கடலூர்:
வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவதரித்த தைப்பூச தினத்தில், தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கத்தின் நிறுவனர் கே.மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் அவதரித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார், திருவருட்பாவை இயற்றினார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியார், சாமிகள் இல்லை. உருவ வழிபாடு கூடாது. நாம் அனைவரும் மனித இனம், சாதி மத பேதம் கூடாது என்று கூறினார். ஆனால் பெரியாருக்கு முன்னரே, ராமலிங்க சுவாமிகள் தெய்வம் எந்த உருவத்திலும் இல்லை. கோயிலிலும் இல்லை. சாதி மத பேதமில்லை.
கடவுள் ஒருவரே. அவர் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி சத்தியஞான சபையை வடலூரில் நிறுவினார். தைப்பூச நட்சத்திர தினத்தில், ஜோதி தரிசனம் செய்யவும் வழிவகை செய்தார். தைப்பூச தினத்தன்று, கடலூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை விடப்படுகிறது. மனிதனும் இறைவனாக முடியும் என்ற தத்துவத்தை, அறிவியல் முறைப்படி உலகுக்கு எடுத்துக்காட்டிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு, பெருமை சேர்க்க தைப்பூச தினத்தன்று தமிழகம் முழுவதும், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.