கடலூர்:
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கைவிடுத்தது. இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு புறநகர் பஸ்களில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தப் பணப் பலன்களை ஓய்வு பெற்றவர்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாநில அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கே.கர்சன் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன், பொருளாளர் பி.சேசையன், அரசு போக்குவரத்துக் கழக ஊழிர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பேசினர்.