உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 06, 2011

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி


தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதியை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் முறை மூலம் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.



                 இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் இணையதளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்வது போன்றே முதல் முறையாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதள முகவரி மூலம் இ-டிக்கெட் முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

                  அரசு பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியினை எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் மூலமாகவும், செல்போன் வழியாகவும் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.  பயணிகள் எவ்வித சிரமும் இன்றி தங்களது பயணச்சீட்டினை இணையதளம் வழியாக  கிரெட் கார்டு, டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும் தாங்கள் விருப்பப்பட்ட பஸ்களையும், இருக்கைகளையும் தேர்வு செய்து கொள்வதுடன் பஸ் கட்டணம், புறப்படும் நேரம் மற்றும் இதர விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும். 

                இணையதளத்திலேயே தகவல்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இப்போது செயல்பட்டு வரும் 50 முன்பதிவு மையங்களுடன் கூடுதலாக புதிய முகவர்களை நியமித்து 300 முன்பதிவு மையங்களாக அதிகரிக்கப்படும். இந்த அதிகரிக்கப்பட உள்ள முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் நேரடியாக சென்று இணையதள வசதியுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்தவுடன் அவர்களது செல்போனுக்கு பணப் பரிவர்த்தனை குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  

                 தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்வதற்கு இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.மணி, சென்னை மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் பூபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  தேர்தல் பிரசாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.  

                  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைவரும் தங்களது மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருவதால் அவர்கள் கலந்து கொள்வில்லை.  ""முதல்வர் தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த மாவட்டங்களில் இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை'' என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  



 முகவரி







 

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

கடலூர் : 

         கடலூர் மாவட்டத்தில் உள்ள 6,492 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 702 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. எஞ்சிய 5,784 பதவிகளுக்கு 20 ஆயிரத்து 533 பேர் போட்டியிடுகின்றனர்.


              உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி அறிவித்தது. 

             கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் 6,506 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 6,492 பதவிகளுக்கு மக்களே நேரடியாக தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடந்தது. 

                  அதில் 5,040 ஊராட்சி வார்டுகளில் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை (விவரம் பெட்டி செய்தி). எஞ்சிய 5,036 பதவிகளுக்கு 15,609 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 30ம் தேதி நடந்த பரிசீலனையில் 134 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதில், கடலூர் ஒன்றிய தோட்டப்பட்டு ஊராட்சி 8வது வார்டு பொது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் விளம்பரம் செய்யாததால் கடந்த தேர்தலை போல் நினைத்து ஆண் ஒருவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது  

                .அதேப்போன்று பண்ருட்டி ஒன்றியம் வீசூர் ஊராட்சி 1வது வார்டு எஸ்.சி., (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வார்டிற்கு பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிட கிறிஸ்தவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1,318 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றதால், 680 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 4,354 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13 ஆயிரத்து 477 பேர் போட்டியிடுகின்றனர்.

               அதேப்போன்று 683 ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு மொத்தம் 4,120 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 30ம் தேதி ஆய்வில் 44 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.நேற்று முன்தினம் 1,182 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதிப் பட்டியலில் 18 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 665 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,876 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 287 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 2,127 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

             அதில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. 389 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால் தற்போது 1,700 பேர் போட்டியிடுகின்றனர். 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 272 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 55 பேர் வாபஸ் பெற்றதால் தற்போது 204 பேர் களத்தில் உள்ளனர். ஐந்து நகராட்சி தலைவர் பதவிகளுக்கு 45 பேரும், 174 கவுன்சிலர் பதவிகளுக்கு 955 பேர் போட்டியிடுகின்றனர். 16 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு 126 பேரும், 258 கவுன்சிலர் பதவிகளில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

             மீதமுள்ள 254 பதவிகளுக்கு 1,150 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டிய 6,492 உள்ளாட்சி பதவிகளில் 702 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 5,784 பதவிகளுக்கு 20,533 பேர் போட்டியிடுகின்றனர்.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior