கடலூர், டிச. 1:
கடலூர் மாவட்டத்தில் 2.63 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. நோய்க் கிருமிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
திங்கள்கிழமை உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி கடலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் 2,63,091 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் நோய்கிருமி உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் 2056 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 125 பேர் குழந்தைகள் அவர்களிலும் 58 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.
ஆதரவற்ற எஸ்.ஐ.வி. குழந்தைகள் பராமரிப்புக்காக எச்.ஐ.வி. கட்டுப்பாடு அறக்கட்டளையில் இருந்து ரூ.1.59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 125 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.400 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 70 பேருக்கு மொத்தமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
எச்.ஐ.வி. தொற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மையம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுகிறது. எச்.ஐ.வி. தொற்று நோய் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அறியும் கருவி கடலூர் அரசு மருத்துவமனையில் அடுத்த வாரம் செயல்பட இருக்கிறது என்றார்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உதவித் தொகைகளை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் 3 நாள்கள் பிரசாரம் செய்யும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார ஊர்தியையும் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். எய்ட்ஸ் நோய் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது,.
மாவட் டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, மாவட்டத் திட்ட அலுவலர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.