உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

டெல்டா பாசனப் பகுதிகளில் செம்மை நெல் சாகுபடிக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை


நாற்று நடும் இயந்திரம்.
 
கடலூர்:

              நவீன அறிவியல் வேளாண்மையில் டெல்டா பாசனப் பகுதிகளில், செம்மை நெல் சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் இந்த சம்பா பருவத்தில் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

                 தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனத்தை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், டெல்டா பாசனப் பகுதிகள். சம்பா சாகுபடிக்கு ஜூலை 29-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி கொள்ளிடம் கீழணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் பிபிடி, வெள்ளைப் பொன்னி, சின்னப்பொன்னி, பொன்மணி, ஏடிடி 38, சிஆர். 1009 உள்ளிட்ட நடுத்தர நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டுப் பாங்கான சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் செம்மை நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.வேளாண் தொழில்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், செம்மை நெல் சாகுபடியை வரவேற்கும் விவசாயிகள், அதற்குத் தேவையான இயந்திரங்கள் இல்லையே என்று கவலை தெரிவிக்கிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் 30 விவசாயிகளிடம் மட்டுமே நடவு இயந்திரங்கள் (ரூ.2.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை) இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 166 வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 5-ல் கடந்த ஆண்டு நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 7 கூட்டுறவு சங்கங்களுக்கு நடவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

                செப்டம்பர் இறுதிக்குள் இயந்திரங்கள் வாங்கப்பட்டுவிடும். வேளாண் கருவிகளை இயக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று, கூட்டுறவு இணை இயக்குநர் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சம்பா நெல் விதைகள் மொத்த தேவையில் 17 சதவீதத்தை அரசு விநியோகிக்க வேண்டும் என்பது விதி. வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தேவையான விதை நெல் இருப்பு வைத்து இருப்பதாக வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் விலை கிலோ பிபிடி ரகம் ரூ.23-36, சிஆர்.1009 ரூ.18-75, வெள்ளைப் பொன்னி ரூ.20-40. விதை நெல்லுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 

இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           "செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவிட்டனர். ஆனால் அதற்குத் தேவையான இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள இயந்திரங்களைக் கொண்டு 10 சதவீத வேளாண் பணிகளைத்தான் செய்ய முடியும். நடவு இயந்திரம் மட்டும் இந்த மாவட்டத்துக்கு 800க்கும் மேல் தேவைப்படுகிறது. அரசு தேவையான இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கடந்த ஆண்டு வழங்கியதுபோல் இந்த ஆண்டும், விதை நெல்லுக்கு மத்திய அரசு மானியம் கிலோவுக்கு ரூ.2 வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விநியோகிக்கும் விதை நெல்லுக்கும் மாநில அரசு மானியம் ரூ.5 வழங்க வேண்டும். மேட்டூர் அணை ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டும், திறக்கப்படும் நீரின் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் வேளாண் பணிகளுக்கு நீர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

                   வடகிழக்குப் பருவமழை செப்டம்பர் 20-ல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாசனத்துக்கு போதிய தண்ணீரைத் திறக்காமல், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீரைத் தேக்கி வைப்பதால் என்ன பயன்? பராமரிப்புப் பணிகள் முடிவடையாததே போதிய தண்ணீர் திறக்கப்படாமைக்குக் காரணம்' என்றார்.

Read more »

தமிழக நதிகளை இணைக்க ரூ.600 கோடியில் திட்டம்

               தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் முதல் கட்டமாக ரூ.600 கோடியில் செயல்படுத்த உள்ளதாக மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம் தெரிவித்தார்.

மதுரையில்  செவ்வாய்க்கிழமை மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம்   அளித்த பேட்டி:

               தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி பெருமுயற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து முதல் கட்டமாக தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்குத் தேவைப்படும் நிலத்தை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு அளித்துள்ளனர்.அடுத்த கட்டமாக காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு தேவைப்படும் நிலமும் கையகப்படுத்தப்படும். அநேகமாக இப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். மேலும் செய்யாறு-பாலாறு நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

               இப்பணியைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.இந்த  மூன்று திட்டங்களும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.600 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவைடைய 5 ஆண்டுகளாகும். மேற்குறிப்பிட்ட நதிகளை இணைத்த பின் நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அப்பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும். மொத்தத்தில் நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவடைய 8 அல்லது 9 ஆண்டுகளாகும்.மேலும் வைகை அணையைத் தூர்வாரி, சீரமைக்க ரூ.175 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கரூர் அருகே கட்டளை கதவணையை நவீனப்படுத்தி மதகு அணை கட்ட ரூ.190 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைந்துவிடும். காவிரியில் வெள்ள அபாயம் ஏற்படும் சமயங்களில் வெள்ள நீர் புகுந்துவிடுவதால் காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. 

                இதைத் தடுக்கும் நோக்கில் இந்த மதகு அணை கட்டப்பட்டு வருகிறது.தமிழகம், ஒரிசா, கேரளம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அணைகள் புனரமைப்புத் திட்டம் ரூ.750 கோடியில் செயல்படுத்த திட்டம் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் மேட்டூர், பவானிசாகர், வைகை உள்ளிட்ட 104 அணைகள் புனரமைக்கப்பட உள்ளன .மதுரை வண்டியூர் கண்மாய் சீரமைப்பு தொடர்பாக ரூ.22 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் அரசின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி, சுற்றுலாத்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவை செயல்படுத்த முன்வந்துள்ளன. 

                   இவர்களில் யாரிடம் இப்பணியை ஒப்படைப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.பேட்டியின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், சிவகங்கை ஆட்சியர் மகேசன் காசிராஜன், விருதுநகர் ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூரில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது

கடலூர்:

             முறையாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த, உலக மக்கள் தொகைக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

              முன்பு குடும்பக் கட்டுப்பாடு திட்டமாக இருந்தது; தற்போது குடும்ப நலத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் 1,2,3 என்ற விகிதத்தில் இல்லாமல் 2,4,8,16 என்ற விகிதத்தில் இருப்பது பிரச்னையாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 14.2 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 5.3 சதவீதமாகவும் உள்ளது. சுகாதார நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.÷கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரூ.1800 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1,56,414 வீடுகள் கட்டப்படும்.

              கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப் பாதை திட்டம் நிச்சயம் வரும். இத்திட்டத்துக்கு அனுமதி அளித்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் 31-7-2010 அன்று கையொப்பமிட்டு உள்ளார். ரயில்வே இலாகாவும் டெண்டர் விட இருக்கிறது.  இச்சுரங்கப் பாதை 16.5 மீட்டர் அகலம், 300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்றார் ஆட்சியர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். விழாவில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் நகரத்தில் நவீன எரிவாயு தகன மேடைகள் தயார்

கடலூர்:

              கடலூர் நகரத்தில் சுற்றுச் சூழல் பாதிக்காவண்ணம் அமைக்கப்பட் டுள்ள இரு நவீன எரிவாயு தகன மேடைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

            இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உருவாகும் புகை சுகாதார கேடு விளைவிப்பதாக உள்ளது. எனவே பல இடங்களில் விறகு பயன்படுத்தி எரிப்பதை தவிர்த்து மின் தகனமேடை, நவீன எரிவாயு மேடை என பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டில் 80 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 தகன மேடைகள் அமைக் கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

                    இந்த தகன மேடையை பராமரிக்க அதிக நிதி தேவைப்படுவதால் அறக் கட்டளை உருவாக்கி அதன் மூலம் பராமரிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நிர்வாக இயக்குனரின் அறிவுரைப்படி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது மக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டியுள் ளதால் தனியாக வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.   இந்த அறக்கட்டளைக் கான நிதி துவக்க விழா கடலூர் நகர்மன்றத் தலைவர் அலுவலகத்தில் வரும் 5ம் தேதி நடக்கிறது. இவ்விரு தகன மேடைகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Read more »

"ஆபரேஷன் ஹம்லா" நள்ளிரவில் துவங்கியது

கடலூர்:

             கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிசோதித்துப் பார்க்கும் வகையில் "ஆபரேஷன் ஹம்லா' நேற்று நள்ளிரவு துவங்கியது.
 
             கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய கடல் பகுதியில் அன்னிய நாட்டுப் படகுகள் மற்றும் அன்னிய நபர்களை கண்டாலோ, மீனவ கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடன் போலீஸ் அல்லது கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்க மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போலீஸ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினரும் இணைந்து கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல் படையினர் நவீன படகுகள் மூலம் கடல் பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
 
              அன்னிய நாட்டு பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், பயங்கரவாதிகள் வந்தால் அவர்களை எவ்வாறு மடக்கிப் பிடிப்பது என்பதை ஆய்வு செய்வதற்காக "ஆபரேஷன் ஹம்லா' நேற்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ போலீஸ் குழுவினர் மாறு வேடத்தில் கடல் வழியே சென்னை முதல் கன்னியாகுமரிக்குள் நாளை (5ம் தேதி) இரவு 12 மணிக்குள் ஊடுருவி சாலை வழியே மாநிலத்தின் முக்கிய பகுதிகளை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

                             இவர்கள் கரை ஏறுவதைக் கண்காணித்து பிடிக்கும் போலீசாருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி தமிழகத்தின் கடலோர கிராமங்கள் மற்றும் அதனையொட்டிய நெடுஞ்சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

Read more »

புவனகிரி பேரூராட்சிக்கு5,394 "டிவி'க்கள் தயார்

புவனகிரி: 

             புவனகிரி பேரூராட்சி பகுதியில் வழங்குவதற்கு 5,394 இலவச "டிவி'க்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. புவனகிரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கு வழங்குவதற்காக 5,394 இலவச கலர் "டிவி'க்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. புவனகிரி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலா 1,560ம், ஆதிவராகநத்தம் நடுநிலைப் பள்ளியில் 1,140 மற்றும் ஈஸ்வரன் கோவில் நடுநிலைப் பள்ளியில் 1,134ம் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது.

Read more »

நல்லூரில் குடும்ப நலவிழிப்புணர்வு கருத்தரங்கு

விருத்தாசலம்: 

                     விருத்தாசலம் அடுத்த நல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 

                  ஊராட்சி தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பரமேஸ்வரி, வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. கருத்தரங்கில் மருத்துவ அதிகாரிகள், அலுவலக கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர் கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

Sangam era characters come alive on Chidambaram flyover parapet walls

— Photo: C. Venkatachalapathy

Artistic makeover:The parapet walls of a flyover at Chidambaram being adorned by paintings of characters from Tamil Literature. 
 
CUDDALORE: 

          The illustrious characters depicted in the Sangam age are being resurrected to give an insight into their good deeds and also to create a flair for Tamil literature among the people.

           Thanks to the efforts made by the Highways Department the parapet wall of the flyover built across the railway track at Chidambaram is now being adorned with the figures of the seven famed philanthropic chieftains of the Sangam era. These chieftains who ruled mostly from the hilly terrains were known for their exemplary munificence as they liberally donated their riches to those who sought their assistance. Some of them had excelled in the art of giving by even sacrificing their valued possessions to birds and plants.

The chieftains and their acts of philanthropy are as follows:

               Paari of Parambu Hills gave his chariot to Mullai creeper; Kaari of Mullur Hills donated lands to the needy; Ori of the Kolli Hills gave away purses of gold coins; Began of the Palani Hills protected a peacock found shivering in rain by covering it with his shawl; Nalli of the Thotti Hills contributed his chariot to a help-seeker; Aai Andiran of the Pothigai Hills gifted away an elephant to a commoner and Adhiyaman parted with a rare kind of amla fruit to Tamil poet and saint Avvaiyar.

              Sources in the Highways Department told The Hindu that the painting works were undertaken on the direction of the Highways Minister. These characters were taken from the “Iniyavai Narpathu” theme of the World Classical Tamil Conference. While one side of the parapet wall would be decorated with the paintings of Sangam era the other side would be decked up with contemporary scenes such as the mangrove forests as seen at Pichavaram, Lord Nataraja Temple and Sathya Gnana Sabai of Vadalur Vallalar.

              The department had roped in the local artists for drawing the paintings for which separate fund allocation would be made. G. Mohan (45), a painter who has been assigned the task, told this correspondent that he was given the broad outline of the characters and from his imagination he was creating the paintings. Each character takes about two days to complete; right from drawing the sketch to embellishing it with oil paint. Even while the painting was under progress it had attracted the attention of the large number of people and soon the pithy messages conveyed through them would also sink into their minds. Mr. Mohan's only concern was that these paintings should not be vandalised or disfigured, nor should they be covered with posters and other wall writings.

Read more »

சிதம்பரம் ரயில் நிலைய கட்டடம் இம்மாத இறுதியில் திறக்கப்படுமா?

சிதம்பரம்:

               சிதம்பரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஜவ் வென இழுத்து வந்த ரயில் நிலைய கட்டடம் ஒரு வழியாக கட்டி முடிக் கப்பட்டு இம்மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                  விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் முக்கிய ரயில் நிலையம் சிதம்பரம். சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் ஆகியன இருப்பதால் உலகம் முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரம் வருகின்றனர்.அதேப்போன்று பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து வருகின்றனர். இவர்கள் ரயில் மூலமே அதிகமாக வருவதால் சிதம்பரம் ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு தகுதி வாய்ந்த அளவிற்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் விஸ்தீரமான கட் டடம், பயணிகள் ஓய்வு அறை, தங்கும் வசதி என எதுவும் இல்லாமல் இருந்தது.

                அதனையொட்டி கடந்த 2003ம் ஆண்டு சிதம் பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விஸ்தீரமான ரயில் நிலைய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டினார். ஆனால் காண்ட் ராக்ட் எடுத்தவர்கள் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி பணியை செய்யாமல் பாதியிலேயே ஓடினர். அதனைத்தொடர்ந்து காண்ட்ராக்டர்கள் மூன்று பேர் மாற்றப்பட்ட போதும் பணிமுடிந்த பாடில்லை. இந்நிலையில் அகல ரயில்பாதை பணி முடிந்து ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ரயில் நிலைய கட்டட பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். 

               அதனையடுத்து ஆர்.வி.என்.எல்., ஏற்று முடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டு பணியை துவக்கியது. இதனைத் தொடர்ந்து புதிய எஸ்டிமேட் போடப் பட்டு ஒரு கோடி ரூபாய்க் கும் மேல் செலவு செய் யப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் இடம், தங்கும் அறை, கடைகள், டிக்கெட் கவுண்டர் என அனைத்தும் தயாராகி விட்டது. புதிய மாடல் விளக்குகள், தரையில் டைல்ஸ் ஆகியன பதிக் கப்பட்டு கட்டடம் "பளீச்'சென காணப்படுகிறது. வெளித்தோற்றம் முழுமையடையவில்லை என்றாலும், உட்புறம் அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. கடந்த மாதமே திறப்பு விழா காண இருந்த இக்கட்டடம் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

Read more »

சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர்கள் விடுதி மருத்துவ குழுவினர் ஆய்வு

சிதம்பரம்: 

              சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர் விடுதியில் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். 

                  கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா உத்தரவிற்கிணங்க கிருஷ்ணாபுரம் அரசு மாணவர்கள் விடுதியில் மருத்துவ அலுவலர் சிவக்குமார், ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் வீரமணி, ரவிவர்மா, பழனிவேல், ஜெய்சங்கர், வசந்தி,வளர்மதி, சரசு, வீரமணி பங்கேற்றனர். ஏற்பாட்டினை விடுதி காப்பாளர் பன்னீர்செல் வம் செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டி பகுதியில் செங்கல் விலை "கிடுகிடு'

பண்ருட்டி:

              பண்ருட்டி பகுதியில் செங்கல் தயாரிப்பில் மந்தம் காரணமாக செங்கல் விலை "கிடுகிடு' வென உயர்ந்துள்ளது.

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், கோட்லாம்பாக்கம், ஒறையூர், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், திருவதிகை, பணப்பாக்கம், வரிஞ்சிப்பாக்கம், கள்ளிப்பட்டு, திருத்துறையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளது. இங்கு தயாரிக்கும் செங்கல் தினமும் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 50 லோடுகள் வரை அனுப்பப்படுகிறது. 

             ஆனால் தற்போது செங்கல் அறுக்கும் போதே (பச்சைக்கல்) திடீரென மழை பெய்வதால் பச்சைகல் முற்றிலும் வீணாகி விடுகிறது. இதனால் மழையில் பாதுகாப்பாக பயன்படுத்தும் வசதி கொண்ட சூளையினர் மட்டுமே செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது.

              தற்போது செங்கல் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் மெலார் மூலம் எரிக்கப்படும் ஆயிரம் செங்கற்கள் 2,000 ரூபாயும், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் கல் 2,200 ரூபாயும் விற்பனையானது. ஆனால் தற்போது மழையின் காரணமாக ஆயிரம் செங்கற்கள் 600 ரூபாய் கூடுதலாகி மெலார் மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,600ம், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Read more »

பண்ருட்டியில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பண்ருட்டி: 

          பண்ருட்டி - விழுப்புரத்திற்கு காலை மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

            பண்ருட்டி தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். ஜோசப், வினாயகம், உமாபதி, பாபு, மதியழகன், ராதாகிருஷ்ணன் பேசினர். கூட்டத்தில் பண்ருட்டி- விழுப்புரம் வரையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். அரசு சான்றிதழ் விரைவாக பொதுமக்களுக்கு கிடைத்திட கூடுதலாக அரசு ஊழியர்களை நியமித்திட வேண்டும், பண்ருட்டி பஜார் தபால் நிலையத்தை முன் அறிவிப் பின்றி மூடியதை திறக்க வேண்டும் உட்பட உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

பண்ருட்டி நகராட்சியில் பாழாகும் குப்பை அள்ளும் வாகனங்கள் அதிகாரிகள் அலட்சியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி நகராட்சி குப்பை லாரிகள் பராமரிப்பின்றி வீணாகியதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதித்துள்ளது.

             பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு 33 பெண்கள் உள்ளிட்ட 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பணிகளை ஆய்வு செய்ய ஒரு துப்புரவு அலுவலர், 2 ஆய் வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பைகள் சேகரிக்க 33 வார்டுகளில் 50 இரும்பு தொட்டிகள் வைக் கப்பட்டுள்ளது. 

              குப்பைகள் அள்ளுவதற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இரண்டு டிராக் டர்கள், ஒரு லாரி, ஒரு ஈஷர் மினி லாரி, ஒரு கேண்டர் மினிலாரி, ஒரு ஃபோர் நாட் செவன் என 6 வாகனங்களும், தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிப்பதற்கு 30 வண்டிகள் உள்ளது. ஆனால் கடந்த இரு மாதங்களாக குப்பைகளை அகற்றுவதற்குரிய டிராக்டர், ஒரு ஃபோர் நாட் செவன் வேன் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற வாகனங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. டிராக்டர் இழுத்துச் செல்லும் டிரெய்லர்களும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

                   அதிகாரிகளின் அலட்சியத்தால் நகராட்சியின் நான்கு வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரியின் தகுதிச் சான்று பெறாமல் உள்ளது. குப்பைகள் அள்ள வாகனங்கள் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக பல தெருக்களில் குப்பைகள் அள் ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்கள் டிராலி மூலம் குப்பைகளை அள்ளினாலும் முழுமையாக அகற்ற முடிவதில்லை. போதுமான பணியாளர்கள் இருந்தும் வாகனங்கள் இல்லாததால் பண்ருட்டி நகரம் முழுவதும் குப்பைகள் மண்டி காணப்படுகிறது.

Read more »

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்

பண்ருட்டி: 

               பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

              பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் லாரிகளில் திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. பண்ருட்டி தாசில்தாராக பாபு இருந்த போது தினமும் இரவு வருவாய்த் துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஒ., மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். 

              இதனையடுத்து வருவாய்த் துறையினர் மணல் கடத்தலைத் தடுப்பதற்கு அஞ்சுகின்றனர்.இதனால் தினமும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தாசில்தார் பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் குமார், வருவாய் ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் மணல் கொண்டு செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

Read more »

புவனகிரியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவர் பலி

புவனகிரி:

                 புவனகிரியில் மின் கம்பியில் மாட்டிய பட்டத்தை இழுக்கும் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

             இந்த சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்புவனகிரி ஆட்டு தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரை. இவர் சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வமணி (13). இவர் புவனகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். செல்வமணி நேற்று மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த பின்னர், மேல்புவனகிரி மயானம் அருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் அந்த வழியாகச் செல்லும் மின் கம்பியில் சிக்கிக் கொண்டது. உடன் செல்வமணி பட்டத்தை எடுக்க பட்டத்தில் நூலை பிடித்து இழுத்தார். 

             எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து செல்வமணி மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி செல்வமணி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பு.முட்லூர் உதவி செயற்பொறியாளர் குமார், புவனகிரி கிளை அலுவலக உதவி பொறியாளர் சாமிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் செல்வமணியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior