கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சிதைந்து கிடக்கும் சின்னவாய்க்கல்.
கடலூர்:
தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகியவை கடலூர் அருகே கடலில் சங்கமிக்கின்றன. மழைக் காலங்களில் குறிப்பாக வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில், இந்த ஆறுகளில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், கடலூர் நகரில் ஆங்காங்கே தேங்கும் மழைநீர் கடலில் சென்று வடிவதில் சிரமம் ஏற்படுகிறது.
கடலூரில் முறையான ஒருங்கிணைந்த வடிகால் வசதி இல்லை. நகராட்சியும் நெடுஞ்சாலைத் துறையும் போட்டி போட்டுக் கொண்டு ஆண்டுதோறும் வடிகால் வசதிக்காக பணத்தை செலவிடுகின்றன. ஆனால் மழைநீர் வடிவதில்லை. வடிகால் வாய்க்கால்கள் ஒன்றுகொன்று தொடர்பு இல்லாமலும், முறையாக மேட்டில் இருந்து பள்ளத்தில் பாயும் வகையில் வாட்டம் இல்லாமல் கட்டப்படுவதாலும், அவை வடிகால்களாக இல்லாமல் தொட்டிகளாகக் காட்சி அளிக்கின்றன.
மழைக் காலங்களில் இவை நிரம்பி மழைநீருடன் சாக்கடையும் கலந்து, பல பகுதிகளில் இடுப்பளவுக்குக் குளம்போல் தேங்கி விடுகின்றன. இவை வடிவதற்கு 10 நாள்களுக்கும் மேல் ஆகிறது. நகராட்சி மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவது, ஆண்டுதோறும் நடைபெறும் மீட்புப் பணிகளில் ஒன்றாகும். தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்தில் தோண்டப்படும் மண்ணை அகற்றாமல், சாலையிலேயே பரப்பி விடுகின்றனர். அதன் மீது 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு கருங்கல் ஜல்லி பரப்பி, பின்னர் தார் போட்டு, புதிய சாலைகளாக அமைப்பதால், சாலைகளின் உயரம் திடீரென 2 அடி உயர்ந்து விடுகிறது. இதனால் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில் தண்ணீர் வடிகின்ற நிலையில் உள்ள வாய்க்கால்களும் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து, மண் மேடிட்டு வருகின்றன. நகரின் முக்கிய மழைநீர் வடிகால்களாகத் திகழ்பவை, திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடல் நோக்கிச் செல்லும் சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என்பவைதான். 50 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால்கள் தலா 3 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டுகளைக் கொண்டதாகவும் இருந்தன. ஆனால் இந்த வடிகால்கள் பெருகிவரும் வீட்டுமனைப் பிரிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றபோது இந்த வாய்க்கால்களுக்கு சில இடங்களில் கருங்கற்களால் கரை அமைத்து நேர்த்தியாக சிமென்ட் பூசப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது சில மாதங்களாக தனியார் செல்போன் நிறுவனத்தினர் கேபிள் பதிப்பதற்காகவும், குடிநீர் வாரியத்தினர் பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்கள் பதிப்பதற்காகவும் இந்த வடிகால்களை, சிதைத்து வருகின்றனர். சேதப்படுத்துவோர் அவற்றை சரி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்த போதிலும் அவர்கள் செய்வதில்லை. இந்த வாய்க்கால்கள் பல இடங்களில் சேதம் அடைந்து மழைக் காலத்தில் தூர்ந்து சாலைகளில் வெள்ளம் வழிந்தோடும் நிலை உருவாகி வருகிறது.
Read more »