உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

முதல் முறையாக வேலூரில் தொடக்கம்: ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

          ஆன் லைன் மூலம் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி, தமிழகத்தில் முதல் முறையாக வேலூரில் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. 

               தமிழக அளவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிமங்கள் பெறுவதற்கான புதிய இணையதளம் தொடங்கும் பணியை, தேசிய தகவல் மையத்தோடு (நிக்) சேர்ந்து, போக்குவரத்துத்துறை ஆணையர் எம்.ராஜாராம் மேற்கொண்டார். இதையொட்டி, தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. 

            இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழகத்தில் முதல் முறையாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில், முதல்கட்டமாக, இந்த இணையதளத்தைக் கையாளும் வசதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

              வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 22 பள்ளிகள், குடியாத்தம் 8, வாணியம்பாடி 12 பள்ளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் பழகுநர் உரிமம் தேவைப்படுவோர், இந்த பள்ளிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணோடு கூடிய நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் அனைத்து சான்றுகளோடு, வட்டாரப் போக்குவரத்து அலுவலக கணினி மையத்தில் தொகையைச் செலுத்திவிட்டு, மோட்டார் வாகன ஆய்வாளரின் தேர்வுக்குச் செல்ல வேண்டும். 

             இதன் மூலம், நேரில் வந்திருந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும் நேரம் மிச்சமாகிறது. மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இப்பணிக்கு என இருந்த 4 கணினிகளோடு கூடுதலாக, இரு கணிகளும் திங்கள்கிழமை புதிதாக இயக்கப்பட்டன. இவற்றை வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம், சுழற் சங்கம் ஆகியவை அளித்துள்ளன. இதனால் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற முழு நாள் செலவிட வேண்டியிருக்காது.

                   இதை அங்கீகாரமற்ற முகவர்கள் பயன்படுத்தக்கூடாது எனும் நோக்கில், பயிற்சிப் பள்ளிகளுக்கு மட்டும் அளித்திருக்கிறோம். இணையதளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு, இன்னும் ஒன்றரை மாதத்தில் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தரணி கூறினார். இந்த முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 6 பெண்களுக்கு திங்கள்கிழமை ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காளியப்பன், மாணிக்கம், செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

புற்றுநோய், இதயநோய் சிகிச்சைக்கு விரைவில் புதிய திட்டம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:

          கிராமப்புற மக்களைத் தாக்கும் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க 2 மாதத்தில் புதிய திட்டம் வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 கடலூர் அருகே திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

            தரம் உயர்த்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். விரைவில் 5 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேரமும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட சுகாதார நிலையத்தில் எப்போதும் ஒரு மருத்துவர் இருப்பார். மற்றவற்றில் ஒரு செவிலியர் இருப்பார்.கடந்த 4 ஆண்டுகளில் 6,389 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்கள் நியமனத்துக்காக 25 முறை கவுன்சலிங் நடத்தப்பட்டு உள்ளது. 

           23, 24, 25 தேதிகளில், 26-வது முறையாக, 783 மருத்துவர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் நடைபெற இருக்கிறது.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 6 ஆயிரம் வழங்குவதற்காக | 1,000 கோடி ஒதுக்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இதுவரை 20 லட்சம் போருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இன்ன நோய் வந்து இருக்கிறது என்றுகூட, தெரிந்து கொள்ள முடியாத அவல நிலையிலும், அறியாமையிலும் உள்ளனர். 

              கிராமப்புற மக்களுக்காக இதயநோய், புற்றுநோய் (மார்பகப் புற்று நோய், கருப்பை  புற்றுநோய் உள்பட) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் 2 மாதத்தில் வரஇருக்கிறது.திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ஜெயலிலதா ஆட்சியில் நிறுத்தினார். தற்போதும் திமுக ஆட்சியில் ரூ. 1-க்கு ஒருபடி அரிசித் திட்டம், "108' ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளுக்குப் பதில் காரை வீடுகள் வழங்கும் திட்டம் என, பல நல்ல திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

                  இந்தத் திட்டங்கள் தொடர மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என்றார் அமைச்சர்.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கைப் பாண்டியன், துணை இயக்குநர் ஆர்.மீரா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜெயவீரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி ஐஏசிஎம் ஸ்மார்ட்லைன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பட்டவகுப்புகளை தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் எம்எஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பட்ட வகுப்புகள், வரும் 2011-ம் கல்வி ஆண்டு முதல் தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டது. 

                  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஐஏசிஎம் நிறுவனத் தலைவர் ரவீந்திரகாயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஐஏசிஎம் நிறுவன சந்தீப்குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

Read more »

அதிகாரிகளை அறையில் வைத்து பூட்டிய தி.மு.க., கவுன்சிலர்: பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: 

            பண்ருட்டி நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாமல் சீர்கேடாக உள்ளதாகக் கூறி, நகராட்சி அதிகாரிகள் அறையை தி.மு.க., கவுன்சிலர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

              கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கதிரேசன், நேற்று காலை 11 மணியளவில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ஞானதீபம், பாண்டியன், வருவாய் உதவியாளர் ஜெய்சங்கர், சேர்மன் டிரைவர் ரியாஸ், உதவியாளர் முத்து  உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களிடம், "எங்கள் வார்டு பகுதியில் கடந்த 37 நாட்களாக குப்பை அள்ளாமல், சுகாதாரக் கேடாக உள்ளது. 

            தினமும் காலையில் மின் விசிறியின் கீழ் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்குகிறீர்கள், அங்கே வார்டு கவுன்சிலர்களை பொதுமக்கள் தரக்குறைவாக பேசுகின்றனர்' எனக் கூறி, சுகாதாரப் பிரிவு அலுவலகத்தின் வெளி தாழ்ப்பாளை பூட்டினார். மேலும், யாரும் இதை திறக்கக் கூடாது என எச்சரித்தார். தகவலறிந்த சேர்மன் பச்சையப்பன், பொறியாளர் சுமதி செல்வி, கவுன்சிலர்கள் ரகூப், பரமசிவம், ராமகிருஷ்ணன் ஆகியோர், கவுன்சிலர்  கதிரேசனுடன் பேச்சு வார்த்தை  நடத்தி, அறையில் இருந்த அதிகாரிகளை மீட்டனர். 

                 இதனால், நகராட்சி அலுவலகத்தில் 20 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் குப்பைகள் அள்ளவில்லை என கூறி, பிற்பகல் மதியம் 2.30 மணியளவில் நகராட்சி வாயில் முன், கதிரேசன் மறியலில் ஈடுபட்டார். மீண்டும் சேர்மன் பச்சையப்பன் கதிரேசனை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஆனால், கவுன்சிலர் மறுத்தார். தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம், டிரைவர் ரவி ஆகியோர் கதிரேசனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு சேர்மன் அறைக்குச் சென்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் கூறியதைத் தொடர்ந்து, கதிரேசன் வெளியேறினார்.

Read more »

இமயமலையில் ஜோதி ஏற்றச் செல்லும் வள்ளலார் பக்தர்கள்

நெய்வேலி:

            இமயமலையில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி ஏற்றுவதற்காக சென்னையைச் சேர்ந்த ஞானாலயா கோட்டத்தின் உறுப்பினர்கள் வடலூரிலிருந்து திங்கள்கிழமை இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

                  சென்னையைச் சேர்ந்த ஞானாலயா கோட்டத்தின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள வள்ளலாரின் தெய்வ நிலையத்தில், வள்ளலார் அவதரித்த தினமான ஆகஸ்ட் 23-ம் தேதி ஜோதி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டும் ஞானாலயா கோட்ட உறுப்பினர்கள் 60 பேர் கொண்ட குழுவாக ஞானாலயா நிர்வாகி திருஞானானந்தா சுவாமிகள் தலைமையில் இமயமலைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் வழிபட்டுவிட்டு, பின்னர் சத்திய ஞானசபையில் பாராயணம் பாடி அதன்பின் புறப்பட்டுச் சென்றனர். நெய்வேலி ஆனந்தன், கடலூர் சஞ்சீவி வெங்கடேசன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Read more »

மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் மனுக்களுக்குப் பதில் இனிப்பு வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள்

கடலூர்:

            எப்போதும் கோரிக்கை மனுக்களையே வழங்கி வந்த விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியினர், கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்டும் கூட்டத்தில் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

              வழக்கறிஞர் சு.திருமாறன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலராக பொறுப்பு ஏற்றபின், தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகள், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன.திங்கள்கிழமைகளில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்களுக்கு, யார் வருகிறார்களோ இல்லையோ, திருமாறனும் அவரது கட்சி நிர்வாகிகளும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கோரிக்கை மனுவுடன், தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு வருவது வழக்கமான நிகழ்வாகும்.

              ஆனால் இந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கூட்டத்துக்கு சு.திருமாறனும் கட்சியின் ஏனைய தலைவர்களும், தொண்டர்களும் பெட்டி பெட்டியாக லட்டுகளுடன் வந்தனர். முதலாவதாக அலுவலர்கள் இருந்த அரங்கத்துக்குள் சென்று லட்டுகளை விநியோகித்தனர். எப்போதும் மனுக்களுடன் வரும் திருமாறன், லட்டுகளுடன் வந்தது அதிகாரிகளை வியக்க வைத்தது. அங்கிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, முன்னரே இனிப்பு வழங்கியதாக திருமாறன் தெரிவித்தார்.

Read more »

வாக்காளர் அடையாள அட்டை: போலிகளைக் களைய புதிய முறை

 

     ஒரே பெயரில் இரண்டு, மூன்று வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பவர்களைக் கண்டறியும் மின்னணு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்த உள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறின:

             தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாவட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட விவரங்களுக்கு இதுவரை பதில் ஏதும் வரவில்லை. நவம்பரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

               தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வரப்பெற்றதும், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கப்படும்.மின்னணு முறை: சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் செப்டம்பரில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.ஒரே பெயரில் இரண்டு, மூன்று இடங்களைக் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

                  இந்த முறை இப்போது மாவட்ட அளவில் மட்டுமே உள்ளது. இது மாநில அளவில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், ஒருவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வைத்திருந்தால் அது கண்டறியப்படும் என தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

கிராம பி.பீ.ஓ.க்களுக்கு தமிழக அரசு மானியம்




          கிராமப்புறங்களில் பி.பீ.ஓ., (வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனம்) தொடங்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு | 7.5 லட்சம் வரை மானியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

              இதன்மூலம், நகரங்களில் மட்டுமே இயங்கி வரும் பி.பீ.ஓ. நிறுவனங்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.  கிராமப்புறங்களிலும் பி.பீ.ஓ.க்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கிராமப்புற பி.பீ.ஓ.க்களுக்கான கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் பி.பீ.ஓ. நிறுவனங்களைக் கொண்டு செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு: 

             கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் பணியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றும். அதாவது, பி.பீ.ஓ. நிறுவனங்களைத் தொடங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.  பி.பீ.ஓ. நிறுவனங்களை உருவாக்க காரணமாக அமையும் தொழில் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்புகளுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசனைகளையும், போதிய உதவிகளையும் தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும். 

நிதி உதவி:  

                கிராமப்புற பி.பீ.ஓ.க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இரண்டு வகைகளில் நிதி உதவி அளிக்கப்படும். ஒன்று மூலதன நிதியுதவி, மற்றொன்று பயிற்சிக்கான நிதியுதவி.  குறைந்தது 100 பேருடன் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கு 15 சதவீதம் அதாவது | 3 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். பி.பீ.ஓ. அமைப்பதற்கான வன்பொருள்கள் உள்ளிட்ட கருவிகளைப் பெற இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

             மற்றொன்று, பயிற்சிக்கான மானியமாக அரசு அளிக்கிறது. 100 பேருக்கு 3 மாதங்கள் பயிற்சியும், அதன்பின் 9 மாதங்கள் பணியும் வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும். நபர் ஒருவருக்கு மாதத்துக்கு | 1,500 வீதம் 3 மாத பயிற்சி காலத்துக்கான உதவித் தொகை மொத்தம் | 4.5 லட்சம் வழங்கப்படும். பயிற்சியையும், பணியையும் வழங்கிய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்ட அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணிகள்? 

                    கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களைத் திரட்டுதல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல், தகவல்கள் மேலாண்மை, தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். குரல் வழியிலான பி.பீ.ஓ.க்கள், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கும் பணியும், வர்த்தக ஆய்வு, சர்வே, விற்பனை போன்ற பணிகளும் கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் வழியாக செய்யப்படும்.

Read more »

பராமரிப்பின்றி பாழாகும் பழமையான சேத்தியாத்தோப்பு அகத்தீஸ்வரர் கோவில்




சேத்தியாத்தோப்பு: 

            அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 800 ஆண்டு பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. 

            கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள பரதூர் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.  பரத்வாஜ மகரிஷி ஆசிரமம் அமைந்திருந்த பகுதி என்பதால், இவ்வூருக்கு பரதூர் என்று பெயர் உருவானதாக  கூறப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு  முன் அகத்திய முனிவர் தினசரி பூஜைகள்  மேற்கொண்ட கோவில் இது எனவும்,  அதனாலேயே இக்கோவிலுக்கு  அகத்தீஸ்வரர் கோவில் என்ற வரலாறும் உண்டு. 

               இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ள இக்கோவிலில் விநாயகர் மற்றும் முருகர், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அகிலாண்ட நாயகி உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அனைத்து சன்னிதியின் கோபுர பகுதியிலும் செடி, கொடிகள்  மரம்போன்று வளர்ந்து கோபுரத்தையே மறைத்து நிற்கின்றன. சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. 

           இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோவிலை பராமரிக்க வேண்டும் என, முன்னோர் தங்களது சொத்துக்களை கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால், கோவில் நிலத்திற்கு தற்போது குத்தகை வசூலிக்கப்படுகிறதா, நிலம்  பயிரிடப்படுகிறதா என்ற விவரம் ஏதும் தெரியாமல் பரம ரகசியமாக உள்ளது.  தற்போது தில்லைகாளியம்மன் கோவிலின் செயல் அலுவலரே இக்கோவிலையும் நிர்வகித்து வருவதாக இப்பகுதி  மக்கள் தெரிவிக்கின்றனர். 

                  கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளம் தற்போது ஆடு, மாடுகள் குளிக்கும் குட்டையாக மாறி உள்ளது.  வருவாய்க்கு வாய்ப்பே இல்லாத சிறிய கோவில்களில் கூட தினசரி ஆறு கால பூஜை நடந்து வரும் நிலையில்,  இக்கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. கோவில் சீரமைக்கப்படாததால் அதன் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தின் வழியாக கோவில் மதில் சுவரைத் தாண்டி சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

Read more »

783 புதிய டாக்டர்களை நியமிக்க கவுன்சிலிங்




               அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 783 டாக்டர் பணியிடங்களை நிரப்ப, வரும் 23 முதல் 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்க உள்ளது.

சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,503 டாக்டர்கள், 25 முறை கவுன்சிலிங் நடத்தி நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 783 டாக்டர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ளது.

               இந்த பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள நபர்களுக்கு, வரும் 23, 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடக்கும்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்று மாலையே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். உத்தரவு பெற்றவர்கள் 15 நாட்களில் பணியில் சேர வேண்டும். அழைப்புக் கடிதம் வராதவர்கள், சுகாதாரத் துறை இணையதளத்தில் பட்டியலை பார்த்து, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.

Read more »

கடலூர் அருகே துணிகரம்: பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து நகை பறித்த கொள்ளையன்; மோதிரத்தை தராததால் விரலை துண்டித்து எடுத்து சென்றான்

கடலூர்:

             கடலூர் அருகே தூக்கணாம்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 40). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் கலியம்மாள், சுமதி ஆகியோரும் ஏம்பலத்தில் நேற்று மாலை நடந்த காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

              இரவு 10 மணியளவில் தென்னம்பாக்கம் அழகர் கோவில் அருகே வந்த போது பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடீரென கலியம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். இதனை பார்த்ததும் கெங்கம்மாளும், சுமதியும் பயந்து ஓடிவிட்டனர்.

                 இதையடுத்து அந்த ஆசாமி கலியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டான். பின்னர் கலியம்மாளிடம் இடது கை சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தரும்படி அந்த ஆசாமி கூறினார். ஆனால் கெங்கம்மாள் கழற்றி தரமறுத்து விட்டார்.

              இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் கலியம்மாளின் இடதுகை சுண்டு விரலை கத்தியால் வெட்டி மோதிரத்தோடு எடுத்து சென்று விட்டான். இதனால் கெங்கம்¢மாள் மயங்கி விழுந்தார். இதற் கிடையே நடந்த சம்பவம் குறித்து கெங்கம்மாளும், சுமதியும் கிராமத்துக்கு சென்று தெரிவித்தனர். கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

               பின்னர் மயங்கி கிடந்த கலியம்மாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விரலை துண்டித்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Read more »

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு: 19-ந் தேதி ஊர்வலம்

நெய்வேலி:
 
              நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியது:-
 
           நெய்வேலி என்.எல்.சி.யில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தில் 9 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 
              சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் என்.எல்.சி. நிறுவனம் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
 
             எனவே வருகிற 19-ந்தேதி மாலை 3 மணிக்கு நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் எப்போது ஈடுபடுவது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

கடலூர்:

 
           கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
ஒவ்வொரு நாளும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வருமாறு:-

 
                குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 16-ந் தேதி காலையில் திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. குறவன்மேடு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. ஆடூர் அகரம் கிழக்கு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. வெ.பிள்ளை பாளையம் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா. குருவப்பன் பேட்டை, வரதராஜன்பேட்டை ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
           கடலூர் மாவட்டம் 17-ந் தேதி காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. நத்தமலை ஊராட்சி அலுவலகத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. விருத்தாசலம் அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா. அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா. முதனை ஊராட்சியில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா.

 
            18-ந் தேதி உள்மருவாய் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. வடலூர் பேரூராட்சியில் 5 புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா. வடலூர் பேரூராட்சி வார்டு 9, 10-ல் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
          மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசுகட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Read more »

திருக்குறளை இப்படியும் கொல்லலாமா?


தவறாகவும், குறள் வெண்பா முறையை மீறியும் எழுதப்பட்டுள்ள திருக்குறள் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).
 
விருத்தாசலம்:

          விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக மதில் சுவரில் குறள் வெண்பா முறையை மீறியும், தவறாகவும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை கவனித்து திருத்திக்கொள்ள வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

            தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையின் அழகைக் கூட்டும் வகையில் அந்தந்த நகரங்களின் சிறப்புகளை விளக்கக்கூடிய ஓவியங்களையும், திருக்குறள் மற்றும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளையும் எழுதி வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் இந்த பணி நிறைவு பெற்றுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

            இதேபோல் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு சொந்தமான மதில் சுவரில் திருக்குறளை எழுதியுள்ளனர்.÷இதில் சில குறள்கள் தவறாகவும், குறள்வெண்பா முறைக்கு மாறாகவும் எழுதப்பட்டுள்ளன. மேல் வரியில் நான்கு சீரும், கீழ் வரியில் 3 சீரும் என்ற முறையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது. 

            ஆனால் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறளானது மேல் மற்றும் கீழ் வரிகளில் 3 சீர்களாக எழுதியுள்ளனர். அதேபோல் மேல்வரியில் 4 சீரும் கீழ்வரியில் 4 சீர்களில் குறள் முடிவது போன்றும் எழுதியுள்ளனர். மேலும் திருக்குறளில் முதல் அடி தொடங்குவதற்கு நேராகவே இரண்டாவது அடியும் தொடங்கும். இந்த அமைப்பு முறையையும் மாற்றி எழுதியுள்ளனர்.

                மக்கள் கூடும் இடங்களில் திருக்குறள் உள்ளிட்ட உலக அறிஞர்களின் பொன்மொழிகளை எழுதிவைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்று தவறாக எழுதப்படுவதை அதிகாரிகள் கவனித்து அவற்றை உடனடியாக திருத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்களில் உள்ள தவறுகளை திருத்த நெடுஞ்சாலைத்துறை முன்வருமா?

Read more »

வேப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

சிறுபாக்கம்:

              வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

              அறக்கட்டளை தாளாளர் முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் பவானி, கனிமொழி முன்னிலை வகித்தனர். முதல்வர் பசுபதி வரவேற்றார்.விழாவில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் கலியபெருமாள் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் மிஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கல்லூரி முதல்வர்கள் ராஜேந் திரன், பிரபாகர், அன்பு, தி.மு.க., ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, ராஜேந்திரன், வெங் கடேசன், குமணன், ஊராட்சி தலைவர்கள் ரவிக்குமார், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

கடலூர்: 

            புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.

                கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக 450 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் முறை குறித்து விளக்குவதற்காக தமிழ் நாடு ஹஜ் கமிட்டி சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடலூர் கே.எஸ்.ஆர்., மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் முகமது ரபீத் வரவேற்றார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் பயிற்றுனர்கள் இப்ராகிம் ஜனாப் ராஜா முகமது, ஜனாப் கமாலுதீன் பயிற்சி அளித்தனர். செம்மண்டலம் பள்ளி வாசல் ஷர்புதீன் ரப்பாணி சிறப்புரையாற்றினார்.

                  ஹஜ் கமிட்டி கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுமான், நியாஸ் அகமது, பாசுல் பாஷா, சையது சலாவுதீன், சையது மொகைதீன், அப் சல், சையது இம்தியாஸ், ஜாபர்சேட், அமானுல்லா, வக்கீல்கள் சங்கர், கவிப்பிரியா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Read more »

மாநில அளவிலான 27வது யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயராம் கல்லூரி மாணவர் முதலிடம்

கடலூர்: 

               திருப்பூரில் நடந்த மாநில அளவிலான 27வது யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயராம் கல்லூரி மாணவர் முதல் பரிசு பெற்றார்.
திருப்பூரில் மாநில அளவிலான 27வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்ப்பியன்ஷிப் போட்டி நடந்தது. 

               இப்போட்டியில் கடலூர் ஜெயராம் கல்லூரி மாணவர் திலீபன் (3ம் ஆண்டு ) அத்லடிக், காமன், ரேங்கிங் பிரிவுகளில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி இயக்குனர் சந்திரசேகர், பேராசிரியர் ராமலிங்கம், சிறப்பு அதிகாரி ராஜா, உடற்கல்வி இயக்குனர் இஸ்ரேல் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

Read more »

வி.ஏ.ஓ., விண்ணப்பம் அனுப்ப கடலூர் தலைமை தபால் நிலையத்தில் குவியும் கூட்டம்

கடலூர்: 

               கடலூர் தலைமை தபால் நிலையத்தில் வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண் ணப்பம் அனுப்ப குவிந்தனர். டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள 2,653 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட் டுள்ளது. 

               குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு என்பதால் லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்பி வருகின்றனர். இது வரை மாநிலத்தில் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் மூலர் 13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

                    இதனால் தினமும் தபால் நிலைய அலுவலகங்களில் விண்ணப்பம் அளிப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை கடலூர் தலைமை தபால் நிலையத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தினம் 500க்கும் மேற்பட்டவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வருகின்றனர். இதனால் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தினமும் அதிகளவில் கூட்டம் கூடுகிறது.

Read more »

சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - ம.தி.மு.க. வெளிநடப்பு

சிதம்பரம்: 

             சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானத்தை கண்டித்து நகர மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

                  சிதம்பரம் நகர மன்ற கூட்டம் தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.

                 கூட்டத்தில் சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒட்டு மொத்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்த தீர்மானத்தை கண் டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க., கவுன்சிலர் கள் மணிவேல், சிவராம தீட்சிதர், செந்தில் குமார், ஜெயவேல், சரோஜா, குமார் மற்றும் ம.தி.மு.க., சீனுவாசன் ஆகிய 7 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

ரமேஷ் (பா.ம.க.,): 

                  சிதம்பரம் நகரில் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கொடுக்கப்பட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது சாத்தியமில்லாதது, லாட்ஜ், திருமண மண்டபங்களில் கூடுதல் தொகை வசூலிக்கலாம். இது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.,): 

                 நகரில் ஏற்கனவே வீடுகளுக்கு உள்ள குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை அதிகம் உயர்த்த வேண்டாம். புதிய இணைப்பு கேட்பவர்களிடம் உயர்த்தி வசூலிக்கலாம். மேலும் லாட்ஜ் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தலாம்.

அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): 

               சமீபத்தில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் சிதம்பரம் நகரில் குடிசைப் பகுதி மேம் பாட்டுத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 392 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட் டுள்ளதாக தவறான புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 147 வீடுகள் தான் கட்டி முடிக்கப்பட் டுள்ளதாக கமிஷனர் கூறுகிறார். ம.கம்யூ., கூட்டத்திலும், இந்த கூட்டத்திலும் தலைமை ஏற்ற நீங்கள் எந்த கூட்டத்தில் பேசியது சரி, இதுபோன்று பொய் யான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.,): 

                 சிதம்பரம் மேம்பாலம் அருகே இலவச கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை தற்காலிகமாக மூடவேண்டும். (தி.மு.க., கூட்டணி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அந்த கழிவறையை மூட டேபிள் தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்து உடனடியாக நிறைவேற்றப்பட்டது)

மணிகண்டன் (தி.மு.க.,): 

                 சிதம்பரம் தெற்கு வீதியில் காலை 11 மணிக்கு குப்பை அள் ளப் படுகிறது. எனவே நகரில் நான்கு வீதிகள், நான்கு சன்னதிகள், பஸ் நிலையம், வேணுகோபால் தெரு ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை, நகராட்சியில் தற்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 30 துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Read more »

அகில இந்திய கராத்தே போட்டி: குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம்

குறிஞ்சிப்பாடி: 

              ஐயப்பன் ஷீட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் 33ம் ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டியில் குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம் பெற்றார்.

                      வேலூரில் இயங்கி வரும் ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் அகில இந்திய அளவிலான 33ம் ஆண்டு கராத்தே போட்டிகள் நடந்தது. வேலூர் ரீகா இயக்குனர் டாக்டர் அகமத் தலைமை வகித்தார். குருபிரசாத், டாக்டர் ரெட்டி முன்னிலை வகித்தனர். வேலூர் ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஜப்பான் கிராண்ட் மாஸ்டர் டோஷிரோ இணகாகி மாஸ்டர்ட் ஜக்கா கிபிகாஜி போட்டிகளை நடத்தினார். இதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சென்சாய் கராத்தே பள்ளி மாணவி இனியால் கருப்புப் பட்டைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவியை சென்சாய் ராமமூர்த்தி, கண்ணதாசன் பாராட்டினர்.

Read more »

இறகுப் பந்து கழக உள்விளையாட்டு அரங்கு திறப்பு

கடலூர்: 

                   கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் என்.ஜி.ஓ., இறகுப்பந்து கழக உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடந்தது.

                   இறகுப் பந்து கழக தலைவர் அகில்பாட்சா தலைமை தாங்கினார். செயலாளர் ரகு வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் செல்வம் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். உள்விளையாட்டரங்கை முன்னாள் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட இறகுப் பந்து கழக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் குத்துவிளக்கேற்றினார்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் கோஷ்டி மோதல்: ஏழு பேர் கைது

குறிஞ்சிப்பாடி: 

             முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் தாக்கிக் கொண்டதில் 26 பேர் மீது வழக்குப் பதிந்து 7 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.

                 குறிஞ்சிப்பாடியில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு பாட்டுக்கச்சேரி நடந்தது. இதில் அயன்குறிஞ்சிப்பாடி காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே தகராறு ஏற் பட்டது. இதனையடுத்து அயன்குறிஞ்சிப்பாடி வழியாக கல்குணம் சென்றவர்களை 30க்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் கந்தவேல் (40), சம்பத்குமார் (20), சபரிராஜன் (18), ரஞ்சித்குமார் (18) உட்பட ஏழு பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

                    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அயன்குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், சேகர், முத்தையன், கோடிநாதன், தயாளன், சுப்ரமணியன், வடிவேலு ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior