உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் பஸ் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு

கடலூர்:
               கடலூரில் இருந்து போதிய பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.
                  கடலூரில் உள்ள பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து, பல்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள். இவ்வாறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய பஸ் வசதியின்றித் தவிக்கிறார்கள். காலை நேரத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்வேறு பஸ்களிலும் மாணவர்கள் வந்து விடுவதால், பிரச்னை பெரிதாக உணரப்படவில்லை.
                   ஆனால் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களுக்கு பஸ்களை பிடித்துச் செல்வதில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்திலும், நகரின் சாலைகளில் உள்ள பல்வேறு பஸ் நிறுத்தங்களிலும் மாணவர்கள் பஸ்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. பஸ்கள் மாணவர்களை புளி மூட்டைபோல் ஏற்றிச் செல்வதும், ஒரு பஸ்ஸில் இடம் கிடைக்காமல், மறு பஸ்சை   பிடிப்பதற்கு ஓடோடிச் செல்லும் இளம் சிறார்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது. 
                        ற்கெனவே 100-க்கும் மேற்பட்ட கடைகளால் வணிக வளாகமாக மாற்றப்பட்டு இருக்கும் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில், மாலை நேரத்தில் பஸ்களுக்கு காத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டம் நாள்தோறும் காணப்படுகிறது. கடலூரில் இருந்து நகரப் பஸ்கள் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 50-ம், தனியார் துறையில் 25 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால் மாணவர்கள் எண்ணிக்கையை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் உதயசூரியன்  கூறியது:
                       கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 83 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் பெருமளவில் நகரப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.மாணவர்கள் பயணிக்கும் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பஸ்கள் காலியாகத்தான் செல்கின்றன என்றார்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 
                     கடலூரைச் சுற்றி அரசுப் பள்ளிகள் பல சிறப்பாக உள்ளன. அவற்றில் படிக்காமல் நகரப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று பலர் விரும்புவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். மாலையில் ஒரே நேரத்தில் அனைத்து பள்ளிகளையும் விடுவதை மாற்றி, வெவ்வேறு நேரங்களில் விடவேண்டும். அனைத்து மாணவர்களும் மதிய உணவு நேரத்தை குறைத்தால், பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்து விடலாம்.சில பள்ளிகளில் கடந்த ஆண்டு, தலைமை ஆசிரியர்களால் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளி மாணவர்கள் நிம்மதியாகச் சென்று வந்தனர் என்றார்.

Read more »

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு


மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.
 
பண்ருட்டி:
               பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை உடைத்து மழை நீரை உள்ளே திருப்பிவிட்டதால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
              புதுப்பேட்டை, பேட்டை வீதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.புதுப்பேட்டை சுற்று வட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் சுண்ணாம்புக்கார குட்டையில் சென்று கலக்கும். இக்குட்டையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி புதுப்பேட்டை பகுதியில் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
 
              மழைக் காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கும்.அண்மையில் பெய்த மழையால் புதுப்பேட்டை பகுதியில் மழை மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றதால், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மழை நீரை வெளியேற்ற வேண்டி பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு பள்ளி வளாகத்தினுள் மழை நீரை திருப்பி விட்டுள்ளனர்.
 
             இதனால் பள்ளி வளாகம் மழை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.தற்போது மழை முடிந்து 3 நாள்கள் ஆகியும் பள்ளி மைதானத்தில் தேங்கிய நீர் வற்றவில்லை. இதனால்  மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை மற்றும் கழிவுநீரில் மாணவர்கள் விளையாடுவதால் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 
 
                     "பள்ளி சுற்றுச் சுவர்களை உடைத்து மழை நீரை பள்ளி வளாகத்தினுள் திருப்பி விட்டுள்ளனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் நிற்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. பைக்கா போட்டியும் நடத்தப்படவில்லை. பள்ளி சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாணவர் நலம் பாதிக்கப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என வேதனையுடன் கூறினர்.

Read more »

கடலூரில் அமைச்சர் உத்தரவிட்டும் அகற்றப்படாத பேனர்கள்

கடலூர்:

            மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டும் கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.

              தலைவர்கள் பிறந்த நாள், நன்றி அறிவிப்பு, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கடலூரில் இப்போது புதிய கலாசாரமாகிவிட்டது. நிகழ்ச்சிக்குப் பல நாள்களுக்கு முன்னரே பேனர்கள் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து பல நாள்கள் ஆனாலும் அவற்றை அகற்றாததும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

              இந்த பேனர்கள் சாலைகளில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி, விபத்துகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. மேலும் வர்த்தக நிறுவனங்கள் முன்னால் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளை மறைத்தும், அவர்களது நிறுவனத்தின் முகப்பே மறைந்து போகும் அளவுக்கும், பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளதாக போலீசார்  தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் இந்த பேனர்களால் முகம் சுழித்துக் கொண்டு இருந்த நிலையில், அண்மையில் கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்த டிஜிட்டல் பேனர்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.

                    டிஜிட்டல் போனர்களை போலீஸôர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு பேனர்களை வைக்கவும் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரே உத்தரவிட்டதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அமைச்சரின் உத்தரவு வியாழக்கிழமை மாலை வரை கடைபிடிக்கப்படாதது, கடலூர் மக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பல தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து பல நாள்கள் ஆகியும், இந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Read more »

சிதம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:

             சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

                நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் பி.என்.ஷாஜகான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரியாஸ் அகமது, அமைப்பாளர் என்.மன்சூர்கான், ஒருங்கிணைப்பாளர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.ஜாகீர்உசேன் வரவேற்றார். காஜா மொய்னுதீன் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும், தொழுகையும் நடைபெற்றது. சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஏ.காதர், துணைத் தலைவர் ஏ.எஸ்.ஷாகுல்வஹமீது, அமைப்பாளர் ஏ.எம்.ஆரிஃபுல்லா, ஒருங்கிணைப்பாளர் ரோஸ்மேரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

                    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.எஸ்.வேல்முருகன், மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் எஸ்.சரவணக்குமார், நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யு.அஷ்ரப்புல்லா நன்றி கூறினார்.

Read more »

போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை: வாகன உரிமையாளர்களுக்குரூ.63 ஆயிரம் அபராதம்

கடலூர்:

            போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய திடீர் சோதனையில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.63,575 வசூலிக்கப்பட்டது.ரூ.19 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

 இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   சென்னை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தலைமையில் 25-ம் தேதி இரவு, இரு பிரிவுகளாக மாவட்டத்தில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலூர்-புதுவை சாலை ஆகியவற்றில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  தணிக்கையின்போது வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டாதது கண்டுபிடிக்கப் பட்டது. 67 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் பிற குற்றங்களும் காணப்பட்டன. புதுவை- கடலூர் சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவரது வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன; வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி:

              ண்ருட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் பிடியில் சிக்கி பாதிப்படைந்து வருகின்றனர்.

               பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான திருவாமூர், கரும்பூர், எலந்தம்பட்டு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் திடீர் என வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் கடந்த இரு நாள்களாக சிறுவத்தூர் மற்றும் பண்ரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

               இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெயவீரகுமார் வெள்ளிக்கிழமை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை  பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை ஆகியோரும் பார்வையிட்டனர்  கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கிராமத்தை பதம் பார்த்து வரும் வயிற்றுப்போக்கு நோய்க்கு இதுவரையில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

              தொடர்ந்து வயிற்றுப்போக்கு நோய் தாக்கி வரும் நிலையில், துணை சுகாதார நிலையங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட துணை இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்தி காலரா குழுவை வரவழைத்து நோய் பாதித்த பகுதியில் மருத்துவம் பார்க்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோட்டாட்சியர் விசாரணை:

                 வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவத்தூர் கிராம மக்களை கோட்டாட்சியர் வி.முருகேசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தலைமை மருத்துவர் எம்.மலர்கொடியிடம் அவர் ஆலோசனை செய்தார். அப்போது நோய் பாதித்த சிறுவத்தூர் பகுதியில் மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர் மலர்கொடி கூறினார். பின்னர் கிராமப் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை சுத்தம் செய்யவும், பள்ளம் வெட்டி தண்ணீர் பிடிக்கும் பகுதியில் பள்ளத்தை அடைத்து மாசடைந்த நீர் குடிநீரில் கலக்காதபடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை கிராம மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கு உத்தரவிட்டார்.

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு: முதன்மை மருத்துவ அதிகாரி இடமாற்றம்

சிதம்பரம்:

                     சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

                 தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட போது சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால் உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் (டி.எம்.எஸ்.) டாக்டர் புருஷோத்தம் விஜயகுமார், கடலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் போன்று மாறுவேடத்தில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

                 அப்போது தலைமை மருத்துவர் டாக்டர் கே.நடராஜன் மற்றும் தலைமை செவிலியர் டி.பேபி ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லாததை அறிந்து இருவரையும் முறையே ராமநாதபுரத்துக்கும், கோவை பல்லடத்துக்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதற்கு பதிலாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த டாக்டர் சங்கரலிங்கத்தை தலைமை மருத்துவராகவும் (பொறுப்பு), கடலூரைச் சேர்ந்த ரூபிஜோபிதத்தை தலைமை செவிலியராகவும் உடனடியாக நியமித்து இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் உத்தரவிட்டார்.

பின்னர் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார்  தெரிவித்தது: 

                     அமைச்சரின் உத்தரவின்பேரில் மருத்துவமனையை எனது தலைமையிலான குழு மாறுவேடத்தில் ஆய்வு செய்தது. அப்போது முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதன்மை செவிலியர் ஆகியோரின் திறமையற்ற செயல்பாடு குறித்து தெரியவந்து இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சரியாக பணியாற்றாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்-டெக்னீஷியன் மலர்கண்ணன் பணிக்கு காலதாமதமாக வந்ததால் அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

                   மருத்துவமனையில் மொத்தம் உள்ள 22 மருத்துவர் பணியிடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். 3 மருத்துவர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள 10 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இம்மருத்துவமனைக்கு எலும்பு முறிவு டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர், கட்டடங்களை பழுது நீக்கல், கழிப்பறை மற்றும் வடிகால் வசதி போன்ற பணிகலை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் புருஷோத்தம் விஜயகுமார்.

Read more »

ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

            தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பணியிடை நீக்கத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
              
       நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ சிறப்புரையாற்றினார். 

மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ பேசியது:

                   தமிழக அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க விதிமுறைகள், குற்றவியல் நடைமுறைகள் சட்டத்துக்கும், ஊழல் தடுப்பு சட்டத்துக்கும் விரோதமாக திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் ஊழல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கவசமாக பயன்படுவதுடன், விசாரணைக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட 3 பேர் குழுவிடம் இருப்பதால் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் உமாசங்கர் ஐஏஎஸ் ஆதாரங்களுடன் தாக்கல் செய்துள்ளார்.

                மேலும் பல்வேறு ஊழல்களை கண்டுபிடித்துள்ளார். இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி உமாசங்கர் 20 ஆண்டுகள் கழித்து பொய் சான்றிதழ் கொடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. எனவே பணி இடைநீக்கத்தை தமிழக அரசு நீக்க வேண்டும். உமாசங்கர் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சி.ராஜூ தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், புஷ்பதேவன், புரட்சிகர மாணவர் முன்னணி பாலு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Read more »

கடலூரில் அனுமதி இன்றி கிளிஞ்சல் ஏற்றிய லாரி பிடிபட்டது

கடலூர் : 

          அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை தாசில்தார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

               கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிக்காடு உப்பனாற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து தாசில்தார் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் டிரைவர் பழனிவேல், லாரி உரிமையாளர் சிதம்பரம் அப் துல் அஜீஸ், லாரியை வாடகைக்கு எடுத்த நொச் சிக்காடு தட்சணாமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior