உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிதம்பரம் அருகே குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்து


சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வெள்ளந்தாங்கி அம்மன் ஆலயம் அருகே உள்ள குறுகிய பாலம்.
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சீர்காழி ரோட்டில் உள்ள பாலம் குறுகியதாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

         சிதம்பரம் - சீர்காழி சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் அருகில் உள்ள வாய்க்கால் மீது ஒரு குறுகிய பாலம் உள்ளது.  வெள்ளக் காலங்களில் வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் இப் பாலம் கட்டப்பட்டது. எனினும் இதுநாள் வரை அப் பாலம் விரிவாக்கப்படவில்லை.

             சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 45ஏ) இப்பாலம் அமைந்துள்ளது. அதனால் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இக் குறுகிய பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஒரு பஸ்தான் செல்ல முடியும். இதனால் இரவு நேரங்களில் இக் குறுகிய பாலத்தில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.÷தேசிய நெடுஞ்சாலைத் துறையோ அல்லது தமிழக அரசோ இப்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Read more »

கலைஞர் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்


சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, குணம் அடைந்து வீடு திரும்பும் 10 சி



          லைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.  

            கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பும் குழந்தைகளை வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

            இந்த ஆண்டில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 949 பேருக்கு ரூ.431 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்தால்தான் அவர்களது விலைமதிப்பில்லாத உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், அனைத்து நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க இயலாது. எனவேதான் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பின் மூலம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் உயர் நோக்கம் நிறைவேறி உள்ளது.

             கடந்த ஆண்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 624 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சையும், 31 ஆயிரத்து 636 பேருக்கு மூட்டு அறுவைச் சிகிச்சையும், 18 ஆயிரத்து 490 பேருக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சையும், 9 ஆயிரத்து 246 பேருக்கு நரம்பியல் அறுவைச் சிகிச்சையும், 26 ஆயிரத்து 30 பேருக்கு புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி சிறார் இதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 264 குழந்தைகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  

               குளோபல் மருத்துவமனையின் தலைவர் கே.ரவீந்திரநாத், தலைமை இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர், அரசு சுகாதாரத் துறைச் செயலர் வி.கு.சுப்புராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Read more »

புதிய மின் கட்டணத்தை தெரிந்து கொள்வது எப்படி?

            தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

         .தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வால் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை;  600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்குத்தான் ரூ.1 கூடுதல் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

           இதில் 3.21 லட்சம் பேர், 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட்டுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் பொருந்தும்.

புதிய மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

            இப்போது 60 நாள்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக மின் நுகர்வோர் ஒருவரின் வீட்டில் இரண்டாவது மாதத்தில் 20-ம் தேதி மின் நுகர்வு கணக்கு (மீட்டர் ரீடிங்) எடுக்கப்படுகிறது.  உதாரணத்துக்கு மொத்தம் 60 நாள்களுக்கு சேர்த்து 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த 600 யூனிட்டை, 60 நாள்கள் என கணக்கிட்டு வகுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு நாளுக்கு சராசரியாக 10 யூனிட்டுகள் மின்சாரத்தை நுகர்வோர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவரும். 

              இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய தேதி வரை உதாரணமாக 40 நாள்கள் வரை  நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்தை 40 நாள்களாக கணக்கிட்டுக் கொண்டு, 10 யூனிட்டுகளுடன் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் 400 யூனிட்டுகளை கொண்டு, முதல் 40 நாள்களுக்கு பழைய கட்டணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  மீதமுள்ள 20 நாள்களுக்கு அதாவது 200 யூனிட்டுகளை புதிய கட்டணம் அமலாகும்  தேதியில் இருந்து கணக்கிட்டு ரூ. 1 கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

மின் கட்டணம் உயர்ந்தது



 
 
       வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.1 கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் இந்தப் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
 
            இந்தக் கட்டணம் 31.3.2011 வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் சனிக்கிழமை தெரிவித்தார் .600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.
 
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன், உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது:
 
            தமிழ்நாடு மின்சார வாரியம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 ஜனவரி 18-ம் தேதி மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதன் மீது பொதுமக்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. 
 
ஆகஸ்ட் முதல் நடைமுறை: 
 
           அதைத் தொடர்ந்து புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். கட்டண உயர்வு இல்லை: இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள், வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. 
 
ரூ.1 கட்டணம் உயர்வு: 
 
               இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த மின் வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு (எல்.டி.) யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
 
40 காசுகள் உயர்வு:  
 
            இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடிசைத் தொழில் மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டும் உயர்த்தப்படுகிறது.÷இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு கட்டண உயர்வு இல்லை. 
 
வணிக மின் நுகர்வோர்:  
 
              வணிக மின் நுகர்வோரில் உயர் அழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 80 காசுகள் செலுத்துவர். வணிக மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 70 காசுகள் செலுத்துவர்.÷உயர் அழுத்த வகை சினிமா திரையரங்கினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு 200 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் (தாழ்வழுத்த வகை) வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. 
 
பெட்டி கடையினருக்கு ரூ.1 குறைப்பு: 
 
           பொதுமக்களின் கருத்துக் கேட்பில் சிறு கடை வியாபாரிகள் அதாவது பெட்டி கடை நடத்துவோர் ரூ.1 குறைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.÷அதன்படி, 2 மாதத்துக்கு 100 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சிறு கடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது. 
 
 தனியார் கல்வி நிறுவனங்கள்:  
 
           தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி  நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
 
அரசின் மானியம் ரூ.1,652 கோடி: 
 
          வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் முதல் ரூ.1.70 வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.10 முதல் ரூ.1.30 வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.40 மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கு குதிரைசக்தி ஒன்றுக்கு ரூ.250-ம் அரசு மானியத் தொகை வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான அரசின் மொத்த மானியத் தொகை ரூ.1,652 கோடியாகும். 
 
ரூ.1,651 கோடி வருவாய்: 
 
            புதிய மின் கட்டணம் அமலுக்கு வரும்போது ஓராண்டுக்கு ரூ.1,651 கோடி வருவாய் கிடைக்கும். மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.6,451 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை: மாநிலத்தில் சுமார் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வில் மாற்றம் இல்லை. 600 யூனிட்டுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் 5 லட்சத்து 15,299 மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். கட்டணம் குறித்த முழு விவரங்களை www.tnerc.gov.in.​  என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Read more »

பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்கம்

சிதம்பரம்:

         அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலாண்புல பூச்சியியல் துறையில் பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் ரெ.வீரவேல் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் வேளாண்துறை மாணவர் சாமுவேல் உருவாக்கிய பூச்சிகளை கவரக்கூடிய பண்முக விளக்குப் பொறியை அறிமுகப்படுத்தி அதனைப்பற்றி தகவல்களையும், பூச்சிகளின் விவரங்கள் குறித்தும் விளக்கவுரையாற்றினார். பேராசிரியர் முனைவர் பி.ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். பூச்சியியல் புதுமைக்கழக பொருளாளர் முனைவர் இரா.கண்ணன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு


வயலில் கரும்பு வெட்டும் இயந்திரம். கரும்பு சோகைகளை சிறிய துண்டுகளாக்கி உரமாக்கும் இயந்திரம்.
 
கடலூர்:

           தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

          கரும்பு விலை டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாலும், 10-20 சதவீதம் இயந்திரங்களைப் பயன்படுத்தி கரும்பு நடவு, களை எடுத்தல், கரும்பு சோகையை துண்டுகளாக்கி உரமாக்குதல் போன்றவை குறைந்த செலவில் நடைபெறுவதாலும், இந்த பரப்பளவு அதிகரித்துள்ளதாக வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவை நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரை கரும்பு அரைக்கும் திறன் கொண்டவை. இவற்றையும் சேர்த்து தற்போது, தமிழகத்தில் 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 3 ஆலைகள் இயங்கவில்லை. இயங்கும் 41 சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறன், நாளொன்றுக்கு 1.18 லட்சம் டன்கள்.÷தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகள் கரும்பு பயிரிடுகிறார்கள். கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் இருந்ததால் முந்தைய 5 ஆண்டுகளில், தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு 40 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. மேலும் விவசாயத் தொழிலில் நிலவி வரும் ஆள்பற்றாக்குறையும் மின்வெட்டும் தமிழக கரும்பு விவசாயத்தை பாதிக்கத் தொடங்கியது.

           அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நடப்பு ஆண்டு கரும்பு அரவைப் பருவத்துக்கு, கரும்பு விலை, வண்டி வாடகையையும் சேர்த்து, டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,537-1,540 வரை இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலை கூடுதலாகவும், காலதாமதமின்றி முன்னரே அறிவிக்கப்பட்டதாலும், விவசாயிகளிடையே கரும்பு பயிரிடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் சென்ற ஆண்டு 3.20 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பளவு, இந்த ஆண்டு 3.40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது. 

            கடலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டு 30,221 ஹெக்டேராக இருந்தது இந்த ஆண்டு 34 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகளில் சராசரியாக 130 நாள்கள் மட்டுமே கரும்பு அரவை நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் 170 நாள்கள் அரவை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் தமிழக சர்க்கரை ஆலைகளில் 170 நாள்கள் கரும்பு அரவை  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் சர்க்கரை ஆலை, கடந்த ஆண்டு 6.72 லட்சம் டன் கரும்பு அரைத்தது. இந்த ஆண்டு 8.5 லட்சம் டன்னுக்கு மேல் அரைக்க உத்தேசித்து உள்ளது.

           நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கடந்த ஆண்டு 9.23 லட்சம் கரும்பு அரைத்தது. இந்த ஆண்டு 12 லட்சம் டன் அரைக்க திட்டமிட்டு உள்ளது.÷விவசாயத் தொழிலில் ஏற்பட்டு வரும் ஆள் பற்றாக்குறை, கரும்பு விவசாயத்தை பெரிதும் பாதித்தது. கரும்பு வெட்டுக் கூலியாக மட்டும் டன்னுக்கு ரூ. 400 முதல் ரூ. 800 வரை கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் இப்பிரச்னையில் இருந்து தமிழக விவசாயிகள், இயந்திரமயமாதல் மூலம் தற்போது விடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். கரும்பு வெட்டும் இயந்திரங்களை அனைத்து சர்க்கரை ஆலைகளும் வாங்கி வைத்து, 

            விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கி வருகின்றன. இதனால் வெட்டுக்கூலி டன்னுக்கு ரூ. 200 ஆக்க குறைந்து இருக்கிறது. மேலும் கரும்பு நடவு, களை எடுத்தல், கரும்பு சோகையை துண்டுகளாக்கி உரமாக்குதல் போன்ற கருவிகளையும், சொட்டு நீர்ப்பாசன முறைகளையும் விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கரும்பு விவசாயத்தில் செலவு குறையத் தொடங்கி இருக்கிறது. இயந்திரங்களின் பயன்பாடு 10 முதல் 20 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

இது குறித்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலர் விருத்தகிரி கூறுகையில், 

            "விவசாய உற்பத்தி 1.6 சதவீதத்துக்குக் குறைந்து விட்டது. விவசாய உற்பத்தியைப் பெருக்க இயந்திரமயமாதல் கட்டாயம் ஆகிவிட்டது. இயந்திரங்களின் விலை அதிகமாக உள்ளது.  கரும்பு அறுவடை இயந்திரத்தின் விலை ரூ. 1.5 கோடி வரை உள்ளது. தொழில்துறைக்கு அரசு பல சலுகைகளை அளிப்பதுபோல், வேளாண் இயந்திரங்களுக்கு விற்பனை வரி, சுங்கவரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் அளவு குறுகி இருப்பதும் இயந்திரங்களை பயன்படுத்த தடையாக இருக்கிறது. எனவே விவசாயிகள் கூட்டுப் பண்ணை விவசாயத்துக்கு மாறியாக வேண்டும் என்றார்.

Read more »

பண்ருட்டி வட்டாரத்தில் முந்திரி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: அரசு மானியம்


பண்ருட்டி:
 
          முந்திரி சாகுபடியில் குறைந்த செலவில், அதிக மகசூல் மற்றும் லாபம் பெற அரசு மானியத்துடன், புதிய தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
 
           தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி பண்ருட்டிக்கு அதிக அளவில் அந்நிய செலவாணியை ஈட்டிக்கொடுத்து, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது முந்திரி சராசரி மகசூல் ஹெக்டருக்கு 700 கிலோ என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முந்திரியில் ஹெக்டருக்கு 2000 கிலோ மகசூல் எடுக்க கீழ்க்கண்ட புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும்.
 
          ஒட்டு முந்திரி கன்றுகளை (வி.ஆர்.ஐ.3), 5மீ ல 4மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 500 கன்றுகள் வீதம், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடவு செய்ய வேண்டும். நடவு குழியில் மேல் மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து குழியை நிரப்ப வேண்டும். 3 முதல் 6 மாதம் வயதுள்ள கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். நடவின் போது ஒட்டு கட்டியப் பகுதி தரைமட்டத்தில் இருந்து 5 செமீ மேலேயும், அப்பகுதி உடையாமலும், நேராகவும் வளர திடமான ஊன்று குச்சிகளை நட்டு கயிற்றால் கட்ட வேண்டும். 
 
            பண்ருட்டி வட்டாரத்தில் புதிய பரப்பில் ஒட்டு முந்திரி பயிர் செய்தால் ஹெக்டருக்கு முதல் வருடம் ரூ.19,710-க்கு தோட்டக்கலை பண்ணையில் இருந்து முந்திரி செடிகளும், தமிழ்நாடு அரசு டான்கோப் மூலம் இடுபொருள்கள், நடவு மற்றும் பராமரிப்பு செலவும் வழங்கப்படும். மேற்கண்ட முறையில் முந்திரி நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள வேளாண்மைத் துறை வளாகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தேவை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்து பயனடையும்படி வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரம் பகுதியில் சம்பா சாகுபடிக்கான விதை நெல், விற்பனைக்கு தயார்


சிதம்பரம்:
 
         சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்தது: 
 
        சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்துக்கேற்ற தரமானச் சான்று விதை நெல் ரகங்களான பொன்மணி (இத 1009), பி.பி.டி. 5204, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 39, ஆடுதுறை 45 ஆகிய ரக விதை நெல்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த தாயி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.5 மானியத்தில் தற்போது விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது. 
 
               மேலும் பு.முட்லூர், கீழமணக்குடி, புதுச்சத்திரம், பூவாலை மற்றும் பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்  சங்கங்களிலும் சம்பா பருவத்துக்கேற்ற பி.பி.டி. 5204 நெல் விதை ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மானியத்தில் தற்போது விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

New weather radars planned

— Photo: C. Venkatachalapathy

Cuddalore Collector P. Seetharaman at the inauguration of an ‘uzhavar mandram' at Alathur on Saturday. 
 
CUDDALORE: 

            The Centre is about to set up 55 radars across the country for weather observation and forecast. Two out of them will come up in Chennai and Ramanathapuram, and, one in Karaikkal, according to S.R. Ramanan, director, Area Cyclone Warning Centre, Regional Meteorological Centre, Chennai.

           He was speaking at a function got up at Alathur in Mangalore block, about 80 km from here, to inaugurate an ‘C' on Saturday. Mr. Ramanan said that more number of radars would enable accurate prediction of monsoon and weather conditions. He said that Tamil Nadu was likely to get above average rainfall from the north-east monsoon that was about to set in before October 10. Last year, Tamil Nadu received a 25 per cent deficit rainfall.

              Collector P. Seetharaman said that weather forecast played a vital role in giving essential inputs to fishermen and farmers. He underscored the point that trees were of utmost importance in inducing precipitation of rain. Hence, he had launched a district-wide drive to plant one lakh saplings within a fortnight.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.பி.ஏ., தேர்வு


மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் ஏப்., 2010க்கான எம்.பி.ஏ., தேர்வுகள் ஆக.19 ல் துவங்குகிறது. தேர்வு குறித்த விவரங்களுக்கு,  www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் (பொறுப்பு) தெரிவித்து உள்ளார்.

Read more »

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் ஆதரவு


நெய்வேலி: 

           என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டளித்துள்ளனர்.

          என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 7ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையப் பகுதிகளில் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமா அல்லது வேண்டாமா என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஓட்டெடுப்பு நடத்தினர். இதில் பெரும்பாலானோர், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து ஓட்டளித்தனர். 

             இதன் எதிரொலியாக, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது குறித்தும், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது குறித்தும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகக் குழுவைக் கூட்டி முடிவெடுக்க உள்ளனர்.

Read more »

வடக்குத்து ஊராட்சியில் புதிய பள்ளி:கிராம மக்கள் அரசுக்கு நன்றி


நெய்வேலி:
           
              வடக்குத்து ஊராட்சியில் அரசு சார்பில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங் கப்பட்டதையடுத்து கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

           குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட வடக்குத்து கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி துவங்கப்பட வேண்டுமென அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் பரிந்துரையின் பேரில் வடக்குத்து கிராமத்தின் கிழக்கு பகுதியில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.  இந்தப் பள்ளிக் கென சொந்தமாக கட்டடம் அரசு செலவில் கட்டப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கூடம் வாடகை கட்டடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. அதுபோலவே வடக்குத்தை அடுத்துள்ள சந்தைவெளிப்பேட்டையில் இயங்கி வந்த ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில்கணிதத் துறை மன்றம் துவக்கம்

சிதம்பரம்:

             சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை மன்ற துவக்க விழா நடந்தது. 

               கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவி கோமதி வரவேற்றார். கல்லூரி செயலாளர் பாபு விருந்தினர்களை கவுரவித்தார். கல்லூரி ஆலோசகர் கனகசபை, நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் வாழ்த்துரை வழங்கினர். தொலைதூரக் கல்வி இயக்க கணிதத் துறை தலைவர் தில்லைகோவிந்தன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் சந்திரசேகரன், நிர்வாகவியல் துறைத் தலைவர் உஷாராணி, விரிவுரையாளர் அன்பழகன், முத்துக்குமரன் பங்கேற் றனர்.விழா ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் சிவக்குமார், விரிவுரையா ளர்கள் அப்பர்சாமி, கர்ணபூபதி செய்திருந்தனர்.

Read more »

முதல் பட்டதாரிக்கு கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ்

கடலூர்:

          குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன.

             தமிழகத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி பட்டப்படிப்பு முதல் பொறியியல் படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. இச்சலுகை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. கல்விக் கட்டண சலுகை பெற குடும்பங்களில் தந்தை, தாய், சகோதரர், சகோதரி யாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. அவ்வாறு இதுவரை குடும்பத்தில் யாரும் பட்டம் பெறவில்லை என்கிற சான்றிதழை அந்தந்த தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று பிற்பட்டோர் நலத்துறை மூலம் விண்ணப்பங்கள் அனுப்பினால்தான் இச்சலுகைகளை பெற முடியும். அவ்வாறு அனுப்பப்பட்ட பெரும்பாலான விண்ணப் பங்கள் திரும்ப பெறப்பட் டுள்ளன.

              விண்ணப்பங்களில் குடும்பத்தினர் அல்லாமல் தாத்தா, பாட்டியும் படித்து பட்டம் பெற்றிருக்க கூடாது என்ற சான்றிதழும் இணைக்க வேண்டும் என அரசு திடீரென அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப் பித்திருந்த மாணவ, மாணவியர்கள் மீண்டும் சான்றிதழ் பெற தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.

Read more »

சிறுபாக்கம், வேப்பூர் விவசாயிகள் மஞ்சள் விளைவிப்பதில் ஆர்வம்


சிறுபாக்கம்:

           வேப்பூர், சிறுபாக்கம் விவசாயிகள் போதிய விலை கிடைக்கும் மஞ்சள் பயிரை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

           வேப்பூர், சிறுபாக்கம் உட்பட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பண தேவைகளுக்காக நீர்ப்பாசன நிலங்களில் ஒரு ஏக் கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மஞ்சள் பயிர்களான சேலம் 1, ஈரோடு 2, பனங் காளி, எருமதாளி, நுர ஆகிய மஞ்சள் ரக பயிர்களை விளைவித்து வந்தனர்.கடந்த ஆண்டு ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் மார்க்கெட்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு குவிண்டால் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை நல்ல விலைக்கு எடுக்கப்பட்டது. 

               கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குவிண்டாலுக்கு 16 ஆயிரம் வரை மஞ்சளுக்கு விலை வழங்கப்பட்டு வருகிறது.இதனால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மஞ்சள் விளைவித்த 30 சதவீத விவசாயிகளை தொடர்ந்து தற்போது 90 சதவீத விவசாயிகள் மஞ்சள் பயிர் விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை

கடலூர்:

             கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி மண்டல மேலாளரிடம், ஆலோசனைக்குழு உறுப்பினர் மனு கொடுத்தார்.

இது குறித்து தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவக்குமார் கொடுத்துள்ள மனு:

              விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை அமைக்கும் முன்பு அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப் புலியூரில் நின்று சென்றன. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனும், பஸ் ஸ்டாண்டும் அருகருகே உள்ளது. மேலும் மாவட்ட தலைநகரமாக இருப்பதாலும் பயணிகள் அதிகளவு ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். அகல ரயில்பாதை பணிக்கு பின்னர் விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. மேலும் பாடல் பெற்ற ஸ்தலங்களான பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் ஆகியவை அருகில் உள்ளன. இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையில் அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த வழியில் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களால் பெரிதும் பயன்பெற்றனர். மேலும் காலையில் இயக்கப்பட்ட ரயிலால் வேலைக்கு செல்லும் அலுவலர்களும் பயன் பெற்றனர்.

               எனவே சிதம்பரத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து புறப்பட்ட ரயிலை மீண்டும் இயக்கவும், அலுவலர்கள் பயன்பெறும் வகையில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சிதம்பரத்திற்கு காலை 9.30 மணிக்கு நின்று புறப்படுமாறு மற்றொரு ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலில் தாம்பரத்திற்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர்.இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காதது பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. எனவே இந்த முக்கிய ஊர்களில் விரைவு ரயிலை நிறுத்தி செல்லவேண்டும் என மண்டல மேலாளரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Read more »

பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் கிலோவிற்கு ரூ.10 உயர்வு

பண்ருட்டி:

             பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் தற்போது முந்திரி பயிர் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை உயர்ந் துள்ளது.

             பண்ருட்டி பகுதியில் 20 ஆயிரம் எக்டர் நிலப் பகுதியில் பயிரிடப்பட் டுள்ள முந்திரி மரங்களில் இந்த ஆண்டு பருவ மாற்றத்தின் காரணமாக முந்திரி உற்பத்தி கடுமையாக குறைந்தது. அதனால் தற்போது 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை மூட்டை 4,100 ரூபாயில் இருந்து 4,300 ஆகவும், ஆப்பிரிக்கா ஐவேரி ரக இறக்குமதி கொட்டைகள் 3,300ல் இருந்து 3,700ஆக உயர்ந்துள்ளது.

            அதுபோல் முந்திரி பயிர் ரகங்களும் ஒரு கிலோவிற்கு சராசரியாக 10 ரூபாய் விலை கூடியுள்ளது. 240 ரகம் 330 ரூபாயில் இருந்து 340ம், 320 ரகம் 300லிருந்து 315ம், ஜே.எச் ரகம் 260லிருந்து 270ம், எஸ் ரகம் 255லிருந்து 260ம், பட்ஸ் ரகம் 220லிருந்து 230ம், கே ரகம் 218ம், எல்.டபில் யூபி 220 ஆகவும், எஸ்.டபிள்யூபி ரகம் 190ம், ஆவரஜ் பயிர் 240 ஆகவும் உயர்ந் துள்ளது. தற்போது இந்தோனியா இறக்குமதி கொட்டைகள் வெகுவாக உயர்ந்துள்ளதால் உள் ளுர் முந்திரி கொட்டைகளும் 5,000ரூபாய்க்கு மேல் உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Read more »

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணிகளால் பாதிப்பு

திட்டக்குடி:

              பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணியால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க மேம்பாலம் பணி முடியும் வரை மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
              விருத்தாசலம் - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையின் மையத்தில் பெண்ணாடம், திட்டக்குடி அமைந்துள்ளது. இவ் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள், லாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், சிமென்ட், சர்க்கரை ஆலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங் கள் சென்று வருகின்றன. தவிர விருத்தாசலம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.இதனால் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

           இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இப்பணிக்காக இறையூர், பெ.பொன்னேரி, அம் பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் இருந்த வீடுகள், மரங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மாற்று இடமும் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டது.
 
             மேம்பாலம் பணிகள் துவங்கிய நிலையில் சாலையின் இருபுறமும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட் டுள்ள ராட்சத இரும்பு பொருட்கள், பில்லர் அமைக்கத் தோண்டிய பள் ளங்களில் இருந்து வெளியேற்றிய மண் குவியல் களால் வாகனங்கள் அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் திணறுகின்றன. ரயில்வே கேட் மூடும் போது இருபுறமும் கேட் டில் அணிவகுத்து நிற் கும் வாகனங்கள் முன்னால் நிற் கும் வாகனங்களை முந்திச் செல்வதில் போட்டா போட்டி ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களால் வாகனங் கள் செல்லும் போது உடல் நலம் பாதிப்பிற்குள்ளாகும் வகையில் புழுதிப் புயல் உருவாகிறது.
 
             கட்டுமான பணி துவங்கும் முன்பாக இறையூர் கைகாட்டி, கொத் தட்டை சாலை வழியாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து விருத்தாசலம் செல்ல ஒரு வழியும், கட்டுமான பணி நடைபெறும் பகுதியை ஒட்டியே ஒரு வழி என இருவழியாக வாகனங்கள் இடையூறின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இதுவரை மாற்று வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

                  அதிகாரிகள் விரைந்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ள மாற்று வழிச் சாலைகள் கிராமப்புற மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள். இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே மாற்று வழி ஏற்படுத்தும் முன் கிராமப்புற சாலைகளில் பேட்ஜ் ஒர்க் அமைத்து வாகனங்கள் எளிதில் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட வேண்டும்.

                    இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளும் பரிசீலனை செய்து போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் பணி முடியும் வரை மாற்று சாலையை ஏற்படுத்தித் தர நடவடிக்கை வேண்டும்.

Read more »

பண்ருட்டி நகராட்சியில் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தும் தொடரும் விற்பனை

பண்ருட்டி:

           பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.

             பண்ருட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் தடை செய்து தீர்மானம் (தீர்மானம் எண்.299) நிறைவேற்றப் பட்டது.

            அதன்படி கடந்த ஏப்ரல் 15ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மறுசுழற் சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, தெர்மா கூல் பிளேட்டுகள் ஆகியவை விற்பதற்கும், உபயோகப்படுத்துவதை ஜூன் 15ம் தேதிக்குள் நிறுத்திகொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்தார். மேலும் கால அவகாசத் திற்குப் பின் விற்பனை செய்யும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், மீறி விற்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பது என நகராட்சி அறிவித்தது. ஆனால் அறிவிப்பிற்குப் பின் பெயரளவிற்கு பள்ளி மாணவ, மாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டும் நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுகிறதா? தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டு கொள்ளவில்லை.

             இதனால் பண்ருட்டி நகரில் டாஸ்மாக் கடைகள், டீ கடை, ஓட்டல்கள், இரவு நேர தள்ளுவண்டி கடைகள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தண்ணீர்,டீ கப், தெர்மாகூல் பிளேட்டுகள், பிளாஸ் டிக் கவர் உபயோகம் மீண்டும் அதிகரித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வதாக கூறி கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி விளம்பரம் உள்ளிட்ட செலவுகளை செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை தான் நகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் வீணடித்து வருகின்றனர். நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

Read more »

திட்டக்குடியில் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ஆர்ப்பாட்டம் ரத்து


திட்டக்குடி:

            திட்டக்குடியில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வருகையின் போது வாசன் கோஷ்டியினரை கண்டித்து சிதம்பரம் கோஷ்டியினர் நடத்த இருந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ரத்தானது.
 
             திட்டக்குடி பகுதியில் இளைஞர் காங்கிரசில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன் கோஷ்டியினர் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிஞ் சிப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர் காங்., மாநிலத் தலைவர் யுவராஜ் ராமநத்தம், திட்டக் குடி, விருத்தாசலம் வழியாக செல்வதாக இருந்தது. அப்போது திட்டக்குடி எல்லையான இளமங்கலத்தில் கொடியேற்றம் மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு வாசன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

             இதனையறிந்த சிதம்பரம் ஆதரவாளர்கள் மாநிலத் தலைவர் வருகையை தங்களுக்கு தெரிவிக்கவில்லை. தன்னிச்சையாக வாசன் ஆதரவாளர்கள் செயல்படுவதை கண்டித்து மாநிலத் தலைவர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். நேற்று காலை இளைஞர் காங்., மாநிலத் தலைவரை வரவேற்க வாசன் கோஷ்டியினரும், கருப்புக் கொடிகாட்ட சிதம்பரம் கோஷ்டியினரும் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

            இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மாநிலத் தலைவருக்கு வாசன் கோஷ்டியினர் இள மங்கலத்திலும், சிதம்பரம் கோஷ்டியினர் திட்டக்குடி பஸ் நிலையத்திலும் வரவேற்பு அளித்தனர். மேலும் இளமங்கலத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது

Read more »

கடலூர் நகராட்சியை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு

கடலூர்:

             பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத் துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.

            புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் நிர்வாகிகளான இளையபெருமாள், சதாசிவம், பாஷா, வெற்றிவேலவன், சுதாகர், பாலமுருகன், ஜெகன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

                கடலூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததைக் கண்டித்து வரும் 18ம் தேதி மருத்துவமனை முன் குடிநீர் ஊற் றும் போராட்டம் நடத்துவது. கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சிதம்பரத்தில் கோவில் திருவிழா வாணவேடிக்கையால் விபரீதம்: 23 வீடுகள் எரிந்தன

சிதம்பரம்:

            சிதம்பரத்தில் கோவில் திருவிழா, வாணவேடிக்கையில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து சாம்பலாயின. 

               10 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் கரை அம்பேத்கர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் வாணவேடிக்கை நடந்தது. அதிகாலை வரை தொடர்ந்த வாண வெடியின் போது, அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள வேலு என்பவரது வீட்டின் கூரையில் வாணவெடி ஒன்று விழுந்து தீப்பிடித்தது. காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

            அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அப்பகுதி மக்கள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அலறியடித்தபடி குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்தனர். உடன் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இருந்தும் மணிகண்டன், குப்புசாமி, செல்வராஜ், வேல்முருகன், பாலு உட்பட 23 பேரின் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. 

               இவ்விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணி வகைகள் என அனைத்தும் எரிந்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. டி.ஆர்.ஓ., நடராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் நிவாரண உதவியாக 2,000 ரூபாய், அரிசி, வேட்டி, சேலை வழங்கினார்.

Read more »

தடகள போட்டியில் ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

கடலூர்:

           கடலூரில் நடந்த மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஜெயராம் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர்.

               கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சத்யா, சசிகலா, நீலவேணி ஆகியோர் 5,000, 400, 800 மீ., மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவர்களை கெவின் கேர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சந்திரசேகரன், கல்லூரி சிறப்பு அதிகாரி ராஜா, முதல்வர் ராமலிங்கம், உடற்கல்வி இயக்குனர் இஸ்ரேல் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior