பட்டதாரி ஆசிரியர்கள் 1,326 பேரின் புதிய தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ((www.trb.tn.nic.in) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது
.தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய 6 பாடங்களுக்கான ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இந்தப் பாடங்களில் மொத்தம் 1,513 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் மொத்தம் 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 38 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 139 இடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் புதிய பட்டியல் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த 3 பாடங்களுக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலை சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் இதுதொடர்பான பணிகள் நிறைவடையும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நலத் துறை பள்ளிகளுக்கான 276 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் 10 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக இருந்த 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மே, நவம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
இதையடுத்து, தாற்காலிக தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.02.11-ம் தேதி வெளியிடப்பட்டது.பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பதிவு மூப்பின் அடிப்படையில் தகுதியுடைய சில பதிவுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தகுதி இருந்தால், பணி நியமனத்துக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து அவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.பதிவுமுப்பு இனச் சுழற்சி முறை அடிப்படையில் 6 பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது
.இதரப் பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான ஆணை தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 3,665 ஆசிரியர் பணியிடங்களுக்கான தாற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொத்த இடங்கள் விவரம்
பல்வேறு துறைகளுக்காக மொத்தம் 5,151 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை - 3,665
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் - 1,200
நலத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் - 276
மதுரை மாநகராட்சி பள்ளிகள் - 10