சிதம்பரம்:
பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே தங்கியுள்ள குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்களால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதே மாணவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது. ச ம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
விபத்தில் காயம் அடைந்த மாணவர் கௌதம்குமார் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அம்மாணவரின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறி புதுச்சேரி அருகே அம்மாணவரின் உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அம்மாணவர் உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து, அம்மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 12.15 மணிக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். அவர்களிடம் மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அறிக்கை பெற்று காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியதன் பேரில் மாணவர்கள் கலைந்துச் சென்றனர். அதன் பின்னர் மாணவர்கள் தேர்வுத் துறை கட்டடம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள கண்ணாடி மற்றும் மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பொறியியல் புலத்துக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு விடுதிகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோட்டாட்சியர், வட்டாட்சியர் மூலமாக மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆற்றில் விழுந்து மாணவர் ஒருவர் இறந்துள்ளார். இச்சம்பவம் துரதிஷ்டவசமானது. விடுதியில் தங்காமல் முத்தையா நகர், மாரியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்தான் இக்கலவரத்துக்கு காரணம் என தெரியவருகிறது. கடந்த ஆண்டும் அதே மாணவர்கள் இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டு அபராதம் செலுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சம்பவங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துணைவேந்தர் எம்.ராமநாதன்.