உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

கடலூர் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை பாதியில் நிற்கும் சிமென்ட் சாலை

கடலூர்:   
                   நிதிப் பற்றாக்குறையால்  2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பணிகள் டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

                    பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக கடலூர் நகரில் தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அதன்பிறகு செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அனைத்தையும் செப்பனிட  20 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு  1000 கோடி வழங்க தீர்மானித்தது. 

                 இதைத்தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் 131 சாலைப் பணிகளுக்கு  15 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 40 சாலைப் பணிகளுக்கு மட்டும்  10.1 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. 

                   நிதி பற்றாக்குறையால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர் வார்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் வார்டு என்று பாகுபாடு பார்த்து பணிகளை வழங்கும் சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சில வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சாலைப்பணிகள் பல, நிதி பற்றாக் குறையாலும், பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாலும் பாதியிலேயே நிற்கிறது. அத்தகைய பணிகளில் ஒன்றுதான் 34-வது வார்டு செல்லங்குப்பம் இணைப்புச் சாலை.  12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் தொடங்கப் பட்டது. 

                  சாலைகளின் ஓரங்களில் செங்கல் கட்டுமானம் எழுப்பி, சாலையில் ஆற்று மணல் கொட்டும் வேலை முடிவடைந்தது. அதற்கு மேல் சிமென்ட் தளம் அமைக்கும் வேலை 2 மாதங்களாகியும் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து நகராட்சி வார்டு உறுப்பினரிடம் கூறியது

                   "நகராட்சி பொது நிதியில் நடைபெற்றுள்ள இந்தப் பணிக்கு இதுவரை நகராட்சி நிதி தரவில்லை என்று ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இனி பணம் கிடைத்தால்தான் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' கூறினார். இதேபோல் மேலும் பல பணிகள், டெண்டர் விட்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடப்பதாக நகராட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

Read more »

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை


 
                  ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது.
 
இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
 
                  வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.
 
                   சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. 
 
                       இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார். அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

Read more »

சிதம்பரம் நகரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாடு

சிதம்பரம்:

                   சிதம்பரம் நகரில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு அதிகம் பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிதம்பரம் பகுதியில் மெட்ராஸ்-ஐ நோயும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

                மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா என கேட்டால், "கடலூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுதான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்' என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

                    சிதம்பரம் பகுதியில் ஒருசில தனியார் மருத்துவமனைகளில் | 600-க்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் கடலூர் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. எனவே சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காயச்சல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்னி சிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

கடலூரில் ஓராண்டாகக் கட்டப்படும் பாலம்!

கடலூர்:

                 கடலூரில் ஓராண்டாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.  

                  கேப்பர் மலையில் ஆண்கள், பெண்கள் மத்திய சிறைச் சாலைகள், கடலூர் நகராட்சியின் குடிநீரேற்று நிலையங்கள், துணை மின்நிலைய அலுவலகம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கடலூர் நகருடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை, வண்டிப்பாளையம் சாலை ஆகும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் தோண்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக இச்சாலை சிதைந்து கிடந்தது. 2 மாதங்களுக்கு முன்புதான் தார்தளம் அமைத்து சீரமைக்கப்பட்டது. 

               அதுவரை இச்சாலையில் ஊத்துக்காட்டம்மன் கோயில் அருகே பாலத்துக்காக சாலை தோண்டப்பட்டு, வேலை நடந்து வந்தது. சாலை சீரமைக்கப்பட்டதும் பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளனர். பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்ற போதே பாலம் கட்டும் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாலை செப்பனிடப்பட்ட பிறகு, சாலையைத் தோண்டி மீண்டும் பாலம் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறையினர்.

                 சாலையில் சரிபாதி அகலத்துக்கு பாலத்துக்கான தளம் முடிக்கப்பட்ட பிறகு, அதன் அருகே சாலையைத் தோண்டிப் போட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்களில் செல்வோர் அப்பகுதிக்கு வந்ததும், அவர்களே ஆட்டோக்களைத் தள்ளி விடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாணவர்களுக்கும் இதே நிலைதான். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 

                        இச்சாலையில் சற்று தொலைவில் ரயில்வே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் வேலை நடக்கிறது மாற்றுவழியில் செல்லவும் என்ற அறிவிப்பு மட்டும் உள்ளது. ஆனால் மாற்றுவழி எங்கும் காணோம். கடலூரில் பாதாளச் சாக்கடைக்காகவும், பாலம் கட்டும் பணிக்காகவும், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சாலைகளைத் தோண்டுகிறார்கள். ஆனால் மாற்றுவழி பற்றி அதிகாரிகளுக்கு எந்த சிந்தனையும் எழுவதில்லை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில் 100 நாள் வேலை கோரி அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பண்ருட்டி:

                  நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் வேலையும், அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படாததால், எஸ்.புதுக்குப்பம் கிராம மக்கள் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

                     பண்ருட்டி வட்டம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தங்களுக்கு அடையாள அட்டையும், வேலையும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்று கூறி இக் கிராம மக்கள் சுமார் 100 பேர், வன்னிய சங்க மாவட்டச் செயலர் சக்திவேல் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

                      தகவல் அறிந்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, ""இதுவரை எனக்கு விண்ணப்பங்கள் வரவில்லை. உங்கள் விண்ணப்பங்கள் வந்திருந்தால் அடையாள அட்டையும் வேலையும் வழங்கப்பட்டிருக்கும்'' என்றார். இதற்கு கிராம மக்களின் சார்பில் பேசிய சக்திவேல், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் புகைப்படங்களை ஊராட்சி எழுத்தர் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளோம் என்றனர்.  இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய துணை வட்டார வளர்ச்சி அலுவலர், புதிய விண்ணப்பங்கள் அளித்து அதை பூர்த்திசெய்து புகைப்படத்துடன் அளிக்குமாறு கூறினார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் செங்கல் சூளை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்

                   கடலூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,24,409 வீடுகள் கட்டப்படவுள்ளது. நடப்பாண்டில் 26,119 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது செங்கல் கற்களின் தேவை அதிகமாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் தொழில் தொடங்க வருவோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.  ஆகவே தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

                     இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொடர்பான தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வருபவர்களுக்கு விளிம்பு தொகையாக பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதமும், இதர பிரிவினர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 5 சதவீதம் விளிம்பு தொகை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வோருக்கு 15 சதவீதம் மான்யம் வழங்கப்படுகிறது.

                      எனவே இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை கல்வி சான்று, இருப்பிடச்சான்று, சாதி சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு செங்கல் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

100 மில்லி கிராம் தங்கத்தில் தாலி:சிதம்பரம் பொற்கொல்லர் சாதனை



சிதம்பரம்:

                    சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர், 100 மில்லி கிராம் தங்கத்தில் மிகச்சிறிய தாலி செய்து சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் முத்துக்குமரன் (29); பொற்கொல்லர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தந்தையுடன் நகை செய்து வருகிறார். சமீப காலமாக குறைந்த எடை தங்கத்தில் நகை, பல்வேறு பொருட்கள் செய்து பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

                       ஒரு குண்டுமணி (120 மி.கி.,) தங்கத்தில் சிறிய தாலி செய்ய முயற்சித்தார். ஆனால் 150 மில்லி கிராமைத் தொட்டது. இருப்பினும் இரண்டு நாள் விடாமல் முயற்சி செய்து தற்போது 100 மி.கி., எடையில் மிக நுணுக்கமாகவும், நேர்த்தியுடனும் தாலி செய்து திறமையை நிரூபித்துள்ளார்.

                   இதே போல், 240 மி.கி., சீலிங்பேன், 40 மி.கி., மோதிரம், தாலி பொட்டு, 180 மி.கி., இரண்டு தாலி குண்டு, 150 மி.கி., மண்வெட்டி, 20 மி.கி., கைவிசிறி, 40 மி.கி., கத்தி உள்ளிட்ட பொருட்கள் செய்து அசத்தியுள்ளார். 150 கிராம் வெள்ளி பயன்படுத்தி இரண்டு அங்குல உயரம் கொண்ட கைபம்பு செய்து, அதில் வாஷர் பொருத்தி, இயக்கினால் தண்ணீர் வரும் அளவிற்கு நேர்த்தியாக செய்து முடித்துள்ளார். மேலும் பல சாதனைகள் செய்ய முயன்று வருவதாக முத்துக்குமரன் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் குழல்விளக்கு வழங்கும் பணி துவக்கம்:தமிழகம் முழுவதும் செயல்படுத்த வாரியம் முடிவு

                 



              தமிழகத்தில் மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு குண்டு பல்புகளுக்கு பதிலாக, குழல் விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், கடலூரில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்தினால் 600 மெகாவாட் வரை மின்சாரம் சிக்கனமாகும்' என, தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                   தமிழக மின்வாரியம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது. திறனை 13 ஆயிரத்து 638 மெகாவாட்டாக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்கள் நிறைவடைய உள்ளன. எதிர்கால தேவையை, மின் சேமிப்பின் மூலம் சரிகட்ட முயற்சி நடத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் தேவையைக் குறைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள், சார்பு அலுவலங்களில் குமிழ் விளக்குகளுக்கு (குண்டு பல்புகள்) தடை செய்யப்பட்டுள்ளது.

                            குறைந்த விலையுடைய குண்டு பல்புகளால் 75 சதவீதம் எரிசக்தி, வெப்பமாக விரயமாகிறது. குழல் விளக்குகள்தான் இதற்கு சரியான மாற்று என்றாலும், அதிக விலையால் குழல் விளக்குகளை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய எரிசக்தி திறனுக்கான செயலகம், "பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம் மூலம், குண்டு பல்புகளுக்கு பதிலாக, உயர்தர குழல் விளக்குகளை 15 ரூபாய்க்கு வழங்கும் மாற்றுத் திட்டம் வரையறுத்துள்ளது. இதற்கான விலை வித்தியாசத்தை, தூய்மை மேம்பாட்டு இயங்கமைப்பு திட்டம்' மூலம் சமன் செய்து கொள்வர்.

                     இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மின் வாரியத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2.12 கோடி மின் நுகர்வோரில், 1.35 கோடி வீட்டு பயனீட்டாளர்கள் மின் மீட்டர் பொருத்தியுள்ளனர். முன்னோடியான குழல் விளக்கு வழங்கும் திட்டம், கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 4.5 லட்சம் வீடுகளுக்கு துவங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இப்பணிகள் முடியும். இதன் மூலம் மின் தேவை 30 மெகாவாட் குறையும்.

                    தமிழகத்தில் 1.35 கோடி வீடுகளுக்கும் இதை செயல்படுத்தினால் 500 முதல் 600 மெகாவாட் வரை மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக 60 சதவீதம் பகுதிக்கு 8.2 லட்சம் வீட்டு பயனீட்டாளர்களுக்கு டிச., 2011ல் முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பகுதிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சலுகை விலையில் சிமென்ட் விற்பனை

கடலூர்: 

                தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சலுகை விலையில் சிமென்ட் விற் பனை துவங்கியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட் டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிமென்ட் மூட்டை 200 ரூபாய்க்கு சலுகை விலையில்  விற் பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 1,000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்கள் சலுகை விலையில் சிமென்ட பெற்றிட உரிய வரைவு காசோலை மற்றும் ரேஷன் கார்டு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அருகில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து 8 தவணைகளில் சிமென்ட் மூட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூட்டை சிமென் டுகளை நேரடியாக பணம் செலுத்தி பெறலாம். 

                       இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் கடலூர் (04142-233301), குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி (04142-253796), விருத்தாசலம் (04143-238382), சிதம்பரம் (04144-230802), காட்டுமன்னார்கோவில் (04144-262013), திட்டக்குடி (04143-255214) ஆகிய தொலைபேசிகளிலோ அல்லது கடலூரில் உள்ள மண்டல மேலாளரை (04142-221621, 221622, 221623) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

தேசிய அளவிலான ஜே.ஆர்.சி., முகாமில் குறிஞ்சிப்பாடி வேலாயுதம் பள்ளி சாதனை

கடலூர் : 

             பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான ஜே.ஆர்.சி.,முகாமில் குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
 
                   பஞ்சாப் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான இளைஞர் கலாசார பரிமாற்றத்திட்டம் முகாமில் குறிஞ்சிப்பாடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் ஒரே பள்ளியாக பங்கேற்றனர். முகாமில் நடந்த போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி அணியினர் நாட்டுப்புறப்பாடல், பரதநாட்டியம், குழு கலந்துரையாடல் ஆகியவற்றில் முதலிடத்தை பிடித்தனர். மேலும் குழுப்பாடல், குழுநடனம், மாணவிகள் விளையாட்டு போட்டி ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும், மாணவர்கள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

                    முகாமில் ஒட்டுமொத்த வெற்றிபுள்ளிகள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., அணியினரை கன்வீனர் கோவிந்தராஜ், பள்ளி செயலாளர் செல்வராஜ், பள்ளிக்குழுத் தலைவர் பிரேமாசெல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள், ஆலோசகர் குமார், கார்த்திகேயன், பியூலாஜெயந்தி, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் நவஜோதி, கவிதா மற்றும் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Read more »

சிதம்பரம் உழவர் சந்தையில் காய்கறி வாங்கிப் பயனடைய கோரிக்கை

சிதம்பரம்: 

                   உழவர் சந்தையில் நியாயமான விலையில் காய்கறி வாங்கிப் பயனடைய பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணா கலையரங்கில் உள்ள உழவர் சந்தையில் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அரசு பஸ்களில் சுமைக்கூலி இல்லாமல் கொண்டு வந்து அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு நேரடி விற்பனை செய்கின்றனர். நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் உழவர் சந்தையில் தினசரி புதிய காய்கறிகளை வாங்கி பயனடையலாம் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior