உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

கடலூரில் பேனருக்கு கட்டுப்பாடு சாரத்துக்கு இல்லையா?


 
கடலூர்:  
 
                 டிஜிட்டல் பேனர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேனர்களைக் கட்டுவதற்கான கழிகளால் அமைக்கப்படும் சாரத்துக்கு இல்லையா? என்ற கேள்வி கடலூரில் எழுந்துள்ளது. மேலும் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறிய செயலாகவே, பேனர் பிரச்னை உருவெடுத்து இருக்கிறது.
 
                   அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சாலை நெடுகிலும் பெரும் பொருள் செலவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது, நகரங்களில் புதிய கலாசாரமாக மாறி வருகிறது.ஏற்கெனவே தமிழகம் முழுவதும் மிகப் பெரிய விளம்பர பேனர்கள் வைத்ததால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அந்த விளம்பரங்களுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்து, கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.ஆனால் அந்த விளம்பரங்களையும் மிஞ்சும் வகையில் பன்மடங்கு பிரமாண்டமான  டிஜிட்டல் பேனர்களை அரசியில் கட்சிகளைச் சேர்ந்தோர், சாலை நெடுகிலும் வைக்கத் தொடங்கி இருப்பது, நகரங்களில் பெரும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தோற்றுவித்து வருகிறது.நிகழ்ச்சிக்கு, 2 நாள்களுக்கு முன்பு வைத்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிட வேண்டும் என்று பேனர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. 
 
                    இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவது குறித்து அண்மையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபம் அடைந்து, உரிய நேரத்தில் பேனர்களை அகற்றிவிடுமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடலூரில் டிஜிட்டல் பேனர்களுக்காக சவுக்குக் கழிகளால் கட்டப்பட்ட சாரம், பேனர்கள் அகற்றப்பட்ட பிறகும் கடந்த 15 நாள்களாகப் பிரிக்கப்படாமலும் அகற்றப் படாமலும் இருப்பது, தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். டிஜிட்டல் பேனர்களை வைத்த அரசியல் கட்சியினர், ஏனைய பிரமுகர்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, மறுநாளே அகற்றிவிட்டனர். ஆனால் சாரம் கட்டியவர்கள் இன்னமும் அகற்றாமல் இருப்பது, அவர்களுக்கு என்று தனியாக விதிகள் ஏதும் உள்ளனவோ என்ற ஐயத்தைப் பொதுமக்கள் மனதில் தோற்றுவித்துள்ளது. 
 
                 பஸ் நிறுத்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை மறைத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், பல இடங்களில் குழித் தோண்டியும் கட்டப்பட்டு இருக்கும் இந்தச் சாரங்களால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.இன்னொரு நிகழ்ச்சிக்கு, பேனர் வைக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் சாரத்தைக் கட்டியவர்கள் விட்டு வைத்து இருக்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.இது குறித்து கடலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டற்கு, "பேனர்களையும் சாரங்களையும் உடனே அகற்றிவிடுமாறு கூறிவிட்டோம். எனினும் அவர்கள் ஏன் அகற்றாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று வியப்பு தெரிவித்தனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே கைவிரித்தால், யார்தான் நடவடிக்கை எடுப்பது என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவரம் அறிந்த பொதுமக்கள்.

Read more »

விதை நெல் பிற மாநிலங்களை நம்பி இருக்கும் தமிழகம்


தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன.
 
கடலூர்: 

                   தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 325 லட்சம் ஏக்கரில் சாகுபடிப் பரப்பளவு 138 லட்சம் ஏக்கர். இதில் 44.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 34.40 லட்சம் ஏக்கரில் சம்பா நெல், ஏனைய இரு குறுகிய கால பருவங்களில் 10.35  லட்சம் ஏக்கரில் குறுகியகால நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறன.சம்பா பருவத்தில் ஏக்கருக்கு 30 கிலோவும், குறுவை பருவத்தில் ஏக்கருக்கு 40 கிலோவும் விதை நெல் தேவை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                     ஆனால் வேளாண் துறை சம்பா பருவத்துக்கு 24 கிலோவும், குறுவைப் பருவத்துக்கு 16 கிலோவும் விதை நெல் போதும், செம்மை நெல் சாகுபடி முறையில் மிகக் குறைந்த நெல் விதையே போதும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.எனவே சராசரியாக ஏக்கருக்கு 30 கிலோ வீதம் கணக்கிட்டால் ஆண்டுக்கு 44.75 லட்சம் ஏக்கருக்கு 1.34 லட்சம் டன் விதை நெல் தேவைப்படும். விவசாயிகளின் விதை நெல் தேவையில் 17 சதவீதத்தை, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் விதைக் கொள்கை.17 சதவீதம் நெல் விதையை வேளாண் துறை, அரசு விதைப் பண்ணைகள் மூலமாகவும், அனுமதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் விநியோகிக்கின்றன. 
 
                    தமிழகத்தில் அனைத்துப் பயிர்களுக்கும் கடலூர் வண்டுராயன்பட்டு, மிராளூர் உள்ளிட்ட 37 அரசு விதை உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இவைகள் தாங்களே பயிரிட்டு கிடைக்கும் விதை நெல் மூலமாகவும், அனுமதி பெற்ற விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும், வேளாண் துறைக்கு வழங்குகின்றன.பல ஆண்டுகளில் இது முடியாமல்போய், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்தும் வழங்குகிறது. மொத்தத் தேவையில் 17 சதவீதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தேவையான விதை நெல் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் துறை அறிக்கை வெளியிடுகிறது.

                 மேற்கொண்டு தேவைப்படும் விதை நெல் முழுவதும், கூட்டுறவுச் சங்கங்கள் (மிகக்குறைந்த அளவில்) தனியார் விதை நெல் விற்பனை நிலையங்கள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், விவசாயிகள் வைத்து இருக்கும் விதை நெல் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 60 சதவீதம் விதை நெல் ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருகின்றன.ஆனால் இவற்றின் தரம் கேள்விக்குறியாக உள்ளன என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவரும் விதைநெல் உற்பத்தி விவசாயியுமான விஜயகுமார் கூறுகையில், 

                   "தமிழக விதை நெல் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்கிறது. விதை நெல்லை பதப்படுத்தும் அரசு விவசாயப் பண்ணைகளின் உற்பத்தித் திறன் போதுமானதாக இல்லை. ஒரு கிலோ விதைநெல்லுக்கு நமது அரசு, பிபிடி ரகத்துக்கு  18-24}ம், பொன்னி ரகத்துக்கு  16-55}ம் வழங்குகிறது.ஆனால் வேளாண்துறை தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்யும் விதை நெல்லுக்கு, கிலோ  28 வரை விலை கொடுக்கிறது. ஆனால் நமது விவசாயிகளுக்கு கிலோவுக்கு  25 விலை கொடுங்கள் என்று 10 ஆண்டுகளாக கேட்கிறோம், ஆனால் பதில் இல்லை.விதை நெல்லுக்கு விலை குறைவாக வழங்குவதால், விதைநெல் பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது' என்றார். தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன. இந்த விதைநெல்லில் பல நேரங்களில் கலப்படம் நேர்ந்து விடுகிறது.கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பிபிடி ரகம் நெல்லில் கலப்படம் இருந்ததால், 15 ஆயிரம் ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்டதாக மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

                      தமிழகத்தில் விதை நெல்லைச் சேமிக்க இடவசதி இல்லை. செலவு அதிகம் ஆகிறது. விதை நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் அரசு பணம் வழங்குவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் விதைநெல் தரம் கேள்விக்குறியாக உள்ளது. விதை நெல் உற்பத்திக்கு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் அரசு அதிக சலுகைகள் அளிக்கின்றன. நமக்குத் தேவையான விதை நெல்லை தமிழகத்திலேயே உற்பத்தி செய்தால்தான், தமிழகத்தில் நெல் உற்பத்தியை பஞ்சாப், ஹரியாணா போன்று உயர்த்த முடியும் என்றும் ரவீந்திரன் கூறினார்.

Read more »

மேட்டூர் அணையிலிருந்து போதுமான நீர்வரத்து இல்லை: கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தாமதம்


 
கடலூர்:
 
                 மேட்டூர் அணையிலிருந்து போதுமான நீர் திறந்து விடப்படாததால், கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி தாமதம் ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   
 
                கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.   ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதிலும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கல்லணை ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்டது. கடலூர் மாவட்ட பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பெரும்பகுதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்குத் திறந்து விடப்பட்டது. 
 
                    இதன் மூலம் சென்னைக்கு குடிநீருக்கு ஏற்றுவது பாதிக்கப்படாமல் இருந்தது. எனினும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் திறக்கப்படவில்லை.  செப்டம்பர் 11-ம் தேதி வீராணம் ஏரி பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. வீராணம் முழு அளவுக்கு நிரம்பாத நிலையில், அதன் பாசன வாய்க்கால்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடும் நீரின் அளவு, வெள்ளிக்கிழமை 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.   
                
                கல்லணைக்கு 12,837 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  கடலூர், நாகை மாவட்ட சம்பா பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து நாகை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தெற்கு ராஜன் வாய்க்காலில் 323 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டப் பாசனத்துக்கு வடவாறில் 800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 178  கனஅடி வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.   வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கன அடி நீர் வழங்கப்படுகிறது. இதில் 73 கன அடி நீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. 350 கன அடி நீர் வீராணத்தின் 28 வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டு உள்ளது. வேளாண் பணிகளுக்கு இது போதுமானதாக இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.  
 
                       மேட்டூர் அணை பாசனத்துக்கு ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான டெல்டா பாசனப் பகுதிகளில் இன்னமும் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.   இதே அளவு தண்ணீரே தொடர்ந்து திறந்து விடப்பட்டால், சம்பா நாற்றுவிடும் பணிகள் அக்டோபர் முதல் வாரத்துக்குக் தள்ளப்பட்டு, நடவுப் பணிகள் நவம்பர் முதல் வாரத்துக்குச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பைச் சந்திக்கும் நிலையும், சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் கேள்விக்குறியாகும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.   
 
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
                  மேட்டூர் அணை ஜூலை 28-ல் திறந்தும், போதுமான அளவுக்குத் தண்ணீர் விடப்படாததால், கடலூர் மாவட்ட காவிரி கடைமடைப் பகுதிகளை காவிரி நீர் இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை.   வீராணத்தில் திறக்கப்பட்ட நீர் வயல்களுக்குள் ஏறிப்பாயவில்லை. இதனால் புளியங்குடி, எய்யலூர், மோவூர், முட்டம் பகுதிகளில் வாய்க்கால் நீரை ஏற்றம் அமைத்து நாற்றங்கால் பணிகளைச் செய்து வருகிறார்கள்.   சுமார் 1000 ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றங்கால் தயார் செயப்பட்டு இருக்கிறது. பல பகுதிகளில் நாற்றங்கால் பணிகளே இன்னமும் தொடங்கப்படவில்லை. 
 
                      இதேநிலை நீடித்தால் பெரும்பாலான பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில்தான் தொடங்கும். நடவுப்பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பரில்தான் முடிவடையும்.   இதனால் அறுவடை பின்னுக்குத் தள்ளப்படும். கடைமடைப்பகுதிகள் தண்ணீர் பற்றாக் குறையையும் சந்திக்க நேரிடும். சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் இந்த ஆண்டு செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். எனவே கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கூடுதலாக 1000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றார்.

Read more »

Prize winners of Tamil competitions

CUDDALORE: 

                 The Tamil Development Department recently conducted various competitions to test the proficiency level of school and college students in Tamil language.

The winners will participate in State-level competitions, which will be held in Chennai. 

The winners at the college level are as follows:

                   Poetry competition – first prize of Rs. 1,000 won by A. Arokyaraj, final year B.A (English) student of St.Joseph's Arts and Science College; essay competition – first prize of Rs. 1,000 bagged by K. Chitra, first year B.A. (English) student of Kandasamy Naidu College for Women, Cuddalore; and, oratorical competition – first prize of Rs. 1,000 won by C. Murugananthan, final year M.A. (Tamil) student of Annamalai University, Chidambaram.

The winners at the school level are as follows:

               Poetry competition – first prize of Rs. 1,000 was won by R. Sridevi, Plus-One student of the Nellikuppam Government Girls Higher Secondary School, and, the second prize of Rs. 500 was won by S.Shanmugapriya, Plus-One student of the Thirupadiripuliyur Government Higher Secondary School.

Essay competition – 

                 first prize of Rs. 1,000 was won by A.Sundari, Plus-Two student of the Seplanatham Government Higher Secondary School, and, the second prize of Rs. 500 was won by V.Nirosha, Plus-One student of the Cuddalore Port Government Girls Higher Secondary School.

Oratorical competition – 

                   first prize of Rs. 1,000 was bagged by S.Bharathi, Plus-One student of the Cuddalore Manjakuppam Government Higher Secondary School, and second prize of Rs. 500 was bagged by A.J.Shajika, Plus-One student of the Nellikuppam Government Girls Higher Secondary School. Assistant Director (Tamil Development) K.Aaroon Rashid was present at the prize distribution function.

Read more »

கடலூரில் சூறைக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் சேதம்


கடலூரை அடுத்த வழிசோதனைபாளையத்தில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த வாழை மரங்கள்.
 
கடலூர்:
 
                  : கடலூரில் சனிக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் சேதம் அடைந்தன; மின் கம்பங்கள் சாய்ந்தன. இரவில் மின் விநியோகம் தடைபட்டது. கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவும் கனமழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. 
 
                   இரவு 12 மணி வரை சூறைக்காற்று,  இடி மின்னலுடன் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  சூறாவளிக் காற்று காரணமாக ராமாபுரம், புதூர், வழிசோதனைபாளையம், சாத்தங்குப்பம், காட்டுப்பாளை, ஒதியடிக்குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன. மொத்தம் 50 ஏக்கரில் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பதாக ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார். 
 
                          நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் பகுதிகளில் 50 ஏக்கரில் கரும்பு பயிர் சாய்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். கடலூர் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.இதனால் அப்பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நகரில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மழைநீர் தேங்கி மீண்டும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   இந்த மழை, சம்பா நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

Read more »

தமிழகத்தில் 40ஆயிரம் கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் 2 ஆண்டுகளில் தேவைக்கும் கூடுதலாக மின்உற்பத்தி



சிதம்பரத்தில் குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகள் வழங்கும் முன்னோடி திட்டத்தை குத்து விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

சிதம்பரம்:

                 தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் தேவைக்கும் கூடுதலாக 8 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                      தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிதம்பரத்தில், குண்டு பல்புக்கு பதிலாக அதே விலையில் சிறுகுழல் விளக்குகள் வழங்கும் முன்னோடித் திட்ட தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:

                   தமிழகத்தில் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தில்லி சென்று அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது 4 முறை மின்வெட்டு ஏற்பட்டது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 மணி முதல் 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் 2 மணி நேரம் மின்வெட்டு. கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 

                      இப்போது மக்கள் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.÷இப்போது நமக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பல கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு சமாளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதியின் முயற்சியால்  |40 ஆயிரம் கோடியில் தூத்துக்குடி, கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்உற்பத்தி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

                  இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்தில் தேவைக்கும் கூடுதலாக  மின்உற்பத்தி செய்யப்படும். வரும் 2 ஆண்டுகளில் மின்வெட்டே இருக்காது. நாம் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை அளிக்க முடியும். குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகள் பொருத்துவதன் மூலம் ஓராண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் சி.பி.சிங் தலைமை வகித்துப் பேசியது: 

                    தமிழகத்தில் 1 கோடியே 40 லட்சம் நுகர்வோர் வீடுகளில் குண்டுபல்பு மாற்றப்பட்டு சிறுகுழல் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சம் அதிகரிப்பு, மின் கட்டணம் சேமிப்பு உள்ளிட்ட 2 பலன்கள் கிடைக்கிறன. இப்போது மின்திருட்டு, மின்கசிவு உள்ளிட்டவைகளில் 18 முதல் 19 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் முதல்கட்டமாக  110 பெருநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு |400 கோடி செலவில்  மின்இழப்பை தடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

                  இரண்டாவது கட்டமாக 2 ஆயிரம் கோடி செலவில் மின்கம்பிகள் மாற்றுவது, புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மூலம் மின் இழப்பு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகளில் மின்இழப்பீடு 3 முதல் 4 சதவீதமாகக் குறைந்துவிடுமென சி.பி.சிங் தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் முன்னிலை வகித்துப் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 67 ஆயிரத்து 56 வீடுகளில் முதல்கட்டமாக 2 லட்சம் வீடுகளில் குண்டுபல்புகளை மாற்றி சிறுகுழல் விளக்கு பொருத்தப்படவுள்ளது என்றார்.

                          மின்சார வாரிய ஆராய்ச்சி மேம்பாட்டு திட்ட தலைமைப் பொறியாளர் சி.பி.பெர்லி,  சில்வர் ஃபர் நிறுவனம் துணைத் தலைவர் ஜெயின் ஆகியோர் திட்டத்தை விளக்கிப் பேசினர். துரை.ரவிக்குமார் எம்.எல்.ஏ. நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இரா.மாமல்லன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கடலூர் மேற்பார்வை பொறியாளர் எஸ்.எம்.ரவிராம் நன்றி கூறினார். விழாவில் கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் எம்.காமராஜ், சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் இரா.செல்வசேகர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், பி.மணி உள்ளிட்ட பங்கேற்றனர்.முன்னதாக விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் கே.வேணுகோபால் வரவேற்றார்.

Read more »

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம்



கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால், கடலூர் - பண்ருட்டி (பாலூர் வழி)

கடலூர்:

                         கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றன. திருமணத்துக்கு வந்தவர்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக, அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கூட்டத்தில் சிக்கி மணமக்கள் கூட, வெளியே வர முடியாமல் தவித்தனர். 

                     கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இங்கு வருவது வழக்கம்.  திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொள்வதாக பலர் வேண்டுதல் செய்து கொள்வதால், முகூர்த்த நாள்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் திருமணம் நடப்பது வழக்கம். ஒரே நாளில் 100 திருமணம் கூட நடந்து இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. 

                     இதனால் சிறிய ஊரான திருவந்திபுரம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசலில் திக்குமுக்காடியது. பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்திருந்த மணமக்களுக்கு, அதிகாலை 3 மணி முதல் முற்பகல் 11 மணி வரை 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து முடிந்தன.  மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோயிலுக்குத் தரிசனத்துக்காக வந்தவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. திருவந்திபுரம் கிராமத்துக்குள் எங்கு நோக்கினால் மணமக்கள் தென்பட்டனர்.  திருமண வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், திருவந்திபுரத்துக்குள் உள்ள சாலைகள், பிரதானச் சாலையில் இருந்து திருவந்திபுரம் செல்லும் இணைப்புச் சாலை, கடலூர் -பண்ருட்டி (பாலூர் வழி) மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

                        கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெல்லிக்குப்பம் வழியாகத் திருப்பி விடப்பட்டன.÷அதிகாலையில் திருமணம் முடித்த மணமக்கள் திருவந்திபுரத்தை விட்டு வெளியேறுவதிலும், தாமதமாக வந்த மணமக்கள் உரிய நேரத்தில் கோயிலுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.  இத் திருமணங்களால் திருவந்திபுரத்தில் உள்ள பல வீடுகள் ஹோட்டல்களாக மாறியிருந்தன. பல திருமணங்களுக்கு வீடுகளில் சிற்றுண்டி தயாரித்து வழங்கப்பட்டது.  திருமணத்துக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் தாங்கள் சந்திக்க வேண்டிய மணமக்களை தேடி அலைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கோயிலில் ஒரே நேரத்தில் சுமார் 30 திருமணங்களை மட்டுமே நடத்தலாம். இதனால் ஒரு ஜோடிக்கு திருமணம் நடக்கும்போதே, மற்றொரு ஜோடி அருகிலேயே திருமணத்துக்காக காத்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                     இந்த ஒரு மாதத்தில் மட்டும் 500 திருமணங்கள் இங்கு நடைபெற்று உள்ளன. இங்கு திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் முன்னரே தெரிவித்து, படிவம் பூர்த்திசெய்து கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணம் நடைபெறும்போதும் மணமக்கள் மற்றும் சாட்சிகள் கோயில் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். ஆவணி மாதத்தில் கடைசி முகூர்த்தம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.  அதிக எண்ணிக்கையில் திருணங்கள் நடந்ததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண  1 கோடி செலவில் கேப்பர் மலை மீது திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரியில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு கோயிலுக்குள் திருமணம் அனுமதிக்க மாட்டோம்.

                            பக்தர்கள் சிரமமின்றி வந்து போகலாம்.  எனினும் திருவந்திபுரத்துக்குள் வரும் சாலை ஒருவழிப் பாதையாக உள்ளதே நெரிசலுக்குக் காரணம். மாற்று வழி ஒன்றை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம். கோயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள் என்றார்.

Read more »

திட்டக்குடி துணை மின் நிலையத்தில் கோளாறு: தண்ணீர் இன்றி நெல், கரும்பு பயிர்கள் பாதிப்பு

கடலூர்:

                  திட்டக்குடி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, கடந்த 3 மாதமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ÷திட்டக்குடி துணை மின் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், பிரேக்கர் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இருந்து, பேக் ஃபீடிங் முறையில் திட்டக்குடி பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 

                    திட்டக்குடி துணை மின் நிலையத்தில் பிரேக்கர் பழுதடைவதும் அதனை சீரமைப்பதும் அது மீண்டும் பழுதடைவதும் வழக்கமாக உள்ளது. இதனால் திட்டக்குடி தாலுகா பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.  திட்டக்குடி தாலுகாவில் இப்போது 8 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிப் பணிகள் நடந்து வருகின்றன. 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. மின் விநியோக பாதிப்பால் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நீர்ப்பாசனம் செய்வதில், பெரும் பிரச்னை இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ÷குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய பம்புசெட் மோட்டார்கள் இயங்குவதில் சிரமம் இருப்பதாகவும், வீடுகளில் குழல் விளக்குகள் கூட எரிவது இல்லை என்றும் பொதுமக்கள்  கூறுகின்றனர். 

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விருத்தகிரி கூறுகையில், 

                     திட்டக்குடி துணைமின் நிலையத்தில் பிரேக்கர் பழுதடைந்து 3 மாதமாகிவிட்டது. அது இன்னமும் மாற்றப்படவில்லை. மின் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எனினும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மோட்டார்கள் இயங்கவில்லை. திட்டக்குடி வட்டத்தில் போதுமான மழையும் இல்லை. இதனால் கரும்புப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சம்பா நடவுப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

திட்டக்குடி மின்வாரிய உதவிக் கோட்டபொறியாளர் கிருஷ்ணன் கூறுகையில்,

                     திட்டக்குடி துணை மின்நிலையத்தில் சேதமடைந்துள்ள பிரேக்கரை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மின் விநியோகம் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தொழார் ஃபீடரில் இருந்தும், பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்குகிறோம். எனினும் குறைந்த மின் அழுத்தம் இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். வேறு ஃபீடரில் இருந்து மின் இணைப்பு வழங்க, மின் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீரடையும். அதே நேரத்தில் திட்டக்குடி துணைமின் நிலையத்தில் பழுதடைந்த பிரேக்கரை மாற்றுவதற்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம். தொழுதூரில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்பணி முடிந்ததும் திட்டக்குடி தாலுகாவில் மின் விநியோகத்தில் உள்ள பிரச்னைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்றார்.

Read more »

முடிவடையும் நிலையில் வெலிங்டன் ஏரி சீரமைப்பு

கடலூர்:

                         திட்டக்குடி வட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் நிறைவுற்றதால், இந்த ஆண்டு 23 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.÷தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று வெலிங்டன் ஏரி (படம்). 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வெங்கனூர் ஓடையின் குறுக்கே இந்த ஏரி உருவாக்கப்பட்டது.÷திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் 64 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு பிரதானமாக வெள்ளாற்றில் இருந்தும், சிறு சிறு ஓடைகள் மூலமாகவும் தண்ணீர் கிடைக்கிறது. 

                   இந்த ஏரியின் கரை 300 மீட்டர் நீளம், பூமிக்குள் தொடர்ந்து அழுந்திக் கொண்டு இருந்ததால், கரை பலவீனமடைந்து வந்தது. ஏற்கெனவே 8 கோடிக்கு மேல் செலவிட்டும், ஏரிக்கரை பூமிக்குள் அழுந்துவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் ஏரியில் 21 அடிக்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மங்களூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகையின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் கருணாநிதி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புக்கு 20 கோடி ஒதுக்கினார்.÷கரை சீரமைப்புப் பணிகளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் பிடிக்கவில்லை. கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த கரை சீரமைப்புப் பணிகள், 98 சதவீதம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. 

                      30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்கும் வகையில் கரை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று உள்ளன. இன்னும் சில பணிகள் பாக்கி உள்ளன. அவற்றை முடிக்க அரசிடம் நிதி எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த ஆண்டு ஏரியில் 23 அடி உயரத்துக்கும், அடுத்த ஆண்டு 26 அடி உயரத்துக்கும், அதற்கடுத்த ஆண்டு முழுக் கொள்ளளவான 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்கவும் பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை தமிழக பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன் புதன்கிழமை பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார். 98 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதாக அவர் கூறினார்.

                     பாக்கி இருக்கும் சில பணிகளையும் விரைந்து முடிப்பதாக அவர் உறுதி அளித்தார். வெலிங்டன் ஏரியில் 30-க்கும் மேற்பட்ட மதகுகளும், ஷட்டர்களும் உள்ளன. அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.÷வரும் மழை காலத்துக்குள் இப்பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏரியின் பாசன வாய்க்கால்களும் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கொத்தட்டை ஆறுமுகம் கூறுகையில், 

                        "வெலிங்டன் ஏரிப் பாசன வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. அவற்றையும் சீரமைக்க வேண்டும்.÷வெள்ளாற்றின் மூலம் தண்ணீர் வசதி பெறும் வெலிங்டன் ஏரி, பல ஆண்டுகளில் வறண்டு கிடக்கிறது. இதற்கு நிரந்தர தண்ணீர் வசதி கிடைத்தால், வறண்டு கிடக்கும் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களின் பாசனத் தேவையும், குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகும்.

                   முசிறி அருகே கட்டளை உயர்நிலை வாய்க்காலில் இருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வாய்க்கால் வெலிங்டன் ஏரிக்கு அருகில் செல்ல இருந்ததால், வெலிங்டன் ஏரிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே நாமக்கல் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணையில் இருந்து, 50 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டி, வெள்ளாற்றுடன் இணைத்து விட்டால், வெலிங்டன் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்க வாய்ப்பு ஏற்படுவதுடன், ஆத்தூர், சின்னசேலம், திட்டக்குடி விருத்தாசலம், சிதம்பரம் தாலுகாக்களும் பயன்பெறும் என்றார் ஆறுமுகம்.

Read more »

கடலூர் மக்களைக் கவர்ந்த 58 கிலோ லட்டுப் பிள்ளையார்

கடலூர்:

                      கடலூரில் தனியார் இனிப்புக் கடையில் தயாரித்து வைத்து இருந்த, 58 கிலோ லட்டுப் பிள்ளையார் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் (48) மற்றும் அவரது உறவினர்கள் விஜய், வினய் ஆகியோர் கடலூரில் கடந்த 20 ஆண்டுகளாக இனிப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வரும் அவர்கள், விநாயகருக்குப் பிரியமானது லட்டு என்ற ஐதீகம் காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 58 கிலோ எடை கொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். 

                      கடந்த 8 ஆண்டுகளாக இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய லட்டைத் தயாரித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைத்து வருகிறார்கள். 50 கிலோ எடையில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து, இந்த ஆண்டு 58 கிலோ எடைகொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். இந்த லட்டு விற்பனைக்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, மூன்றாம் நாள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டுவிடும் என்றும் ரமேஷ் தெரிவித்தார். 58 கிலோ எடை லட்டை, 8 பேர் 3 நாள்கள் இரவு பகலாக பணிபுரிந்து தயாரித்து உள்ளனர். 20 கிலோ கடலை மாவு, 18 கிலோ சர்க்கரை, 10 கிலோ எண்ணெய், 5 கிலோ நெய், 3 கிலோ முந்திரிப் பருப்பு, 2 கிலோ திராட்சை, மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Read more »

கடலூர் மத்திய சிறையில் பாரதியார் நினைவு தினம்

கடலூர்:

                      கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலையில் மகாகவி பாரதியார் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.  இந்திய விடுதலைக்காக தனது எழுத்துக்கள் மூலம், மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். எனவே அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்ய முயன்றபோது பாரதியார், பிரெஞ்சு ஆட்சிக்குள் இருந்த புதுவைக்கு வந்து, தனது எழுச்சிமிகு எழுத்துப் பணியைச் செய்துவந்தார். ஒருமுறை தமிழகப் பகுதிக்கு வந்த பாரதியாரை ஆங்கிலேய அரசு கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது. பாரதியார் கடலூர் சிறையில் 20-11-1918 முதல் 14-12-1918 வரை சிறைவாசம் அனுபவித்ததாக, சிறைச்சாலைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  எனவே பாரதியாருக்கு கடலூர் மத்திய சிறையில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. 

                          பாரதியார் அடைக்கப்பட்டு இருந்த அறை இரு ஆண்டுகளுக்கு முன் நூலகமாக மாற்றப்பட்டு உள்ளது. சனிக்கிழமை பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு, சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறை அலுவலர் (பொறுப்பு) வேணுகோபால் மற்றும் சிறைக் காவலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.÷சிறைச் சாலைக்குள் உள்ள அவரது நினைவு அறைக்குச் சென்று பாரதியார் படத்துக்கும் மாலை அணிவித்தனர்.

Read more »

கிள்ளை-பரங்கிப்பேட்டை குறுக்கே ரூ. 24 கோடியில் கட்டப்பட்ட பாலம் 14-ல் திறப்பு

சிதம்பரம்:

                           கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறப்பு விழா வருகிற செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) காலை 10 மணிக்கு பரங்கிப்பேட்டையில் நடைபெறுகிறது. 

                    நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் தலைமை வகிக்கிறார். உயர்மட்ட பாலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்துப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்கிறார். சென்னை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமைப் பொறியாளர் வி.அ.சண்முகநாதன் திட்ட விளக்கவுரையாற்றுகிறார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுமுகங்கள் துறை செயலாளர் கோ.சந்தானம் முன்னிலை வகிக்கிறார். பாலம் கட்டும் பணி 2007-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. தற்போது கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது. 

                      இதுவரை பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் சிதம்பரத்துக்கு வருவதற்கு பி.முட்லூர், புவனகிரி வழியாக சுற்றி சிதம்பரம் வந்து கொண்டிருந்தனர். தற்போது பரங்கிப்பேட்டையிலிருந்து நேரடியாக கிள்ளை வழியாக சிதம்பரத்துக்கு வந்துவிடலாம். இதனால் பரங்கிப்பேட்டை-சிதம்பரம் நகருக்கு வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளது. மேலும் அண்ணாமலைப் பல்கலையின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் பரங்கிப்பேட்டையில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அம்மையத்துக்கு இதுவரை புவனகிரி, பி.முட்லூர் வழியாக மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் சென்று வந்தனர். தற்போது அவர்களும் குறைந்த நேரத்தில் செல்ல முடியும் என்பதால் பொதுமக்களும், மாணவர்களும், மீனவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior