உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 07, 2010

இலவச மின் மோட்டார்களும் விவசாயிகளின் சங்கடங்களும்

கடலூர்:

                     தமிழக அரசு மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார்களை, இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது. ஆனால் இலவச மின் மோட்டார்களைப் பெறுவதில் பல சங்கடங்கள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

                     செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து பம்பு செட்டுகளையும் கணக்கெடுத்து இலவச மின் மோட்டார் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக உள்ளனர். தமிழக மின்வாரியத்தின் 9 மண்டலங்களில் 18,98,040 விவசாய பம்பு செட்டுகள் உள்ளன. இவற்றில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 3,77,634 விவசாயப் பம்பு செட்டுகள் உள்ளன.

                   திருவண்ணாமலையில் 1,50,879 பம்பு செட்டுகளும், விழுப்புரத்தில் 1,26,749 பம்பு செட்டுகளும், கடலூர் மாவட்டத்தில் 95,006 பம்பு செட்டுகளும் உள்ளன.

                     விவசாயப் பம்பு செட்டுகளில் பல, 30 ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு பெற்றவை. யாருடைய பெயரில் இணைப்பு பெறப்பட்டதோ அவர்கள் இறந்துவிட்ட நிலையில், வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாமல் ஏராளமான விவசாய பம்பு செட்டு மின் இணைப்புகள் உள்ளனவாம்.

                 குத்தகை, அடமானம், போக்கியம் போன்ற பிரச்னைகளும் உள்ளன. எனவே நிலங்களுக்கான பட்டா மாறுதல்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்துவதுபோல், மின் இணைப்பை வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்யவும் முகாம் நடத்தி, விரைவில் பெயர் மாற்றம் செய்தால்தான் புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

                உண்மையான விவசாயிக்கு அரசு திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களும் பெரிய விவசாயிகளும்தான், விவசாயப் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்று இருப்பர். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் சிறு, குறு விவசாயிகள் விவசாய மின் இணைப்பைப் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே ஆண்டு பதிவுமூப்பு (ஆண்டு சீனியாரிட்டி) அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் தயாரித்தால், பெரிய விவசாயிகள்தான் பலன் அடைவர்.

                எனவே பெரிய விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள் என்று இரு வகையான பயனாளிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கருதுகிறார்கள். ஆழ்குழாய்க் கிணறுகளில் ஆண்டுக்கு ஆண்டு, நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டு இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, 5 குதிரைத் திறன் மின் மோட்டாருக்கு அனுமதி பெற்ற விவசாயி, தற்போது 20 குதிரைத்திறன் மின் மோட்டாரைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பார். அதற்கு மின் வாரியத்தின் அனுமதி கோரியும் கிடைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இத்தகைய விவசாயிகளுக்கு எத்தனை குதிரைத் திறன் மின் மோட்டார் வழங்கப்படும் என்று, விவசாயிகள் கேட்கிறார்கள்.

               தற்போது விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மின் மோட்டாரின் குதிரைத் திறனை மின்வாரியம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகிறார்கள். மின் சிக்கனம் என்பது மோட்டாரை மட்டும் பொறுத்தது அன்று. மின் இணைப்பு வயரிங், மின் கம்பிகளின் பராமரிப்பும் மின் சிக்கனத்துக்குக் காரணம் ஆகும். இலவச மின்சாரம் என்பதால், விவசாயப் பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்பை, மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்வதே இல்லை. பல நேரங்களில் மின்மாற்றிகளில் உள்ள வேலைகளையே விவசாயிகள் செய்கிறார்கள். பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து கிடக்கும் மின் இணைப்புகளை புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

                   புதிதாக மின் இணைப்பு பெறும் விவசாயிகளுக்கும் இலவச மின் மோட்டார் வழங்க வேண்டும். திட்டம் வெற்றிகரமாக அமைய, ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மோட்டார்களையே வழங்க வேண்டும். வழங்கப்படும் புதிய மின் மோட்டார்கள் பழுதடைந்தால், பயிர்கள் பாதிக்காமல் இருக்க, 36 மணி நேரத்துக்குள் பழுது நீக்கிக் கொடுக்கவும், மோட்டார்களுக்கு காப்பீடு வழங்கவும் திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகிறார்கள்.


மின் மோட்டாருக்கான கணக்கெடுப்பு

இது குறித்து கடலூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் அளித்த பதில்:

                           மின் இணைப்பு வாரிசுப் பிரச்னை, குத்தகை பிரச்னை ஆகியன நிறைய உள்ளன. எனினும் அதற்குள் செல்லாமல், தற்போது யார் அனுபவித்து வருகிறார்கள் என்பதை பதிவு செய்யுமாறு அரசு தெரிவித்து உள்ளது. யாருக்கு கொடுப்பது என்பதை அரசுதான் முடிவு செய்யும். எத்தனை மோட்டார்கள் இயங்குகின்றன என்றும், நிலத்தின் சொந்தக்காரர் யார்? என்றும் நேரில் பார்வையிடச் சொல்லி இருக்கிறார்கள். எனவே 15-ம் தேதிக்குள் கணக்கெடுப்புப் பணி சாத்தியமில்லை. மாதக் கடைசி வரை ஆகலாம். தற்போது இப்பணி ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இப்போதே எதுவும் சொல்ல முடியாது என்றார் அந்த அதிகாரி.

Read more »

நெய்வேலியில்மூடுவிழா காணும் அரசுப் பள்ளி!







நெய்வேலி:

                நெய்வேலி கெங்கைகொண்டான் காலனியில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளி, என்எல்சி சுரங்க விரிவாக்கத்தால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

                       நெய்வேலி கெங்கைகொண்டான் காலனியில் என்எல்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5.6 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டேனிஷ்மிஷன் தொடக்கப்பள்ளி, 1977-ம் ஆண்டு அரசு நடுநிலைப் பள்ளியாகவும், 1989-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இப்பள்ளியில் நெய்வேலி கெங்கைகொண்டான், வடக்குவெள்ளூர், குறவன்குப்பம், அண்ணாநகர், ஜீவா நகர், அத்திப்பட்டு, தொப்புளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 954 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் என்எல்சி சுரங்க விரிவாக்கம் நடைபெறுவதால் மந்தாரக்குப்பம் மற்றும் கெங்கைகொண்டான் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள், என்எல்சி அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. அதேவேளையில் கெங்கைகொண்டான் காலனியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியையும் காலி செய்யுமாறு என்எல்சி நில எடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளதோடு, அருகில் உள்ள வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இப்பள்ளியை இணைத்துக் கொள்ளுமாறு என்எல்சி ஆலோசனையும் கூறியுள்ளது.

                            இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "90 சதவீதம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். இப்பள்ளியின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் ஒரு உயர்நிலைப் பள்ளியை உருவாக்குவது மிகவும் சிரமமான விஷயம். மேலும் இப்பள்ளியை வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இணைத்தால் இதர கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இப்பள்ளியை மூடாமல் கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட குறவன்குப்பம் அல்லது பெரியாக்குறிச்சி பகுதியில் அமைத்தால் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. மேலும் இப்பகுதிக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்' என்கின்றனர்.


இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ராஜசேகர் கூறுகையில்,

                                           "பள்ளி அமைவிடமும், கட்டடமும் என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டவை. அவர்கள் உத்தரவின் பேரில் பள்ளியை இடமாற்றம் செய்ய முடிவுசெய்துள்ளோம். வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இப்பள்ளியை இணைத்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.  இது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி இப்பள்ளியை கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

                               மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளியின் ஆலோசனையின் பேரில் இதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து விருத்தாசலம் வட்டாட்சியரிடம் பேசியுள்ளோம். அவர்களும் ஓரிரு தினங்களில் இடத்தை தேர்வு செய்து, அளவீடு செய்து கூறுவதாக கூறியுள்ளனர். எனவே அவ்வாறு இடம் கிடைத்தாலும், என்எல்சி நிர்வாகம் இதேபோன்ற ஒரு கட்டடத்தை எங்களுக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கையை தினமணி மூலமாக வைக்கிறோம்' என்றார் தலைமையாசிரியர் ராஜசேகர். என்எல்சி பரிசீலிக்குமா?

Read more »

நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜர்

நெய்வேலி:

                         அவதூறு வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

                                         கடந்த 2007-ம் ஆண்டு நெய்வேலியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், தமிழக முதல்வரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக நெய்வேலி நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம் ஜூலை 5-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட பிறப்பித்தது.

                                 இதையடுத்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகஸ்ட் 20-ம் தேதி நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.எஸ்.ராஜா முன்னிலையில் சரணடைந்தார். அதிமுக வழக்கறிஞர்கள் ரவீந்திரன், பாஸ்கர், ராஜசேகர், சுமதி, நடராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டோர் அவருக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன் வழங்கி, செப்டம்பர் 6-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் திங்கள்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கை இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நடுவர் ஏ.எஸ்.ராஜா.

                    நீதிமன்றத்தில் சரணடைய வந்திருந்த எஸ்.எஸ்.சந்திரனுடன் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.சி.சம்பத், மாவட்ட முன்னாள் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி நகர அதிமுக செயலர் ரவிச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி வெற்றிவேல் தொழிற்சங்க செயலர் உதயக்குமார், எம்.பி. சிவசுப்ரமணியம் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior