உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் சாலைகளைக் களங்களாக பயன்படுத்தினால் நடவடிக்கை

கடலூர்:

                 சாலைகளை விவசாயிகள் களங்களாகப் பயன்படுத்தக் கூடாது, மீறி அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               கடலூர் மாவட்டத்தில் சில விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை உலர்த்துவதற்கு, நெடுஞ்சாலைகளைக் களமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கம்பு, கேழ்வரகு, எள் போன்றவற்றை நெடுஞ்சாலைகளில் உலரவைத்து அதைச் சுற்றிலும் கற்கள், மரத்துண்டுகள், முள்செடிகளை அரணாக வைக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

                  கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைத் தூற்றும்போது வெளிப்படும் மணல் கலந்த தூசுகள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, கண் எரிச்சல் அடைவதுடன் அவர்கள் மேற்கொண்டு வாகனங்களை ஓட்ட முடியாமல் விபத்தில் சிக்க நேரிடுகிறது. சாலைகளில் இரு வழிப்பாதைகள் ஒருவழிப் பாதையாக மாறி போக்குவரத்து தடைபடுகிறது. இரவு நேரங்களிலும் சாலைகளில் கதிரடிப்பதால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

                 விவசாயிகளுக்குத் தேவையான களங்களை, மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அடிப்படையில் அமைத்துத் தந்துள்ளது. வேளாண் விற்பனைத்துறை, மாவட்ட விற்பனைக்குழு மூலமாக களங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் இக்களங்களை பயன்படுத்த வேண்டும். பெரு விவசாயிகள் தங்கள் நிலத்தில் மேடான பகுதிகளை களங்களாகப் பயன்படுத்தலாம். சிறு விவசாயிகள் தார்பாய்களை பயன்படுத்தி தானியங்களை உலர்த்தலாம். தார்ப்பாய்களை வேளாண் விற்பனைக் குழு மற்றும் தனியாரிடம் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்தலாம். 

                 உழவர் மன்றங்கள் தார்ப்பாய்களை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வாடகைக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உலர் களங்கள் அமைக்கக் கோரிக்கை அளித்தால்முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளும். அதையும் மீறி நெடுஞ்சாலைகளை களமாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூரில் "கியூசக்ஸ்" சுத்திகரிப்பு நிலையத்தை மூட ஐகோர்ட் உத்தரவு

கடலூர் : 

                     கடலூர் சிப்காட் வளாகத்தில் அரசு அனுமதியின்றி விதிமுறைகளை மீறி இயங்கி வரும் "கியூசக்ஸ்' சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மூட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

                  கடலூரில் கடந்த 1984ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. இதில் இயங்கி வரும் ரசாயன மற்றும் மருந்து தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள நீர் நிலைகளில் விட்டன. இதனால் நீர் நிலைகளில் மீன் வளம் குறைந்ததோடு, விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்து தொழிற்சாலைகளும் ஒருங்கிணைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதன் வழியாக கழிவு நீரை கடலில் 2 கி.மீ., தொலைவிற்கு கொண்டு சென்று கலக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

                        அதன்படி கடந்த 2001ம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கம்பெனிகள் இணைந்து "கியூசக்ஸ்' என்ற பெயரில் சுத்திகரிப்பு நிலையத்தை துவங்கி கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாததால் கடலில் மீன் வளம் குறைவதாகவும், காற்று மாசுபடுவதால் சுற்று வட்டார மக்கள் பல்வேறு நோயினால் பாதிப்பதாக புகார் எழுந்தது.

                   இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங் அமைப்பு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கடலூர் சிப்காட் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில் கம்பெனிகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் வாயுக்களால் காற்று மற்றும் நீர் மாசுபடுவதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு அப்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதி வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டாக விசாரணை நடந்து வந்த இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 8ம் தேதி கூறப்பட்டது.

                      அதில் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட "கியூசக்ஸ்' நிறுவனம் அரசிடம் உரிய அனுமதி பெறாமலேயே இயங்கி வருவதோடு, முறையாக ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆய்வு செய்யாததால், "கியூசக்ஸ்' நிறுவனத்தை மூடவும், மேலும், இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள கம்பெனிகளின் உரிமம் புதுப்பித்தலை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை விவரப் பதிவேடு வெளியீடு

கடலூர் : 

                   தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு நேற்று வெளியிடப்பட்டது. கடலோர கிராமங்களில் வழக்கமாக வசிக்கும் நபர்களைக் கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்குவதற்காக நேரடியாக புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் பணி கடலூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் முடிவடைந்துள்ளது. 

                    கடலூர் வட்டத்தில் சிங்கிரிகுடி, குண்டு உப்பலவாடி, சுபாஉப்பலவாடி, குடிகாடு, பச்சையாங்குப்பம், தியாகவல்லி, திருச்சோபுரம், காயல் பட்டு, ஆண்டார் முள்ளிப் பள்ளம் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் பெரியப் பட்டு, சிலம்பிமங்கலம், கொத்தட்டை, வில்லியநல்லூர், அரியகோஷ்டி, தாண்டவராய சோழகன்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நிறைவடைந் துள்ளது.
 
                 இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களின் விரைவுப் பதிவேடு தாசில் தார்களால் நேற்று அந்தந்த கிராமங்களில் பொது இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அப் பதிவேட்டில் உள்ள தகவல்களில் திருத்தங்கள், மாற்றங்கள், இறந்த நபரின் பெயரை நீக்குதல், ஆட்சேபணை மற்றும் புதியதாக பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை 30ம் தேதிக்குள் உள்ளூர் பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள உரிய படிவங்களை பெற்று விண்ணப்பித்துக் கொள்ள கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பூஞ்சானக் கொல்லி மருந்து தயாரிப்பு சுய உதவிக்குழுவினரின் வித்தியாச முயற்சி

கிள்ளை : 

                தில்லைவிடங்கனில் டான்வா பண்ணை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் உயிர் பூஞ்சானக்கொல்லி மருந்து விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

                அரசு மூலம் கடன் பெற்று மகளிர் சுய உதவிக் குழுவினர் அவரவர்கள் திறமைக்கேற்ப மெஸ், மெழுவர்த்தி தயாரிப்பு, சந்தனம் வில்லை தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். சில உதவிக் குழுக்கள் மினி பஸ், லாரிகளுக்கு உரிமையாளர்களாக கூட நிர்வகித்து வருகின்றனர்.

               இவர்களுக்கு மத்தியில் சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் டான்வா பண்ணை மகளிர் சுய உதவிக்குழுவினர் சற்று வித்தியாசமாக விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உயிர் பூஞ்சானக் கொல்லி மருந்துகள் தயாரிக்கின்றனர். "சூடோ மோனாஸ் புளூரன்ஸ்' மற்றும் "ரைக் கோடெர்மா விரிடி' மருந் துகள் தயாரித்து வேளாண் துறை உதவியுடன் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.

                     மண்ணிற்கும், மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் விவசாயத்தை பாதுகாப்பதுடன் போதிய லாபமும் அடைகின்றனர். பரங்கிப்பேட்டை வேளாண் துறை மூலம் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் குழு தலைவர் வனஜா, பொருளாளர் லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளித்து சான்று வழங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்து வகைகள்கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

                  முதல் முதலாக 2.50 லட்சம் ரூபாய் செலவில் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை சென்னையில் கொள்முதல் செய்து தில்லைவிடங்கனில் ஒரு வீட்டில் ஆய்வு கூடம் அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய வேளாண் துறை 1.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.

                    இந்த மருந்துகளால் நெல், வாழை, பருத்தி, கரும்பு, மணிலா, உளுந்து, பயிர், கேழ்வரகு, கம்பு, சோளம், வெள்ளரி, இஞ்சி, தக்காளி, வெண்டை, உருளை மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் விதைகளை இந்த மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்வதால் விவசாயிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Read more »

கடலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் : புறநகர் பஸ் நிலையம் உருவாக்கப்படுமா?

கடலூர் : 

                  கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்திட நகரின் மையப் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட தலைநகரான கடலூரில் தலையாய பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல். 

               நகரின் மையப் பகுதியான லாரன்ஸ் ரோட்டில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் உள்ளதால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் விரிவுப்படுத்தப்பட்டு பஸ் நிலையம் பின்புறம் வழியாக திருப்பி விடப்பட்டது. இருந்த போதிலும் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி 4,500 (டிரிப்கள்) பஸ்கள் வந்து செல்கின்றன. 

                 ஆனால் அதற்கேற்ப பஸ் நிலையத்தில் இட வசதி இல்லை. இருக்கின்ற இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதால் பயணிகள் நிற்கக் கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு திருடர்களும் பயணிகளிடம் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். குறுகிய இடத்தில் பஸ் நிலையம் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பஸ்கள் உள்ளே வரவும் தாமதமாவதால் லாரன்ஸ் ரோட்டிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. 

                  இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு கடலூர் பஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அதில் தற்போதைய பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாகவும், புற நகர் பஸ்களுக்கு நகரின் வெளிப் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து புறநகர் பஸ் நிலையம் அமைக்க கடலூர் செம்மண்டலத்தில் இயங்கி வரும் கரும்பு ஆராய்ச்சி நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை வெள்ளப்பாக்கத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. 

                    அண்டை மாவட்டமான விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் 2 பஸ் நிலையம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பரவலாக்கப்பட் டுள்ளது. ஆனால் கடலூரில்  இந்த திட்டம் என்ன காரணத்தினாலோ பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேளாண் உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 
 
              வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
 
                   தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் பயிறு வகை பயிர்களின் உற்பத் தியை பெருக்க சிறப்புத் திட்டத்தின் கீழ் குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் 6 மாதத்திற்கு வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  மாத சம்பளம் 8,000 ரூபாய். 
 
                  மேற்கண்ட பணிக்கு விருப்பம் உள்ள பி.எஸ். சி., (விவசாயம்) பட்டதாரிகள் வரும் 18ம் தேதிக் குள் தங்களது விண்ணப் பங்களை கடலூர் செம்மண்டலம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

                      கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் காலியாக உள்ள 166 அங்கன்வாடி பணியாளர்கள், 63 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 112 உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

                           காலிப் பணியிடங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிகளுக்கு 20 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், விதவை எனில் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், உள்ளூரில் வசிப்பவராகவும், இல்லை எனில் காலி பணியிட மையத்திற்று 3 கி.மீ., தூரத்திற்குள் வசிக்க வேண்டும்.

                  அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதோடு, மேற்கூறிய தகுதிகள் இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பணி இடத்தை குறிப்பிட்டு வரும் 11ம் தேதி முதல் 29ம் தேதி மாலை 5.45 மணிக் குள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ்கள், ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்றுகள், விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

Read more »

கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். 

                       பள்ளியின் செயலாளர் திருவடி துவக்கி வைத்தார். கண்காட்சியில் காற்று மற்றும் நீர் மாசுபடுத்தல் பற்றியும், இயற்கை உணவுகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். மேலும் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு தலைப்பின் கீழ் செயற்கைக்கோள் இயக் கத்திற்கு ஏற்ப பூமியின் அன்றாட நிகழ்வுகள் நடப்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் வீட்டில் திருட்டை தடுக்கும் வகையில் மதில் சுவரில் மின் இணைப்பு அலாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior