கடலூர் :
கடலூர் மத்திய சிறையில், ஆயுள் கைதிகள் மூன்று பேர் அடுத்தடுத்து கட்டடம் மற்றும் மரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 734 பேர் உள்ளனர். தண்டனை கைதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
வெளியிலிருந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வர தடை விதித்ததற்கு, கைதிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி கைதிகளுக்கு வழங்கிய உணவில் பல்லி இறந்து கிடந்தது. இதுகுறித்து ஆயுள் கைதிகளான மிட்டாய் சுரேஷ், பாம் கணேசன், பிரகாஷ் ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தரமான உணவு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக, மேலும் சில ஆயுள் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுள் கைதிகள், நேற்று முன்தினம் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து, நேற்று காலை 6.45 மணிக்கு சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி கண்ணன் (28) சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து கட்டடத்தின் உச்சிக்கு சென்று, ""தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதிகளை பொது வார்டிற்கு மாற்ற வேண்டும்; சரியான அளவில் உணவு வழங்க வேண்டும்'' என, கோஷம் எழுப்பி, தன்னைத் தானே பிளேடால் கிழித்து, தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காலை 10.30 மணிக்கு கட்டடத்தில் இருந்து கீழே இறக்கினர். அவர் உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்த காயம் இருந்ததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்கிய சற்று நேரத்தில், சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி மகேஷ் (28), திட்டக்குடி சங்கர் என்கிற ஆணி சங்கர் (24) ஆகியோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, காலை 11 மணிக்கு சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தின் உச்சியில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். மீண்டும் சிறையில் பரபரப்பும் பதட்டமும் உண்டானது. தகவலறிந்த கடலூர் தாசில்தார் மோகன், டி.எஸ்.பி., மகேஷ்வரன், சிறை கண்காணிப்பாளர் ஆனந்த், ஜெயிலர் வேணுகோபால் ஆகியோர் மரத்தில் ஏறி மிரட்டிய கைதிகளை சமாதானப்படுத்தியதால், 12.15 மணிக்கு கீழே இறங்கினர். "சிறையில் சாப்பாடு ஒழுங்காக தருவதில்லை. அடித்து துன்புறுத்துகின்றனர்' என, தாசில்தாரிடம் கைதிகள் புகார் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகளின் விசாரணை மதியம் 2 மணிக்கு மேலும் தொடர்ந்தது.
இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் சிறைக்குச் சென்று கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, பார்வையாளர்கள், சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதிக்கக் கோரி சிறைக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வின் சிறப்பு அனுமதி பெற்று, மாலை 5.05 மணிக்கு பார்வையாளர்கள், கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மாலை 6.20 மணிக்கு வெளியேற்றப்பட்டனர்.
Read more »