பண்ருட்டி, டிச. 11:
பண்ருட்டியில் சொத்து பிரச்னை வழக்கில் கட்ட பஞ்சாயத்துக்கு வரமறுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அதிமுக பிரமுகர் பன்னீர்செல்வத்தை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பண் ருட்டி வட்டம், ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (51). இவரும், இவரது சகோதரர்கள் சலீம் இப்ராஹிம், முஸ்தபா ஆகியோரும் சேர்ந்து கூட்டாக தொழில் செய்து வந்தனர். இதில் ஈட்டிய வருவாய் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் சலீம் இப்ராஹிம் பெயரில் உள்ளன. இதனிடையே, உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சலீம் இப்ராஹிம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தார்.
இதைய டுத்து, பொது சொத்தை பிரிப்பதில் சலீம் இப்ராஹிம் குடும்பத்தினருக்கும், சையது இஸ்மாயிலுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசி முடிக்க வருமாறு ஜெயலலிதா பேரவையின் முன்னாள் செயலரான பன்னீர்செல்வம் சையது இஸ்மாயிலுக்கு அழைப்பு விடுத்தாராம். ஆனால், அதை அவர் ஏற்கமறுத்துவிட்டாராம்.
இதையடுத்து, பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் சையது இப்ராஹிம், பயாஸ் அகமது, அப்பாஸ், அப்துல் காதர் ஆகியோர் சேர்ந்து, கடலூர் சாலையில் உள்ள இடத்தை ஆக்கிரமித்தனராம். இதுதொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சையது இஸ்மாயில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை காந்தி பூங்கா அருகேயுள்ள கடையில் பேசிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகரை காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸôர் விசாரணைக்காக புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த அதிமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் புதுப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பன்னீர்செல்வத்தை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குற்றவியல் நீதித் துறை நடுவர் வாசுதேவன் உத்தரவிட்டார்.
இ தற்கு கண்டனம் தெரிவித்த அதிமுகவினர் ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் எம்.எம். கமலக்கண்ணன் தலைமையில் போலீஸôரையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷமிட்டபடி முக்கியச் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, பண்ருட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன.
Read more »