உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

சிதம்பரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு


சிதம்பரத்தை அடுத்த கிள்ளை அருகே வியாழக்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட வாராணசி எக்ஸ்பிரஸ் ரயில். (உள்படம்) த
 
சிதம்பரம்:

              சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் வியாழக்கிழமை அதிகாலை பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  

                   கிள்ளை- பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே, கிள்ளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை நவாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் வியாழக்கிழமை அதிகாலை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் உடனே கிள்ளை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் சிதம்பரம் ரயில்வே பொறியாளர் ஜெயராமராம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு அவ்வழியே வியாழக்கிழமை காலை வந்த ராமேஸ்வரம்- வாராணசி எக்ஸ்பிரஸ் ரயிலை கிள்ளை ரயில் நிலையத்திலும், விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை புதுச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைத்தார்.  

                          பின்னர் சம்பவ இடத்துக்கு ரயில்வே தலைமை கீமேன் பன்னீர்செல்வம் சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்டவாளத்தில் விரிசல் விட்ட பகுதியில் வளையம் வைத்து தாற்காலிகமாக சரி செய்தார். அதன் பின்னர் அவ்வழியே 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் தண்டவாளத்தில் உள்ள விரிசலை முழுமையாக சரி செய்யும் பணி தொடங்கியது. 

Read more »

சூறாவளிக் காற்று: கடலூரில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்


புதன்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வழிசோதனைப்பாளையத்தில் முறிந்து கிடக்கும் வாழை மரங்கள்.
 
கடலூர்:
 
              சூறாவளிக் காற்று காரணமாக கடலூர் பகுதியில் 100 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.  வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இதனால் புதன்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென புயல் காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை நீடித்தது.  
 
               இதனால் கடலூர் அருகே வழிசோதனைப்பாளையம், ஆண்டியார்தோப்பு, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், சாத்தங்குப்பம், ஒதியடிக்குப்பம், வி.காட்டுப்பாளையம், வெள்ளக்கரை, கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.  இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இவை பெரும்பாலும் அறுடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.  
 
சேதம் குறித்து விவசாயிகள் கூறுகையில், 
 
                                ""தற்போது மேற்கண்ட கிராமங்களில் முதல்கட்ட அறுவடை முடிந்து, 2-ம் கட்ட அறுவடை நடைபெறத் தயாராக இருந்தது.  சில நாள்களில் வாழைத் தார்களை வெட்டி எடுக்கலாம் என இருந்தோம். ஆனால் சூறாவளிக் காற்றினால் வாழைத் தோட்டங்களில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். வாழை மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க முட்டுக் கொடுக்கப்பட்டு இருந்தது. எனினும் சூறாவளிக் காற்று பெரும்பாலான வாழை மரங்களைச் சேதப்படுத்தி விட்டது'' என்று தெரிவித்தனர்.   

Read more »

உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகள்: விண்ணப்பங்களை வரவேற்கிறது "யுனெஸ்கோ'

                              உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு "யுனெஸ்கோ' விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  யுனெஸ்கோவும், ஜப்பான் இளம் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகைத் திட்டமும் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. 

                      சுற்றுச்சூழல், நாடுகளுக்கு இடையேயான கலாசார உறவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பிரச்னைகளுக்கான அமைதித் தீர்வு உள்ளிட்ட தலைப்புகளில் முதுகலை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.  இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  சிறிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

                   இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க தயாராக உள்ளவராகவும், 40 வயதுக்கு குறைவானவராகவும் இருக்க வேண்டும்.  

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை 

புதுதில்லி சாஸ்திரி பவன் 
"சி'-விங்
அறை எண். 203 

                   என்ற முகவரிக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகளை www.unes​co.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குவாரியில் குறைந்த விலையில் மணல்

சிதம்பரம்:
 
                  கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் குவாரி மூலம் மணல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: 

                      கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவுரையின்படி கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்துக்கு காட்டுமன்னார்கோவில், குமராட்சி. கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவையான மணல் கொள்ளிட வடிநில கோட்டம் நீர் ஆதாரத் துறை சிதம்பரம் எல்லைக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் மணல் குவாரி மூலம் மணல் வழங்கப்படுகிறது.மேற்படி திட்டத்தின் கீழ் தேவைப்படும் பயனாளிகளுக்கு 1 யூனிட் மணல் ரூ 312-க்கு (வரிகள் உள்பட) வழங்கப்படுகிறது

                       .இதற்கான தொகையை செயற்பொறியாளர், பொதுப்பணித் துறை நீர்ஆதாரத்துறை, கொள்ளிடம் வடிநில கோட்டம், சிதம்பரம் என்ற பெயருக்கு வரைவோலையாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மணல் குவாரி இடங்கள் விவரம்: 

                       குறிஞ்சிப்பாடி ஒன்றியம்- ஆயிப்பேட்டை பரங்கிப்பேட்டை ஒன்றியம் - ஆயிப்பேட்டை குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி ஆகிய ஒன்றியங்கள்- வீரமுடையான்நத்தம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம்- ஓமாம்புலியூர். 

விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன்: 94434 22419.

Read more »

பண்ருட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பண்ருட்டி:

                பண்ருட்டி பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்கள் தயாரித்த அறிவியல் தொடர்பான காட்சிப் பொருள்களை சக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக காட்சிப்பொருள் அமைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை வ.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் ஏ.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரத்தை அடுத்த முடசல் ஓடையில் 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை

சிதம்பரம்:

                  சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முடசல் ஓடைப் பகுதியில் உலக வங்கி நிதியுதவியுடன் 10 கோடி செலவில் முகத்துவாரம் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.

                 முடசல் ஓடைப் பகுதியில் தூர்ந்துபோன முகத்துவாரத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் இதைத் தெரிவித்தார்.

தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் மேலும் கூறியது: 

                            மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளை பகுதியில் உலகவங்கி நிதியுதவியுடன்  10 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது. அதுவரை தாற்காலிகமாக 30 லட்சம் செலவில் அன்னங்கோவில் முகத்துவாரத்தை 270 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழத்திலும், சின்னவாய்க்காலில் 180 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும், பில்லுமேட்டில் 220 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும் வெட்டி ஆழப்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ 17 லட்சம்

சிதம்பரம்:

                        அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குமராட்சி வட்டார வள மையம் மூலம் 2010-11-ம் கல்வியாண்டுக்கு குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

                    86 தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் ரூ 5ஆயிரம் வீதமும், 31 நடுநிலைப்பள்ளிகளுக்குரூ 12ஆயிரம் வீதமும், 19 அரசினர் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ 7 ஆயிரம் வீதமும், ஆக மொத்தம் ரூ 9 லட்சத்து 35 ஆயிரம், பள்ளிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் 46 தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளி பரமாரிப்பு மானியம் ரூ 5ஆயிரம் வீதமும், 55 நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ 10ஆயிரம் வீதமும், ஆக மொத்தம் ரூ 7 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறப்பு கிராமக் கல்விக் குழு நாள் கொண்டாட 136 பள்ளிகளுக்கு ரூ 300 வீதம், ரூ 40 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

                        குமராட்சி ஒன்றியத்தில் மட்டும் பள்ளி மானியம், பள்ளி பராமரிப்பு மானியம் உள்ளிட்டவைக்கு மொத்தமாக ரூ 17 லட்சத்து 55 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கடலூர்:

                மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம் நடத்துவதற்கு, தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையத்தில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உறைவிடம், பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனங்கள், ஊனமுற்றோர் சட்டம் 1995 பிரிவு 52ன் கீழ் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

                   பயிற்சியில் சேரும் மாற்றுத் திறனாளிகள் 16 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருப்பர். தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூரில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

கடலூர்:

                  ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

                  பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோயில் சிற்பக்கலை, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில்- வரலாற்றுப் பார்வை, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் கல்வெட்டுகள், வள்ளலாரின் வாழ்க்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கூட்டத்தின்போது இந்த ஆய்வுக் கட்டுரைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன. 

                        கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் காந்திமதியின் வழிகாட்டுதல்படி, அத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, நா.சேதுராமன் ஆகியோர், மாணவர்களைத் தயார் செய்து, பொள்ளாச்சி வரலாற்றுப் பேரவை கூட்டத்துக்கு அழைத்துச் சென்று இருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களை கல்லூரியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior