கடலூரில் சிதம்பரம் சாலையும், ரயில்வே மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில், போக்குவரத்துக்கான சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்காமல், விளம்பரத்துக்காக மட்டும
கடலூர்:
விளம்பரப் பலகைகளைத் தொங்க விடுவதற்காகவே, கடலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அண்மைக் காலமாக போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
4 சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஒரு முழுமையான தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமானால், ரூ. 10 லட்சம் வரை செலவாகும் என்று போலீ சார்தெரிவிக்கிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துச் சிக்னல்களை அமைக்க அரசு தாராளமாக நிதி வழங்கிவிடும். ஆனால் கடலூர் போன்ற சிறிய நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க, மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் வணிகர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை கெஞ்சிக்கொண்டு இருந்த காலம் உண்டு.ஆனால் அண்மைக்காலமாக கடலூர் உள்ளிட்ட நகரங்களில், போக்குவரத்து சிக்னல்கள் மிகவும் தாராளமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
முற்றிலும் தேவையற்ற இடங்களில்கூட தாராளமாக அமைக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியரின் அனுமதி பெற்று, இந்த போக்குவரத்துச் சிக்னல்களைத் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, அமைத்து வருவதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, ஏற்கெனவே தானியங்கி போக்குவரத்து சிக்னல் இருக்கும்போது, மேலும் புதிதாக 4 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடலூரில் ஆட்சியர் முகாம் அலுவலகம், உட்லண்ட் சந்திப்பு, ஜவான்ஸ் பவன் ஆகிய 3 இடங்களில் மட்டுமே தானியங்கி சிக்னல்கள் செயல்படுகின்றன. இவையும் போலீஸôரின் கண்காணிப்பில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஆனால் நகரில் மிகக்குறுகிய தூரத்துக்குள் தேவையற்ற வகையில், சுமார் 50 இடங்களில் அண்மையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றிலும், தலா 8 குழல் விளக்குகள் எரியும் வகையில் விளம்பரங்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகள் தொங்க விடப்பட்டு உள்ளன. இவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எதுவும் எரிவதில்லை. ஆனால் விளம்பரத்துக்கான விளக்குகள் மட்டும் 24 மணி நேரமும் எரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே தனியார் விளம்பரத்துக்காகவே இந்த உத்தி என்பது தெரியவருகிறது.பல இடங்களில் இந்த சிக்னல்கள் அங்கு ஏற்கெனவே வைக்கப்பட்டு இருக்கும், கைகாட்டிப் பலகைகள், வெளியூர்களுக்கு வழிகாட்டும் பலகைகளை மறைத்து வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். பல இடங்களில் போதுமான உயரத்தில் அமைக்கப்படாததால், அந்த வழியாகச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறாகவும் உள்ளன.மேலும் இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு மின்வாரியத்திடம் மின் இணைப்பு பெறப்படுகிறது.
இவை அனைத்தும் விளம்பரப் பயன்பாடாக இருப்பதால், மின் பட்டியல் பிரிவு 5-ன் கீழ்தான் (கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5.80) பெறப்பட வேண்டுமாம். ஆனால் பெரும்பாலான சிக்னல்கள், மின் பட்டியல் 1 ஏ பிரிவின் கீழ்தான் (வீட்டு உபயோகத்துக்கானது. கட்டணம் ரூ. 2.20) இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறதாம். சில இடங்களில் நகராட்சி தெருவிளக்கு இணைப்புகளுடனும் இணைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. நகராட்சி தெருவிளக்குகளை இயக்கும் தொழிலாளர்களே இதையும் இயக்குகிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது
பல இடங்களில் தவறான பிரிவில், மின் இணைப்பு பெறப்பட்டதைக் கண்டுபிடித்து, இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் நகரங்களில், மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள், உயர்நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டவை உள்ளிட்ட காரணங்களுக்காக அவை அகற்றப்பட்டன. அந்த விளம்பர பேனர்களின் மறுவடிவம்தான், இந்த போக்குவரத்துக் சிக்னல் விளம்பரங்கள் என்று விவரம் அறிந்த பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
Read more »