உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஆன்லைனில் ஓட்டுநர், பழகுநர் உரிமம்: போக்குவரத்துத் துறை புதிய ஏற்பாடு


ஆன்லைன் மூலம் ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர கே.என்.நேரு 
            
            ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காத்திருக்க வேண்டாம். இணையதளம் மூலம் ஆன்லைன் (www.tr​ansport.nic.in) வழியே விண்ணப்பிக்கலாம்.  இந்தப் புதிய வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.  

                   போக்குவரத்துத் துறையின் இணையதளத்தைத் திறந்தால் அப்போது சேவை முன்பதிவு என்ற பிரிவு வரும். அதை கிளிக் செய்ய வேண்டும். அந்தப் படிவத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியன கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.  பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வந்து விடும். அதிலுள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு மறுநாளே சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக உரிமங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது போல... 

              பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்லும் நாள் மற்றும் நேரத்தை இணையதளம் மூலம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.  அதுபோன்று, விண்ணப்பதாரர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் தேதியையும், நேரத்தையும் அவரே தீர்மானிக்கலாம். இதனால், விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய நேர விரயம் தவிர்க்கப்படும். 

புதிய ஏற்பாட்டை அறிமுகம் செய்த பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: 

                 சென்னை நகரில் மினி பஸ்கள் விடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று மாதத்துக்குள் நகரில் 100 பஸ்கள் விடப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினி பஸ்களை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போது அவர்களுக்கான சொந்த வாகனங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் குறையும்.

                        30 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 40 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.15 ஆயிரம் செலுத்தி தேசிய அளவிலான பெர்மிட்டை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை நடைமுறைக்குக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

Read more »

தீயணைப்புத் துறையினருக்கு காவல்துறை ஊதியம்: டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தகவல்


சிதம்பரத்தில் ரூ.1கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை அலுவலர் மற்றும் காவலர் குடியிருப்பு திறப்பு விழாவில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ்
 
சிதம்பரம்:

                தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு காவல்துறையினருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை இயக்குநர் ஆர்.நடராஜ் தெரிவித்தார். சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் ரூ. 1 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்புத்துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கான 25 வீடுகள் கொண்ட குடியிருப்பு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

விழாவில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் பங்கேற்று குடியிருப்பை திறந்து வைத்துப் பேசியது:

                 தீயணைப்புத் துறையினருக்கு இதுவரை 700 வீடுகள் உள்ளன. தற்போது ரூ. 9 கோடியே 82 லட்சம் செலவில் 200 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 140 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 60 வீடுகள் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. தமிழக தீயணைப்புத் துறையில் மொத்தம் 6,500 களப்பணியாளர்கள் உள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு 1127 வீடுகள்தான் உள்ளன. தீயணைப்புத் துறையினருக்கு 16.8 சதவீத அளவில்தான் வீடுகள் உள்ளன. ஆனால் காவல்துறையில் 40 சதவீத வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் மேலும் 225 வீடுகள் பல்வேறு பகுதிகளில் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                    கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும். தீயணைப்புத் துறையின் 121 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு 60 புதிய வாகனங்களும், இந்த ஆண்டு 61 புதிய வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளன.  தீயணைப்புத்துறை உயர்மாடி கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க 32 மீட்டர் ஏணி பொருத்திய 5 வாகனங்கள் உள்ளன. தற்போது ரூ. 10 கோடி செலவில் 54 மீட்டர் ஏணிப்படி கொண்ட புதிய தீயணைப்பு வாகனம் இரண்டு வாங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு 625 பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

                        தீயணைப்புத்துறைக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. இந்த ஆண்டு ரூ. 14 கோடி செலவில் புதிய சாதனங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் காவல்துறையினருக்கு இணையான ஊதியம் தீயணைப்புத்துறை காவலர்களுக்கு வழங்கப்படும். 25 வருடங்கள் அப்பழுக்கற்று பணியாற்றிய காவலர்களுக்கு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும். பணியின் தன்மை, போதிய அனுபவம் மூலம் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றார்.

                      விழாவில் மத்திய மண்டல துணை இயக்குநர் வி.ராமச்சந்திரன் வரவேற்றார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தே.வீரபாகு நன்றி கூறினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் அறிவுக்கரசு, கடலூர் கோட்ட அலுவலர் பெ.காங்கேயம்பூபதி, உதவி கோட்ட அலுவலர் சரவணன், கோட்ட அலுவலர்கள் குமாரசாமி (புதுக்கோட்டை), சுப்பிரமணியன் (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழகத்தில் 7 புதிய தீயணைப்பு நிலையங்கள் 

                தமிழகத்தில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படும் என்று டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழாவில் பங்கேற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜ்  கூறியது.

                    தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சென்னை தியாகராஜர் நகர், திருப்பூர், கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம், ஈரோடு மாவட்டம் மடக்குறிச்சி ஆகிய 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. கோத்தகிரியில் மீட்புபணி நிலையம் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலையங்கள் 292 உள்ளன. தற்போது புதிய நிலையங்களை சேர்த்து இதன் எண்ணிக்கை 300 ஆக உயரவுள்ளது.

                 வெள்ளக்காலங்களில் பொதுமக்களை மீட்க இதுவரை 150 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் முக்கியமாக கடலூர், நாகப்பட்டினம் பகுதியில் வெள்ளக்காலங்களில் பயன்படுத்தப்படும்.÷தமிழகத்தில் மீட்புபணி ஊர்திகள் 5 உள்ளன. தற்போது ரூ. 8 கோடி செலவில் மேலும் 16 மீட்புபணி ஊர்திகளுக்கான கட்டுமானப்பணி பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிவுற்று அந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். புதுதில்லி, ஹைதராபாத் நகரங்களில் உள்ளது போல் நச்சுப்பொருள்களை எதிர்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன வாகனம் ரூ. 5 கோடிக்கு வாங்க அரசு அனுமதித்துள்ளது. 

                     மேலும் இந்த ஆண்டு சிறிய நகரங்களில் பயன்படுத்த, ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட 15 சிறிய தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிதம்பரம் நிலையத்துக்கு வழங்கப்படும். மேலும் சிறியஅளவில் நீர் கொள்கலன் மற்றும் கருவிகள் கொண்ட 50 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படவுள்ளன. கருவிகள் உள்ளிட்ட ஒரு மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும் என்றார் ஆர்.நடராஜ்.

Read more »

தொடர் மழை எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் நெல்விலை வீழ்ச்சி


 
கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நெல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும் மற்ற பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது 90 சதவீதம் அறுவடை முடிந்து விட்டது. விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் ஏடிடி 43, டீலக்ஸ், ஏடிடி 36, ஏஎஸ்பி 16, ஏஎஸ்பி 16, கோ 43, ஜேஎல் உள்ளிட்ட குறுவை ரகங்களும், பொன்னி, பிபிடி போன்ற இருப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பாநெல் ரகங்களும் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

                 இவை பெரும்பாலும் நேரடியாகத் தனியார் வியாபாரிகளிடமும், மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் விற்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. புதன்கிழமை விருத்தாசலம் ஒழுங்குமுறை முறை விற்பனைக் கூடத்துக்கு 6 ஆயிரம் மூட்டைகளும் பண்ருட்டி, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தலா 500 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.÷நெல் விலை குவிண்டால் விருத்தாசலத்தில் குறைந்தபட்சம் ரூ. 780 ஆகவும், அதிகபட்சம் ரூ. 1,080 ஆகவும் இருந்தது. பண்ருட்டியில் குறைந்த பட்சம் ரூ. 790 ஆகவும், அதிகபட்சம்  ரூ. 1,113 ஆகவும் இருந்தது. கடலூரில் குறைந்தபட்ச விலை ரூ. 615 ஆகவும் அதிகபட்ச விலை ரூ. 910 ஆகவும் இருந்ததாக மார்க்கெட் கமிட்டி தெரிவிக்கிறது.

                 அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் விலை குவிண்டால் சன்ன ரகம் ரூ. 1,100 ஆகவும், சாதாரண ரகம் ரூ. 1,050 ஆகவும் உள்ளது. எனினும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல்வரத்து குறைவாகவே இருப்பதாக கொள்முதல் நிலையங்கள் தெரிவிக்கின்றன. காரணம் தற்போது கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி, இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் அறுவடை செய்தாலும் நெல்லை உலர்த்த முடியவில்லை. அரசு கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை மட்டுமே ஈரப்பதம் அனுமதிக்கப்படும். மேலும் களத்தில் என்னதான் நெல் தூற்றப்பட்டு இருந்தாலும், அரசு கொள்முதல் நிலையங்களில் மீண்டும் தூற்ற வேண்டும் என்று கொள்முதல் நிலைய அலுவலர்கள் வற்புறுத்துகிறார்கள்.

                இத்தகைய காரணங்களால் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு செல்லாமல், நேரடியாகத் தனியார் வியாபாரிகளையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் நாடுகிறார்கள். சம்பா அறுவடையின் போது, களத்துக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும் முறை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குறுவை அறுவடையில் அவ்வாறு இல்லை. இதனால் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                   "கடந்த ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது 17 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மழைக் காலங்களில் சிறப்பு ஏற்பாடாக, ஈரப்பதம் 20 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும். கிராமங்களில் வாய்ப்பு இருக்கும் இடங்களில் அரசு உலர்களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். சம்பா அறுவடையில் செயல்படுத்தியது போல், குறுவை அறுவடையிலும் களத்துக்கு வந்து நெல் கொள்முதல் செய்யும் முறை வேண்டும்.  அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'' என்றார்.

Read more »

தடம் மாறும் தனியார் பஸ்கள்:தட்டிக்கேட்பது யார்?


கடலூர் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தனியார் பஸ்கள்.
 
கடலூர்:

           கடலூரில் தனியார் பஸ்கள் பல, அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் செல்லாமல், தடம் மாறிச் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்படும் நிலையும் வேறுபல பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

                   கடலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 560 பஸ்களும் தனியார் துறையில் 250 பஸ்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான போக்குவரத்து ஆணையம் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். அரசு பஸ்கள் இந்த விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றன. விழாக் காலங்கள் மற்றும் மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதி தேவைப்படும் காலங்களில், தடம் மாறிச் செல்ல வேண்டிய நேரங்களில் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று, இயக்கப்படுகின்றன.

               ஆனால் தனியார் பஸ்கள் அவற்றுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லாமல், பல நேரங்களில் குறுக்குப் பாதைகளில் செல்கின்றன. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு பரங்கிப்பேட்டை வழியாகச் செல்ல, பல தனியார் பஸ்கள் பெர்மிட் வாங்கிக் கொண்டு, நேர்வழியாக (புதுச்சத்திரம் வழி) சென்று வருகின்றன.÷கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் சில தனியார் பஸ்கள், வெள்ளக்கரை வரை சென்று வரவும், ஒரு முறை திருவந்திபுரம் வரை சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊர்களுக்கு இந்த தனியார் பஸ்கள் செல்வதைத் தவிர்த்து விடுகின்றன.

               நகரப் பஸ்கள் சில கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புதுப்பாளையம், லோகாம்பாள் கோயில் தெரு, ஜட்ஜ் பங்களா சாலை, ஆட்சியர் அலுவலகச் சாலை வழியாக மஞ்சக்குப்பம் செல்ல வேண்டும். ஆனால் அவை புதுப்பாளையம் வழியாகச் செல்லாமல், நேர்வழியில் மஞ்சக்குப்பம் செல்கின்றன. அதேபோல் மற்றொரு நகரப் பஸ், கடலூர் முதுநகரில் புறப்பட்டு திருப்பாப்புலியூர் காவல்நிலையம், போடிச்செட்டித் தெரு வழியாக மஞ்சக்குப்பம் செல்ல வேண்டும். ஆனால் இந்த பஸ் திருப்பாப்புலியூர் பகுதிக்கே செல்வதில்லை.

               கடலூரில் இருந்து புதுவை செல்லும் சில பஸ்கள் பாகூர், மதகடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் வழியாகச் செல்ல அனுமதி பெற்றுள்ளன. ஆனால் அவை பாகூர், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு செல்லாமல், நேர் வழியில் புதுவை செல்கின்றன. புதுவை-கடலூர் இடையே இயக்கப்படும் சில பஸ்கள், ஒருமுறை திருவந்திபுரம் வரை சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் திருவந்திபுரம் செல்வதையே இந்த பஸ்கள் தவிர்த்து விடுகின்றன. கடலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் சில பஸ்கள் திருவந்திபுரம், வெள்ளகேட், பட்டாம்பாக்கம், சொர்ணாமூர் வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை திருவந்திபுரம் வழியாகச் செல்வதில்லை.

                  இப்படி ஏராளமான பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்ல அனுமதி பெற்று, மாற்று வழித்தடத்தில், தடம் மாறி இயக்கப்படுவதால், பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றித் தவிக்க நேரிடுகிறது.÷நகரப் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பஸ் வசதி கிடைக்காத நிலையும், பல கிராமங்களுக்கு குறைந்த தடவை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் நிலையும், இந்த தடம் மாறும்  தனியார் பஸ்களால் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி ஏனைய பஸ்களுடன் குறிப்பாக அரசு பஸ்களுடன் டைமிங் பிரச்னையும் ஏற்பட்டு, பஸ் தொழிலாளர்களிடையே அடிக்கடி மோதலும் அடிதடியும் நடக்கிறது. நகரப் பகுதிகளிலும், கிராமங்களிலும் பஸ் வசதி குறைந்து, மக்கள் ஷேர் ஆட்டோக்களையும், ஆட்டோக்களையும் நம்ப வேண்டிய நிலையும், அதனால் பாதுகாப்பற்றப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                   "தனியார் பஸ்கள் தடம் மாறி இயக்கப்படுவதால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றி  அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்கிறோம். எனினும் தனியார் பஸ்கள் வருவாயை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள். முறையான வழித்தடத்தில் தங்கள் தொழிலாளர் சென்றாலும் அவர்களை மிரட்டி, தடம் மாறச் செய்கிறார்கள் பஸ் முதலாளிகள்' என்றார்.

இது பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் கூறியது 

              தடம் மாறி பஸ்கள் இயக்கப்படுவதாக, வழித்தடத்தைக் குறிப்பிட்டு புகார்கள் எதுவும் வரவில்லை. அத்தகைய புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

ரூ.157 கோடி பங்கு ஈவுத்தொகை: மத்திய அரசிடம் வழங்கியது என்.எல்.சி.


மத்திய அரசின் இறுதி பங்கு ஈவுத்தொகையான ரூ.156.96 கோடிக்கான காசோலையை மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ்ஜெய்ஸ்வாலிடம் (வலது) வழங்குகிறார் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி
 
நெய்வேலி:

           என்எல்சி நிறுவனத்தின் மீது மத்திய அரசு செய்துள்ள முதலீட்டுக்காக 2009-10-ம் ஆண்டுக்கான இறுதி பங்கு ஈவுத்தொகையாக ரூ.156.96 கோடியை மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

                 மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடந்த நிதியாண்டில் ரூ.1,247.46 கோடி நிகர லாபமாக ஈட்டியது.  இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடந்த ஆண்டுப் பேரவைக் கூட்டத்தின் போது, பங்குதாரர்களுக்கு 20 சதவிகித பங்கு ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. என்எல்சி நிறுவனத்தின் முதலீட்டில் 93.56 சதவிகிதத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.313.92 கோடியை பங்கு ஈவுத்தொகையாக வழங்கவேண்டும்.

                   அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தவணையாக 10 சதவிகித பங்கு ஈவுத்தொகை ரூ.156.96 கோடியை மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் நெய்வேலி வந்தபோது  என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வழங்கினார். இந்நிலையில் தில்லியில் செப்டம்பர் 2-ல் நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் 2-வது தவணை பங்குஈவுத் தொகையான ரூ.156.96 கோடியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நிலக்கரித்துறை அமைச்சக செயலர் பாலகிருஷ்ணன், என்எல்சி நிதித்துறை இயக்குநர் கே.சேகர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

20-ல் அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்டம்பர் 20-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் முகவரிகள்:
 
              www.annam​al​aiuniversity.ac.in,​​ www.indi​aresults.com,​ www.hmh.ac.in,​​ www.schools9.com​  ஆகிய முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 

சிதம்பரம் கோடு எண்: 

                   04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் RCQ​ Enr.no​ RCQ​ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: 

                     எம்.ஏ- சோஷியாலஜி, பாப்புலேஷன் ஸ்டெடிஸ், என்வயர்மெண்டல் எக்னாமிக்ஸ், எம்.எஸ்சி- இயற்பியல், சாஃப்ட்வேர் இன்ஜியரிங், எம்.காம்-மார்கெட்டிங், என்டர்பிரைனர்ஷிப், எம்.பி.ஏ-பார்மச்சுடிகல் மேனேஜ்மெண்ட், குளோபல், மாஸ்டர் ஆஃப் லேபர் மேனேஜ்மெண்ட், எம்.ஃபில்- எக்னாமிக்ஸ், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், லைப்ரரி இன்பர்மேஷன் சயன்ஸ், பிசிக்ஸ், பயோ-கெமிஸ்டரி, எஜூகேஷன், பிசிகல் எஜூகேஷன் ஸ்போர்ட்ஸ் சயன்ஸ், 

பிஜி டிப்ளமா படிப்புகள்:- 

                      மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அட்வர்டைசிங், கோ-ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், பெட்ரோலியம் எக்ஸ்புளரேஷன். சோசியாலஜி ஹெல்த், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் வாட்டர் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் டிப்ளமா வகுப்புகள்.

Read more »

அச்சுறுத்தும் அரிசி ஆலைக் கழிவு


நெய்வேலி நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரம் தேங்கிநிற்கும் கழிவுநீர்.
 
நெய்வேலி:

             நெய்வேலியில் அரசின் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நின்று அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சுகாதார சீர்கேட்டை உருவாக்கி அச்சுறுத்தி வருகிறது.

                  சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மாநில அரசின் நவீன அரிசி ஆலை உள்ளது.÷தொடக்கத்தில் இந்த ஆலையில் நாளொன்றுக்கு 100 டன் நெல் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டது. தற்போது 50 சதவீதத்துக்கும் குறைவாக நெல் அரைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் நெல் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுநீர் மற்றும் உமி கலந்த கழிவுநீர் ஆலையினுள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் அவை அப்படியே வெளியேற்றப்படுவதாக தெரிகிறது.

                   இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் 2 கி.மீ. தூரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரத்தில் சிற்றுண்டி கடைகள் வைத்திருப்போரும், தங்களது கழிவுகளை அங்கேயே கொட்டத் தொடங்கியுள்ளனர்.÷தேங்கி நிற்கும் கழிவுநீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் அந்த இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. 

               மேலும் கனரக வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று முந்தி செல்லும் போது, சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் பகுதியை குட்டையாக மாற்றிவிடுகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்கக் கூட முடிவதில்லை. மேலும் இப்பகுதியில் பல புது குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துர்நாற்றத்தால் அவர்கள் தினந்தோறும் அவதிக்கு ஆளாகின்றனர்.

                     இது குறித்து மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பல புகார்கள் சென்றயதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலையை பார்வையிட்டு, ஆலையினுள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என அறிவுறுத்திச் சென்றுள்ளனர். ஆலை நிர்வாகமும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கோப்புகளை தயார் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் நுகர்பொருள் வாணிபக் கழகம் இது குறித்து எவ்வித மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கடலூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் சேகரின் உதவி மேலாளர் வில்சன்,

                        சுகாதார சீர்கேடு குறித்து விசாரிக்கப்படும் என்றார். பொதுமக்களின் நலன் கருதி ஆலை நிர்வாகம் முனைப்புடன் செயல்பட முனைந்தாலும், அதற்கானத் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகிறார்களா என்றால் இல்லை என்றே கூறலாம்.

Read more »

CB-CID probe sought into man's death

CUDDALORE: 

            Rights activists have called for a CB-CID probe into the death of K.Ravi (38), belonging to Korava community.

            In a joint statement issued here, they said that Ravi was picked up from his houses at Thandavankuppam in Vriddhachalam block in the early hours on August 16 by a team of plainclothes policemen “without giving any reason.” The activist also alleged that on August 17, another team of police personnel obtained signature from Ravi's wife, Kasthuri (30), under duress, and asked her to come to Cuddalore to get the body of Ravi on August 18.

             On August 19, she went to Chennai to consult the Tamil Nadu Kuravar Pazhangudi Makkal Sangam for taking legal action. Ravi's body was handed over to Kasthuri on August 20 after post-mortem at the Cuddalore Government Hospital. The activists said that police registered a case on August 18 stating that policemen were chasing Ravi who was found moving about in a suspicious manner in a cashew grove at Sathipattu. He tripped over a stone, fell down and died.

                 The activists alleged that it was an attempt by the Naduveerapattu police to cover up the death of Ravi in police custody, and hence, called for a CB-CID probe. They also demanded action against the police officers involved in the episode, Rs. 10 lakh compensation and a government job to Ms. Kasthuri, and, the release of eight persons who were witness to the police torture on Ravi.

Read more »

Mixed response from schools to closure call

CUDDALORE: 

             There was mixed response among matriculation schools in Cuddalore and Villupuram to the closure call given by the Tamil Nadu Nursery, Primary, Matriculation and the Higher Secondary Schools' Association on Friday.

 Chief Educational Officer (Cuddalore) S.Amuthavalli said 

                       That of 115 matriculation schools in the district, only seven did not function on Friday. As quarterly examinations were going on, there was full attendance in all schools that remained open on Friday. Chief Educational Officer (Villupuram) P. Kuppusamy said that over 50 per cent of matriculation schools in Villupuram district observed a token strike on Friday. Of the total number of 107 matriculation schools in the district, 58 schools participated in the strike. When asked about the action contemplated against the schools that went on strike defying the government direction, the CEOs said that it was up to the Director of Matriculation Schools and the Inspector of Matriculation Schools to decide.

Read more »

NLC to set up mega thermal projects soon: Chairman


Tribute:NLC Chairman-cum-Managing Director A.R. Ansari garlanding the portrait of Sir 
 

CUDDALORE: 

             The Neyveli Lignite Corporation will soon be setting up mega thermal power projects of 1,000-MW capacity, according to A.R. Ansari, Chairman-cum-Managing Director, NLC.

             He was delivering a speech on “Impending paradigm shift in engineering sciences and future challenges,” jointly organised by the Institution of Engineers (India), Neyveli centre, and, the Engineers and Scientists' Association at Neyveli. Mr. Ansari said that with achieving optimal productivity and initiating steps for tapping the non-conventional sources of energy such as solar and wind power, the NLC which was now a Mini Ratna company, was all set to attain the Navaratna status.

               The Chairman said that the population of the country that remained at 35 crore in 1950 had now touched the 1.2 billion mark. By the end of the XII Plan period, to provide power to all, an additional capacity of 1,00,000 MW ought to be created. Hence, the engineers were facing an enormous challenge of meeting the demand. As the fossil fuel deposit was fast depleting they would have to harness the alternative sources of energy without affecting the environment.

                    In this context he stressed the need for adopting new technology such as the Bloom Box, a fuel cell device using ceramic discs, for neutralizing the effects of carbon-dioxide and other gaseous emissions, underground coal gasification technology and so on. Mr. Ansari underscored the point that nanotechnology held out a great promise for the future. He opined that the speed of the Internet ought to be increased manifold. He called upon the engineers to put in their best for the growth of the company and the betterment of the society.

            NLC Director (Mines) B. Surender Mohan, who is also the chairman of the Institution, Neyveli centre, called upon the engineers to use the technology to improve the living condition in the rural areas and to facilitate better water supply, power and health care. They could also play a vital role in increasing agricultural productivity on a sustained basis. On the occasion Mr. Ansari garlanded the portrait of Sir M. Visvesvaraya, whose birth anniversary was being observed as Engineers' Day, and distributed prizes to the winners of various competitions organised in this connection. M. Ramachandran, president, Engineers and Scientists' Association also participated.

Read more »

Precautionary measure

CUDDALORE: 

            Health officials have redoubled their efforts to sanitise the surroundings of the residence of Chockalingam, Assistant Personnel Officer of Neyveli Lignite Corporation, at Neyveli Township, who died on Friday of A (H1N1) influenza.

                The NLC General Hospital sources said that after his visit to Rajapalyam recently, Chockalingam contracted fever. After receiving treatment at a private hospital for two days, he came to the NLC General Hospital on September 2. On September 3, he tested positive for A (H1N1) flu and was put on Tamiflu. He was later referred to a Chennai hospital where he died.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

கடலூர்:

                 அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வசதிக்காக கூடுதலாகப் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று, தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் வலியுறுத்தினார்.இக் கூட்டம் சென்னையில் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் தீபக் கிரீசன் தலைமையில் அண்மையில் நடந்தது. 

கூட்டத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவகுமார் தெரிவித்த கோரிக்கைகள்:
 
                விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில், மீட்டர் கேஜ் ரயில்பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும், கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று போக வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு வசதியாக, மாலையில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே கூடுதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

                          அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் திருப்பாப்புலியூர், துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. பல ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீர் உவர் நீராக உள்ளது. போதுமான குடிநீர் குழாய்கள் இல்லை. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

Read more »

பாசிமுத்தான் ஓடையில் பாசனத்துக்கு நீர் திறப்பு

  சிதம்பரம்:

             சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் சனிக்கிழமை பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், நீரை திறந்துவிட்டார்.

                     வீராணம் ஏரியிலிருந்து பிரியும் பரிபூரணநத்தம் வாய்க்கால் தொடர்ச்சியாகவும், பொன்னேரியின் உபரிநீர் வடிகால் ஆகவும் பாசிமுத்தான்ஓடை திகழ்கிறது. இது பாசன வாய்க்காலாகவும் வடிகாலாகவும் உள்ளது. பாசிமுத்தான் ஓடையில் நீர் திறக்கப்பட்டதன் மூலம் மீதிகுடி, கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, கோவிலாம்பூண்டி, புஞ்சைமகத்துவாழ்க்கை உள்ளிட்ட 8 கிராமங்களில் 3910 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். நீர்திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க.கலியபெருமாள் (கொள்ளிடம் வடிநிலம்), பெ.பெரியசாமி (அணைக்கரை), பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

குண்டும், குழியுமான மானியம்ஆடுர் சாலை

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

             3 கி.மீ. நீள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி நடந்துகூட செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. இச்சாலை வழியே தினமும் ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்கிறது. இச்சாலையில் ராயநல்லூர், கொத்தங்குடி, நத்தமலை, நெய்வாசல், மானியம் ஆடூர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் லால்பேட்டை மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர்.

           இந்நிலையில் சாலை மிக மோசமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியுற நேரிடுகிறது. இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் நிலை உள்ளது. மழைக் காலத்துக்கு முன்னதாக இச் சாலையை சீரமைக்க, கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு

நெய்வேலி:

                    என்எல்சி நிறுவனத்துக்கு சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் "நவரத்னா' அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.

                   பொறியியல் அறிஞர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெய்வேலி பொறியாளர் மற்றும் அறிவியலாலர் கழகம் சார்பில் பொறியாளர் தினவிழா நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசுகையில்

                      1950-ல் 37 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இந்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்க சுமார் ஒரு லட்சம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யவேண்டும் என்றார்.
÷விழாவுக்கு நிறுவன சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தலைமை வகித்தார். இந்தியப் பொறியாளர் கழகத்தின் நெய்வேலிக் கிளை கெüரவச் செயலர் கே.சக்கரவர்த்தி வரவேற்றார். பொறியாளர் மற்றும் அறிவியலாளர் கழகத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 1.37 கோடியில் சொந்தக் கட்டடம்

கடலூர்:

                         கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு  1.37 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம், கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலை அருகே, விசாலமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.

                       இதன் தரைத் தளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறை, அலுவலகம், மற்றும் பணம் செலுத்தும் கெüண்டர்கள் அமைந்து இருக்கும். முதல் தளத்தில் கூட்ட அரங்கம், மற்றும் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பகுதி அமைந்திருக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.அலுவலகத்தின் அருகே வாகனங்களை இயக்கிக் காண்பிக்கும் மைதானம்,  40 லட்சத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருக்கும் போக்குவரத்து பயிற்சி பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.இம்மாத இறுதியில் இக்கட்டடம் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Read more »

கடலூர் மாவட்ட வேளாண் துறை வழங்கும் தரமற்ற உரங்கள்

கடலூர்:

                 கடலூர் மாவட்ட வேளாண்துறை மூலம் வழங்கப்படும் ரசாயன உரங்கள் தரமற்றதாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்:

திருக்கண்டேஸ்வரம் உழவர் மன்றத் தலைவர் வி.வரதன்: 

                        துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை மானியத்தில் வழங்கும் உரம் எடை குறைவாகவும் விலை அதிகமாகவும் உள்ளது. உதாரணமாக தோட்டக்கலைத் துறை வழங்கும் மோனோ அமோனியம் பாஸ்பேட் உரம் விலை 2448-75. ஆனால் தனியார் உர விற்பனை நிலையங்களில் விலை 1900. விலை வித்தியாசம் 548-75. மானிய விலையில் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு விலையை உயர்த்தி வழங்குவதால் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணம் கொள்ளை போகிறது. மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கும் உரத்தின் தரம் குறைவாக உள்ளது.இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு 2008-09-ம் ஆண்டில் இடு பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஹெக்டேருக்கு |10 ஆயிரம் வரை பண உதவியும் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்த ஏராளமான விவசாயிகளுக்கு இந்தத் தொகை வரவேண்டியது இருக்கிறது.

மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன்: 

                    வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே நிறுத்தி விட்டனர். தலைப்புப் பகுதியில் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்குவதாகப் புகார் தெரிவித்ததால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், தண்ணீர் வழிந்து ஓடாமல் தேங்கியதே, நாற்றங்கால்கள் மூழ்கியதற்கு காரணம். விவசாயிகளுக்கு போதிய நெல் விதைகள் கிடைக்கும் வகையில், விதை நெல் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சியும், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் மரங்கள் நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் கருவேல மரங்களுக்கு பதில், வேறு மரங்களை நட வேண்டும்.பாட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வேங்கடபதி: தோட்டக்கலைத் துறை வழங்கும் வேப்பம் பிண்ணாக்கு தரம் குறைந்ததாக உள்ளது. 

மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்:

                            கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்கிறார்கள். வெள்ளாறு பாசனப் பகுதிகளில் உள்ள டெல்டா நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் இந்த ஆண்டும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்: 

                         கூட்டுறவுத்துறை தொடங்கி இருக்கும் பசுமை ராணுவம் திட்டத்தை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

வெலிங்டன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்: 

                  கூட்டுறவு சங்கத்தில் கடன்பெறும் விவசாயிகளுக்கு, கடன் தொகையில் ஒரு பகுதியை சர்க்கரை ஆலைகளிடமிருந்து உரமாகப் பெற விவசாயிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்த உரம் கரும்பு விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. எனவே கடன் தொகை முழுவதையும் பணமாக வழங்க வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: 

                   பாசன வாய்க்கால்கள் ஓரமாக தேக்கு மரங்கள் நடுவதால் பிரச்னை ஏற்படுகிறது. பல நேரங்களில் வாய்க்கால்கள் அடைப்பட்டு விடுகின்றன. அதைச் சரிசெய்ய முயன்றால் வனத் துறையினர் தடுக்கிறார்கள். எனவே பாசன வாய்க்கால் கரைகளில் மரம் நடக்கூடாது.

தில் அளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: 

                 தோட்டக்கலைத் துறை வழங்கும் உரம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் தரம் பரிசோதிக்கப்படும். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டு இருந்தால் அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கருவேல மரங்களுக்குப் பதில் வேறு மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கும். கூட்டுறவுக் கடன் பெறும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் மூலம் உரம் வழங்குவதைத் தவிர்க்க, சர்க்கரை துறை இயக்குநர்தான் நடவடிக்கை எடுக்க முடியும். 

                           கரும்பு விவசாயிகளுக்கு நடவுக்காக, சர்க்கரை ஆலைகள் அறிவித்த சலுகைகளை ஆலைகள் வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கொத்தட்டை ஆறுமுகம், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

குடிநீருக்கு தவிக்கும் கேப்பர்மலை கிராம மக்கள்

கடலூர்:

                      கடலூர் மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கேப்பர்மலை கிராமத்தில், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் நகருக்கு கேப்பர்மலையில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்கப் படுகிறது. பல்வேறு கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் கடலூருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

             கேப்பர்மலையில் உள்ள கிராமம் எம்.புதூர். இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஊராட்சி மன்ற ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட அக்கிராம மக்கள், அங்குள்ள தோட்டங்களில் வயல்வெளிகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர கூறியது 

                           ஏற்கெனவே போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர், குடிக்கச் சுவையாக இல்லாமல் மோசக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில நாள்களில் ஆழ்குழாய்க் கிணறு போடப்பட்டுவிடும். அதன்பிறகு நல்ல குடிநீர் எம்.புதூர் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.

Read more »

பன்றிக் காய்ச்சல்: என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சாவு

நெய்வேலி:

                     பன்றிக் காய்ச்சலால் என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சொக்கலிங்கம்(46) வெள்ளிக்கிழமை இறந்தார். தொமுசவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். இவர் இம்மாத தொடக்கத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்காக ராஜபாளையம் சென்றுவந்தார்.

                 வீடு திரும்பிய சொக்கலிங்கத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 2-ல் என்எல்சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சொக்கலிங்கத்துக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவே, செப்டம்பர் 3-ம் தேதி அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சொக்கலிங்கம், வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டார். 

                    இதைத் தொடர்ந்து சொக்கலிங்கத்தின் உடல் நெய்வேலிக்கு கொண்டுவரப்பட்டு, வெள்ளிக்கிழமை பகலிலேயே மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சொக்கலிங்கத்துக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

Read more »

கொசு உற்பத்தி கேந்திரமாகிய நகராட்சி வணிக வளாகம் !

கடலூர்:

                  கடலூர்  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டதால், அந்த இடம் தற்போது நகர மக்களுக்கு கொசுக்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிலையமாக மாறி இருக்கிறது.

                  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட வணிக வளாகம், சிதிலம் அடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.அதில் வணிகம் செய்தவர்கள் சிலருக்கு பஸ் நிலையத்தின் அருகே தாற்காலிக இடம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது.இதில் எழுந்த நீதிமன்ற வழக்குகள் காரணமாக, வணிக வளாகத்தை மீண்டும் கட்டுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

                   இதனால் அதில் வணிகம் செய்த வியாபாரிகள்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற நிலை மாறி, தற்போது வணிக வளாகம் இருந்த இடத்தால், கடலூர் மக்களே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது.  வணிகவளாகம் இருந்த இடம் சாக்கடை கலக்கவும், குட்டையாகவும், பஸ் நிலையத்தில் வணிகம் செய்வோர் குப்பைக் கொட்டும் இடமாகவும் மாறி இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால், அந்த இடம் வற்றாத குளமாக மாறிவிட்டது. 

                     வணிக வளாகம் இருந்த இடத்தில் சாலையோர, நடைபாதைக் கடைக்காரர்களால் ஆக்கிரமித்து கூறுகட்டி பழங்கள் வியாபாரம், அழகுசாதனப் பொருள்கள், துணிகள் விற்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது.அவர்கள் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்தக் குட்டையில்தான் சங்கமமாகின்றன. பழைய வணிக வளாகம் இருந்த இடத்தை, ஆக்கிரமித்துக் கொண்ட நடைபாதைக் கடைக்காரர்களை, போலீசார்  எத்தனை தரம் முயன்றாலும், அவர்களின் அரசியல், தொழிற்சங்கப் பின்னணி காரணமாக அகற்ற முடியவில்லை.இனி இங்கு வணிக வளாகம் கட்ட நடைபாதைக் கடைக்கார்களே அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

                             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சுகாதாரக் கேடாகத் திகழும், நடைபாதைக் கடைகளை ஒழிக்க, தற்போது இருக்கிற அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. இனிமேலும் வரும் அதிகாரிகளாலும் அது இயலாத காரியம் என்கிறார்கள் பொதுமக்கள். எனினும் வணிக வளாகம் இருந்த இடம், சாக்கடை தேங்கும் குட்டையாக மாறி இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Read more »

மீனவர் கிராமங்களுக்கு பஸ் வசதி தேவை

கடலூர்:

                      பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட மீனவர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று,  வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அதன் தலைவர் இரா.சிலம்புச் செல்வி வலியுறுத்தினார். மீனவர் பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் மற்றும் கடலூர் இடையே இயக்க அனுமதி அளிக்கப்பட்ட பஸ்கள் பலவும், பரங்கிப்பேட்டை வழியாகச் செல்வது இல்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பயணிக்கவும்  மீனவர்கள் பிடிக்கும் மீன்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லவும் கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும் என்றும் சிலம்புச்செல்வி கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர் ப.சண்முகம் பேசுகையில், 

                  ""ஆகஸ்ட் 25-ம் தேதி சிப்காட் பகுதி கிராம வாய்க்கால்களில், ரசாயனத் தொழிற்சாலைகள் ஆலைக் கழிவுகளைத் திறந்து விட்டனர். அந்தத் தண்ணீரைக் குடித்த மாடுகள் செத்தன. விளைநிலங்கள் வீணாகி விட்டன. ஆனால் எந்த ரசாயன ஆலையில் இருந்து, இந்தக் கழிவுகள் திறந்து விடப்பட்டன என்ற விவரத்தை, இதுவரை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டிபிடித்து அறிவிக்கவில்லை. 

                            இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மீது பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் நிலைக் குழுக்களில் நான் 4 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தும், இரு துறைகளின் எந்தத் திட்டமும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்து அறியப்படவில்லை'' என்றார் சண்முகம். மற்றும் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதி குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

Read more »

ரயில்வே துறையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:

                   ரயில்வே துறையை கண்டித்து கடலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.கடலூர் வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. 

                    இதுகுறித்து பல்வேறு வழிகளிலும் கோரிக்கைகள் அனுப்பியும் ரயில்வே இலாகா மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. எனவே துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாததைக் கண்டித்து கடலூர் பொதுநல சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் துறைமுகம் நகரில் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு பொதுநலச் சங்கங்களின் பொதுச்செயலர் ப.கடல் தனசேகரன் தலைமை தாங்கினார். சீனுவாசன், ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை வழக்கறிஞர் த.ராஜசேகரன் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், கவிஞர் இரா.முத்துக்குமரன், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கண்டனஉரை நிகழ்த்தினர்.

Read more »

பண்ருட்டியில் காய்கறி விலை வீழ்ச்சி

பண்ருட்டி:

                 பண்ருட்டி பகுதியில் நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பலாப்பட்டு, மாளிகம்பட்டு, தாழம்பட்டி, திராசு, ராசாப்பாளையம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் காய்கறி விவசாயம் நடைபெறுகிறது. மேற்கண்ட பகுதி விவசாயிகள் தோட்டப்பயிரான முருங்கை, வெண்டை, பாகல், கத்தரி, புடலை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளை அதிக பரப்பளவில் பயிர் செய்கின்றனர். இப்பகுதியில் விளையும் இந்த காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.தற்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி சந்தைக்கு, காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எஸ்.வி.டி. காய்கறி மொத்த வியாபாரி ஆர்.சங்கர் கூறியது:

              பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நிலவரப்படி சந்தையில் (மொத்த விற்பனையில் ஒரு கிலோ) நாட்டு முருங்கை  2, வெண்டை  4, கத்தரி  6, புடலை  3, கொத்தவரை  4, பாகல்  6 விலை போகிறது. கடந்த வாரம் 70 காய் கொண்ட வாழைத் தார்  100 முதல் 120 வரை விலை போனது. தற்போது  70, 80 தான் விலை போகிறது என்றார் சங்கர்.

துகுறித்து விவசாயிகள் கூறியது 

                          ""அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளதாலும், மகசூல் அதிகரித்துள்ளதாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய் விற்ற பணம், அறுவடைக் கூலி கொடுக்கக்கூட போதவில்லை, இந்நிலையில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது இதனால் மருத்து அடிக்கும் செலவும் கூடியுள்ளது'' என கவலையுடன் தெரிவித்தார்.

Read more »

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்

கடலூர்:

               கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இடம் மாற்றப்பட்டதால், பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பல ரயில்கள் கடலூர் மாவட்டத்தில் நின்று போகாத நிலையும், சில ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் நின்று போகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.இந்த கோரிக்கைகள், ரயில்வே துறை அதிகாரிகளின் குப்பைத் தொட்டிகளில் முடங்கிப் போய்விட்டன. 

                 இதனால் கடலூர் மாவட்ட மக்களுக்கு ரயில் பயணம் எட்டாக்கனியாவும், ரயில் நிலையங்கள் குறைந்தபட்ச வசதிகள் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அத்தகைய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட ரயில் நிலையங்களில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முதல் இடம் வகிக்கிறது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது ரயில் நிலையத்தின் முகப்பு ரயில் தண்டவாளங்களுக்கு மேற்குப் பக்கமாக இருந்தது. அகலப் பாதை ஆக்கப்பட்ட பிரதான முகப்பு கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

                 இந்த மாற்றம் காரணமாக தற்போது ரயில் பாதைகளின் மேற்குப் பகுதியில் ரயில்களுக்கான முன்பதிவுக் கெüன்டர்களும், அன்றாடப் பயணத்துக்கு டிக்கெட் எடுக்கும் கவுன்டர்கள் கிழக்குப் பகுதிக்கும் மாற்றப்பட்டு விட்டன.இந்த மாற்றம் காரணமாக திருப்பாப்புலியூர் பகுதியில் இருந்து பயணச் சீட்டு வாங்க வருவோர், உயர் நடைமேடையை பயன்படுத்தி, பயணச்சீட்டு கெüன்ட்டர்களை அடைவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.மேலும் ஒரு பிளாட்பாரத்தைத் தவிர மற்ற இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால் பயணிகள் காத்திருக்கும் இடம், குப்பங்குளம் பாதை உள்ளிட்ட ரயில் நிலைய வளாகம், இரவு நேரங்களில் மது அருந்தும் பார்களாக மாறி விடுகின்றன.

                   ரயில் நிலையத்துக்கு புதிய முகப்பு வாயிலுக்கு வரும் வழி, ஆட்டோ ரிக்ஷாக்களால் அடைபட்டு, பயணிகள் எளிதில் உள்ளே வரமுடியாத நிலை உள்ளது.ரயில் நிலைய முகப்பு, பூங்கா அமைக்கும் வகையில் கட்டுமானங்கள் செய்யப்பட்டும் அவை, பூங்காக்களாக இல்லாமல், குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது.ரயில் நிலைய வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்கள் எல்லாம், தனியாருக்குச் சொந்தமான வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு விட்டன.ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர், உவர் நீராக உள்ளதால் குடிப்பதற்கு லாயக்கற்றதாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். 

 இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளைக் கேட்டால், 

                           "ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை' என்று கைவிரிக்கிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior