உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள்; மாவட்டந்தோறும் இலவச தொலைபேசி எண்கள்

          மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் அதுகுறித்து விளக்கங்கள் பெற மாவட்டந்தோறும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

            இந்த விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பும் பணியில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 1, குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் போன்ற பதவிகளுக்கான தேர்வு முக்கியமானது. இவ்வாறு தேர்வுகளை நடத்தும் போது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாமை, தேர்வுகள் குறித்த சந்தேகங்கள் போன்றவை தேர்வர்களுக்கு ஏற்படும். 

               இந்தச் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள தேர்வர்களும் சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தையே நாட வேண்டிய சூழல் இருந்து வந்தது.தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மட்டுமே மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வர்களின் சந்தேகங்கள் போக்கப்படும். இந்த நிலையில், மாவட்டந்தோறும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த பணிகள் நடைபெறும் அரசுத் துறையின் பிரிவுகளிலேயே சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் எந்தெந்தப் பிரிவுகளில் தேர்வாணையப் பணிகள் நடைபெறும் எனவும், அதற்கான தொலைபேசி எண்கள் எவை என்பது குறித்த விவரங்களும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் இணையதளம்: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பல்வேறு புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலத் துறை அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன.

               இந்தத் தேர்வுகளுக்கான விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. "ஏ பிரிவு' கேள்வித் தாளுக்கு ஒரு நாளிலும், அதற்கு அடுத்த நாளில் பி,சி,டி என மூன்று பிரிவுகளுக்கான கேள்வித் தாள்களுக்கான விடைகளும் வெளியிடப்பட்டுள்ளன.தாற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விடைகள் மீது சந்தேகங்கள், திருத்தங்கள் இருந்தால் அக்டோபர் 7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட விடைகளின் பட்டியல் வெளியாகும்.

மகாராஷ்டிரம் முன்மாதிரி:

         பணியாளர் தேர்வாணைய இணயைதளங்களில் முன்மாதிரி இணையதளமாக விளங்குவது மகாராஷ்டிர மாநிலத்தின் இணையதளமாகும். இந்த இணையதளத்தில் தேர்வுகளுக்கான விடைகள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளன.மகாராஷ்டிர மாநிலத்தைப் பின்பற்றி இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருவது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 


More Details 





Read more »

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா


கடலூர் நகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி.

கடலூர்:

         மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் நகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

             ஏகாம்பரம், தேவநவநாதன் உள்ளிட்ட தியாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கடலூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், நகரத் தலைவர் ரகுபதி தலைமையில், மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நகரின் முக்கிய வீதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர். 

            காந்தி, காமராஜர் சிலைகளுக்கு பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், அருள்பிரகாசம், மாவட்டச் செயலாளர் கலை.விஜயகுமார், வட்டாரச் செயலாளர் கே.கே.ராஜலிங்கம், நகரச் செயலாளர்கள் சிவகவி, செல்வகுமார், துணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் தொகுதித் தலைவர் ராமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி:

            என்எல்சி நிறுவனம் சார்பில் காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி நகர நிர்வாக அலுவலகம் எதிரேயு காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, லிக்னைட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது:

            காந்தியடிகள் இட்ட வலிமையான அடித்தளத்தால் இன்று நமது நாடு பொருளாதாரத்தில் வலிமைமிக்கதாகத் திகழ்கிறது.நாட்டு மக்களிடையே சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து இந்தியாவை ஒரே உணர்வுடைய தேசமாக உருவாக்கப் பாடுபட்டார் என்றார் அன்சாரி. முன்னதாக பகவத்கீதை, பைபிள், திருக்குர் ஆன், திருக்குறள், நாலாடியார் போன்ற புனித நூல்களிலிருந்து கருத்தரைகள் எடுத்துரைக்கப்பட்டன. நெய்வேலி பள்ளிகள், இந்தியக் கிறிஸ்தவ கலாசாரச் சங்கம், நெய்வேலி தமிழ்மன்றக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்புனித நூல்களிலிருந்து கருத்துரை வழங்கினர்.

            தொடர்ந்து நெய்வேலி மகளிர் மன்றம் சார்பில், என்எல்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டன. நெய்வேலி மகளிர் மன்ற தலைவி கிஷ்வர்சுல்தானா அன்சாரி, துணைத்தலைவர் காவேரி சிவஞானம், இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்எல்சி நகர நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சர்வ சமயப் பெருவிழாவில் பங்கேற்ற மும்மதத் தலைவர்கள் (இடமிருந்து) போதகர் ஜெயராஜ், இமாம் ஷவுக்கத்அலி
சிதம்பரம்:

            சிதம்பரத்தின் பல்வேறு இடங்களில் காந்திஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காந்தியடிகளின் 143-வது பிறந்தநாள் விழா சர்வ சமயப்பெருவிழாவாக நடைபெற்றது.

            தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் முன்னிலை வகித்தார். விழாவில் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் குப்புசாமி தீட்சிதர், தேவாலய போதகர் ஜெயராஜ், கொள்ளிடம் தைக்கால் ரஹமானியா பள்ளிவாசல் இமாம் ஷெளகத் அலி ஆகியோர் மும்மத போதனைகளை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியை ஆசிரியர் சோமு தொகுத்து வழங்கினார். அர்ஜூன் நன்றி கூறினார். அண்ணாமலை நகர் பள்ளிவாசல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ்: 

               கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்ததின விழா நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பி.வெங்கடேசன், சி.பி.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.கணேஷ் வரவேற்றார். மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு நகராட்சி தலைவருக்கான காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செந்தில்வள்ளி மாலை அணிவித்தார். நகரச் செயலாளர் என்.சேகர் நன்றி கூறினார்.

விஜய் மக்கள் இயக்கம்: 

            காந்திஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காந்திசிலைக்கு நகரத் தலைவர் எஸ்.அருண்ராஜ், இளைஞரணித் தலைவர் ஆர்.எஸ்.பாலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் ராமலிங்கம், துணைத்தலைவர் கென்னடி, நகர அமைப்பாளர் லிங்கேஷ், மாலிக், குரு, இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விருத்தாசலம் அரசு மருத்துவமனை, வள்ளலார் குடிலில் உள்ளவர்களுக்கு பழம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மணிவாசகம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அன்புச்செழியன், சோஹன்லால்ஜெயின், ஜெய்சங்கர், சங்கர், அருணாசலம், விருத்தகிரி உள்ளிட்டோர் வாழ்த்தினர். லயன்ஸ் சங்க செயலர் அம்பலநாதன் நன்றி கூறினார்.






Read more »

கடலூர் நகராட்சித் தலைவர் பதவி: 13 வேட்பு மனுக்கள் ஏற்பு

கடலூர்:

          கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்த, 13 வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டன.  

கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு

சி.கே.சுப்பிரணியன் (அ.தி.மு.க.), 
கே.எஸ். ராஜா (தி.மு.க.), 
செ.தனசேகரன் (மார்க்சிஸ்ட்), 
சந்திரசேகரன் (காங்கிரஸ்), 
செல்வம் (பா.ஜ.க.), 
ஏ.கே.சேகர் (ம.தி.மு.க.), 
தாமரைச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்) 

            உள்ளிட்ட 13 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.   நகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 13 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இந்த நகராட்சியில் 45 வார்டுகளுக்கு மொத்தம் 298 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. வேட்பு மனுக்கள் பரிசீலனை இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது. அப்போது 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.








Read more »

பண்ருட்டி நகரம், ஒன்றியத்தில் மனுக்கள் பரிசீலனை : 3,541 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்

பண்ருட்டி:

            வேட்பாளர் மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் 3,541 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி நகராட்சி: 

             பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சனிக்கிழமை இருவர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 12 பேர் களத்தில் உள்ளனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு 239 பேர் மனு செய்ததில் வேட்பு மனு பரிசீலனையின் போது 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சனிக்கிழமை 23 பேர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 211 களத்தில் உள்ளனர்.

தொரப்பாடி பேரூராட்சி: 

            தொரப்பாடி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 8 பேர் மனு செய்தனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 57 பேரில் 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 49 பேர் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்: 

           பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்ததில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 201 பேரில் பரிசீலனையின் போது 5 தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 244 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 4 தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,138 பேர் மனு தாக்கல் செய்ததில், 15 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,123 பேர் உள்ளனர்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: 

             அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேர் மனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 161 பேரில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 318 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 1177 பேரில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,169 பேர் உள்ளனர்

              .வெள்ளிக்கிழமை வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி ஆகியவற்றில் 3,541 பேர் களத்தில் உள்ளனர். இதில் மேலும் பலர் அக்டோபர் 3-ம் தேதி வாபஸ் பெறுவர் என எதிர்பாக்கப்படுகிறது.












Read more »

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் நியமனம்

கடலூர் : 

           உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                   கடலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக தமிழக அரசின் பதிவுத்துறையின் தலைவராக பணிபுரிந்து வரும் தர்மேந்திரா பிரதாப்யாதவ் மாநிலதேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தேர்தல் பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அமுதவல்லி, எஸ்.பி., பகலவன், திட்ட இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், வாக்காளர்கள் பட்டியல் மனு தாக்கல், மாவட்டத்தில் உள்ள பதட்டமான ஓட்டுச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

               கடலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை 94897 00399 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகர் ஏதுமிருப்பின் 18004257019 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை உபயோகித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








Read more »

கடலூருக்கு புதுவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்தல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/92c1d7f2-8a39-48bd-b5de-9e601b832222_S_secvpf.gif
 
கடலூர்:

             உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  

               அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரின் டிரைவர் போலீசார் சோதனை நடத்துவதை கண்டதும் காரை திடீரென நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தப்பி ஓடிய அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தென்பெண்ணையாற்றில் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

            இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை திறந்து சோதனையிட்டனர். அப்போது காரின் இருக்கை பகுதியிலும், காரின் டிக்கி பகுதியிலும் பெட்டி, பெட்டியாக பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 40 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரம் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் அதில் இருந்தது.

              இந்த பிராந்தி பாடடில்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பிராந்தி பாட்டில்கள் மற்றும் காரின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.   இதையடுத்து பிராந்தி பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து போலீசார்  கடலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரையும் தேடி வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior