கடலூர் :
புயல் பாதித்த கடலூரில்சேலம் பெரியார் பல்கலைக் கழக என்.எஸ். எஸ்., மாணவர்கள் துப்புரவு பணிமேற்கொண்டனர். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் முறிந்து கீழே விழுந்தன. சாலை யோரம் விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரும், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மின்வாரியத்தினரும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவைகள் முழுமையாக அப்புறப்படுத்தாததால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அகற்றிடும் பொருட்டுசேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துச்செழியன் ஏற்பாட்டில் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிங்காரம், ராஜவேல், திட்ட அலுவலர்கள் கனகராஜ், தங்கராஜ், வேல்ராஜ், ஜெய்ராஜ் ஆகியோர் தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 100 பேர் கடலூர் வந்துள்ளனர். இவர்கள் கடலூர் சில்வர் பீச், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.