உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கடலூர், நவ. 1:

வளர் இளம்பெண்களிடம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, கோ. அய்யப்பன் எம்.எல்.ஏ. வலியறுத்தினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கடலூர் திருப்பாப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஊட்டச் சத்து வார விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து, ஆரோக்கிய போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், பள்ளிகளுக்கு மின்விளக்குகள், மின் விசிறிகள் வாங்க தனது உள்ளுர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கினார். மேலும், சொந்த நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கி, அதை அறக்கட்டளை மூலம் வங்கியில் டெபாஸிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தை, மாணவிகளிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் பயன்படுத்த அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
புவனேஸ்வரி வரவேற்றார்.

Read more »

50 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம்,நவ.1:

சிதம்பரம் ரோட்டரி சங்கம் பொன் விழாவை முன்னிட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 50ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
÷அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பழ.முத்துவீரப்பன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி தலைமை வகித்தார்.
÷முன்னாள் ரோட்டரி சங்க கவர்னர்கள் டாக்டர் எஸ்.அருள்மொழிசெல்வன், துணைஆளுநர் கே.சீனுவாசன், முன்னாள் தலைவர் இ.மகபூப்உசேன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
÷ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார்.
செயலர் எம்.எஸ்.ஆர்.ரவி நன்றி கூறினார்.

Read more »

விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் ஜனவரியில் இயக்கப்படும்


கடலூர், நவ.1:


விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில்கள் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று, தென்னக ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
÷விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூர ரயில்பாதை ரூ. 270 கோடியில் அகலப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. 2007 ஜனவரியில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மயிலாடுதுறை - சீர்காழி இடையே 22 கி.மீ. தூரம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. விழுப்புரம் - கடலூர் இடையேயும் ரயில்பாதை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. விழுப்புரம் - சிதம்பரம் இடையே பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கத்தில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் சனிக்கிழமை பயணம் செய்து திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் சோதனை ஓட்டம் நடத்தினார். விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அவரது ரயில், மாலை 4-10 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது.
÷ரயில் நிலையத்தில் பொதுமேலாளர் ஜெயந்த் கூறியது:
÷பயணிகள் வசதிக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படும். ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டதும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட மாட்டாது. அகலப் பாதைத் திட்டம் முடிவடைந்ததும் கடலூர் - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்றார் ஜெயந்த்.
÷தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நெல்லிக்குப்பம் ரயில்நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே மதில் சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தார்.

Read more »

அதிகரித்து வரும் சோரியாசிஸ் நோய்

கடலூர், அக். 31:

இந்தியாவில் சோரியாசிஸ் நோய் அதிகரித்து வருவதாக, மருத்துவத் துறை முன்னாள் இயக்குநரும், கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் சி. மகாலிங்கம் வேதனை தெரிவித்தார்.
உலக சோரியாசிஸ் தினத்தையொட்டி, கடலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சோரியாஸிஸ் வித்தியாசமான தோல் நோய். மேலை நாடுகளில், குறிப்பாகக் குளிர் பிரதேசங்களில் இந் நோய் அதிகம் காணப்படுகிறது. நம் நாட்டில் குளிர் பிரதேசங்களில் மட்டுமன்றி, சூரிய ஒளி கிடைக்கும் பகுதிகளிலும் காணப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 சதவீதமாக இருந்த சோரியாசிஸ் நோய் தற்போது 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல் வியாதிகள் உள்ளன. இவற்றில் 500 வியாதிகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆனால், மற்ற தோல் வியாதிகளைப் போல், சோரியாசிஸ் தொற்று நோய் அல்ல.
கெட்ட நடத்தைகளால் வருவதும் அல்ல. சோரியாசிஸ் நோயின் காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாததாலும், திட்டவட்டமான ஒரே சிகிச்சை முறை இல்லாததாலும், பலவிதமான விளம்பரங்களைச் செய்து மக்களை பலர் ஏமாற்றி வருகின்றனர்.
எனவே, மக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், முறையாகப் பயின்ற தோல் மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்றார் அவர்.
மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். மீரா, இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நவரத்தனம் உள்ளிட்டோர் பேசினர்.
ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை மருத்துவ ஆலோசகர் மதீந்திரன் நன்றி கூறினார்.

Read more »

மக்கள் நலப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர், அக். 30:

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பண்ருட்டி ஒன்றியம், மாளிகம்பட்டு, காட்டுமன்னார் கோயில் ஒன்றியம், ஸ்ரீஆதிவ ராக நல்லூர், கீரப்பாளையம் ஒன்றியம், பூந்தோட்டம், ஓடாக்க நல்லூர், மேல்புவனகிரி ஒன்றியம், தீர்த்தாம்பாளையம், வடகிருஷ்ணாபுரம், கம்மாபுரம் ஒன்றியம், கீணனூர், விருத்தா சலம் ஒன்றியம் எம்.புதூர், சாத்துக்கூடல் கீழ்பாதி, கட்டிய நல்லூர், கோமங்கலம், மங்களூர் ஒன்றியம், மேலக்கல்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப் பட உள்ளனர். வட்டார அளவி லான தேர்வுக்குழு இவர்களைத் தேர்வு செய்யும். வயது வரம்பு 9-11-2009 அன்று 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த வராகவும், அங்கேயே வசிப்பவ ராகவும் இருக்க வேண்டும். தகுதியுடையோர், சம்பந்தப் பட்ட வட்டாட்சியர் அலுவல கத்துக்கு விண்ணப்பங்களை நவம்பர் 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

Read more »

சிதம்பரம் நகராட்சி செயலிழந்துள்ளது: பாமக உறுப்பினர் புகார்

சிதம்பரம்,அக்.30:

சிதம்பரம் நகராட்சியில் தலைவர் மற்றும் அதிகாரிகள் கடமைக்கு வேலை பார்க்கின்றனரே தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நகராட்சி ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஆ.ரமேஷ் நகரமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
÷சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் பின்வருமாறு:
÷ஆ.ரமேஷ் (பாமக)- வெறும் தீர்மானங்களை நிறைவேற்றும் நகராட்சியாக சிதம்பரம் நகராட்சி உள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். கடந்த 13 மாதங்களாக போடப்பட்ட தீர்மானங்கள் மீது டெண்டர் விடப்பட்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
÷அப்படியிருக்கும் போது புதிதாக ஏன் தீர்மானம் போடுகிறீர்கள். எனவே அனைத்து தீர்மானங்களையும் ஒத்தி வைக்க வேண்டும். நகரில் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறித்து நகர்நல அலுவலர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ÷போல்நாராயணன் தெரு, நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. டெண்டர் விட்டு 6 மாதமாகியும் அங்கு சாலை போடப்படவில்லை. 4 வீதிகளிலும் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் எரியவில்லை. அப்படியிருக்கும் போது நகரை எப்படி நீங்கள் அழகுபடுத்த முடியும்?
÷ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- எனது வார்டில் பலருக்கு மர்மக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மர்மகாய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
÷சிதம்பரம் நகராட்சியில் நகர்நல அலுவலர் தலைமையில் குழு அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசுக்களை ஒழிக்க கொசுமருந்து அடிக்க வேண்டும்.
÷அப்புசந்திரசேகரன் (திமுக)- நோபல் பரிசு பெற்ற சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நகரில் மகப்பேறு உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுத்து நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து விழா நடத்தி அளிக்க வேண்டும்.
÷முகமதுஜியாவுதீன் (காங்கிரஸ்)- ரூ.1-க்கு 1 கிலோ அரிசி கிடைக்கும் இவ்வேளையில் சிதம்பரம் நகராட்சி க்ட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ரூ.5-ம், மலம் கழிக்க ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
÷ஜி.மணிவேல் (அதிமுக)- தெருவிளக்குகள் எரியாததால் சிதம்பரம் நகரமே இருளில் மூழ்கியுள்ளது. நகர்மன்றத்தில் தீர்மானமங்கள் நிறைவேற்றப்படுகிறதே தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை.
÷மு.ராஜலட்சுமி (விடுதலைச் சிறுத்தைகள்)- அம்பேத்கர் நகர் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும். எனது வார்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதிமுக, மதிமுக
உள்ளிருப்பு போராட்டம்
நகரமன்றக் கூட்டம் முடிவுறும் வேளையில் அதிமுக உறுப்பினர் ஜெயவேல் பேச எழுந்தார். அப்போது நகர்மன்றத் தலைவர், கூட்டம் முடிந்ததாக பெல் அடித்து விட்டு சென்றுவிட்டார்.
÷இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஜி.மணிவேல், ஜெயவேல், சுப்பிரமணியம், மதிமுக உறுப்பினர் எல்.சீனுவாசன் உள்ளிட்ட 4 உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்து, "தலைவர் ஒழிக' என கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆணையர் வந்து சமரசப்படுத்திய பின்னர் அவ்வுறுப்பினர்கள் கலைந்துச் சென்றனர். 4 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் 6 மணிக்கு தொடங்கப்பட்டு அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் கூட்டத்தை தலைவர் முடித்து விட்டுச் சென்றது கண்டனத்துக்குரியகது என உறுப்பினர் ஜி.மணிவேல் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior