உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

கடலூர் கடற்கரையில் அதிகரித்து வரும் விஷத் தன்மை கொண்ட ஜெல் மீன்கள்


கடலூர்: 
 
             கடலூர் கடற்கரை மற்றும் உப்பனாற்றுப் பகுதிகளில், நெருப்புச் சொரி என்று மீனவர்களால் அழைக்கப்படும், ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.  
 
                 ஜெல்லி மீன்கள் விஷத் தன்மை கொண்டது. கைகளில் பட்டாலே கடுமையாக தோல் அரிப்பு ஏற்படும். ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை கடலூர் கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகம் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டம், பிச்சாவரம் பகுதியில் மட்டுமே தற்போது மாங்குரோவ் காடுகள் எனப்படும் சுரபுன்னைக் காடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், கடலூர் மாவட்டத்தில் உள்ள உப்பனாற்றுப் பகுதிகள் முழுவதும், சுரபுன்னைக் காடுகள் அடர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.  
 
                   அதன் எச்சங்களை தற்போதும் கடலூர், நொச்சிக்காடு, தம்பனாம்பேட்டை, மடவாய் பள்ளம், நஞ்சலிங்கம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர உப்பனாற்றுப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது. உப்பனாற்றின் கரைகளில் உள்ள தாவரங்களின் அடர்ந்த பகுதிகளுக்குள், ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. ஆனால் உப்பனாற்றுத் தாவரங்கள் தற்போது பெரிதும் அழிந்து வருகின்றன. 
 
                    இத்தாவரங்களின் அழிவுக்கு, கடலூர் மாவட்ட உப்பனாற்றுப் பகுதியை, நல்ல வடிகாலாகப் பயன்படுத்தி, ரசாயன ஆலைகள் பலவும், கழிவுகளை கலப்பதுதான் காரணம் என்கிறார்கள், மீனவர்களும் கடலோர ஆராய்ச்சியாளர்களும். கடற்கரையின் அமைதிச் சூழல் பாதிக்கப்பட்டதால், கடலூர் மாவட்டக் கடற்கரையோரங்களில், முட்டையிடுவதற்கு ஆமைகளின் வருகை, வெகுவாகக் குறைந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
                  கடல் ஆமைகள் பெரும்பாலும் ஜெல்லி மீன் குஞ்சுகளை விரும்பிச் சாப்பிடுகின்றன. ஆமைகள் வருகை குறைந்ததால் ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகின்றன.  மேலும் ஜெல்லி மீன்கள் வலைகளில் சிக்கினால் அவற்றின் விஷத் தன்மை காரணமாக, அந்த வலையை மீனவர்கள் கையாள்வதே கடினம் என்கிறார்கள் மீனவர்கள். இந்நிலையில் கடற்கரை உப்பங்கழிப் பகுதிகளில் கடல் ஆமைகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், சுரபுன்னை, அவிசீனியா போன்ற தாவரங்களை உருவாக்கும் முயற்சியில், ஆலமரம் என்ற பொது நல அமைப்பு ஈடுபட்டு வருகிறது.  
 
                கடல் ஆமைகளின் வருகையையும் ஆய்வு செய்து வரும் இந்த அமைப்பு, இதுவரை கடலூரை அடுத்த திருச்சோபுரம், நொச்சிக்காடு, நஞ்சலிங்கம் பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் சுரபுன்னை விதைகளையும், 2 ஆயிரம் அவிசீனியா தாவர விதைகளையும் நட்டு இருப்பதாக, ஆலமரம் அமைப்பின் தலைவர் இளையராஜா தெரிவிக்கிறார்.
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை

கடலூர்:

                டலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார்.  மங்களூர் ஒன்றியம் மா.புடையூர் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது: 

             அரசின் திட்டங்களைச் செயல்படுத்தவும், துறை வாரியாக திட்டங்களை அறிந்து கொள்வதற்கும் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் தெரிந்துகொள்ள வேண்டும்.  இப்பகுதி மக்களின் கோரிக்கைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, பட்டா மாற்றம், பேருந்து வசதி உள்ளிட்ட  மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி குடிநீர் கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவை, சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு கம்பி வலைகள் அமைக்கப்படும். 

                 தமிழகத்தில் கடலூர், திருவண்ணமாமலை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.  எனவே நமது மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.  மீறிச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்களுக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் அரசு நிதி உதவி வழங்குகிறது. பெண் குழந்தைகளின் படிப்புக்கும் பல்வேறு உதவிகளை அரசு செய்கிறது. கிராமப்புற மக்கள் அனைவரும் பெண் குழந்தைகளை பாகுபாடின்றி வளர்க்க வேண்டும் என்றார் ஆட்சியர். 

                 நிகழ்ச்சியில் பெண்களுக்கு திருமண உதவி, விவசாயிகளுக்கு இடுபொருள்கள், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை,  தனிநபர் கழிப்பறை கட்ட உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 5.88 லட்சத்துக்கான நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கணபதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவி தெய்வராணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.






Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து வசதிகள் நிறைவேற்றப்படும் : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்

கடலூர்:

            கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்  உறுதியளித்தார்.  

               மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் புதன்கிழமை ஆய்வு செய்ய வந்த கோட்ட மேலாளர் வைத்தியநாதன், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பொதுநல அமைப்புகளைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

பின்னர்  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன் கூறியது:

            திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வதிகளை செய்து கொடுக்குமாறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதி, பிளாட்பாரத்தில் ரயில் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்பதை அறிவிக்கும் வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நிறைவேற்றப்படும்.

                  திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், புவனேசுவரம் எக்ஸ்பிரஸ், வாராணசி எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. அந்த ரயில்கள் இங்கு நின்று போக வேண்டும் என்று கோரியுள்ளனர். இக் கோரிக்கைகளை ரயில்வே போர்டுதான் நிறைவேற்ற முடியும். இக் கோரிக்கைகளை ஏற்கெனவே நாங்கள் ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்து உள்ளோம். மீண்டும் இக் கோரிக்கைகளை பரிந்துரைப்போம். 

               சேலத்தில் இருந்து இயக்கப்படும்  நாகூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகூரில் இருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். அகலப்பாதைப் பணிகள் நடப்பதால் உடனடியாக சாத்தியம் இல்லை. இப்போதைக்கு கடலூர் வழியாக மயிலாடுதுறை வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரயிலை, திருப்பாப்புலியூர் வரை நீடிக்க முடியாது.

        திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் ஷெல்டர் வசதி செய்யப்படும். துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இட வசதிக்கு, டெண்டர் விடப்படும் என்றார் கோட்ட மேலாளர். 

               அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன், பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வெண்புறா குமார், திருமார்பன், மணிவண்ணன், அருள்செல்வன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். உடனடியாக கடலூர் சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான ரயில்கள் திருப்பாப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். சேலம் விருத்தாசலம் ரயிலை திருப்பாப்புலியூர் வரை நீடிக்க வேண்டும். முன்பதிவு நேரம் காலை 10 முதல் 12 மணி வரை என்று இருப்பதை, காலை 8  முதல் மாலை 6 மணி வரை என்று மாற்ற வேண்டும்.

              கடலூர் குப்பன்குளம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக, சிறிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலைய வளாகத்தை துப்புரவு செய்து அழகுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.









Read more »

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இந்த ஆண்டு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பெறுவோர் விபரம்

                 முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இலவச அரிசி, தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு உதவித் தொகை அதிகரிப்பு உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

              அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இலவச கறவைமாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.

              இந்த வருடம் முதல் கட்டமாக பிளஸ்-2, பள்ளி மாணவ- மாணவிகள், முதல் ஆண்டு, 3-வது ஆண்டு கல்லூரி மாணவ-மாணவிகள், 2-வது, 4-வது ஆண்டு பொறியியல் மாணவிகள் முதலாவது மற்றும் 3-வது ஆண்டு பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கு இலவச “லேப் டாப்” வழங்கப்படுகிறது.

                 இதன் மூலம் பள்ளிகளில் 5.47 லட்சம் கலை அறிவியல் கல்லூரிகளில் 2.91 லட்சம் என்ஜினீயரிங் கல்லூரியில் 24 ஆயிரம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

                தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 85 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு (2011-2012) 25 லட்சம் குடும்பங்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. சென்னையில் மாநகராட்சி ஆணையர் கட்டுப்பாட்டிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய்த்துறை மூலம் மாவட்ட கலெக்டர்கள் பொறுப்பிலும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்படும்.

               இவற்றை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் மூலம் வட்ட அளவில் சேவை மையங்கள் நிறுவப்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் இந்த பொருட்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்து கொள்ளலாம்.இந்த வருடம் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

              முதலில் கிராமப்பகுதியில் உள்ள பெண்களுக்கும், அடுத்து பேரூராட்சி, நகராட்சி, பின்னர் மாநகராட்சி பகுதிகளில் இவை வழங்கப்படும். ரேஷன் கார்டு உள்ள குடும்பத்தில் இருக்கும் பெண்ணிடமே இந்த பொருட்கள் வழங்கப்படும்.பெண் உறுப்பினர்களே இல்லாத குடும்பத்தில் குடும்பத் தலைவரிடம் இந்த இலவச பொருட்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் படி மாவட்டங்களில் பயன் பெறுவோர் எண்ணிக்கை வருமாறு:-

சென்னை- 19,30410, 
கோவை- 9,77021, 
வேலூர்- 9,07448, 
விழுப்புரம்- 89,7565, 
சேலம்- 84,9915, 
நெல்லை- 7,98503, 
மதுரை- 7,74015, 
திருச்சி- 7,15699.
கடலூர்- 641621, 
திருவண்ணாமலை- 641255, 
திருப்பூர்- 6,34999, 
தஞ்சாவூர்- 6,24804, 
ஈரோடு- 6,12587, 
காஞ்சீபுரம்- 5,84448, 
திண்டுக்கல்- 5,80299, 
கன்னியாகுமரி- 5,15022, 
விருதுநகர்- 5,05253. 
திருவள்ளூர்- 4,89806.
 கிருஷ்ணகிரி- 4,40539, 
தூத்துக்குடி- 4,36359, 
நாகப்பட்டினம்- 4,24739, 
நாமக்கல்- 41,9318, 
புதுக்கோட்டை- 4,01608, 
தர்மபுரி- 393771, 
தேனி- 3,73397, 
ராமநாதபுரம்- 3,66788, 
சிவகங்கை- 3,60875, 
திருவாரூர்- 3,25429, 
கரூர்- 2,78105, 
நீலகிரி- 2,18003, 
அரியலூர்- 2,12223, 
பெரம்பலூர்- 1,52984. 
 
 
 
 
 
 
 

Read more »

சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகள்: அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல்

      சட்டசபையில் நேற்று  சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல் செய்தார். 
அதில் கூறி இருப்பது:-

                 இன்றைய உலகில் மாணவ சமுதாயத்தினருக்கு லேப்-டாப் இன்றியமையா கல்வி சாதனமாக உள்ளது. மாணவ-மாணவிகளக்கு இலவச லேப்-டாப் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கலை, மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் இது வழங்கப்படுகிறது.

               இந்த ஆண்டு மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் இதை பெற உள்ளனர். பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவிகளும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 2 லட்சத்து 91 ஆயிரம் மாணவ-மாணவிகளும் லேப்டாப் பெற உள்ளனர். இதே போல் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 24 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பாலி டெக்னிக்கில் 50 ஆயிரம் மாணவர்களும் லேப்டாப் இலவசமாக பெற உள்ளனர்.

                இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1-ம் ஆண்டு, 3-வது ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பொறியியல் கல்லூரி களில் இரண்டாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டுமாணவர்களும், பாலி டெக்னிக்கில் 1-வது மற்றும் 3-வது ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்படும்.   மாணவ-மாணவிகள் பெறும் லேப்டாப்பை இயக்குவது குறித்தும் அதை விளக்கி சொல்லவும் பழுது நீக்கவும் தாலுகா தோறும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.அரசின் 100வது நாள் விழா


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/df7ab3ab-39aa-4f1c-844f-56961e481316_S_secvpf.gif
 
கடலூர்:

               தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்ததை அ.தி.மு.க.வினர்  கடலூரில்  எழுச்சியுடன் கொண்டாடினார்கள்.

              கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாய அணி செயலாளர் காசிநாதன், மீனவர் அணி செயலாளர் தங்கமணி, நகர பேரவை செயலாளர் கந்தன், நகர்மன்ற உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன், வக்கீல் பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சிவக்குமார், ஆதிபெருமாள், ராமு, சசிக்குமார், முன்னாள் பொருளாளர் ரவிச்சந்திரன், அவைத்தலைவர் ரங்கா, ஜெ.கண்ணன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                      கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. வக்கீல் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வக்கீல் அணி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மாசிலாமணி, பாலகிருஷ்ணன், நந்தகுமார், செந்தில்குமார், பாலசங்கர், சாமிக்கண்ணு, ஜெகநாதன், கிருஷ்ணசாமி, சுந்தரகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மற்றும் பி.என்.பாளையம் அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதன் பின் அண்ணா சிலைக்கு பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் அர்ச்சுனன் மாலை அணிவித்தார். அங்கு பொதுமக்கள், வியாபாரிகள், பஸ்சில் சென்ற பயணிகள் ஆகியோருக்கு இனிப்பு வழங்கினர். ஆட்சியின் 100-வது நாளையட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ஊராட்சி கழக செயலாளர் கிருபாகரன், நிர்வாகிகள் ராசா, சிவராமகிருஷ்ணன், அரங்கராமலிங்கம், பன்னீர்செல்வி, பேரூராட்சி தே.மு.தி.க செயலாளர் தட்சணாமூர்த்தி, சக்திவேல், கேசவன், சக்கரவர்த்தி, நாராயணன், சந்திரசேகர், ஆறுமுகம், ஜெயசந்திரன், வாணிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.    
 
 
 
 
 

Read more »

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ்

             10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் (26.08.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது,

         10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.  எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior