சிதம்பரம்:
மாரடைப்பு நோய்க்கு புதிய முறையில் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலுதெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இதயநோய் சிகிச்சை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மாரடைப்புக்கு உயிர்காக்கும் புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது:
தீவிர மாரடைப்பின்போது எம் கார்டு மற்றும் க்ளியர்வே கத்தீட்டர் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் மருந்துகளை சீராக செலுத்தி ரத்தக் கட்டியை கரைத்து இதயத்துக்குள் ரத்தஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் புதிய மருத்துவக் கருவிகளில் க்ளியர்வே கத்தீட்டர் என்பது ஒன்றாகும். அதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் பலூன் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மருந்தை சீராக செலுத்தி ரத்தக்கட்டியை நீக்குகிறது. ÷பாரம்பரிய சிகிச்சை முறையில் ரத்தக்கட்டிகளை சிதறடிக்க கத்தீட்டர் மூலம் மருந்து செலுத்தப்படும். இது பாதிப்புள்ள பகுதிக்கு 20 சதவீத குறைவான அளவே மருந்து சென்றடையும்.
ஆனால் புதிய கருவியான க்ளியர்வே கத்தீட்டர் பயன்படுத்துவதால் உயிர் சேதத்தை குறைக்க வசதியாக இருக்கும். ரத்தக்கட்டியை கட்டுப்படுத்துவதற்கான எம்கார்டு ஸ்டெண்ட் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.÷பிரத்யோக மைக்ரான்- வலை தொழில்நுட்பத்தை கொண்டுள்ள எம்கார்டு, ரத்தக்கட்டிகளை சிக்க வைப்பதுடன், ரத்தநாளங்கள் நிவாரணமடைவதற்கு உதவுகிறது. தீவிர மாரடைப்புகள் இளம்வயதினில் குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. மார்புவலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் மூலம் இதய தசைகளை காப்பாற்றலாம். இந்த புதிய கருவிகளுடன் உகந்த சிகிச்சை துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் இதய தசைகள் பெருமளவில் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டு நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்தார்.