உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மணல் விலை கடும் உயர்வு

கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உபரிநீர் வழிந்தோடும் திருவந்திபுரம் அணை.

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மணல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

                   கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், பெண்ணையாறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் தாலுகாக்களில் 9 இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற மணல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்துள்ள மணல் விலை ஒரு யூனிட் 621. மணல் விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு லாரிகளில் விநியோகிக்கும் விலை ஒரு மாதத்துக்கு முன்பு வரை, யூனிட்டுக்கு 1000 வரை இருந்தது.மாட்டு வண்டிகளில் 35 கன அடி மணல் வரை ஏற்றப்படுகிறது. 

                  நகரப் பகுதிகளில் மாட்டு வண்டி மணல் ஒரு லோடு விலை 200 ஆக இருந்தது.வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால் கடலூர் மாவட்ட ஆறுகளில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மணல் விலையை அபரிமிதமாக உயர்த்திவிட்டன.ஒரு மாதத்துக்கு முன்பு வரை, கடலூர் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் ஒரு லாரி (2.5 யூனிட்) அதிகபட்சம் 3 ஆயிரமாக இருந்த மணல் விலை, தற்போது 6 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மாட்டு வண்டி மணல் ஒரு லோடு 350 வரை உயர்ந்து உள்ளது.

                 செங்கல் விலையும் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மழைக் காலங்களில் செங்கல் சூளைப் பணிகள் நடைபெறாததால் தற்போது தயாரித்து வைத்து இருக்கும் செங்கற்களே விற்பனைக்கு வருகின்றன. ஏற்கெனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்காக, கூடுதலாக செங்கல் தேவைப்பட்டதால், அதைப் பயன்படுத்தி, செங்கல் விலையை வியாபாரிகள் உயர்த்தத் தொடங்கி விட்டனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தட்டுப்பாடும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால், செங்கல் தயாரிப்புப் பணிகள் பெரும்பாலும் முடங்கிவிட்டன. 

                 2 மாதங்களுக்கு முன் அதிகபட்சம் 3 ஆக இருந்த ஒரு செங்கல் விலை தற்போது, 6 ஆக உயர்ந்து இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.செங்கல், மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள் விலைகளும் உயர்ந்து விட்டதால், கட்டுமானத் தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து வருகிறது. அனைத்து பொருள்களின் விலைகளும் உயரும்போது எங்களுக்குக் கூலியையும் உயர்த்துவதுதானே நியாயம் என்கிறார்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்.

இதுகுறித்து கடலூர் நகராட்சி உறுப்பினரும் வீடுகள் கட்டுமானக் காண்ட்ராக்டருமான ராமு மேஸ்திரி கூறுகையில், 

                  "கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தைத் காரணம் காட்டி செங்கல் விற்பனையாளர்கள் செங்கல் விலையை உயர்த்தி விட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால், செங்கல் விலை இரு மடங்காக அதிகரித்து விட்டது. முன் பணம் கொடுத்தால்தான் செங்கல் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் மணல் விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. சிமென்ட, கம்பி விலைகளும் ஏற்கெனவே உயர்ந்து உள்ளன. 

                       இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. புதிதாகக் கட்டுமானப் பணிகளை தொடங்குவோரும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். கட்டுமானப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது. கொத்தனார் சம்பளம் 350-ல் இருந்து 450 முதல் 500 வரை உயர்ந்து இருக்கிறது. சித்தாள் சம்பளம் 150ல் இருந்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது' என்றார்.

Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு

நெய்வேலி:

                     என்.எல்.சி.யில் பணியாற்றும் 9 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.  

                     என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  39 நாள்கள் நீடித்த போராட்டம் அக்டோபர் 27-ம் தமிழக முதல்வர் தலையீட்டின் பேரில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து அக்டோபர் 28-ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.  

                    இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை என்.எல்.சி.யில் பணிபுரியும் 9 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை தொழிலக வாரியாக வெளியிட்டுள்ளது. இதைக்கண்ட தொழிலாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இருப்பினும் பணிமூப்புப் பட்டியலுடன் சில நிபந்தனைகளுடன்கூடிய அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளதால் தொழிலாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Read more »

பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பலி




பண்ருட்டி : 

               பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர் உட்பட மூன்று பேர் இறந்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வீரமணி (15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

                    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சதீஷ் (14), கண்ணன் மகன் மெக்கானிக் முத்துராஜ் (15) ஆகியோர், வீரபெருமாநல்லூர் ஏரியில் நேற்று காலை 11 மணியளவில் குளிக்கச் சென்றனர். மூவரும் குளித்து விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்பும் போது, மழை பெய்தது. உடன், ஓடிச் சென்று ஏரியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த மின்னல் தாக்கியது. அதில் வீரமணி, சதீஷ், முத்துராஜ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். 

                      தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே ஊரில் மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் வீரபெருமாநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

கடலூரில் வாழைத்தார் விலை வீழ்ச்சி : ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு

கடலூர்:

                     கடலூர் பகுதியில் சூறைக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 

                    கடலூர் கேப்பர் மலை அடுத்த வழிசோதனைப்பாளையம், கண்ணாரப்பேட்டை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், எம்.புதூர், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கொடுக் கன்பாளையம், காட்டுப்பாளையம், கீரப்பாளையம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத் தில் மணிலாவுடன் சேர்த்து  ஒரு போக வாழையும், ஜூலை மாதத்தில் ஒரு போகமாகவும் 10 முதல் 12 மாத பயிரான வாழை இரு போகமாக பயிர் செய்யப்படுகிறது. கடந்த நவம்பரில் பயிர் செய்யப்பட்ட வாழை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஜூலையில் பயிர் செய் யப்பட்ட வாழை 6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ளது.

                        இந்நிலையில் வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் காரணமாக கடந்த 7ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது. இதில் அறுவடை பருவத்தில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் சாய்ந் தன. மேலும் ஜூலையில் பயிர் செய்யப்பட்ட வாழைகளும் அதிகளவில் சாயந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் வரை சாய்ந்துள்ளன. 

                  அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழைத் தாரை குறைவான விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்யமுன் வந்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் நேற்று வாழைத்தார் வெறும் 25 முதல் 50 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தாரின் விலை குறைவு குறித்து விவசாயிகள் கூறுகையில், 

                    "ஏக்கருக்கு 1,000 முதல் 1,100 வரை வாழைக் கன்றுகள் நடவு செய்யப்படும். ஆள் கூலி, கழி, உரம், களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போது ஓரளவிற்கு அறுவடை முடிந்துள்ள நிலையில் சூறைக் காற்று வீசியதால் ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் சாய்துள்ளன.

                   அறுவடைக்குத் தயாரான வாழைகள் சாய்ந்ததால் முற்றிய, முற்றாததார் என அனைத்து தார்களையும் அறுவடை செய்து விற் பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முற்றாத வாழைத்தாரை வியாபாரிகள் வெறும் 25 முதல் 50 ரூபாய்க்கு கொள் முதல் செய்கின்றனர். தீபாவளிக்கு முன்பு தார் 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட் டது. தார் ஒன்றுக்கு 70 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது' என தெரிவித்தனர்.

ரோஜா செடிகளும் சேதம் : 

                      ராமாபுரம், எஸ்.புதூர் உட்பட பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள ரோஸ், காக்கட் டான், கனகாம்பரம் உள்ளிட்ட பூச்செடிகளும் சாய்ந்து பூக்களின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மா, பலா, முந்திரி, தேக்க மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர்களும் காற்றில் சாய்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

Read more »

வீராணம் தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                    வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழை துவங்கியும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால், விவசாயத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் பெறப்பட்டது.

                     இந்நிலையில், "ஜல்' புயலால் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது. அதனால், பாசனத்திற்கு வீராணம் தண்ணீர் தேவையில்லை என்பதால் கடந்த 5ம் தேதி வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. வீராணத்திற்கு வந்த தண்ணீர், ஏரியில் தேக்காமல் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு 671 மில்லியன் கன அடி இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில் புயல் முடிந்து கடந்த இரண்டு நாட்களாக வெயில் காய்ந்து வருகிறது. 

                       இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றின் வழியாக 1,500 கன அடி தண்ணீர் பெறப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து 50 கன அடி பெரிய மதகு வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 726 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ள நிலையில் சேத்தியாத்தோப்பு புதிய மதகு மூலம் 242 கன அடியும், சென்னைக்கு 74 கன அடியும், பாசனத்திற்கு 50 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Read more »

மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பயிற்சிமுன் பதிவு செய்ய வேளாண் அதிகாரி வேண்டுகோள்

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ள மீன் வகைகளில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய் திக்குறிப்பு:
 
               விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சி.ஐ.எப்.டி., கொச்சின் உதவியுடன் மீன் வகைகளில் இருந்து மதிப் பூட்டப்பட்ட உணவு தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ள இப்பயிற்சியில் பண்ணை மகளிர், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராமப்புற இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள், பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள், தொழில் முனைவோர் பயிற்சி பெறலாம்.

               காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேனீர் மற்றும் பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு முதலில் வரும் 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் கள் முன்கூட்டியே தங்களது பெயரினை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இணைபேராசிரியர் மற்றும் தலைவர், 
வேளாண்மை அறிவியல் நிலையம், 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் 

                        என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது 04143- 238353 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவோ தங்கள் பெயரை பதிவு செய்யலாம். நேரில் வந்தும் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Three youths struck dead by lightning

CUDDALORE: 

                  Three teenagers who went for a bath in the Veeraperumanallur lake near here were struck dead by lightning on Tuesday. Police sources said that when Veeramani (15), Satish (16) and Muthuraja (15), along with others were taking bath, a lightning struck killing them on the spot. The bodies were taken to the Panruti Government Hospital for post-mortem, sources said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior