் தெரு பஸ் நிறுத்தம் ஆகியவற்றை போலீஸôர் ரத்து செய்து விட்டனர். அந்த நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். பஸ் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். எனவே வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புப் கொடி ஏற்றி அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. அடுத்தக்கட்ட போராட்டமாக 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸôரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

Read more »

கனமழையால் மோசமான சிதம்பரம் சாலைகள்

சிதம்பரம்,நவ.6:

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையினால் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.
புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்ட பணிகள் நடைபெற உள்ளது எனக்கூறி நகராட்சி நிர்வாகம் கடந்த ஓராண்டாக நகரில் உள்ள எந்த தார்சாலைகளையும் போடவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் பல்வேறு சாலைகளில் புதைசாக்கடைநீர் உடைப்பெடுத்து மழைநீருடன் கலந்து குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்கள் அதிகரித்துள்ளதால் நகரில் விஷக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நகராட்சி சுகாதாரத்துறை தற்காப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பாட்டாளி மக்கள் நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் புகார் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior