உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 08, 2012

நுகர்வோர் சட்டம் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப்படிப்பு அறிமுகம்

          தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், நுகர்வோர் சட்டம் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்தப் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் சேரலாம். இதன் மூலம் நுகர்வோர் சட்ட நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்வதோடு, நுகர்வோர் நீதிமன்றத்தில் தெளிவாக வாதாட முடியும்.  

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வீ. விஜயகுமார் புதன்கிழமை அளித்த பேட்டி: 

        தங்களின் பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்தில் நுகர்வோரே வாதாடும் வகையில் சட்டம் உள்ளது. ஆனால், மக்களிடையே இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை.  இதனை கருத்தில் கொண்டு, நுகர்வோர் உரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்ட விதிகளை கற்றுக் கொடுக்கவும் மத்திய அரசின் அனுமதியின் பேரில் பல்கலைக்கழகத்தில், நுகர்வோர் சட்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

           இதற்காக மத்திய அரசின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு ரூ. 94.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பங்காக ரூ. 9.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.  இந்த அமைப்பின் மூலம் நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதோடு, அது தொடர்பான முதுநிலை பட்டயப் படிப்பு ஒன்றும் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் படிப்பு பல்கலைக்கழகத்தில் முழு நேரமாகவும், தொலைதூரக் கல்வி முறையிலும் வழங்கப்படும்.  


செப்டம்பர் மாதம் முதல்... 

           இந்த பட்டயப் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஒராண்டுப் படிப்பு ஆகும். இதில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.  இந்தப் பட்டயப்படிப்பு அறிமுக விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் கே. ரோசய்யா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றார் விஜயகுமார்.





Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இளையராஜா வழிபாடு


இளையராஜாவை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள்.
 
 
சிதம்பரம்:
 
       சிதம்பரம் நகருக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா, நடராஜர் கோயில், தில்லையம்மன் கோவில்களுக்கு சென்று புதன்கிழமை வழிபாடு செய்தார்.  
 
        சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தார் இளையராஜா. அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கிய அவர், புதன்கிழமை காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அப்போது கோயில் பொதுதீட்சிதர்கள் மாலை, பட்டு அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.  கோவிலில் உள்ள ஆதிமூலநாதர், முக்குறுணி விநாயகர், சிற்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளை தரிசித்தார். பொதுதீட்சிர்கள் சிறப்பு தீபாராதனை செய்து பிரசாதத்தை வழங்கினர். 
 
        முன்னதாக சிதம்பரத்தின் எல்லையில் உள்ள தில்லையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள தில்லையம்மனையும், தில்லைக்காளியையும் வழிபாடு செய்த பின்னர் அவர் புறப்பட்டு சென்றார். இளையராஜாவுக்கு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சதீஷ் தலைமையிலான போலீசார்  பாதுகாப்பு அளித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) மாசி மகத் திருவிழா



மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பல்லக்குகளில் கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு நடந
கடலூர்:
 
         கடலூரில் புதன்கிழமை மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திண்டனர்.  மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு, மாசிமகம் திருவிழா ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. 
 
           கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மாசி மகம் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  கடலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவர்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் மேளதாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரியும் சிறப்பு அலங்காரம், பூஜைகளும் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழாவை முன்னிட்டு கடற்கரையில் சிறு சிறு கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருந்தன. மாசிமகம் பெüர்ணமியை முன்னிட்டு சில்வர் பீச்சில் ஏராளமானோர் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. 
 
            கடலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாசி மகத்தை முன்னிட்டு திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயில், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கோயில்களில் இருந்து உற்சவர்கள் இன்று (வியாழக்கிழமை) தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக எடுத்து வருகிறார்கள்.  மாசி மகம் தீர்த்தவாரிக்காக திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தியின் பல்லக்கு ஊர்வலம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. 40 க்கும் மேற்பட்டோர் பல்லக்கைத் தூக்கி வருகின்றனர். அங்காங்கே மண்டகப் படிகளில் தங்கி வரும் உலகளந்த பெருமாள், புதன்கிழமை திருவந்திபரத்தில் தங்கி உள்ளார். இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரிக்காக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பக்தர்கள் பலக்கில் தூக்கி வருகிறார்கள். 
 
             கடலூர் முதுநகர் உப்பனாற்றில் மாசிமகம் திருவிழா கோலாகலமாக இன்று இரவு 9 மணிக்கு நடக்கிறது. கடற்கரையோரக் கோயில்களில் இருந்து சாமி சிலைகளை மீனவர்கள் எடுத்து வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் வைத்து தீர்த்தவாரியும் சிறப்பு பூஜைகளும் செய்கிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு 3 நாள் பரோல்


கடலூர்:

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரும் ஜான் டேவிட்டுக்கு, அவரது தந்தை மரணம் காரணமாக 3 நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

            சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1996-ம் ஆண்டு, மருத்துவம் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நாவரசுவை, அதே மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவரான ஜான் டேவிட், கொடூரமாகக் கொலை செய்தார்.  இக்கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று, ஆயுள் தண்டனை விதித்தது. ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர், அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டது. 

            ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 20-4-2011 அன்று உச்ச நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு, ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 23-4-2011 அன்று, ஜான் டேவிட் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஜான் டேவிட்டின் தந்தை மாரிமுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இறந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, பரோலில் செல்ல அனுமதி அளிக்குமாறு ஜான் டேவிட் கோரிக்கை மனு அளித்தார். 

       மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை, அவருக்கு 3 நாள் பரோலில் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீஸ் காவலர்கள் அடங்கிய பாதுகாப்புடன், ஜான் டேவிட் செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   





Read more »

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிதம்பரம் மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா புத்தகம்

சிதம்பரம்:

       சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா என்ற புத்தகம் புதுதில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டு இடம் பெற்றுள்ளது.சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மிஸ்ரா. இவரது மகள் சுருதி மிஸ்ரா (25).

            சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, காமராஜ் சிறப்பு பள்ளி ஆகியவற்றில் பயின்றார். பின்னர் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் பயின்று புதுதில்லி டாடா கன்சல்டன்சியில் சிறிது காலம் பணியாற்றியனார்.இந்நிலையில் இம்மாணவி இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குரூம்மிங் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 7 பகுதிகளையும், 150 பக்கங்களையும் கொண்ட இப்புத்தகம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மகேஷ்வர் திரிபாதியால் வெளியிடப்பட்டது.

        இப் புத்தகத்தில் உள்ள கருத்துகள் இளைஞர்களுக்கும், இந்தியாவின் எதிர்காலத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் சிறந்த ஒரு கருத்துப் பெட்டகமாகும்.இவருடைய எழுத்துகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளதால் புத்தகக் கண்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.















Read more »

கோழிப்பள்ளம் கிராமத்தை தத்தெடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள்

சிதம்பரம்:
          சிதம்பரத்தை அடுத்த கோழிப்பள்ளம் கிராமத்தை அண்ணாமலை நகரில் உள்ள 4-வது தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் தத்தெடுத்து பல்வேறு சேவைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
          சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல என்.சி.சி. மாணவர்கள் சுமார் 60 பேர், என்.சி.சி. அதிகாரிகள் ஜே.சுந்தரலிங்கம், சீமான், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கோழிப்பள்ளம் கிராமத்தில் முகாமிட்டு சமுதாய சேவையை மேற்கொள்ளும் பணியை புதன்கிழமை தொடங்கினர்.
            முதல்கட்டமாக கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வீடுகள் முன்பு நடப்பட்டன. முதியோர்களுக்கு எழுத, படிக்கவும், கையொப்பமிடவும் என்.சி.சி. மாணவர்கள் கற்றுக் கொடுத்தனர். புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகள், மழைநீர் சேமிப்பின் அவசியம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கோஷங்களுடன் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பார்மர், ராணுவ அதிகாரிகள் பாலாஜி, தினேஷ்பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சிதம்பரம்:
 
       சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
          சிதம்பரம் நகரில் நகராட்சிக்குச் சொந்தமான பகுதியில் கூரைக் கொட்டகையில் செயல்பட்டு வந்த அரசு கலைக் கல்லூரி கடந்த 1991-ம் ஆண்டு சிதம்பரம் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் சி.முட்லூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு மாற்றம் செய்யப்பட்டது.இக்கல்லூரிக்கு சிதம்பரத்திலிருந்து மாணவ, மாணவியர் சென்று, வரும் வகையில் கல்லூரி நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
       கல்லூரிக்கு வரும் பஸ்ஸில் மாணவ, மாணவியர் படிக்கட்டில் தொற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.குறிப்பாக சிதம்பரத்திலிருந்து செல்லும் மாணவர்கள் 5 கி.மீ. தூரம் கல்லூரிக்கு நடந்துச் சென்று வரும் நிலை உள்ளது .எனவே அரசு போக்குவரத்துக் கழகம் சிதம்பரத்திலிருந்து சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வழியாக பரங்கிப்பேட்டை வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சிதம்பரம் நகரில் அரசு மகளிர் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

அரசு கல்விக் கட்டணத்துடன் இளநிலைப் பண்ணை தொழில் நுட்ப படிப்பு


கோவை வேளாண் பல்கலைக் கழகம்.
கடலூர்: 

           10-ம் வகுப்பு படித்த உழவர்களும் குறைந்த செலவில் பண்ணை தொழில்நுட்ப பட்டதாரி (பி.எப்.டெக்.) ஆகும் வாய்ப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது. படிப்பின் காலம் 3 ஆண்டுகள்  (6 செமஸ்டர்).  

          இந்தியாவில் ஆண்டுதோறும் வேளாண் வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது. கற்றவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டாத நிலையும், பாரம்பரியமாக விவசாயக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமே விவசாயம் செய்யும் நிலையும் நீடித்து வருகிறது. அது மட்டுமன்றி நமது நாட்டு விவசாயம் பாரம்பரிய முறைகளியே மூழ்கிக் கிடப்பதும், புதிய புதிய தொழில் நுட்பங்கள் விவசாயத்தில் புகுத்தப்படாமையும், வேளாண் வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் விவசாயம் மீண்டும் செழித்தோங்க, பட்டி தொட்டிகள் எங்கும் வேளாண் கல்வி அறிவு வளர வேண்டும். 

           இதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு, புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் தெரிந்து இருந்தால், விவசாயத்தை மேலும் நிறைந்த ஈடுபட்டுடன், லாபகரமாகச் செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தைச் சாராதவர்களும் வேளாண் தொழில் நுட்பங்களைக் கற்றறிந்து, இளைஞர்கள் பலர் புதிதாக வேளாண் தொழிலுக்கு வரலாம், வெற்றிகரமாக விவசாயத்தை நடத்தலாம். நவீன பண்ணைத் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுவதன் மூலம், வேளாண் வளர்ச்சி பெருகும் வாய்ப்புள்ளது.  10-வது படித்த 27 வயது நிரம்பிய விவசாயி, குறைந்த கட்டணத்தில் வேளாண் பட்டதாரி ஆகும் வாய்ப்பை பொங்கல் திருநாளில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இளநிலை பண்ணைத் தொழில் நுட்ப (பி.எப்.டெக்.) கல்வி கற்க விவசாயிகளுக்கு 50 சதம் கட்டணச் சலுகையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

         விவசாயிகள் இப் பட்டப் படிப்பை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் முலம் தொடரலாம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  உலகிலேயே முன்னோடித் திட்டமாக இக்கல்வித் திட்டம் கருதப்படுகிறது. இதில் பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறு தொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்ணை பார்வையிடல் போன்ற தலைப்புகளில் பாடங்கள் அமைந்து இருக்கும். இப்பட்டப் படிப்பால் உழவர்கள் சுயதொழில் தொடங்கவும், தங்கள் வேளாண் தொழிலை அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்ததாகப் பெருக்கிக் கொள்ளவும் முடியும். 

            விரைவில் இந்த பட்டப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. இந்த 3 ஆண்டு பட்டப்படிப்பு, 6 செமஸ்டர்களை கொண்டது. ஒரு செமஸ்டருக்கான கட்டணம் ரூ. 7,500. இதில் 50 சதவீத கட்டணச் சலுகையை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ரூ. 100 கட்டணத்தில் கோவை வேளாண் பல்கலைக் கழகம், தமிழகத்தில் உள்ள 35 வேளாண் ஆய்வு நிலையங்கள், 11 வேளாண் அறிவியல் நிலையங்கள், மற்றும் 10 வேளாண் கல்லூரிகளில் கிடைக்கும்.  ஒரு மாவட்டத்தில் 20 மாணவர்கள் சேர்ந்தால்கூட, அருகில் உள்ள வேளாண் ஆய்வு நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று, வேளாண் பல்கலைக்கழக கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் எஸ்.நசீர் அகமது தெரிவிக்கிறார்.  


மேலும் விவரங்களுக்கு, 

முனைவர் வீ.வள்ளுவ பாரிதாசன், 
இயக்குநர், திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், 
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
 கோவை- 614003 

என்ற முகவரியிலும், 

செல்போன் 94421- 11058, 94421 11048, 94421 11057, 

தொலைபேசி 0422 6611229. என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  

இணைய தளம்- www.tnau.ac.in 

 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.  










Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

கடலூர் :

       தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.
 
    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை சப் கலெக்டர் கிரண்குராலா துவக்கி வைத்து, கட்டுரை, பேச்சு, பொது அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
    வருமான வரித்துறை துணை ஆணையர் நந்தகுமார் "உங்களால் முடியும்' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு சப் கலெக்டரும், துணை ஆணையரும் விளக்கம் அளித்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் "தனியார் துறையில் வேலை வாய்ப்பு குறித்து' விளக்கம் அளித்தார். கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தில்லைநாதன் நன்றி கூறினார்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior