உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

சென்னைவெள்ளாற்றுக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

சிதம்பரம்,நவ.15:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது. எனவே ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீர் காட்டாறுகள் மூலம் செங்கால்ஓடை, கருவாட்டுஓடை வழியாக ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரிக்கு 2500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீர் மட்டம் 44.7அடியைத் தொட்டது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5அடியாகும். சேத்தியாத்தோப்பு பம்பிங் ஸ்டேஷனிலிருந்து சென்னை மெட்ரோ வாட்டருக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடந்த வாரம் பெய்த மழயின் போது நீரை வெளியேற்றிய போது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம், எடையார், திருநாரையூர் உள்ளிட்ட 20 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ளியங்கால் ஓடையில் நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். அணைக்கட்டு மற்றும் பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது மீண்டும் ஏரிக்கு கூடுதலாக நீர் வந்ததால் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு மற்றும் பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றுக்கு 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர் நேராக கடலில் சென்று கலக்கிறது.
வெள்ளாற்றில் நீர் வெளியேற்றப்படுவதால் காட்டுமன்னார்கோவில் பகுதி கிராமங்களில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மழை காலங்களில் ஏரிக்கு வரும் உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
இந்த நீரை தேக்கி வைக்க கொள்ளிடம் ஆற்றிலும், வெள்ளாற்றிலும் தடுப்பணைகள் அமைக்க அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

பழுது பார்க்கப்படாத தேர்


கடலூர், நவ.15:


நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் தேர், பழுது பார்க்கப்படாத நிலையில், அண்மையில் பெய்த மழையால் முற்றிலும் சிதைந்து கிடக்கிறது.
கடலூர் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் அமைந்து இருப்பது பழைமை வாய்ந்த திருச்சோபுர நாதர் கோயில். இது திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் கோளால் இப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மண்ணால் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கடல் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர், இப்பகுதி முழுவதும் மணல் குன்றுகளாக இருந்ததாகவும், அத்தகைய மணல் குன்று ஒன்றில் இருந்து திருச்சோபுர நாதர் கோயில் தோண்டி எடுக்கப்படதாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருச்சோபுரநாதர் கோயில் தேர் 100 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேர் சிதைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேரில் உள்ள மரச்சிற்பங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை. புதிய தேரில் பழைய மரச்சிற்பங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஓராண்டுக்கு முன் இத்தேரை புதுப்பிக்க அறநிலையத்துறை ரூ. 12 லட்சத்துக்கு டெண்டர் விட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர், டெண்டர் எடுதததாகக் கூறப்படுகிறது. ஆனால் தேரைப் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்ட வில்லை. ஓலைக் கொட்டகை போட்டு அதனுள் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அண்மையில் பெய்த கன மழையில் கொட்டகையும் சிதைந்து தேர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

Read more »

ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடலூர்,நவ.15:


மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடலூர் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மோசம் அடைந்து கிடக்கும் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்கவும், மழை காலத்தில் போக்குவரத்துப் பிரச்னைகள் எழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை முன் இருந்த ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. வேளாண் வணிக துணை இயக்குநர் தனவேல் தலைமையில் வேளாண் அலுவலர்கள், கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின், போக்குவரத்துப் போலீஸ் ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தும், உழவர் சந்தைக்கு வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த கடைகள், வாழைத்தார், கரும்பு, வாழை இலை, பழங்கள் விற்பனை மற்றும் கீரை விற்பனைக் கடைகள் அகற்றப்பட்டன. மீண்டுóம் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர்.
அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே உழவர் சந்தைக்குள் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்றும், மற்றவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், தோட்டக்கலைத் துறைக்கு விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்று உழவர் சந்தைக்குள் பொருள்களை விற்பனை செய்யலாம் என்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Read more »

கட்டுரை, ஓவியப் போட்டி

கடலூர்,நவ.15:

கடலூர் அருங்காட்சியகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள் திங்கள்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
இதுகுறித்து கடலூர் அருங்காட்சிகக் காப்பாட்சியர் க.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் நேத்தாஜி சாலை ராதாகிருஷ்ணன் செட்டியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும். 16-ம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டியும், பிற்பகல் 1 மணிக்கு ஓவியப் போட்டியும் நடைபெறும். ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பூக்கள் அல்லது விலங்குகளை ஓவியம் வரைய வேண்டும். 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் கார்ட்டூன் ஓவியம் வரைய வேண்டும். மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 5 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இயற்கைக் காட்சிகள் குறித்து ஓவியம் வரைய வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், புகழ்பெற்ற வரலாற்றுக் கட்டடங்களை ஓவியம் தீட்ட வேண்டும். நேருவின் அரசியல் வாழ்க்கை என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் என்றார் அவர்.

Read more »

பண்ருட்டியில் கனமழை

பண்ருட்டி,நவ.14:

பண்ருட்டியில் கடந்த இரு தினங்களாக விட்டிருந்த மழை, வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்ய தொடங்கியது.
சனிக்கிழமை காலை 9 மணி வரை விட்டுவிட்டு பெய்த மழை, மாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது.
இதனால் பண்ருட்டி தாழ்வானப் முக்கியப் பகுதிகள் தண்ணீர் தேங்கி மிதந்தன. கடந்த வாரம் பெய்த கனமழையல் பாதிக்கப்பட்ட பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு சமயத்தில், தற்போது மீண்டும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணாக மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள்வேதனை அடைந்துள்ளனர்.
கடலூரில்...
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக ஓய்ந்து இருந்த மழை சனிக்கிழமை மீண்டும் கொட்டத் தொடங்கியது. மீண்டும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மேலும் பலத்த மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பதால், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Read more »

புதுவை பதிவு வாகனங்கள்: கடலூரில் தொடர்ந்து ஆய்வு

கடலூர்,நவ.14:

புதுவை மாநிலத்துக்கு வரி செலுத்தி விட்டு, கடலூரில் இயக்கப்படும் வாகனங்கள் வட்டாரப் போக்கவரத்துத் துறை அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இயக்கப்படும் இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் 30 சதவீதம் புதுவை மாநிலத்தில் தாற்காலிக முகவரி கொடுத்து பதிவு செய்யப் பட்டவைகளாக உள்ளன. வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களே பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்கு சாலைவரி செலுத்திவிட்டு, கடலூர் மாவட்டச் சாலைகளைத் தேய்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
புதுவை மாநிலத்தில் பதிவு செய்து வாகனங்களை வாங்கினாலும், தமிழகத்தில் வரி செலுத்தி மறுபதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் அவ்வாறு செய்யாமல், அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டால் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சலில் பலர் புதுவைப் பதிவு வாகனங்களை தமிழகத்தில் இயக்கி வருகிறார்கள். இதனால் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை தமிழக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது.
இத்தகைய வாகனங்களை ஆய்வு செய்து வரி செலுத்தச் செய்யுமாறும், அபராதம் விதிக்குமாறும் அண்மையில் தமிழக அரசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்நது கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் நடத்திய சோதனையில் ரூ. 13.7 லட்சம் வரி வசூலிக்கப்பட்டது.
இந்த மாதம் கடந்த 2 நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் முதுநிலை ஆய்வாளர் சுதாகர், இளநிலை ஆய்வாளர் வேலுமணி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீஸôர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கின. இவற்றில் 125 வாகனங்களில் உரிமையாளர்கள் கடலூரில் வசிப்பவர்கள் என்று உறுதி செய்யப்பட்டது வரி செலுத்துமாறு அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

மரத்தில் தோன்றிய திடீர் நந்தி


கடலூர்,நவ. 13:


விநாயகர் கோயில் திருப்பணிக்கு அரச மரத்தை வெட்டிச் செதுக்கியபோது உள்ளே இருந்த நந்தி வெளியில் தெரிந்தது. பக்தர்கள் திரண்டு வந்து நந்தியை வழிபட்டனர்.
கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக் காரர்களால் உருவாக்கப்பட்டது. இந்த அங்காடியில் பழமை வாய்ந்த சிறிய மங்கள விநாயகர் கோயிலும் அதை அடுத்து அரச மரமும் உள்ளது. விநாயகர் கோயில் திருப்பணி அண்மையில் தொடங்கியது.
கோயிலைச் சற்று விரிவுபடுத்துவதற்கு வசதியாக பெரிய அரச மரத்தின் அடிப்பகுதியில் கொஞ்சம் வெட்டி எடுத்தனர். ஆனால் மரத்துக்குள் இருந்த சிறிய நந்தி வெளியே தெரியவந்தது. சுமார் ஒரு அடி உயரம் கொண்டதாக அந்த நந்தி காணப்பட்டது. இவ்வளவு காலமாக விநாயகரை வழிபட்டுவந்த பக்தர்களுக்கு நந்தியைக் கண்டதும் ஆச்சர்யமும் மிகுந்த பக்தியும் வெளிப்பட்டது.
உடனே மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதுகுறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் பார்த்திபன் கூறுகையில், விநாயகர் கோயிலில் விநாயகர் சிலை மட்டும்தான் இருந்தது. இடவசதிக்காக அரச மரத்தை சற்று வெட்டினோம். அப்போது உள்ளே இருந்து நந்தி வெளிப்பட்டது. அரச மரம் சிறியதாக இருந்தபோது அருகில் நந்தியும் இருந்து இருக்கலாம். காலப் போக்கில் அரச மரம் வளர்ந்து பெரிதாகியபோது, நந்தி உள்ளே மறைந்து விட்டது. வெளியில் தெரிந்த விநாயகருக்கு மட்டும் பூஜைகள் நடந்து வந்தன. தற்போது மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்ததும் நந்தி வெளிப்பட்டது என்றார்.

Read more »

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.410 கோடி கடன்

கடலூர்,நவ.13:

கடலூர் மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.410 கோடி மதிப்பில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா சனிக்கிழமை (14.11.09) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கால்நடை மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கூட்டுறவு வாரவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ந.மிருணாளினி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா இன்று காலை மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவைச் சிறப்பாக்க கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நடப்பு நிதி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.410.22 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. குறுகிய காலக் கடன் ரூ.94.30 கோடி, மத்திய காலக் கடன் ரூ.1.46 கோடி, நகைக்டன் ரூ.314 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகையாக மத்திய கூட்டுறவு வங்கி ரூ.6,115 கோடியும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ரூ.23.75 கோடியும், கூட்டுறவு நகர வங்கிகள் ரூ.44 கோடியும், சேகரித்து உள்ளன. மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினிமயம் ஆக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஒருமாதத்தில் முடிவடையும். தற்போது 7 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மற்ற சங்கங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

Read more »

மின்வாரியப் பொறியாளர்கள் போராட்டம்

கடலூர், நவ. 13:

சாலைகள் மோசம் அடைந்ததால் பஸ்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, மின்வாரியப் பொறியாளர்களும் ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே வண்டிப்பாளையத்தை அடுத்த கேப்பர் மலையில் மின்வாரிய துணை மின் நிலையம் மற்றும் பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கிய, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் உள்ளது. நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இந்தத் துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
கடலூர்- கேப்பர் மலை மாநில நெடுஞ்சாலை 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது.
என்ன காரணத்தாலோ நெடுஞ்சாலைத் துறை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட இச்சாலை பழுதடைந்து, கிராமச் சாலைகளைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. தற்போது பெய்த அடைமழையில் இச்சாலை மிகமிக மோசமான நிலையில் உள்ளது.
இதனால் கடந்த இரு நாள்களாக இந்த மார்க்கத்தில் செல்லும் நகர பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கேப்பர் மலைமேல் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் இந்த பஸ்கள், கடலூர் முதுநகர் வழியாகத் திருப்பி விடப்பட்டன. எனவே வண்டிப்பாளையம், கேப்பர் மலை, மத்திய சிறைச்சாலை குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அந்தப் பகுதிகளுக்கு ஆட்டோக்கள், டாக்ஸிகள் செல்லவும் மறுத்துவிட்டன.
அந்தப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் நகரில் உள்ள தங்களின் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை நடந்தே வந்தனர்.
இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள், தங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததைக் கண்டித்து கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறியாளர்கள், ஊழியர்கள் சுமார் 200 பேர் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நகரில் இருந்து தொலைவில் உள்ள இந்த அலுவலகத்துக்கு, வந்துசெல்ல தங்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதில் சி.ஐ.டி.யூ. சார்பில் இளநிலைப் பொறியாளர் ஸ்ரீதர், பழநிவேல், தொ.மு.ச. சார்பில் ஈஸ்வரன் ராஜ்மோகன், என்.எல்.ஓ. சார்பில் சேகர், பொறியாளர்கள் சங்கம் சார்பில் பழநிவேல், சிங்காரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினார். மின் வாரிய வாகனங்களை இயக்குவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொறியாளர்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் சென்றனர்.

Read more »

என்எல்சி பள்ளியில் மாவட்டக் கலைக்கழப் போட்டி

நெய்வேலி நவ. 13:

கடலூர் கல்வி மாவட்டக் கலைக்கழக மையப் போட்டி விழா நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேநிலைப் பள்ளியில் வெள்ளிகிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி தலைமை வகித்தார். கல்வித்துறை செயலர் எம்.சுகுமார் விழாவைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அமுதவல்லி, என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொதுமேலாளர் சி.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக நவம்பர் 11, 12 ஆகிய இருதினங்களும், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ,மாணவியருக்கு இடையேயான தனித்திறன் ஆய்வுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை என்எல்சி பெண்கள் மேநிலைப்பள்ளித் உதவித் தலைமையாசிரியர் ஆர்.எஸ்.மங்கையர்கரசி, உடறக்கல்வி இயக்குநர் ரேவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

மாநில சதுரங்கப் போட்டி மாணவி அட்சயா சிறப்பிடம்

பண்ருட்டி,நவ. 13:

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜான்டூயி பள்ளி மாணவி எஸ்.அட்சயா கலந்துகொண்டு சிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார்.
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவி எஸ்.அட்சயா, கடந்த மாதம் மாவட்ட அளவில் காடாம்புலியூரில் நடைபெற்ற சதுரங்க குறுவட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் சிதம்பரத்தில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.
7.11.2009 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர், 10.11.2009 அன்று மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துக்கொண்ட மாணவி அட்சயாவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சான்றிதழை வழங்கி பாராட்டினர். பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவி எஸ்.அட்சயாவை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி வாழ்த்தி பாராட்டினர்.

Read more »

ரேஷன் கடை முற்றுகை

கடலூர்,நவ.13:

கடலூரில் ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர் திருப்பாப்புலியூர் 5-ம் எண் ரேஷன் கடை முன் இந்த முற்றுகை நடந்தது. கடையில் ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து 50 பேர் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். 30 நிமிடம் இந்த முற்றுகை நீடித்தது. போலீஸôர் விரைந்து வந்து பேச்சு நடத்திக் கலைந்து போகச் செய்தனர். மழை காரணமாக ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

ஜூனியர் சேம்பர் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சிதம்பரம்,நவ. 13:

சேத்தியாத்தோப்பு ஜூனியர் சேம்பர் கிளப் 2010-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். தேசியத் தலைவர் ஜி.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவர் பட்டு.கணேசன், டி.எஸ்.பி டி.ராமச்சந்திரன், மண்டல முன்னாள் தலைவர் ஆர்.செந்தில்குமார், மண்டலத் தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் புதிய தலைவராக ஆர்.மகாலிங்கம், செயலாளராக ஏ.உத்திராபதி, பொருளாளராக எஸ்.கே.கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் பதவிஏற்றுக் கொண்டனர்

Read more »

வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

பண்ருட்டி,நவ.13: எலந்தம்பட்டு ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் வால்வு உடைந்து தண்ணீர் வீணாகிறது. (படம்)
பண்ருட்டி வட்டம் எலந்தம்பட்டு ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ரூ.2.44 லட்சம் செலவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டியில் இருந்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகத்துக்கான பைப்பில் பொருத்தப்பட்டுள்ள வால்வு உடைந்து தண்ணீர் வீணாக கீழே செல்கிறது. வால்வு உடைந்து பல நாள்கள் ஆகியும், இது வரை யாரும் சரி செய்யாததால் தண்ணீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும் தொட்டியின் பல பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், கீழ் பகுதி பில்லர்கள் உடைந்து சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் அருகே அமைந்துள்ள இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் வால்வை மாற்றியும், சேதம் அடைந்துள்ள பகுதிகளை சீர் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

சபரிமலை சேவைக்கு 5 ஆயிரம் தொண்டர்கள்

கடலூர், நவ.13:

சபரிமலையில் பக்தர்களுக்குச் சேவை புரிய தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் தொண்டர்கள் செல்ல இருப்பதாக, அகில பாரத அய்யப்ப சேவா சங்க சென்னை மாநில தொண்டர் படை முதன்மைத் தளபதி ஜெகதீஷ் தெரிவித்தார்.
கடலூர் வந்த ஜெகதீஷ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சபரிமலைக்கு வரும் தொண்டர்களுக்குச் சேவை செய்வதற்காக ஆண்டுதோறும் அய்யப்ப சேவா சங்கத் தொண்டர்கள் சபரி மலைக்குச் செல்கிறார்கள். சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை இவர்கள் சேவை செய்வார்கள். கடந்த ஆண்டு 4 ஆயிரம் தொண்டர்கள் சபரிமலைக்குச் சென்றனர். இந்த ஆண்டு 5 ஆயிரம் தொண்டர்கள் செல்ல இருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் சபரிமலைக்கு வந்து இறந்தவர்கள் 125 பேர். மரணம் அடைந்தவர்களின் உடல்களை சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை, தொண்டர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவார்கள். மண்டல பூஜை அன்று சாமிக்கு அணிவிக்கும் தங்கக் கவசத்தை, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை அய்யப்ப சேவ சங்கத்தினர்தான் கொண்டு செல்கிறார்கள்.
தொண்டர்கள் ஜனவரி 20-ம் தேதிவரை அங்கு இருப்பர். அய்யப்ப சேவா சங்கம் சார்பில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜோதி தரிசனத்தின்போது இது 50 ஆயிரமாக அதிகரிக்கும். அத்துடன் மூலிகை கலந்த தணணீர், சுக்குநீர், இலவசமாக வழங்குகிறோம். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவஸ்வம் போர்டு ஹோட்டல் ஒன்றை இலவசமாக வழங்கி இருக்கிறது என்றார் ஜெகதீஷ்.

Read more »

கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல் போராட்ட அறிவிப்பு

கடலூர், நவ. 13:

விலைவாசி உயர்வு, பொது விநியோகத் திட்டக் குறைபாடுகள் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடலூர் மாவட்டக் கூட்டுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதிலும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், தோல்வி கண்டுவிட்டது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றத்தால், உழைக்கும் மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.
நியாயவிலைக் கடைகளில் பொருள்களை மானிய விலையில் கொடுப்பதில், மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கும் அரிசி, கோதுமை அளவைக் குறைக்கிறது. தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுகிறது. வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றுக்குத் தீர்வு காணாமல் மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை உயர்த்துவதிலும், முன்பேர வர்த்தக முறையை அனுமதிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் ரேஷனில் அனைவருக்கும் 20 கிலோ அரிசி கிடைக்க வகைசெய்ய வேண்டும். ரேஷன் அட்டை கிடைக்காத அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கக் கால அவகாசம் அளிக்க வேண்டும். பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 17-ம் தேதி கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், குறிஞ்சிப்பாடி, திருமுட்டம் ஆகிய 8 மையங்களில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திóல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

ஜைனத் துறவிகள் கடலூர் வருகை

கடலூர்,நவ. 13:

ஆண், பெண் ஜைனத் துறவிகள் 20 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் வந்தனர்.
அன்பு, சமாதானம் உள்ளிட்ட நற்போதனைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் பணியில் ஜைனத் துறவிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆண்டில் 8 மாதங்கள் பாத யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கும் சென்று, மக்களிடம் உபதேசம் செய்கிறார்கள்.
ஜைனத் துறவி ஆச்சார்ய ஸ்ரீ 108 தேவ் நந்திஜி மகாராஜ், அவரின் சீடர் உபாத்யா ஸ்ரீ 108 நிஜாநஞ்சி மகாராஜ் உள்ளிட்ட 11 ஆண் துறவிகளும், 9 பெண் துறவிகளும் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் கங்கனாங்குப்பம் வந்தனர். அவர்களை ஜைன சங்கம் ராஜ்கோல்ஷா மற்றும் கடலூர் ஜைன சங்கத்தினர் வரவேற்றனர். துறவிகளை வணங்கி ஆசி பெற்றனர்.
நிர்வாண நிலையில் இருக்கும் துறவிகள் கங்கனாங்குப்பத்தில் உள்ள ஜி.ஆர்.கார்டனில் தங்கி தியானத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலூர் மாவட்டம் போளூர் அருகே உள்ள திருமலை ஜைனப் பள்ளி மாணவர்களுக்கு துறவிகள் ஆன்மிகப் பாடம் போதிக்கின்றனர். மற்றவர்கள் கடலூர் வந்தனர். சனிக்கிழமை ஆண் துறவிகள் கடலூர் முதுநகரில் உள்ள திகம்பரநாதர் ஜைன கோயிலுக்கு வருகை தருகிறார்கள். அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகில் உள்ள மேல்செவரி திருநெற்குன்றம் ஜைனக் கோயிலுக்குச் செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து செஞ்சி அருகே மேல்சித்தாமூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்ஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior