உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 07, 2011

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டத்தில் நடராஜர் தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள்.
சிதம்பரம்:

             பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடை  பெற்றது.  

             ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.  நடராஜர் கோயிலில் கடந்த ஜூன் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் மார்கழி ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. 

                9-ம் நாளான புதன்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் கீழவீதி தேரடி நிலையிலிருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மாலை 5 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைந்தனர்.  தேர்களுக்கு முன்பு வீதிகளில் தில்லைதிருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர்.

             இதற்கான ஏற்பாடுகளை தில்லைத்திருமுறைக்கழகத் தலைவர் புலவர் ச.சுந்தரேசம்பிள்ளை செய்திருந்தார்.  தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். இந்நிகழ்ச்சியை கீழரதவீதி தேர்நிலையில் ஐயப்பதீட்சிதர் தொடங்கி வைத்தார். 

            முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் கிராமத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் தொன்று தொட்டும் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். 

             அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.  வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து சித்சபா பிரவேசம் செய்கின்றனர். 

               விழா ஏற்பாடுகளை ஆலய பொதுதீட்சிதர்களின் செயலாளர் சபா.கல்யாணசபாபதி தீட்சிதர், துணைச்செயலாளர் தி.தெய்வசிகாமணி தீட்சிதர் மற்றும் அறநிலையத்துறை செயல்அலுவலர் க.சிவகுமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.  சிதம்பரம் டிஎஸ்பி டி.கே.நடராஜன் தலைமையில் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ச.கார்த்திகேயன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

            போக்குவரத்து சீரமைப்பு பணிகளை இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் செய்திருந்தார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், ஆணையர் (பொறுப்பு) பெ.மாரியப்பன் ஆகியோர் செய்தனர். போலீஸôருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.  

தேரோடு வீதியில் அங்கப்பிரதட்சணம்: 

             உலக அமைதி, மக்களிடையே ஆன்மிகம் தழைக்கவும், மனிதநேயம் தழைத்தோங்கவும் சிதம்பரம் ஸ்ரீசந்துரு சுவாமிகள் புதன்கிழமை அதிகாலை தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.  கடந்த 23-9-2006 முதல் தில்லை திருத்தல வரலாற்றில் ஸ்ரீசந்துரு சுவாமிகள் முதன்முறையாக ஒரு நாளும் இடைவிடமால் உள்பிரகாரத்திலும், வெளிப்பிரகாரத்திலும் தொடர்ந்து 1753 நாட்களுக்கு மேலாகவும், தரிசன திருவிழாக்களில் தேரோடு வீதிகளிலும் தொடர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    

இயங்காத சிக்னலில் சிக்கிய நடராஜர் தேர் 

                சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தின் போது கீழவீதி, தெற்குவீதி சந்திப்பில் உள்ள இயங்காதப் போக்குவரத்து சிக்னலில் நடராஜர் தேர் சிக்கியதால் சுமார் 30 நிமிடங்கள்  தாமதமானது.  பொதுதீட்சிதர்கள் சிக்னல் விளக்குகளை கழற்றி, சிக்னல் கம்பத்தை வளைத்து பின்னர் தேரை இழுத்துச் சென்றனர். தேர்திருவிழாவின் போது சிக்னல்கள் அகற்றப்படும். ஆனால் இம்முறை அகற்றப்படாததால் இச்சம்பவம் ஏற்பட்டது என தீட்சிதர்கள் தெரிவித்தனர்.  தேரோட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் புடவை, வேட்டியுடன் வந்து பங்கேற்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  







Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் பங்கேற்பு


நெய்வேலி:
 
            நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 7-ம் நாளான வியாழக்கிழமை திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.  தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய குறும்படப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கெüரவிக்கிறார்.  என்எல்சி மின்துறை இயக்குநர் ஜே.மகிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். திருநெல்வேலி எழுத்தாளர் மதுரா பாராட்டப்படவுள்ளார். விஜய் டிவி புகழ் கோபிநாத் பங்கேற்கும் இன்றைய கல்வி-பெற்றோர் படுத்தும் பாடு எனும் தலைப்பில் சிறப்புரை நடைபெறவுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்


கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயிலில், புதன்கிழமை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் வரதராஜப்பெருமாள்
கடலூர்:

              கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில் பிரமோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

             புதன்கிழமை கொடியேற்று விழா நடந்தது.  வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் பிரமோற்சவம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு திருமஞ்சனம் பகவத்தனுக்ஞை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கருட துவஜப் பிரதிஷ்டையும் அங்குரார்ப்பணமும் நடந்தது. 

             புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. துவஜாரோஹணம் நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கு.வெங்கடேசன், செயல் அலுவலர் இரா.வெங்கடேசன், எழுத்தர் ஆழ்வார் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  




Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்காக வரும் எஸ்.எம்.எஸ்., ஒரே நேரத்தில் பதிய தனி மொபைல் போன்

கடலூர் :

           அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்வதற்காக, நான்கு புதிய மொபைல் போன்கள், தேசிய தகவல் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.


          ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, அதன் மூலம் தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், நேற்று (6ம் தேதி) முதல் அமல்படுத்தப்பட்ட இம்முறைப்படி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், காலை 10 மணிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம், தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பினர்.

             இதில், 80 சதவீத பள்ளிகளின் வருகைப் பதிவேடு, சரியான முறையில் பதிவானது. ஒரே நேரத்தில், 1,200க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்., வருவதால், மொபைல் போனில் பதிவாகாத நிலை இருந்தது. எனவே, மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களை நான்காக பிரித்து, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு மொபைல் போன் என கணக்கிட்டு, தேசிய தகவல் மையத்திற்கு, நான்கு புதிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.




Read more »

திட்டக்குடியைச் சேர்ந்த என்.சி.சி. லெப்டினன்ட் சண்முகத்திற்கு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது

திட்டக்குடி : 

         டில்லியில் நடந்த விழாவில் சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது திட்டக்குடியைச் சேர்ந்த என்.சி.சி., லெப்டினன்ட் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தேசிய சாதனையாளர் விருது வழங்கும் விழா டில்லியில் நடந்தது. விழாவில் டில்லியின் தலைமை பிஷப் பிரான்கோ முல்லக்கல் தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப், திட்டக்குடி வட்ட ஓய்வூதியர் சங்க செயல் தலைவர் என்.சி.சி., லெப்டினன்ட் சண்முகத்திற்கு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது வழங்கினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior