உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்

கடலூர் மாவட்டத்தில்  

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்


 
கடலூர்:
 
                 2011 சட்டமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), திட்டக்குடி (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எந்தெந்த இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


விபரம் :
கடலூர் சட்டமன்ற தொகுதி:
                   கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கடலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான உதவி கலெக்டர் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி:
              விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் விருத்தாச்சலம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

நெய்வேலி சட்டமன்ற தொகுதி:

            நெய்வேலி சட்டமன்றதொகுதியில் போட்டியிடுகிறவர்கள் நெய்வேலியில் உள்ள தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
 பண்ருட்டி சட்டமன்ற தொகுதி:
                பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி:

              குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
புவனகிரி சட்டமன்ற தொகுதி:

                 புவனகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி:

            சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் சிதம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் இந்துமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
 காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதி:
           காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலால்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி
               திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
முக்கிய நாட்கள்:
              வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 26-ந்தேதி கடைசிநாளாகும். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள், வருகிற 30-ந் தேதி ஆகும். ஏப்ரல் 13-ந் தேதி புதன்கிழமை அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 13-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Read more »

தேர்தல்: கடலூர் வாக்காளர்கள் கருத்து

 கடலூர்:

              தமிழகத்தில் விலைவாசி பெருமளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கடலூர் வாக்காளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

                13 முறை பெட்ரோல் விலை உயர்வு, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடு புகார், எங்கும் நிறைந்து காணப்படும் லஞ்சம், ஊழல், பகட்டான விழாக்கள், அமைச்சர்கள் செல்லும் இடமெங்கும் கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்ணைப் பறிக்கும் டிஜிட்டல் பேனர்கள், 50 பக்கம் 100 பக்கம் என்று செய்தித் தாள்களில் விளம்பரங்கள், அனைத்து திட்டங்களிலும் கமிஷன்கள் என அடுக்கடுக்கான புகார்களுக்கு மத்தியில், 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டு திட்டம், கான்கிரீட் வீடு, ரூ.1-க்கு அரிசி உள்ளவற்றை காண்பித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளும் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது.  

                கடந்த 5 ஆண்டுகளில் இந்த அரசின் சாதனைதான் என்ன? அவை ஏற்படுத்திய பாதிப்புகளால், சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள் 

கடலூரை அடுத்த கிராமங்களைச் சேர்ந்த நமது சாதாரண பொதுஜனங்கள்:  

குண்டு உப்பளவாடியில் பெட்டிக் கடை வைத்து இருக்கும் ராமலிங்கம் மனைவி கௌரி:

         வருமானம் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கிறது. எப் பொருளும் வாங்க முடியவில்லை. எனவே ஆட்சி மாற வேண்டும். ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.  

கண்டக்காடு மலர் விவசாயம் செய்யும் குறு விவசாயி சண்முகம்: 

                 சுனாமியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் 7 ஆழ்குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள், இதனால் சுமார் 100 ஏக்கரில் விவசாயம் மீண்டும் நடக்கிறது. இங்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரேஷனில் அரிசி கிலோ ரூ.1 க்கு கிடைக்கிறது. இலவச டி.வி.பெட்டி, 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் சரி. ஆனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டதே. இலங்கையில் தமிழர்கள் சாகிறார்களே. காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. எனவே காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுபோட மாட்டோம். 

 சுப உப்பளவாடி விஜயலட்சுமி: 

               100 நாள் வேலைக்குச் சென்றாலும், ரேஷனில் ரூ. 1 க்கு அரிசி வாங்கினாலும், இலவச டி.வி. பெட்டி கொடுத்தாலும், பிள்ளைகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு என்ன செய்வது? கிடைக்கும் கூலி போதவில்லை. விலைவாசி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டதே. எனவே விலைவாசி குறைய ஆட்சி மாறவேண்டும். விலைவாசியை குறைக்கும் அரசு வரவேண்டும். 

 ஐ.டி.ஐ. படித்து முடித்து வேலைக்குக் காத்து இருக்கும் இளைஞர், தாழங்குடா சத்தியமூர்த்தி: 

             வேலைக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். வேலை கிடைக்கவில்லை எல்லோருக்கும் வேலை  கிடைக்க வேண்டும். அனைவருக்கும் வேலை கொடுக்கும் அரசாங்கம் வரவேண்டும். அரசு கொடுத்த டி.வி. பெட்டிகள் பல வெடித்து உடைந்து விட்டன. நிலம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் கொல்லப்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு, வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் மீது கடுமையான வெறுப்புதான் ஏற்படுகிறது. அவர்களுடன் கூட்டு வைத்து இருக்கும் தி.மு.க. அரசு மாறவேண்டும்.  

கடலூரில் சைக்கிளில் சுமந்து டீ விற்பனை செய்யும் குமார்: 

            தி.மு.க. அரசின் திட்டங்கள் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டதே. அதனால் உழைத்தும் வருமானம் போதவில்லை. எந்தப் பொருளும் வாங்க முடியவில்லை. அமைச்சர்கள் வந்தால் தெருவெல்லாம் டிஜிட்டல் பேனர்களும், பக்கம் பக்கமாக பத்திரிகை விளம்பரங்களும்தான் மிச்சம். அவற்றைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. அந்த செலவுத் தொகைகளை ஏழைகளுக்குக் கொடுக்கலாம். விளம்பரங்களால் மக்களுக்கு என்ன பயன்? ஆட்சி மாறும் என்றுதான் நினைக்கிறேன்.

Read more »

கடலூர் திமுக வேட்பாளர் - இள.புகழேந்தி வரலாறு

தொகுதி :

கடலூர்  

பெயர் :

இள.புகழேந்தி  

வயது :

56  

சொந்த ஊர் : 

 கடலூர்  

படிப்பு : 

 எம்.ஏ.பி.எல்.
 
 தொழில் : 

 வழக்கறிஞர்.  

தந்தை பெயர் :  

இளம்வழுதி  
  
மனைவி :  

த்னமாலா

குழந்தைகள் :  

மணிமாறன் (மகன்),  
காவியச் செல்வி (மகள்)  

கட்சிப் பதவி :

மாநில மாணவர் அணி செயலாளர்.  

பொதுவாழ்க்கை :  

மாணவர் பருவத்தில் இருந்தே திமுக  உறுப்பினர். 1989 முதல் 91 வரையிலும், 1996 முதல் 2001 வரையிலும், 2001 முதல் 2006 வரை என 3 முறை கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

Read more »

கடலூர் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.கோ.அய்யப்பனுக்கு சீட் இல்லை: கடலூரில் திமுக தொண்டர்கள் அதிருப்தி;



வில்வராயநத்தம் பகுதியில் தி.மு.க.வினரால் உடைக்கப்பட்ட கட்சி கொடிக்கம்பம்.
 
கடலூர்:
 
             கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் கோ.அய்யப்பனுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் தி.மு.க.வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
 
                  தொடக்கம் முதல் புதன்கிழமை மாலை வரை தற்போதைய எம்.எல்.ஏ. அய்யப்பன்தான் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் என்று பிரகாசமான நிலை இருந்தது. இந்த நிலை திடீரென வியாழக்கிழமை மாறியது எப்படி என்று கடலூர் தி.மு.க.வினர் ஆச்சரியம் தெரிவிக்கிறார்கள்.  வியாழக்கிழமை காலையில் கடலூர் முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் பெயரும், கடலூர் தொகுதிக்குப் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது எப்படி என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். 
 
                கடலூர் தொகுதியில் அனைவரின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றவராக அய்யப்பன் இருந்து வருகிறார். தொகுதியில் பல்வேறு நல திட்டங்கள் அவரால் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று தொகுதி மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  பெருவாரியான தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் அய்யப்பன்தான் வேட்பாளர் என்று, ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், வேட்பாளர் மாற்றம், கடலூர் தொகுதி தி.மு.க.வினர் பலரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  எதிர்க்கட்சினரையும் அரவணைத்துச் செல்பவராக, மாற்றுக் கட்சி முகாம்களிலும் தனது ஆதரவாளர்களைக் கணிசமாகக் கொண்ட அய்யப்பன், ஒருமுறைதான் எம்.எல்.ஏ.ஆக பணியாற்றி இருக்கிறார். 
 
             மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்காமல், 3 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவருக்கு, 4-வது முறையாக வாய்ப்பு அளித்து இருப்பது ஏன் என்று தி.மு.க.வினர் கொதிப்புடன் வினா எழுப்புகிறார்கள்.  கடலூர் நகராட்சியின் நிóர்வாகச் சீர்கேட்டால், பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற பணிகளால் மக்கள் மிகுந்த, துன்பங்களுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி இருக்கும் நிலையில், சர்வபலம் வாய்ந்த வேட்பாளராக, அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.  அவரை எதிர்த்து போட்டியிடும் ஆற்றல் தி.மு.க. அணியில் அய்யப்பனுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், புகழேந்தியை வேட்பாளராக தி.மு.க. அறிவித்து இருப்பது இத்தொகுதி தி.முக. வெற்றி வாய்ப்பு கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கடலூர் தி.மு.க. வினர் பலரும் தெரிவிக்கிறார்கள்.  
 
                இதன் விளைவாக கடலூரில் ராஜாம்பாள் நகர், வில்வநகர், புருசோத்தமன் நகர், அரசு மருத்துவமனைச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க. கொடிக் கம்பங்களை தி.மு.க. வினரே வெட்டிச் சாய்த்தார்கள். கொடிக் கம்ப கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டன. அத்துடன் கடலூர் நகர திமுக அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.  வில்வநகரில் உள்ள அண்ணா சிலையில் அவரது கண்களை தி.மு.க.வினர் கருப்புத் துணியால் கட்டி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் நியமனத்தை எதிர்த்து கிராமப் பகுதிகளில் தி.மு.க.வினர் போராட்டம் வெள்ளிக்கிழமை வலுக்கும் என்று தி.மு.க.வினர் பலரும் தெரிவிக்கின்றனர். 

Read more »

பண்ருட்டி திமுக வேட்பாளர் - சபா.ராஜேந்திரன் வரலாறு

தொகுதி : 
  பண்ருட்டி 
 
பெயர் :
 
  சபா.ராஜேந்திரன்
 
வயது :
                49  
 
பிறந்த ஊர் :  
 
         சொரத்தூர்,  பண்ருட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்  
 
தந்தை :  
 
       சி.சபாபதி படையாச்சி  
 
 தாய் : 
 
       எஸ்.பவுனாம்பாள்.
 
 மனைவி :  
 
எஸ்.அங்கையர்கண்ணி, எம்.எஸ்சி.,  
 
 மகன் :
 
 எஸ்.சுமந்த்  
 
சகோதரர்கள் :
 
2  
 
சகோதரிகள் :
 
2   
 
படிப்பு :  
 
பி.எஸ்சி.,(கணிதம்) பி.இ., (மெக்கானிக்கல்)  
 
இனம் :  
 
இந்து, வன்னியர்.  
 
 
கட்சி, பொதுப்பணி :   
 
            1981 முதல் கட்சி உறுப்பினர்,  2004 முதல் பண்ருட்டி ஒன்றிய செயலர். 1996-ல் சொரத்தூர் ஊராட்சி தலைவர்.  தற்போது நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.   
 

Read more »

சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி


 
சிதம்பரம்.:

           சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமகவினர் அதிகம் பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியான சிதம்பரம் தொகுதியை கூட்டணிக்  கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்து அதிருப்தியில் உள்ளனர்.  

                சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தோல்வியுற்றார்.  

                நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ துரை.கி.சரவணன் விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைமையில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தொகுதி மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  

                 சிதம்பரம் தொகுதி மூ.மு.க.வுக்கு ஒதுக்கியதால் பாமகவினர், வன்னியர் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளையும், திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அரவணைத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அக்கட்சிகளின் வாக்கு வங்கியை முழுமையாக பெற்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.  

              போட்டியாளரை வீழ்த்த அமைச்சரின் சாதுர்யம்: கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது அரசியல் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்கக்கூடாது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மூலம் சிதம்பரம் தொகுதி கேட்டு வலியுறுத்தி அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. 

              அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இந்த முறை துரை.கி.சரவணனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என உளவுத்துறை முதல் அனைத்து பகுதியிலிருந்து திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ÷ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்துள்ளார் என துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  

                சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி: கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனும் வெற்றி பெற்றனர். தற்போது சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, ஏ.அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர் உள்ளிட்ட 50- அதிமுகவினர் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.  

               வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

Read more »

பிளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடி


ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள்.

              ப்ளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

                  ப்ளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கணித பாட கேள்வித் தாளில் உள்ள சில கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ மாணவியர்கள் புகார் தெரிவித்தனர்.  ராசிபுரம் அருகே கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை பெற்ற மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

              இதில் பி டைப் கணித பாட கேள்வித் தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவ மாணவிகள் குழம்பி போய் பதில் அளிக்க தடுமாறினர். ஒரு மார்க் 11-வது கேள்வியில் டிவைடர் குறி மறைந்துள்ளது.  அதேபோல் 16-வது கேள்வியில் மைனஸ் குறி பிரிண்ட் ஆகவில்லை. 27-வது கேள்வியில் பை இல்லை. 28வது கேள்வியில் பேக்டோரியல் எண் இல்லை.  6 மார்க் கேள்வியில் 41-வது கேள்வியில் மைனஸ் இல்லை. 42-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 51-வது கேள்வியில் 16 என்ற எண் இல்லை. 55-வது கேள்வியில் மைனஸ் குறி இல்லை. 10 மார்க் கேள்வியில் 57-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 

                அதேபோல் 64 மற்றும் 70-வது கேள்விகள் சரியாக பிரிண்ட் ஆகவில்லை.  மொத்தம் 58 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் பல குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக பிரிண்ட் ஆக வில்லை என மாணவர்கள் குறிப்பிட்டனர்.  இதனால் மதிப்பெண்கள் பெறுவது பாதிக்கும் என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதியபின், மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். 

              பல மணி நேர மறியலால் போக்குவரத்து பாதித்தது. பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயராகவன் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினையில் பள்ளிக் கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

Read more »

வங்கிப் பணிக்கு பொறியாளர்கள் தேவை அதிகரிப்பு


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா
              
           வங்கித்துறை நவீனமாக்கப்பட்டு வருவதால்,வங்கிப் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா தெரிவித்தார். 
 
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து மேலும் ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா பேசியது:
 
              வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிகழ்த்தி வரும் இந்தியாவின் விலைமதிப்பில்லா சொத்து, மாணவ சமுதாயமும், அவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களும்தான்.  மாணவர்களின் மனிதவள ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,நடப்பு ஆண்டில் கல்விக்கடனாக ரூ.1,800 கோடி வழங்கி உள்ளது.  பணப் பரிமாற்றம் நடைபெறும் வங்கித் தொழிலில் தற்போது தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது. 
 
             விரைவில் வளாக பணித் தேர்வு முறை மூலம் 525 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.  வங்கித் துறையில் ஏராளமான ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில்,தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வகை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பி.சத்யநாராயணன் பேசும் போது,மாணவர்கள் படிப்புடன் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
              தற்போது பெங்களூரில் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஆராய்ச்சி நிறுவனத்தை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் ரூ50 கோடி செலவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் அதிநவீன ஆராய்ச்சி மையத்தை இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல், இதர மாணவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.  பல்கலைக்கழக இயக்குநர் முத்தமிழ் செல்வன், துறைத்தலைவர் எஸ்.மலர்விழி, பேராசிரியர்கள் ஆர்.ரமேஷ்,ஜெ.மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   .
 
 
 
 
 

Read more »

கடலூரில் தையல் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்






கடலூர் : 

                பிள்ளைக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, தையல் தொழிலாளி குடும்பத்துடன் கடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெய்வேலி ஏழாவது வட்டத்தைச் சேர்ந்தவர் லெனின். தையல் தொழிலாளி. இவரது மனைவி ஜெயமணி. மகன்கள் தீ (14), இளந்தீ (12). நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் தீக்கு, "கொட்டா' ஜாதிக்கான சான்றிதழ் கோரி கடந்த ஒன்றரை ஆண்டாக, கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறார். 

             இருப்பினும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, கடலூர் கலெக்டர் அலுவலகம் முன், லெனின், திடீரென தனது குடும்பத்தினருடன் நேற்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலீசார் அனுமதி மறுத்தும் லெனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து போலீசார், லெனினை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். இன்னும் ஒரு வாரத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிட்டனர்.

Read more »

விருத்தாசலத்தில் 22 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் 5வது முறையாக களமிறங்குகிறது

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தொகுதியில் 22 ஆண்டுகள் கழித்து தேர்தலை சந்திக்க காங். கட்சி களமிறங்கியுள்ளது. 

            தமிழகத்தில் இதுவரை நடந்த 13 சட்டமன்ற தேர்தல்களில் விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நான்குமுறை வெற்றி பெற்றுள்ளது. 1962, 1967 தொடர்ந்து இரு தேர்தல்களில் பூவராகவனும், 1980, 1984ல் தொடர்ந்து இரு முறை தியாகராஜனும் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1989 முதல் 2006 வரை நடந்த நான்கு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிடவில்லை. தொடர்ந்து 22 ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த தேர்தலில் காங்., போட்டியிட உள்ளது.

               இது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேர்தலை சந்திப்பது தொகுதி மக்களிடம் புதிய கட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தொகுதியில் வலுவாக இருந்த காங்., கட்சி தற்போது சொற்ப ஓட்டு வங்கியையே வைத்துள்ளது. இதனால் தொகுதியில் மக்களிடம் பரிச்சயம் குறைந்துள்ளதாலும், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை நம்பியே எதிரணியை சந்திக்க வேண்டியிருப்பதாலும் காங்கிரசுக்கு இது சவாலான தேர்தலாகும். காங்கிரஸ் கட்சி விருத்தாசலம் தொகுதியில் மீண்டும் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று அரியனை ஏறி நீண்ட இடைவெளிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பது வாக்காளர் கையில் தான் உள்ளது.

Read more »

Expenditure observer arrives in Cuddalore

CUDDALORE: 

          The Election Commission has deputed G.M. Kamei as the expenditure observer for the forthcoming Assembly elections in the five constituencies of Cuddalore, Kurinjipadi, Bhuvanagiri, Chidambaram and Kattumannarkoil.

         District Election Officer P. Seetharaman received him at the camp office and gave an overview of the Assembly segments in the district. Mr. Kamei is from the Indian Customs and Central Excise Services Department, Nagaland. He would keep a watch on the election expenses of candidates and political parties in the above mentioned Assembly constituencies.

Read more »

Complaint against Chidambaram municipal official

CUDDALORE: 

          Chidambaram Municipal Commissioner in-charge T. Mariappan has lodged a police complaint against the cashier of the municipality, C. Balu, alleging that he had swindled the funds to the tune of over Rs. 1.21 crore over a period of 16 years.

              According to sources, Balu had been working in the municipality in capacity as a junior assistant and cashier. He had been entrusted with the task of remitting municipality money in the Chidambaram branch of the Cuddalore District Central Cooperative Bank. The misappropriation came to light when a cheque issued by the civic authorities recently was returned by the bank for lack of funds.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior