உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 17, 2011

கடலூரில் 28 கோடி மதிப்பில் புதிய பெருந்திட்ட வளாகம்

கடலூர் : 

            கடலூரில் 28 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் (கலெக்டர் அலுவலகம்) கட்டப்படவுள்ளது என கலெக்டர் அமுதவல்லி கூறினார். சென்னையில் முதல்வர் ஜெ., தலைமையில் 2 நாள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்று கடலூர் திரும்பிய கலெக்டர் அமுதவல்லியிடம் நேற்றுபேசினர். 

அப்போது கலெக்டர் அமுதவல்லி கூறியது:

             கடலூர் நகரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகம் (ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம்) அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது இயங்கி வரும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறமுள்ள பகுதியில் இதற்கான கட்டடம் அமையும். இடப்பற்றாக்குறையால் பல இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்படும்.ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு பதிவு செய்யும் எஸ்.எம். எஸ்., திட்டம் முதலில் தர்மபுரி மாவட்டத்திலும் இரண்டாவதாக கடலூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது.

            தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பெற்றறோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளியை பெருமளவு பயன்படுத்த முதல்வர் வலியுறுத்தியுள்ளார். முதல் கட்டமாக அரசு விடுதிகள் சூரிய ஒளியை பயன்படுத்த கருவிகள் அமைக்கப்படவுள்ளன.
 
           பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உருவாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து மக்காத குப்பையை பயன்படுத்தி தார் சாலைகள் அமைப்பது சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் போது 10 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து போடுவதற்கான சிறப்பு பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி கூறினார். பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தார்.













Read more »

கடலூரில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் காயம்


கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் நத்தை பிடிக்கச் சென்று திரும்புகையில், தாழங்குடா அருகே கரையேற முடியாமல் தத்தளிக்கும் படகு.
கடலூர்:
 
          வங்கக் கடலில் புதன்கிழமை சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் கடலூரில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். மேலும் 10 படகுகள் சேதமடைந்தன.
 
          கடலூரில் றபுதன்கிழமை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலும் விழுந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. தேவனாம்பட்டினம் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. அலைகள் சுமார் 20 அடி உயரம் வரை எழுந்து ஆர்ப்பரித்தன. இதன் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 5 ஆயிரம் சாதாரணப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் வி.சுப்புராயன் கூறியது:
 
            கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. சிறிய படகுகளில் கரையோரங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களும் தொழில் செய்யவில்லை. கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் சிலர் கடலுக்குள் சென்று கரை திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். வங்கக் கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், நீரோட்டம் முற்றிலும் மாறி இருக்கிறது. இதனால் வலை போட்டாலும் நிலைப்பதில்லை. கடந்த ஒரு மாதமாகவே கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் சரியாக இல்லை. பல நாள்கள் கடலில் இருந்தும், மீனவர்கள் வெறும் கையுடன் திரும்பி வருகின்றனர் என்றார்.3 மீனவர் காயம்: கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் கரையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நத்தை என்று அழைக்கப்படும் கோழிச் சங்கு அதிகம் கிடைக்கிறது. 
 
             மீனவர்கள் பலர் கண்ணாடி இழைப் படகுகளில் சென்று இவற்றைப் பிடித்து வந்து, கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கும் வியாபாரிகள், சிங்கப்பூர், தைவான், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அந்த நாடுகளில் செல்வந்தர்கள் ஏற்பாடு செய்யும் விருந்துகளில், கோழிச் சங்கு பரிமாறப்படுகிறது. கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை, கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் 5 கண்ணாடி இழைப் படகுகளில் நத்தை பிடிக்கச் சென்றனர். ஒரு படகில் தாழங்குடா மீனவர்கள் தனவேல் (30), சத்தியமூர்த்தி (27), கார்த்திக் (27), அகிலன், விஜயன் ஆகியோர் இருந்தனர்.இவர்கள் பிடித்த நத்தைகளை, புதுவை மாநில கடலோரப் பகுதியில் உள்ள வியாபாரியிடம் விற்றுவிட்டு, தாழங்குடா நோக்கி படகில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கடல் சீற்றம் அதிகரித்ததால் அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்தது. 
 
            இதில் படகு, என்ஜின், வலை ஆகியவை சேதம் அடைந்து தண்ணீரில் மூழ்கின. படகை அப்படியே விட்டு விட்டு, மீனவர்கள் ஐவரும் நீந்திக் கரை சேர்ந்தனர். இவர்களில் தனவேல், சத்தியமூர்த்தி, கார்த்திக் ஆகியோர் காயம் அடைந்தனர். 10 படகுகள் சேதம்: பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலூரை அடுத்த சாமியார் பேட்டையில், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 விசைப் படகுகளை அலைகள் இழுத்துச் சென்றன. அவை பலத்த சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். படகுகளைக் கரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு: பெற்றோர்கள் வரவேற்பு

கடலூர்:

          எஸ்.எம்.எஸ். மூலம் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டத்துக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 

              ஆசிரியர்களின் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கும் முறை தர்மபுரி மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திட்டம் கைவிடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியராக வே.அமுதவல்லி பொறுப்பு ஏற்றதும், இத்திட்டத்தை கடலூர் மாவட்ட பள்ளிகளில் அமல்படுத்தினார். கடந்த ஜூலை மாதத்தில் சோதனை அடிப்படையிலும், ஆகஸ்ட் முதல் நிரந்தரமாகவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 4 செல்போன் எண்கள் இதற்காக தரப்பட்டுள்ளன.

            இதையடுத்து சுகாதாரத் துறையினருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு பள்ளி வேலை நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் வருகை குறித்து, எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் மாவட்ட என்ஐசி மையத்தின் சர்வர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விடும். இத்திட்டத்துக்கு கடலூர் மாவட்ட பெற்றோர் மற்றும் பொதுநல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கடலூர் மாவட்ட பெற்றோர் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கவிஞர் பால்கி கூறுகையில், 

             இத்திட்டத்தால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து உள்ளது. அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் இத்திட்டத்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகையை தெரிவிக்கும் திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் 99 சதவீத ஆசிரியர்கள், குறித்த நேரத்தில் பள் ளிக்கு வந்து விடுகிறார்கள் என்றும் அச்சங்கம் தெரிவிக்கிறது. 

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் வெளியிட்டு உள்ள அறிக்கை:

            இத்திட்டத்தை முதல்முதலாக கடலூர் மாவட்டத்தில அறிமுப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அமுதவல்லிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மக்களுடன் அதிக நெருக்கமான சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, ரேஷன் கடைகள் ஆகியவற்றுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தனியார் பஸ் ஓட்டுநர் பி.பண்டரிநாதன் கூறுகையில்,

              கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது இல்லை. இதனால் மாணவர்களில் அடிப்படைக் கல்வியே ஆட்டம் காண்கிறது. ஒரு ஆசிரியர் 5 வகுப்புகளையும் பார்த்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த எஸ்.எம்.எஸ். திட்டம் அமையும் என்றார்.












Read more »

கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: நெல் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு

              கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு காரணமாக, நெல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 
              கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் 1.45 லட்சம் ஏக்கர் உள்பட, 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நாற்று நடவு முடிவடைந்து உள்ளது. இவற்றில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிருக்கு, உடனடியாக யூரியா தேவைப்படுகிறது. ஆனால் போதுமான அளவு யூரியா கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொட்டாஷ் உரத்தேவை முழுமைக்கும் இந்தியா, வெளிநாடுகளையே நம்பி இருக்கிறது. டி.ஏ.பி. உரத்தேவையில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
 
            இந்தியாவில் யூரியா உற்பத்தி செய்யும் ஆலைகள் பல இருந்தும், பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம் காரணமாக பல ஆலைகள் யூரியாவை உற்பத்தி செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்பனை செய்யத் தொடங்கி இருக்கின்றன. இந்திய தேவைக்கான யூரியாவில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ரசாயன உரங்களுக்கு தமிழகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
கடலூர் மாவட்ட யூரியா தேவை குறித்து வேளாண் அதிகாரி கூறியது: 
 
              கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் 1.5 லட்சம் ஏக்கர் பயிருக்கு நவம்பர் மாதத்துக்கு மட்டும், 8 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் 1,400 டன் யூரியா கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு டான்ஃபெட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. தனியார் உரக் கடைகளுக்கு கடந்த வாரம் 800 டன் யூரியா வழங்கப்பட்டது. மேலும் 600 டன் யூரியா தனியார் கடைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. மேலும் 1,500 டன் யூரியா கடலூர் மாவட்டத்துக்கு உடனடி தேவையாக உள்ளது. 
 
              தமிழ் நாட்டுக்குத் தேவையான யூரியா, கப்பல் மூலம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடலூர் மாவட்டத்துக்கு ரயில் வேகன்கள் மூலம் விருத்தாசலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விநியோகிக்கப்படும் என்றார். மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், இப்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு யூரியா அத்தியாவசியத் தேவையாக உள்ளது. யூரியா பற்றாக்குறை பயிர்களை பெரிதும் பாதிக்கும். கடந்த வாரம் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 1,400 டன் யூரியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் காலியாகிவிட்டது. 
 
               கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்குத்தான் யூரியா வழங்கப்பட்டது. மற்றவர்கள் தனியார் கடைகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் அங்கும் யூரியா கிடைப்பது இல்லை. பலர் அதிக விலைக்கும் விற்கிறார்கள். கப்பல் மூலம் மேற்கொண்டு யூரியா வந்துகொண்டு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வங்கிகள், அடகு கடைகள் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை வேண்டுகோள்

கடலூர் : 

           முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் "க்ளோஸ் சர்க்யூட் கேமரா' பொருத்தாத வங்கிகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

             தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், அடகு கடைகள் மற்றும் நகைக் கடைகளில் இரவு நேரங்களில் சுவற்றில் துளை போட்டு அங்குள்ள நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.பண்ருட்டியில் சண்முகம் என்பவரின் அடகு கடையில் கடந்த மே மாதம் 17ம் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம கும்பல் அங்கு படுத்திருந்த சண்முகத்தை கொலை செய்துவிட்டு 80 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது. இதேப்போன்று கடந்த 9ம் தேதி இரவு திட்டக்குடியில் பூபதி என்பவரின் நகைக் கடையில் புகுந்த மர்ம கும்பல் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றன. 

              மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களில் திருட்டுகள் அதிகரித்துள்ளது.இதனைத் தடுக்க போலீசார், மக்கள் அதிகம் கூடும், மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் "க்ளோஸ் சர்க்யூட்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதனை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை. பெயரளவிற்கு தங்களது வர்த்தக நிறுவனங்களில் இரவு நேர காவல் பணிக்கு முதியவர்களை நியமித்துள்ளனர்

             .இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.மேலும், குற்றங்களைக் குறைக்க போலீஸ் துறைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறியதோடு, தமிழகத்தில் குற்றங்களை குறைக்க வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்பதை நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் விதியாக்கப்படும் என அறிவித்துள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்டத்தில் பண பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வர்த்தக நிறுவனங்கள், விலை மதிப்பு மிக்க வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள், நகை கடைகள், அடகு கடைகள் பற்றிய விவரங்கள். அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளனவா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

            அதன்படி கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு, அரசு மற்றும் தனியார் வங்கிகள் 240 உள்ளன. அவற்றில் 81 வங்கிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மற்றும் பிரதான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளன. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலானவற்றில் இந்த வசதி ஏற்படுத்தவில்லை.அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 326 நகைக்கடைகளில் 63 கடைகளிலும், 823 அடகு கடைகளில் நான்கில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.கண்காணிப்பு கேமரா பொருத்தாத வங்கிகள், நகை மற்றும் அடகு கடைகளில் விரைவில் பொருத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior