கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருப்பதைத் தொடர்ந்து, தண்டனைக்குரிய அடைந்துள்ள ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு நாவரசு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த கரூரைச் சேர்ந்த ஜான்டேவிட் 6-12-1996 அன்று, நாவரசுவை ராகிங் காரணமாகக் கொலை செய்தார். அவரது தலையை அண்ணாமலை நகரில் உள்ள வாய்க்காலில் போட்டார். உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து, சென்னை செல்லும் வழியில் கை கால்களை வாய்க்கால்களில் வீசினார். தலையற்ற உடலை சென்னையில் நகரப் பஸ் ஒன்றில் விட்டுச் சென்றார்.
நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும் புதன்கிழமை உத்தரவிட்டனர்.
கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராக மாறி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தமிழக போலீஸôரிடம் சரண் அடைந்து மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது போலீஸôர் அவரைக் கைது செய்ய வேண்டும்.
எனவே இது குறித்து வியாழக்கிழமை கடலூர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் கூறியது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் ஜான் டேவிட் பற்றிய தகவல்களை சேகரிக்க சிதம்பரம் டி.எஸ்.பி., அண்ணாமலை நகர் போலீஸ் ஆய்வாளர், சிதம்பரம் நகர போலீஸ் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படையினர் திருச்சி, கரூர், சென்னை பகுதிகளுக்கு சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள். வெளிநாட்டில் ஜான் டேவிட் இருந்தால், வெளியுறவுத்துறை மூலம் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்.பி.