ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் தளம் போடப்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம் கருமாறப் பட்டறை வீதி.
கடலூர்:
நகராட்சிக் கூட்டங்களில் பேசாமலேயே, வார்டு மக்களின் கோரிக்கைகளை குறைவின்றி நிறைவேற்றி வருகிறார், கடலூர் நகராட்சி சுயேச்சை உறுப்பினர் ராஜ்மோகன். ஆனால் அவர் நகராட்சி கூட்டங்களில் ஒருமுறை கூடப் பேசியதில்லை. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வார்டு உறுப்பினர்தான் மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும்.
உள்ளாட்சி நிர்வாகம்தான் ஜனநாயகத்தின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தில் நல்லவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, நல்ல பணிகள் நடைபெற்றால் போதும்; ஜனநாயகம் வெற்றி பெற்றுவிடும்.உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை வசதிகள். அத்தகைய பணிகளைத் திறம்பட ஆற்றி இருப்பதாக, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிருப்பவர், கடலூர் நகராட்சி 10-வது வார்டு உறுப்பினர் ராஜ்மோகன். மஞ்சக்குப்பம் பகுதியில் வேணுகோபாலபுரம், உப்பளவாடித் தெரு, துகாராம் தெரு, மார்க்கெட் தெரு, மிஷன் தெரு பகுதிகளை உள்ளடக்கியது 10-வது வார்டு.
சிறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிக்கு நல்ல எடுத்துக் காட்டாகத் திகழும் ராஜ்மோகன், அனைவரிடமும் நட்பு பாராட்டி ஒரே மாதிரியாக, பழகும் தன்மை கொண்ட எளிமையான மனிதர். எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான சுயேச்சை. 10-வது வார்டில் தெரு விளக்குகள் அனைத்தும் ஒழுங்காக எரிகின்றன. குப்பைகள் தினமும் அகற்றப்படுகின்றன. சாக்கடை தினமும் சுத்தப்படுத்தப்படுகின்றன. அரசின் நலத் திட்ட உதவிகள் முறையாகப் பெற்றுத் தரப்பட்டு உள்ளன.
முதியோர் மற்றும் விதவைகள் 45 பேருக்கு பென்ஷன், தகுதியுள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்ட மருத்துவ அட்டை பெற்றுத் தந்துள்ளார். தனது வீட்டில் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி, பொறியியல் மாணவர்கள் 10 பேருக்கு, இலவச இன்டெர்நெட் சேவை அளிக்கிறார்.ஒவ்வொரு நாளும் காலையில், அவரும் அவருக்கு உதவியாக இருக்கும் சம்பத் மற்றும் இளைஞர்கள் சிலரும், வார்டு முழுவதும் சுற்றி வந்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கும் ராஜ்மோகனைத் தொடர்பு கொண்டால்போதும்.
எந்தவிதச் செலவும் இன்றிப் பெற்றுத் தந்துவிடுவார் என்கிறார்கள் வார்டு மக்கள். அரசு வெள்ள நிவாரணத் தொகை வழங்கியபோது, தகுதியான அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பெற்றுத் தந்தவர் ராஜ்மோகன் என்கிறார்கள் மக்கள்.இந்த வார்டில் உள்ள பிள்ளையார்கோயில் தெரு, 30 ஆண்டுகளாக 10 குடிசை வீடுகளால் அக்கிரமிக்கப்பட்டு, மினி பஸ்கூட போகமுடியாத நிலை இருந்ததை மாற்றிக் காட்டிய பெருமை ராஜ்மோகனுக்கு உண்டு. ஆக்கிரமிப்பை அகற்றினால், வாக்கு வங்கி பறிபோய்விடுமே என்று எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள் அங்காலாய்க்கும் நேரத்தில், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். துணை முதல்வருக்கும் கடிதம் எழுதி, ஆக்கிரமிப்பை அகற்றச் செய்தார். விசாலமான அந்தத் தெருவில், தற்போது சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
ராஜ்மோகன் பற்றி அந்த வார்டில் வசிக்கும் ஜெயராமன் கூறுகையில்,
"எந்த கெட்ட பெயரும் இல்லாமல் உண்மையான மக்கள் பணி ஆற்றுபவர் ராஜ்மோகன். 35 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினார். அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பாதாளச் சாக்கடைக்கு தோண்டியபின், அனைத்து தெருக்களிலும் தார் அல்லது சிமென்ட் தளம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார். மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கு அவர் எதையும் எதிர்பார்த்தது இல்லை. இவ்வளவு சாதனைகளையும் செய்வதற்கு அவர், நகராட்சி கூட்டத்தில் ஒருமுறைகூடப் பேசியதில்லை' என்றார்.
ராஜ்மோகன் எம்.ஏ., எம்.பி.ஏ. எம்.எல்.ஐ.எஸ். பி.ஜி. டிப்ளமோ இன் டி.சி.ஏ. பட்டங்கள் படித்தவர். எனது வார்டில் இன்னும் 1,000 மீட்டர் சாலைப் பணி மட்டும் பாக்கி. அதையும் செய்துமுடிப்பேன்.என்னைப் பற்றி செய்தித் தாள்களில் எதுவும் வர வேண்டாம். எனது சேவைக்கு அது இடையூறாக அமையலாம் என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் ராஜ்மோகன்.