கடலூர் :
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட கடலூர் துறைமுகம் சரக்கு கப்பல் போக்குவரத்தின்றி முடங்கிப்போய் உள்ளது. கடலூர் துறைமுகம் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வாணிபத்திற்காக இந்தியா வந்தபோது கடலூரை தலை நகரமாகக் கொண்டு வியாபாரம் செய்தனர்.
தமிழகத்தில் இயற்கையான துறைமுகமான கடலூரில் சாலை, குடோன் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக இருந்ததால் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, சீனா, வளைகுடா நாடுகளில் இருந்து "புளோர்ஸ்பர்' (சீன களிமண்) செல்ஸ்பர் கற்கள், நிலக்கரி, கோதுமை, உரம், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட் நிறுவனத்திற்குத் தேவையான "புரப்பலின் காஸ்' உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இரும்புத் தாது, வெங்காயம், அரிசி, சர்க்கரை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்கள் சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1960ம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் 16 கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்தது. இதனால் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.
நாளடைவில் படிப்படியாக கப்பல் போக்குவரத்து குறைந்து வணிகம் மந்தமடைந்தது. கடந்த 1996ம் ஆண்டில் இருந்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் துறைமுகம் முற்றிலும் முடங்கியது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து இல்லாததால் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடோன்கள், துறைமுக சாலை, முகத்துவாரம் தூர்ந்து நாளடைவில் பழுதடைந்தது.
கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2007-08ம் ஆண்டு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 14 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. முகத்துவாரத்தில் இருந்து இரு பக்கமும் மண் சரியாமல் இருக்க 300 மீ., தூரத்திற்கு கருங்கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கியது. கடந்த 2008 ஜனவரி மாதம் சீனாவில் இருந்து இரண்டு கப்பல்கள் மூலம் "யூரியா' உரம் இறக்குமதி செய்யப்பட்டது.தொடர்ந்து மார்ச் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து மூன்றாவது கப்பலில் வந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அத்துடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக துறைமுகம் பழையபடி வெறிச்சோடியது.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அருகில் உள்ள காரைக்கால் துறைமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் 14 கோடி ரூபாய் செலவு செய்து சீரமைக்கப்பட்ட கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசும் தனி கவனம் செலுத்தாததால் மிகப்பெரிய துறைமுகம் முற்றிலும் செயலிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகத்தின் கீழ் இயங்கி வரும் கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை மேற்கொண்டால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். பல ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், தொடர்ந்து பல்வேறு புதிய தொழிற்சாலைகளும் அமைய வாய்ப்புள்ளது.
கடலூர் அடுத்த பெரியக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் நிறுவனம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் அமைய உள்ள நிலையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கினால் கடலூர் மாவட்ட மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Read more »